13 Feb 2022 11:29 pmFeatured

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-32
படைப்பாளர் - கி.கரோலின் மேரி, புதுச்சேரி
தன் கையில் இருக்கும் அந்த கிட்டை திரும்ப திரும்ப பார்த்தாள் வினயா.
இரண்டு கோடுகள் எப்போது வரும் என்று ஒவ்வொரு முறையும் நாட்கள் தள்ளி போகும் போது எதிர்பார்ப்பாள்.
ஆனால் இன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஆம் அவள் தாயாகி விட்டாள்.
அந்த சந்தோஷத்தை தன் கணவனிடம் கூற போனாள்.
நன்றாக உறங்கி கொண்டிருந்தவனை "நகுல் நகுல்" என்று உலுக்க,
"என்ன வினு ? ஏன் இப்படி செய்கிறாய்?" என்று கண்களை தேய்த்தவாறு எழுந்து அமர்ந்தான்.
"இங்கே பாருங்க. இரண்டு கோடு வந்து இருக்கு" என்று ஆசையாக காட்டினாள்.
அவனால் நம்பவே முடியவில்லை.
"ஏய் நிஜமாவா? " என்று மகிழ்ச்சியில் குதித்தவன்.
"இரு நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வருகிறேன்" என்று ஓடினான்.
அவளைவிட அவனுக்கு அவ்வளவு சந்தோஷம் என்றே சொல்லலாம்.
உடனே மருத்துவரை சந்திக்க அவரும் அதை உறுதிப்படுத்தினார்.
"கவனமாக இருக்க வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார்.
இருவரின் பெற்றோரும் அவளை நன்றாக கவனித்து கொண்டனர்.
அவளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
தொட்டிலில் உறங்கும் குழந்தையை பார்த்தவாறு சற்று கண் அயர்ந்தாள்.
அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த நகுலன் "வினு வினு" என்று எழுப்ப,
திடுக்கிட்டு விழித்தவள் "பாப்பா பாப்பா" என்று சுற்றிலும் தேட,
புரியாது அவளை பார்த்தான்.
"என்ன டா தேடுகிறாய்?" என்று அவளை பிடித்து கேட்க,
"குழந்தை தூங்கிட்டு இருந்தாள்" என்று கூற,
அவள் கனவு கண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.
"வினு ப்ளீஸ்" என்று வலியோடு அழைக்க,
அதில் சுயநினைவுக்கு வந்தவள் "எல்லாமே கனவா நகுல்" என்று அவன் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
"நமக்கும் குழந்தை பிறக்கும் டா. நீ கவலைப்படாமல் இரு" என்று அவளை தேற்றினான்.
"எப்போது நகுல். எனக்கு அந்த நம்பிக்கையே இல்லை" என்று பலவீனமாக அவள் கூற,
"நம்பிக்கையோடு காத்திருப்போம்" என்று அவன் உறுதியாக கூறினான்.
தாய்மை என்னும் வரம் மட்டும் ஐந்து வருடங்களாக அவளுக்கு தவறி போகிறது.
ஏற்கனவே குழந்தை இல்லை என்று வருந்துபவளிடம் இதை செய், அதை செய் என்று பார்ப்பவர்கள் எல்லாம் கூறும் போது அவள் மனநிலை எப்படி இருக்கும்.
மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இலவச அறிவுரை தருகிறேன் என்ற பெயரில் அவர்களை எப்படி புண்படுத்தலாம் என்றே சிலர் காத்திருக்கிறார்கள்.
அவரவர் வலிகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும். அதை உணர முடியாதவர்கள் அமைதியாக கடந்துவிடுங்கள்.
வினயாவிற்கும் அவளின் தவறிய தாய்மை என்னும் வரம் சீக்கிரமே கிடைக்கட்டும் என்று நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம்..






Users Today : 8
Total Users : 113252
Views Today : 13
Total views : 442453
Who's Online : 0
Your IP Address : 216.73.217.73