Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இட்லிக்கடை செல்லம்மா

12 Feb 2022 1:07 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures idlikadai

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-27
படைப்பாளர் - அ.முத்துவிஜயன்

செல்லம்மா அந்தத்தெருவில இட்லிக்கடை வைச்சிருந்துச்சு. கடைன்னா பெருசா யோசிச்சிராதீக. ரெண்டு ரம்பத்தூள் அடுப்பு ஒரு இட்லிப்பானை ஒரு வடசட்டி நாலு கிண்ணங்கள் அப்புறம் வாழை எலைகள். இத வைச்சிக்கிட்டு தெருவோரமா கடை போட்டிருக்கும் செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கையாளரெல்லாம் சின்னப் புள்ளைங்கதான்.

காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப் பத்த வைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்னி காரச் சட்னியோட தெருவோரத்துல கடை போட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்கு போணியும் காசுமா வந்து நிக்கும்.

அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மாமாருக செலபேரு கூடவருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக்கூட வெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும்.

சின்னபுள்ளகளுக்காகவே காரமில்லாத சாம்பார் சட்டிணி இருக்கும் காரசாரமா  வேணுங்குறவுக காரச்சட்டிணி சுள்ளுன்னு தனியா இருக்கும் வாங்கிக்கலாம்.

அம்புட்டும் அம்புட்டு ருசியா இருக்கும்

வீட்டுல எல்லாராலயும் தெனம் இட்லி சுடமுடியாது. பச்ச புள்ளகளுக்கு செல்லம்மா இட்லிக்கடைதான் கைகொடுக்கும். அதே மாதிரி வயசானவுகளும் வந்து பக்கத்துல ஒக்காந்து சுடச்சுட வாங்கிச்சாப்புடுவாக

வயசானவுகளுக்குக் காலைன்றது அஞ்சு மணிக்கே விடிஞ்சிடும். பசியும் ஆரம்பிச்சிடும் பல்ல வெளக்கிப்புட்டு நேர செல்லம்மா கடையில வந்து குத்தவைச்சி ஒக்காந்துருவாக அங்க சின்னபுள்ளைகளுக்குத்தான் மொதல் எடுவ இட்லி. பெரியவுக காத்துருக்கனும் ஏன்னா பச்சபுள்ளக பசிதாங்காதுக  அழுக ஆரம்பிச்சிடும் அதுனால. அப்புடி யாராவது அவசரப்படுத்துனா  கெடக்குற தெல்லாம் கெடக்கட்டும் கெழவனத் தூக்கி மனையில வையின்னு சாடை பேசிட்டு வயசாளிகன்னா பொறுமை வேணும் பொறுமையில்லாதவுக வேற கடைக்கிப் போகலாம்னு சொல்லிடும்

ரம்சான் மாசத்துல மாத்திரம் சாயங்காலமும் கடை தெறக்கும் பாட்டி. நோம்பு தொறக்குற நேரத்துல இட்லி பணியாரம் அப்புறம் உளுந்தவடை ஆமவடை பஜ்ஜி எல்லாம் போடும். மொத்த மொத்தமா வாங்கிட்டுப் போவாக பாய் மாருக

அதேபோல மசூதிக்கும் வாங்கிட்டுப்போயி  எல்லாருக்கும் வாசல்ல தானமாக்குடுப்பாக அப்பல்லாம் நல்ல வருமானம் பாட்டிக்கு

ஆனா என்ன மாவாட்டி இடுப்பு ஒடஞ்சு போயிடும்.அப்பெல்லாம் கிரைண்டர் வரல . எல்லாம் கைலதான் ஆட்டனும்

பாய்மாருக விசேசத்துக்குக் கூட வீட்டுல போயி இட்லி வடை பணியாரம் செஞ்சு குடுக்கும். நல்லா கவனிப்பாக சேல துணிமணி காசெல்லாம் நல்லா குடுப்பாக.

காலையில பத்துமணிக்கு வியாபாரம் முடிச்சிட்டு காசக்கொண்டுபோயி நாடார் கடைல மொதநா வாங்குன அரிசி பருப்பு உளுந்து காய்கறிக்கெல்லாம்  காசக்குடுத்துட்டு அன்னிக்கி வேணுங்குறத வாங்கிட்டு வரும் பாட்டி. அப்புறம் ஊரைவைச்சிட்டு சாயங்காலமா மாவாட்டும்.

சாயங்காலம் பாத்தா செல்லம்மா வீட்டுல ஒரலு உருண்டுக்கிட்டுக் கெடக்கும் கடையிலயே நெலவரத்தை பாத்துட்டு சோறுவடிக்கும் இட்லி பணியாரம் மீந்துபோச்சுன்னா அதுதான் அன்னிக்கி சாப்பாடு பாட்டிக்குக்கும் மகனுக்கும். பாட்டி அவரோட புருசன் போனதில இருந்து இதை வைச்சித்தான் பொழப்பு ஓட்டுச்சு

அவ்வளவு செரமத்துலயும் மகன மாவாட்ட விடாது. அதுதான் ஆட்டும். ஒடம்பு கிடம்பு அதுக்கு சரியில்லாம போச்சுன்னா கடை தொறக்காது. சின்ன புள்ளக சாப்புடுறது ஒட்டுவாரொட்டி மாதிரி புள்ளைகளுக்கு நோவு ஒட்டிக்கிடும்னு சொல்லும்

பாட்டி கடதொறக்கலைன்னா சின்ன புள்ளகள அவுக அம்மா மார்களால சமாதானப் படுத்த முடியாதுஇந்தகஸ்டத்துலயும் மகன நல்லாப் படிக்க வைச்சாங்க பாட்டி. அவனும் நல்லாபடிச்சி நல்ல வேலைக்கிப்போனான்

வேலைக்கிபோனதும் அவன் செஞ்ச மொத வேலை கடையமூடும்மா. நீ கஸ்டப்பட்டது போதும்ன்னு சொன்னான்.

அதுக்கு பாட்டிசொல்லிச்சி வருமானத்துக்காக கடை வைச்சோம் தான். ஆனா அதைவிட முக்கியமானது அந்த சின்னபுள்ளக வயிறு ரொம்புறது. அந்த பாக்கியம் எல்லாருக்கும் கெடைக்காதுன்னு சொல்லுச்சு. அவனும் வேறவழியில்லாம கிரைண்டர் மிக்ஸி யெல்லாம் வாங்கிக்குடுத்தான். கடை ஓடிச்சி. அப்பத்தான் கலியாணம் பேசுச்சு பாட்டி மகனுக்கு.

நல்ல இடம் கெடச்சது. அவங்க போட்ட ஒரே கண்டிசன் இட்லிக்கடைய மூடனும்றது

இப்ப பாட்டியால ஒண்ணும் சொல்ல முடியல,ஒத்துகிச்சி.

கலியாணத்துக்கு  மொதநாளு பெரிய விருந்து . விருப்பம்போல உணவு அதான் பப்பெட் சாப்பாடு . பொண்ணுவீட்டுல இருந்து ஏற்பாடு பண்ணிருந்தாக. பாட்டி மகன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுச்சு. அந்த விருந்துல ஓரமா இட்லியும் பணியாரமும் வைக்கனும் அத நாந்தான் செய்வேன்னு சொல்லிடுச்சு.

அவனும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்

விருந்தும் ஆரம்பிச்சிச்சு. விருந்துக்கு வந்த இவன் கூட வேலபாக்குறவுக சாம்பிளுக்கு சாப்பிட ஆரம்பிச்சு. அடாடா விருந்து அப்ப அப்ப நடக்குறதுதான் . பாட்டி இட்லி பணியா ரம் வடை பஜ்ஜி வித்யாசமா .ரொம்ப நல்லாருக்கேன்னு சாப்பிட ஆரம்பிச்சு ...வந்தவு கல்ல பாதிப்பேருக்குமேல இட்லி பணியாரம் பக்கம் வந்துட்டாகசீக்கிரமே தீந்துபோச்சு.விருந்துக்கு வந்தவுகளெல்லாம் இதைப்பத்தியே பேசுனாக

பாட்டிக்கு ரொம்பச்சந்தோசமாஆச்சு.


அங்க வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னாரு. செஞ்ச தொழில மறக்காம இருக்குறது பெரிய விசயம். ஏன்னா செய்யிற தொழில்ல ரொம்ப புண்ணியம் தாரது இதுதான் அதுல கவுரவக்கொறச்சல் ஏதுமில்ல. மனசாறப் பாராட்டுறேன்னாரு.


இதை ஒருத்தரு யூடுயூப்ல எடுத்து அப்லோடு பண்ணாரு. லைக்கும் கமெண்டும் குவிஞ்சிச்சி. பாட்டிக்கு ரொம்பசந்தோசமா ஆயிடுச்சி. இப்ப சம்பந்திக சொன்னாங்க பாட்டி தாரளமா கடை வச்சிக்கட்டும்னு.

சீக்கிரமே பாட்டி இட்லிக்கடை தொறந்துச்சு அப்புடிகொஞ்சநாளு ஓடுச்சு ரொம்ப நாளு கழிச்சி கடைதொறந்தப்ப பிள்ளைக வந்து கேட்டுச்சுக ஏன் பாட்டி கடை தொறக்கல நாங்க தினம் வந்து பாத்தோம் ஒன்னயக் காணோமுன்னு சொல்லிச்சிக. வயசாளிகளும் ஆத்தா இருக்குறவரைக்கும் ஒன் கைல வாங்கித்தின்னுட்டு போய்றலாமுன்னு கெடக்கோம் எங்களுக்கு ஒன்ன விட்டா வேற கெதியுமில்ல. மத்தவுக போடுறது புடிக்கவுமில்ல ஆத்தா கடை மட்டும் மூடிறாத ஏங்கிச்செத்துப்போயிடுவோம்னு கண்கலங்க சொன்னாங்க

ஒருநா செல்லம்மாப்பாட்டி செத்துபோச்சு அன்னிக்கி கடைதெறக்கல அப்பயும் ரெண்டு சின்னப்புள்ளக தூக்குப்போணியோட கடக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்துச்சுக ஒரு அம்மா வந்துசொல்லிச்சு பாட்டி இனிமே கடதொறக்காதுன்னு

அதுகளுக்குப்புரியல அதுல ஒண்ணுவீட்டுக்கே போயிடுச்சு. அங்க எல்லாரும் அழுதுகிட்டு இருந்தாக. எதுக்குன்னு அதுக்குப் புரியல. அதுபாட்டுக்கு பாட்டிகிட்ட போயி பாட்டி எந்திரிச்சி வா வந்து இட்லிகுடு பசிக்குத்துன்னு சொல்லி அழுதுச்சு பாத்தவுக கண்ணு கலங்கிடுச்சு

அதைப்பாத்து வயானவங்களும் கலன்கிட்டாங்க.....

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 3.19.56.45

Archives (முந்தைய செய்திகள்)