Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பெஞ்சில் ஒரு மோகம் – ஐரேனிபுரம் பால்ராசய்யா

17 Feb 2022 1:19 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures bench

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-76
படைப்பாளர் - ஐரேனிபுரம் பால்ராசய்யா

அந்த தேவாலயத்தில் புது பாஸ்டர் சேவியர் பொறுப்பேற்றுக் கொண்ட போது தனது நீண்ட கால கனவு நிறைவேறிய மகிழ்ச்சி அவர் உடலெங்கும் உருண்டுகொண்ருந்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஆராதனை முடிந்து கூடிய கமிட்டியில் ஆலயத்தின் பின் அறையில் போட்டிருந்த உடைந்தும் உடையாமலும் கிடந்த பழைய பெஞ்சுகள், நாற்காலிகள் போன்றவற்றை அடுத்தவாரம் ஏலம் விடுவது என   தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கமிட்டி கலைந்தது. சபையின் உதவியாளரை அழைத்து கொண்டு தூசி படிந்த பழைய பெஞ்சுகள், நாற்காலிகள், கிடந்த அறையைப் பார்வையிட்டார் பாஸ்டர் சேவியர்.

பெஞ்சுகள், நாற்காலிகளைப் பழுதுபார்த்தால் மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் யாருக்கும் பழைய கால மர பெஞ்சுகளில் அமர்வதற்கு விருப்பமில்லை. விதவிதமான பிளாஸ்டிக் செயர்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பெஞ்சில் அமர்ந்தால் ஒருவருக்கொருவர் உரசியபடி நெருக்கியடித்து உட்காரவேண்டும். உடலை அசைக்கவோ நெளிக்கவோ, சோம்பல் முறிக்கவோ முடியாது. அடுத்தவர்கள் வியர்வை நாற்றம் கண்டு முகம் சுளிக்க வேண்டும். பிளாஸ்டிக் செயர்களில் உட்காரும்போது அந்த கவலை இல்லை.

பெஞ்சுகளின் கால்களில் வெள்ளை பெயிண்டில் எழுதிய பெயர்களைப் படித்தபடியே நடக்க, ஒரு பெஞ்சில் சின்னான் என்று எழுதப்பட்டிருந்த எழுத்தை ஆச்சரியமாய் பார்த்தார். அதை சுத்தப்படுத்தும் படி உதவியாளரிடம் சொன்னார். அந்த பெஞ்சை எடுத்துவந்து ஆலயத்தின் பீடத்தின் அருகில் போட்டிருந்த மேசைக்கு கீழே இருந்த நாற்காலிகளை மாற்றிவிட்டு அந்த பெஞ்சைப் போட்டார்.

ஆலயத்தில் பாடல் பாடும் பொழுதோ பிரசங்கம் செய்யாத பொழுதோ வந்தமரும் இடத்தில்  பெஞ்சைப் போட்டு அமர்ந்து ரசிக்கும் பாஸ்டரை கண் எடுக்காமல் பார்த்தார்  உதவியாளர்.  சேவியர் பாஸ்டர் மனதில் பதிந்து கிடந்த தாத்தா கால நினைவுகள் மேலெழும்பியது. 

தேவாலயத்தின் ஆலைய மணிச்சத்தம் அனைத்து ஊர்களுக்கும் செய்தியாய் போய் சேர்ந்தது. ஊரே ஒன்று கூடி தேவாலயத்தில் ஐக்கியமாகி இருந்தார்கள். ஆராதனை முடிந்து நடைபெறும் டீக்கன்மார் தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் தேவாலயத்தின் காம்பவுண்டு சுவர்களுக்குள் மனிதர்களின் நடமாட்டம் வழக்கமாக வரும் ஞாயிற்றுக்கிழமைகளை விட இரண்டு மடங்கு கூடுதலாக இருந்தது.

டீக்கன்மார் தேர்தலில் மேற்குக்கரை ஊரை சேர்ந்தவர்களுக்கும், கிழக்குக்கரை ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் தான் எப்பொழுதும் கடும் போட்டி நிலவும்.  இரு ஊர்க்காரர்களும் சமபங்கு பலம் உடையவர்கள், பணம் உடையவர்கள். வாக்குப்பதிவு மதியத்திற்குள் முடிந்து வாக்கு எண்ணிக்கை துவங்கி மாலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முறையும் வழக்கம்போலவே மேற்குக்கரை ஊரைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று அதிகாரத்தை கையில் எடுத்தார்கள்.

பொன்னுமணிக்கு கடந்த மூன்று முறையும் தோல்விகள் தொடர்கதையாகவே தேவாலயத்தின் மீது வெறுப்பு வந்தது. பேசாமல் கிழக்குக்கரையில் ஒரு ஆலயத்தைக் கட்டி மக்களை ஒன்று திரட்டி ஆட்சி செய்யலாம் என்ற திட்டம் திடமாக அவர் மனதில் தடம்பதிக்க, தனது சொந்த நிலத்தில் சவுக்கு மர கம்புகள் நட்டு தென்னங்கீற்று கூரை வேய்ந்து ஒரு தேவாலயத்தைக்  கட்டினார் பொன்னுமணி.

அவரது உறவுக்காரர் பால்மணியை பாஸ்டராக்கி ____ சர்ச் என்று பெயரும் சூட்டி ஆலயத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையை துவங்கினார். அரவுக்கோணம் பகுதியில் பட்டியலின  சாதிக்காரர்களின் நான்கு குடும்பங்கள் இருந்தது.  பாஸ்டர் அங்கிருந்த சின்னான் குடும்பத்தை மூளைச்சலவை செய்ய அவரின் சர்ச்சுக்கு வர சம்மதம் தெரிவித்தான்  சின்னான். குடிசையை விட்டு வெளியே வந்த பொன்னுமணியின் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல் ஆனது.

”பாஸ்டர்… நாம எல்லாம் பிற்படுத்தப்பட்ட நடு சாதிக்காரங்க, நம்ம சபையில இவங்கள எதுக்கு கூப்பிடுறீங்க…?” கடுப்புடன் கேட்டார் பொன்னுமணி.

“புதுசா கட்டின சர்ச். எல்லாரும் வரணும் இல்லையா…? அவங்க சாதியிலயும் ரெண்டு மூணு குடும்பம் நம்ம சர்ச்க்கு வரட்டுமே, நமக்கு ஆள் கிடைக்குமில்லையா…?” பால்மணி பாஸ்டரின் சமாதான பேச்சுக்கு முகம் சம்மதித்தாலும் மனம் சம்மதிக்காமல் சடுகுடு ஆடியது.

ஆறு மாதங்களில் சபை லேசான வளர்ச்சி கண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் சபைக்கு வந்து காணிக்கை வசூலில் திருப்தியைக் கொடுத்தது. ஓலைப்புரை ஆலயத்தின் மண் தரை சிமெண்ட் தரையாகி முதல் வளர்ச்சியைக் கண்டது.

சின்னான் மகன் சுந்தரத்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவுக்காரர்கள் மற்றும் அந்த சபைக்கு வரும் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. உயர் சாதிக்காரர்களும், நடு சாதிக்காரர்களும் பட்டியலின சாதிக்காரர்கள்  வீட்டு திருமண விருந்தில் கை நனைக்கமாட்டார்கள். அவர்களுக்கென்று வரவேற்பு மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை என்று அழைப்பதில் அச்சிடப்பட்டிருந்தது. 

மார்த்தாண்டம் லாசர் பேக்கரியிலிருந்து மிக்சர், பேப்பர் கேக், தேங்காய் பன், பிரிட்டானியா பிஸ்கட் மற்றும் துளுவன் பழம் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

எல்லோரும் மிக்சர் சாப்பிட்டு ஆரஞ்சு நிற கவரில் எவ்வளவு குறைந்த தொகை வைக்க முடியுமோ அதை வைத்து மாப்பிள்ளையின் கையிலும் சின்னான் கையிலும் திணித்தார்கள். கவரில் வைக்கும்தொகை குறைவு என்பதால் யாரும் கவரின் மீது பெயர் எழுதுவதில்லை. 

இரவு மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. பிற சாதிக்காரர்களின் வருகை குறைந்து சின்னான் உறவுக்காரர்களின் வருகை கூடியிருந்தது.

”சுந்தரம்…  மிக்சர் தீர்ந்து போச்சு ஒரு ஆள் அனுப்பி அஞ்சு ரூபாய்க்கு மிச்சர் வாங்கிட்டு வர சொல்லு”

”வரவேற்பு முடிஞ்சுது, இனி எதுக்கு மிச்சர் வாங்கணும்…?”

”ஏழு மணிக்கு பாஸ்டரும் பொன்னுமணி ஐயாவும் ஜெபம் பண்ண வருவாங்க… அவங்களுக்கு கொடுக்கணும்”

”நம்ம சொந்தக்காரங்க சாப்பிடுவாங்க, அவங்களோட சேர்ந்து ரெண்டு பேரும் முத பந்தியில சாப்பிட்டுட்டு போகட்டுமே…”

”நம்ம வீட்ல பாஸ்டரும் பொன்னுமணி ஐயாவும் கை நனைக்க மாட்டாங்க”

”சாதி பார்க்கிற சர்ச்க்கு எதுக்குப்பா போறீங்க…?  மேல் சாதிகாரங்க வீட்டுக்குள்ள பாஸ்டரையும் பொன்னுமணி ஐயாவையும் உள்ள விடமாட்டாங்க… பொன்னுமணி ஐயா வீட்டிலயும் பாஸ்டர் வீட்டிலயும் நம்ம சாதிக்காரங்கள உள்ள விடமாட்டாங்க… இது என்னப்பா ஞாயம்”

“அதெல்லாம் அப்படித்தான், நீ எதுவும் கண்டுக்காத… மிச்சர் வாங்க ஆள் அனுப்பு.” சலிப்போடு மிக்சர் வாங்க ஆள் அனுப்பினான் சுந்தரம். பால்மணி பாஸ்டர், பொன்னுமணி இருவரின் வருகைக்காக உறவுக்காரர்கள்  காத்திருந்தார்கள்.

“பாஸ்டருக்கு நேரமே வர தெரியாதா…? இவர் இனி எப்ப வந்து ஜெபம் பண்ணி நாம எப்போ சாப்பிடுறது…” திருமண வீட்டு விருந்தை ருசிக்க வந்த பசியெடுத்த ஒரு சிறுவன் புலம்பியபடி இருந்தான்.

அரை மணி நேரம் தாமதமாகவே பாஸ்டரும் பொன்னுமணியும் வந்து சேர்ந்தார்கள்.  இரண்டு பாடல்கள் பாடி வேதாகமத்திலிருந்து கானாவூர் கல்யாண வீட்டில் ரசம் தீர்ந்து போன கதையை யோவான் இரண்டாம் அதிகாரத்திலிருந்து வாசித்து ஜெபம் செய்து முடித்தார்.

இருவருக்கும் பேப்பர் பிளேட்டில் மிக்சர், தேங்காய் பன். துளுவம் பழம் வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. பிஸ்கெட் தீர்ந்திருக்கக்கூடும். இருவரும் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருந்த மிக்சர் பொடியை தட்டி விட்டு எழுந்தார்கள். திருமணத்திற்கு வந்து ஜெபம் செய்ததற்கான காணிக்கையை ஒரு கவரில் போட்டு பாஸ்டரிடம் நீட்ட அவர் அதை வாங்கிக்கொண்டு மனதிற்குள் இரண்டு நிமிடம் ஜெபித்து விட்டு நடந்தார்.

ஒரு மாதம் கழித்து சுந்தரம் முதன்முதலாக தனது மனைவியின் சகோதரன் சிபாரிசில் வெளிநாடு சென்று வேலை பார்த்து வாங்கிய முதல் மாத சம்பளத்திலிருந்து டிடி எடுத்து அப்பா பெயருக்கு அனுப்பி வைத்தான். மார்த்தாண்டம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதி நாள் காத்திருந்து டிடி மாற்றப்பட்டு பணத்தை பெற்றுக்கொண்டு  பாஸ்டரிடம் போய் நின்றான் சின்னான்.

”பாஸ்டர் என் மகன் வெளிநாடு போய் சம்பாதிச்சு பணம் அனுப்பி இருக்கான், முதல் மாச சம்பளம் இது,  காணிக்கையாய் இருக்கட்டும், பாஸ்டர் அவனுக்காக ஜெபிக்கணும்”  பால்மணி பாஸ்டர் சுந்திரத்திற்காகவும் அவனது வேலை ஆசீர்வாதமாக இருக்கும்படி ஜெபித்துவிட்டு கண் திறந்தார்.

“சின்னான் சர்ச்சில எல்லாரும் பாய் விரிச்சி தரையில தான் இருக்காங்க… சில வயசானவங்களுக்கு தரையில உட்கார கஷ்டமா இருக்கு, அவங்களுக்கு பெஞ்ச் வாங்கிப் போடணும், உன் மகனுக்கு கடிதம் எழுதி ஒரு பெஞ்ச் வாங்கி போட முடியுமா…?”

“கண்டிப்பா பாஸ்டர்”  என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அடுத்த மாதம் சுந்தரம் பணம் அனுப்பி வைக்க அந்த பணத்தில் ஒரு பெஞ்ச் வாங்கப்பட்டு சர்ச்க்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . பெஞ்சில் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதன் கால்களில் வெள்ளை பெயிண்டில் சின்னான் என்று எழுதப்பட்டது.  சின்னானுக்கு அதைப் பார்க்க பெருமையாக இருந்தது. தன் பெயரை அதன் கால்களில் எழுதியது கண்டு புல்லரித்துப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடக்கும் போது பெஞ்சில் உட்கார போட்டியே நடந்தது. எல்லோரும் முன்னதாகவே வந்து பெஞ்சில் நெருக்கமாக அமர்ந்து இருந்தார்கள். அந்த பெஞ்சில் ஒருநாள் அமர வேண்டும் என்று ஆசை சின்னானுக்கு எழுந்தது

தனக்கு அந்த பெஞ்சில் இருக்க ஆசை என்று அதில் இருப்பவரை எழுப்பி விட முடியுமா…? அல்லது  இது என் மகன் காசில் வாங்கிப்போட்ட பெஞ்ச், இதில் நான் உட்கார வேண்டும் என்று அதிகாரமாக சொல்லமுடியுமா…? இந்த பெஞ்சில் சின்னான் என்று எழுதப்பட்டிருக்கிறது எனவே நான் உட்கார அதிகாரமிருக்கிறது என்று தான் சொல்ல முடியுமா…? சின்னான் வழக்கம்போலவே தரையில் பாய் விரித்து அமர்ந்திருந்தான்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எட்டரை மணிக்கு துவங்கும் ஆராதனைக்கு ஏழரை மணிக்கே வந்து சேர்ந்தான். முதன்முதலாக உள்ளே நுழைந்து அவன் வாங்கிப்போட்ட பெஞ்சில் அமர்ந்து கொண்டான். நேரம் போகப்போக ஆலயத்தில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

அனைவர் கண்களும் அவன் மீது விழுந்திருந்தது. ஒரு பட்டியலினத்தைச் சார்ந்தவன்  சரிசமமா பெஞ்சில் வந்து உட்கார்ந்து இருக்கானே என்று பலரும் முணுமுணுக்க துவங்கினார்கள். ஆராதனை துவங்கியது. உபதேசியார் சங்கீதம் வாசித்துக் கொண்டிருக்கும்போது உதவியாளர் சின்னான் அருகில் வந்து நின்றான்.

“பாஸ்டர் உன்ன வர சொன்னாரு, பின்னால நிக்கிறாரு போய் பாரு”

சின்னான் எழுந்து ஆலயத்தின் பின்புறம் வந்தபோது பாஸ்டர் பால்மணி நின்று கொண்டிருந்தார்.

“ஆராதனை முடிஞ்சு போகும்போ என்ன வந்து பார்த்துவிட்டுப் போ” சொல்லிவிட்டு விரைந்தார்.  சின்னான் திரும்பி ஆலயத்திற்குள் வந்த போது பெஞ்சில் வேறு ஒரு ஆள் அமர்ந்திருந்தார்.

சின்னான் தரையில் சிறுவர்களோடு அமர்ந்து ஆராதித்து விட்டு வெளியேறினான். பாஸ்டர் பால்மணியைப் பார்க்க பலமணி நேரம் காத்து நின்றான். அவர் கமிட்டி மீட்டிங் என்று காத்திருக்கும் படி சைகை காட்டினார். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த பால்மணி பாஸ்டர் முகம் அஷ்ட கோணலாகியிருந்தது.

”சின்னான்…  உன்ன பத்தி தான் கமிட்டியே,  என்ன திடீர்னு பெஞ்சில உட்கார்ந்துட்ட…  மத்தவங்களுக்கு சரிசமமா இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா…? உன் மகன் வெளிநாடு போய் காசு சம்பாதிச்சா பெரிய ஆளாகிட்டதா நினைப்பா…?  இனிமே நீ பெஞ்சில உட்காரக்கூடாது சொல்லிட்டேன்”  கேட்ட அவரது வார்த்தைகள் நெருப்புத் துண்டுகள் காதில் விழுந்தது போல் சுட்டது.

தன் மகன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அனுப்பிய காசில் வாங்கிய பெஞ்சில் உட்கார கூடாது என்ற பாஸ்டரின் கண்டிப்பு வார்த்தைகளில் மனசு வலித்தது.  அவன் பதில் எதுவும் சொல்லாமல் நின்றான்.

“நான் அண்ணைக்கே சொன்னேன், இவனுங்கள சர்ச்ல சேர்க்க வேண்டாம்ன்னு… பாஸ்டர் தான் கேட்கல… பெஞ்சு வாங்கிப்போட்டா சாதி மாறிருமா…?  மரியாதை கூடிடுமா…?” தூரத்தில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார் பொன்னுமணி.  தலைகுனிந்தபடி தன் வீடு நோக்கி நடந்தான் சின்னான்.

சிறு வயதில் தாத்தா சின்னான் வருத்தமாய் சொன்ன கதைகளைக் கேட்டு எப்படியாவது பாஸ்டர் படிப்பு படித்து அந்த சபைக்கு பாஸ்டர் ஆக வேண்டும் என்ற சேவியரின் வைராக்கியம் வெற்றி கண்டது. தாத்தா அமர முடியாத அந்த பெஞ்சில் பேரன் சேவியர் அமர்ந்தபோது சின்னான் அமர்ந்தது போலவே இருந்தது

You already voted!
3.9 12 votes
Article Rating
Subscribe
Notify of
guest
26 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Thenmozhi
Thenmozhi
2 years ago

Nice narration…

கே.லக்‌ஷ்மணன்
கே.லக்‌ஷ்மணன்
2 years ago

பால்ராசய்யா தான் ஒரு அருமையான கதைசொல்லி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்…

S.XAVIER ILANGO.
S.XAVIER ILANGO.
2 years ago

வாழ்த்துகள்,

PRASANTH P T
PRASANTH P T
2 years ago

Superb

நன்னிலம் இளங்கோவன்
நன்னிலம் இளங்கோவன்
2 years ago

எனது வாழ்த்துக்கள்!

நன்னிலம் இளங்கோவன்
நன்னிலம் இளங்கோவன்
2 years ago

பால்ராசய்யா படைத்துள்ள
நெஞ்சில் ஒரு மோகம்
சிறுகதை
என்னுள்ளே
ஆழ்ந்த சோகத்தை
உண்டாக்கிவிட்டது.என்று மனிதம் தழைக்கும்!

Last edited 2 years ago by நன்னிலம் இளங்கோவன்
குமரித்தோழன்
குமரித்தோழன்
2 years ago

சாதியின் சல்லிவேரை படம்பிடித்த சிறுகதை. சிறப்பு.

பென்ஸ்
பென்ஸ்
2 years ago

நெஞ்சில் இருந்த வேற்றுமை தற்பொழுது இலை மறை காயாக தளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. என்று மறையும் இந்த சாபம்…

ஜூனியர் தேஜ், சீர்காழி
ஜூனியர் தேஜ், சீர்காழி
Reply to  பென்ஸ்
2 years ago

திருச்சபைகளின் முரண்பாடுகளை உரத்து ஒலித்த 21ம் நூற்றாண்டின் ‘மார்டின் லூதர்’ பால் ராசய்யாவுக்குப் பாராட்டுக்கள். Keep it up
ஜூனியர் தேஜ்

சா. சுரேஷ்பாபு
சா. சுரேஷ்பாபு
2 years ago

திருச்சபைகளில் நடக்கும் சாதீய ஏற்றதாழ்வுகளை துணிச்சலாக எழுதியது சிறப்பு. முடிவு அருமை. வாழ்த்துகள்

Ram kannan
Ram kannan
2 years ago

Super story

க.தமிழ்மாறன்
க.தமிழ்மாறன்
2 years ago

புதுமுறையில் அமைந்த அழகியல் சிறுகதை…வாழ்த்துக்கள்

Dr.Suresh Kaani
Dr.Suresh Kaani
2 years ago

மிகவும் அருமையான கதை புனைவு
எளிமையான காட்சி அமைப்பு,
மனதை வருடும் சம்பவத்தொகுப்பு,
பாராட்டிற்குரிய பாத்திரப்படைப்பு,
கதை மிகவும் அருமை..!

செ. தமிழ்ராஜ்
செ. தமிழ்ராஜ்
2 years ago

மிகச்சிறப்பான கதை

Raman
Raman
2 years ago

நல்ல கதை. பாராட்டுகள்.

kulachal yoosuf
kulachal yoosuf
2 years ago

அருமை

Boopal
Boopal
2 years ago

Good Story heart touching

Giftson Boaz
Giftson Boaz
2 years ago

Nice story

ஜகன்
ஜகன்
2 years ago

அருமையான கதை

Ranju
Ranju
2 years ago

Nice 👌👌👌👌👌

கோவை புதியவன்
கோவை புதியவன்
2 years ago

பெஞ்சில் ஒரு மோகம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது. மிகச் சிறப்பான சிறுகதையை தந்தமைக்கு வாழ்த்துகள்

கோவை புதியவன்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092423
Users Today : 8
Total Users : 92423
Views Today : 17
Total views : 409996
Who's Online : 0
Your IP Address : 3.144.154.208

Archives (முந்தைய செய்திகள்)