15 Sep 2023 9:00 pmFeatured

காஞ்சியில் பிறந்த
தமிழகத்தின் மா தவம்
இலட்சக் கணக்கினிலே
பின்தொடர்ந்த தம்பியர்க்கு
அரசியல் புகட்டிய
ஆதர்ச அண்ணல்.
திராவிட முன்னேற்றக்கழகம்
தோற்றுவித்த விடிவெள்ளி
பகுத்தறிவுப் பாதையினை
செப்பனிட்ட பெருஞ்சிற்பி
பொற்காலத் தமிழகத்தை
வடிவமைத்த மாமேதை.
தேசிய ஆதிக்கத்தினின்று
மாநில உரிமைகளை
மீட்டெடுத்த சிறப்போடு
அவ்வுரிமைகள் நிரந்தரமாய்
தொய்வின்றித் தொடர்வதற்கு
வழிவகுத்த போராளி.
சென்னை மாகாணத்தை
செந்தமிழ் நாடாக்கிய
முத்தமிழின் வித்தகம்
மூத்ததமிழ் முதலகம்
தமிழகத்தின் அருந்தவம்
தங்கத்தமிழ்ப் பெட்டகம்.
வறுமைஒழிப்புத் திட்டத்தினால்
ஏழைகளின் சிரிப்பினிலே
இறைவனைக் கண்டதொரு
சீர்த்திருத்தச் செம்மல்
திராவிட பூமியின்
தன்னிகரிலாப் பெருங்கீர்த்தி.
எதிரிகளையும் அரவணைத்த
கண்ணியத்தின் பிறப்பிடமாய்
கடமைகண்ணியம் கட்டுப்பாட்டை
தோற்றுவித்த வித்தகராய்
கட்சியை இறுதிவரைக்
கட்டிக்காத்த அருந்தலைமை.
ஆங்கில இலக்கியத்தின்
ஈடிலாப் புலமையினால்
அகிலம் அனைத்தையும்
கவர்ந்த காந்தமாய்
சொற்றொடர் அடுக்கில்
செந்தாமரை யாய்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையையும் மதித்து
சமதர்மம் போற்றிய
பண்பின் சிகரம்.
காலம் ஓர்நாள்
இவரையும் கவர்ந்ததனால்
வங்கக் கடலோரம்
மீளாத்துயில் கொண்டபோதும்
தங்கத் தமிழகத்தின்
மக்கள் மனங்களிலே
அன்பு அண்ணனாக
நீங்கா இடம்பெற்று
அவனியின் வரலாற்றில்
வாழ்ந்தொளிரும் ஆதவன்.
இன்று செப்டம்பர் 15
பேரறிஞர் அண்ணாதுரை
அவர்கள் பிறந்தநாள்.
- கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90