Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உள்ளே ஊறும் சாத்தான் – ரிஷி

15 Feb 2022 2:10 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures -rishi

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-45
படைப்பாளர் - ரிஷி

140 சதுரடி மட்டுமே கொண்ட தன் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, ஒற்றை சன்னலையும் சாக்கால் திரையிட்டு, துளி கூட வெளிச்சம் படராதவாறு, இருள் புடை சூழ அமைத்து. ஓர் ஓரமாக இருந்த சுவற்றின் மீது தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்த நிலையில் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான் சேது.

அவன் இடது கண் ஓரத்திலிருந்து மட்டும் நீர் வழிந்துக்கொண்டிருக்க, கட்டிகள் அதிகம் குடிக்கொண்டிருந்த முகத்தில் குழப்பமும், மிரட்சியும் நிலவியிருந்தது. தனிமையில் அவன் தத்தளிக்கிறான்.

சேது தலையை கீழே கவிழ்த்திருக்க, மனிதனிடம் மெள்ள பேசி கொல்லும் நஞ்சான மனம் - அவன் மனம்  அவனிடம் உரையாடலை தொடங்குகிறது.

"என்னாச்சு?"

"ஒன்னுமில்ல"

"நான் மனம். என்னை இப்படி சமாதானப்படுத்தாத... சமநிலையை என்னால மட்டுமே உனக்கு உருவாக்கி தரமுடியும்"

"நீயா?"

"ஆம்" மனம் புன்னகைத்தது.

"நீ தான் குழப்பங்களுக்கான மூலாதாரமே... ரெண்டு துருவங்களை நோக்கியும் மாத்தி மாத்தி ஓடவிட்டு அதோட மூலைக்கே தள்ளுவ. முடிவு தப்பானா ? முழுமையே இல்லாம போனா ?" சற்று நேரம் அமைதியாகிவிட்டு விரக்தியாக சொன்னான் "...கடைசில என் மேலேயே பழியை போட்டு வருத்தப்பட வெப்ப"

"ஓ..."

"உலகிலுள்ள மாந்தர்களினின்றும் கொடியவன் நீ. நான் அதான் சமூகத்தை விட்டு விலகியே நிக்குறேன், ஆனா..."

"ஆனா?"

"நான் உன்னை என்னோட கட்டுப்பாட்டுல வைக்கணும். சமநிலை இழந்து நிக்குறேன். என் அகத்தை ஆள்றது கூட நீ தான்..."

தண்ணீரை குடித்துவிட்டு தொடர்ந்தான்.

"காவலாளியோட வேலை காவல் காக்குறது மட்டும் தான் ஆனா அவனே யாரை உள்ளே விடனும்னு ஆட்சி செய்ற அதிகாரம் அவனுக்கில்ல"

"நான் உன் கட்டுப்பாட்டுல தான் இருக்கேன்" சொல்லிவிட்டு பல்லை காட்டி சிரித்தது மனம்.

"நீ இப்படி மத்தவனை ஏமாத்தலாம்"

"ஓ... உன் பிரச்சனையை என்கிட்ட சொல்லு..."

"உனக்கே தெரியுமே? ஒரு நிகழ்வு நடக்க காரணமா இருக்குறவனுக்கே நிகழ்வோட போக்கு தெரியலயா ?"

மனம் முழித்து. அங்குமிங்கும் அலை பாய்ந்தது.

.சேது சொன்னான் "பட்டாம்பூச்சி விளைவு!" - வியப்பானான்.

"ஒரு பட்டாம்பூச்சியோட சிறகு கூட ஒரு பெருவெடிப்பு நடக்க காரணமாயிருக்கலாம்ல... அதான்..." என்று சட்டென்று நினைவுக்கு வந்தவனாக படபடப்பாக தனக்குள் சொல்லிக்கொண்டான்.

"நீ தனியா இருக்க..."

"நான் அது எனக்கு தீர்வா தேடிக்கிட்ட வரம்" என்று மனதின் கூற்றை மறுத்தான்.

"நீ யார் கூடவும் பேசமாட்ட. அப்படி பேசுனா எல்லை மீறி பேசுவ. அந்த பேச்சு தான் உனக்கு எதிரி அதானே ?"

சேது முழித்தான். கண்களை சிமிட்டினான்.

கண்ணிமைத்த நொடிகளுக்கு பிறகு "ஆமா... என் பேச்சு தான் எனக்கு எதிரி. அதான் நான் பேசுறதயே நிறுத்திட்டேன். நான் ஏன் அதிகமா வெளிப்படுத்துறேன் ? எல்லாமே உணர்ச்சி... உணர்வு கூட இல்ல, அது கூட வெளிப்பட யோசிக்கும்... உணர்ச்சி... அதுக்கு காரணமா இருந்து அதை தூண்டுறது கூட நீ தான்.

நான் மீறி அதை அடக்கினா ? நீ அது மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்தி எரியவிட்டு எரிமலையா கக்கிடுவ"

"மொதல்ல இதுக்குலாம் காரணமே எதிர்ப்பார்ப்பு தான். அதை தூண்டுறதும் நீ தான்" - சொல்லிமுடித்தான்.

மனம் என்னென்னவோ சொல்லி சமாளிப்புகளை அள்ளிவிட, பல்வேறு முயற்சிகள் எடுத்து முடவன் கொம்புத்தேனை எடுக்க போய் தோற்றது போல பின்வாங்கி அமைதியானது.

"நான் எதுவும் எதிர்பார்க்கல. என்னைய பொறுத்தவரை எல்லாருமே வழிப்போக்கர்கள் மட்டும் தான். ஆனா அதையும் மீறிய உன்னோட தலையீடு தான்..."

"உலகில் மட்டுமில்ல பேரண்டத்திலேயே, ஒளியை விடவும் வேகமாக பயணிப்பவன் நான்"

"ஆமா" - மூக்கை உறிஞ்சிவிட்டு தொடர்ந்தான் "உலகத்துல பெண்கள் தான் சுழற்சிக்கும், குறிக்கோள் வெச்சி மனுசனை ஓடவிடுறதுக்கும் முதல் காரணம்னா, நீ சுழற்சிக்கான ரெண்டாவது காரணம்"

மனம் சிரித்தது. சேது முறைக்கவும் நிறுத்தியது.

அவன் கேட்டான் "ஏன் நிறுத்திட்ட ? சிரி. உனக்குன்னு ஒரு உயிரோ இல்ல உறுப்போ இருந்திருந்தா எப்பவோ அது வெட்டி வீசப்பட்டு பரிணாம வளர்ச்சியில அழிஞ்சே போயிருக்கும்."

அமைதியாக சிறிது நேரம் இருந்துவிட்டு "பேசு" என்றது மனம்.

"நான் முழுமையில இருக்க நெனைப்பேன். நீ பெண்டுலம் மாதிரி நிக்காம குறுக்க மறுக்க பாய்ஞ்சிட்டே இருப்ப. இதனால என் நிம்மதி கெடும். யார் கூடவும் பேசமுடியாத நெலம வரும்... தனிமை சுகமா இல்லேனா கூட பரவால்ல அதை நீ ஒரு பக்கம் சிந்தனைகளை கிளறிவிட்டு நரகமாக்குவ...  நான் இதெல்லாம் உணர்ந்துட்டேன்" இப்படியாக பெரிய பட்டியலை ஒப்பித்துவிட்டு "நான் இதுக்குலாம் இப்போவே முடிவு கட்ட போறேன்" என்றான்.

"உன்னோட இறுதி முடிவென்ன? என்னை கண்டுக்காம இருக்க போறியா ?" கேட்ட மனம் தனக்குள் சிரித்துக்கொண்டது.

"நான்... நான் 21 கிராம் எடையை உடம்புல இருந்து நீக்க போறேன்"

"புரியல"

"உனக்கே தெரியும்"

மனம் அமைதியானது - "என்ன ?" என்பது போல அவனுக்குள் கேட்டவாறே இருந்தது.

நானோ வினாடிகள் கழித்து சேது தீர்மானமான குரலில் தளர்வாக சொன்னான்

"தற்கொலை"

"த... தற்கொலையா?"

"ஆமா?"

"அது கோழைத்தனம்"

"உங்கிட்ட சுழற்சியில மாட்டி தினம் தினம் சாகுறதுக்கு தற்கொலை எவ்வளவோ மேல்"

"அது..."

"பேசாதே"

"தற்கொலை செஞ்சிக்காத... உனக்குன்னு..."

"கடமைகள் எனக்கில்ல. உனக்கு பகடையா இனி யாருமில்லேனு நீ துடிக்கிற"

"உன் விருப்பம்" என்றுவிட்டு மனம் தற்கொலை செய்வதற்கான காரணங்களை அடுக்கி அதனால் வரும் நன்மைகளை விளம்பரம் செய்ய ஆயத்தமானது.

"உங்களுக்கு கூகுள் தெரியும். அதுல ஒரு விசயத்தை தேடுனா அது போக்குக்கு போற இடமெல்லாம் விளம்பரம் கொடுக்கும். மனசும் அதே மாதிரி தான்.

விருப்பத்தை கலைக்கும், ஆசைகளை தூண்டும், பாதைகளை மேம்போக்கா வகுத்து அதுல புதைகுழி இருக்குறத மறைச்சிடும்" என்று தனக்குள் முணுமுணுத்தவாறே புகையை இழுத்தான் சேது.

ஒரு மணி நேரம் மயக்கத்தில் இருந்திருப்பான்.

திரும்பவும் அவன் விழிக்க, மனமும் விழித்து விளித்தது "திரும்ப என்னாச்சு ?"

"உன்னைய கூட வெச்சிட்டு வாழ்றது கூட தற்கொலைக்கு சமம் தான்" சொல்லிவிட்டு கேலியாக சிரித்தான்.

தற்கொலை எண்ணம் தற்போது அவனிடம் அறவே இல்லை. அதுவும் மனதின் “இருதுருவ முடிவு பிழற்வு ஆட்டமாக இருக்குமோ ?” என்று திரும்பவும் யோசித்துக்கொண்டே மனதுடன் சதுரங்க ஆட்டம் ஆட தீர்மானித்து ஆஷ்ட்ரேயில் புகையை தவிடு பொடியாக்கி நசுக்கினான்.

You already voted!
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092425
Users Today : 10
Total Users : 92425
Views Today : 20
Total views : 409999
Who's Online : 0
Your IP Address : 18.220.178.207

Archives (முந்தைய செய்திகள்)