Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மு.வரதராசனாரின் நாவல் கயமை அறிவுச் சாறுகள்

27 Apr 2025 12:16 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures ganeshan

சாக்ரடீஸ் கணேசன்- மும்பை

நுழையும் முன்:
இந்த உலகை மாற்றியமைப்பவர்களை, உலகை மறுமலர்ச்சியில் சிந்திக்க வைத்த அறிஞர்களை, இலக்கிய வாதிகளை, தத்துவவாதிகளை, அறிவாளிகளை இந்த சமூகம் எளிதில் ஏற்றதில்லை என்பது உலக வரலாற்றை சிறிது புரட்டி ஆய்வு செய்தால் புரியும்.

தமிழ் மணக்கும் அவைக்கும், மற்றும் அவையோர் அனைவருக்கும் வணக்கம். இந்த கருத்தரங்கம் நமக்கு தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.ஏனெனில், மு.வ தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிமிக்க சமூகச் சிந்தனைவாதி சாக்ரடீஸ் போல் நம்மையும் சிந்திக்கவைத்தவர், வைப்பவர்.

பன்முகப் பேரறிவாளர்.வளமான அறிவுச் சுடர். ஆதிகாலம் தொட்டு மானுடவியல் அறிவுப் புரட்சிகளைத் தொகுத்து தனது அனுபவங்களை நம்பகமற்ற மனித இருத்தலியத்தில் எழும் பிராச்சனைகளை, அவலங்களைதன்னுடைய வாழ்வியலில் நடந்த சம்பவங்களை நாவல்கள், சிறுகதைகள், உரைநடைகள், கடிதங்கள் மூலம் பல்வேறு நிகழ்வுகளாக அறத்தை சமூகத்தில் அறிவுக்கண்ணாடி கொண்டு மிக ஆழமாக ஆய்ந்து சிந்தித்து தனது பேனா வலிமையால் மக்களையும் சிந்திக்க வைத்தவர், வைக்கின்றவர் .மேலும் சமூகத்தில், அரசியலில், தனிமனித வாழ்க்கையில் அறம் எங்கே என்று தேடவேண்டியதுள்ளது என்று வருந்துகிறார். புத்தரின் தர்மநெறி, மத்திய நிலைக்கோட்பாடு(MIDDLE PATH) இவரை ஈர்த்துள்ளது. எனது பதின்ம வயதில் கிராம இருட்டிலிருந்து சிறிய நகர வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்த என்னை இவரது நாவல்கள் ஈர்த்தது, சிந்திக்க வைத்தது . அகல் விளக்கை தத்துவ விளக்காக மாற்றியது இன்றைய எனது தலைப்பு அன்னாரின் நாவல் ” கயமை”.

இப்பூவுலகில் எத்தனையோ, வரலாற்று நிகழ்வுகள், அரசியல், சமூக அவலங்கள், அபத்தங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பினும் இந்த நாவலில் இருபதாம் நூற்றாண்டின் ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை, முரட்டு அவலங்களை, போட்டி பொறாமைகள், அநாகரிகமான வார்த்தைகள்,வஞ்சகங்கள், அடிமை வாழ்வு என்று ஆய்ந்து திரட்டியிருக்கிறார். இவைகளை நானும் என் வாழ்வியல் நகர்வுகளில் வேலை பார்த்த அலுவலகங்களில் நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்தவன் என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவர் பற்றி புலம் பெயர்ந்த மும்பை தமிழ் எழுத்தாளர்கள் மன்றம், வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா இணைந்து நடத்தும் கருத்தரங்க விழா நமக்கு மகிழ்வுதான், பயனுள்ளதாக இருக்கும். இந்த கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற மூல வேறாக இருந்து செயல்படும் சிறந்த பண்பாளர், சிந்தனைவாதி வதிலை பிரதாபன் அய்யாவிற்கும், மற்றும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் நன்றிகள்.

நுழைவாயில்:
நாவலுக்குள் நுழையும் முன் உலகச் சமுதாய அவலங்களை புரிவதற்காக சிலவரலாற்று சிந்தனை நிகழ்வுகளை அலசுவோம் வாருங்கள்.

1) மனித குலவரலாற்றின் வரலாறுகளைச்சற்றுத் திரும்பிப்பார்த்தால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து அறிவில் ஞான விருட்சம் அடைந்தது. இவ்வுலகில் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் சுமார் ஒருலட்சத்து ஐம்பதினாயிரம்ஆண்டுகளுக்குமுன்புதான்அறிவொளியில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர் . அறிவுப் புரட்சி ஓங்கி ஞானவிருட்சம் அடைந்து இருந்தாலும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள், மேட்டுக்குடி, அரசகுடி,அடிமைக்குடி என்ற பிரிவினைகள், நக்கல்கள், கிண்டல்கள் என்று மனித வரலலற்றில் இன்றுவரை தொடர் அவல நிகழ்வுகள்தான், ஊழிப் பெருவெள்ளம்தான், வரலாற்று மோசடிகள்தான், மூச்சித் தினறடிக்கும் இனக்கும்பல் இனவெறிகள் தொடர்நிகழ்வுகள்தான் என்பேன்.

2) இருப்பினும், எழுத்து வளர்ந்தகாலம் கி.மு பத்தாம் நூற்றாண்டில் அதுவும் இலியட், ஒடிசி என்ற இரட்டைக் காப்பியங்கள் கிரேக்கத்தில் தோன்றின. அதில் வஞ்சகம், நயவஞ்சகம், கோரவஞ்சகம் பற்றி பல குணாதிசயங்களோடு சமுதாயப் பரிதாபங்களை, மனைவி, குழந்தைகளை இழந்த வீரர்களின் புரியாத புதிர்களை, மனித பேதமைகளை ஹோமர் பதித்துள்ளார். அதுமட்டுமா புரட்சிகளின் ஆரம்பமே ஆதாம்- ஏவாள் மூலம் தொடர்கிறது என்கிறது வரலாறு.

3) கி.மு. நான்காம் நூற்றாண்டில் சாக்ரடீஸ் என்ற சமூக சீர்திருத்தச் சிந்தனையாளன் அன்றைய மக்களின் அடிமை வாழ்வை எதிர்த்தான். அறம், மனிதாபிமானம் எங்கே என்று தேடி அலைந்தான். நான் ரத்தமும், சதையும் கொண்ட தாய்க்குப் பிறந்தவன் கல்லுக்கும், பலகைக்கும் பிறந்தவன் அல்லன் என்ற பகுத்தறிவு சிந்தனையை ஏத்தன்ஸ் நீதிமன்றத்தில் விதைத்தான். அரசர்களும், மேட்டுக்குடியினர் மட்டும்தான் சிந்திக்க வேண்டுமா? இது பகுத்தறிவு பகலவனை இரவு விழுங்குது போன்ற எதேச்சதிகாரச் செயல்கள் என்று உலகறிய வாதாடினான்.கேட்டதா அன்றைய முடியாட்சி? அறிவாளிக்கு விசக் கோப்பை, அறிவிலிகளுக்கு மதுக்கோப்பை, ராஜ போக வாழ்க்கைஎன்பது வரலாற்றின் தொடர் பதிவு. அறிவையும், அறத்தையும் தொலைத்து விட்டோமோ? என்று அஞ்சுகிறது இவ்வுலகம்.
4) இந்த உலகில் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பிரஞ்சு புரட்சிமுதல் இருபதாம் நூற்றாண்டுவரை எத்தனையோ சமுதாயப்புரட்சிகள், அறிவு, அறிவியல் அறிஞர்களை புரட்சிக்காரர்கள், கலகக் காரர்கள், படித்த நக்சல்கள் என்று பலிகடாக்கள் ஆக்கியதும், சிறையில் அடைத்து சித்திரவதை, நாடு கடத்தல் வரலாற்றை சொல்லி மாளாது. வாங்க மு. வ என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
5) மு.வ ஓர் அறிவு, அறவியல் மெய்யியல்வாதி. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டின் அரிஸ்டாட்டில் என்றுதான் கூறவேண்டும்.அறிவும், அறமும்; உரிமையும், கடமையும் வாழ்வியலில் அரசியலில், சமுதாயத்தில் மெய்யியல் சூத்திரம் என்கிறார். சிந்திக்கா மனிதர்கள் உயிரில்லா அஃறினைகள்தான் என்று சாக்ரடீஸ் போல் பகுத்து தொகுத்து ஆய்கிறார்.

அவர்காலத்திற்கேற்ப (1912-1974) கிராமத்தில் பிறந்து, கல்வி பயின்று புலவர் பட்டம் பெற்று படிப்படியாகக் கற்று தமிழில் முதல் முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். முத்தமிழ் வித்தகர். இருப்பினும் அவருடைய நாவல்களைப் புரட்டியதில் அவர் கிரேக்கம், ஐரோப்பிய மற்றும் பல நாட்டு இலக்கியம், தத்துவம், அறம், சட்டம் , வரலாறுகள், மானுடவியல், அறிவியல் உளவியல் அலசி ஆய்ந்துள்ளார் என்பது நான் அறிந்த உண்மை. வரலாற்று நிகழ்வுகளை, அவருக்கு முன் வாழ்ந்த மூதறிஞர்களின் பதிவுகளைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டி நம்மையும் தேடுங்கள் என்கிறார்.

அவர் கிரேக்க இலக்கியம், தத்துவம், குறிப்பாக சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மார்க்கஸ் அரேலியஸ்,காந்தீயம், ஒத்துழையாமை இயக்கம், டால்ஸ்டாய், விவேகானந்தர், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், புத்தர், இயேசு, சிலப்பதிகாரம், ராமாயணம், மகாபாரதம் . குமரகுருபரர், ராமதீர்த்தர் போன்றார் எழுத்துகளில் ஆழ்ந்து ஆய்ந்து தனது கருத்துக்களை சில கதாபாத்திரங்களின் மூலம் செதுக்கியுள்ளார். இது தவிர ஹி ட்லர், முசோலினி, ஸ்டாலின் போன்றோர் வரலாற்றில் காணாமல் போனதன் காரணம் பற்றியும் அலசுகிறார்.அறத்தைக் கையாளும் திறமை சமூகத்திற்கு புரியவில்லை என்கிறார். வாங்க நாவலுக்குள் நுழைந்து அலசுவோம்.

கதைச் சுருக்கம்:
முதலில் கயமைக்கு திருவள்ளுவர் இரண்டு குறள்களில் உலகில் வாழ்ந்த, வாழ்கிற, வாழப்போகிற கயவர்களை பொய்யர்களை, வேடதாரிகளை தத்துவரூபமாக செதுக்கிய குறள்கள் உங்களுக்காக:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்.-1071

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் -1073

இதில் அவர் கூறுகிறார் கயவர்கள்போல் ஒத்துள்ள பொருள் நாம் எங்கும் எப்பொழுதும் காணமுடியாது. மேலும் தேவர்கள் போலவே அசலாக காட்சியளிப்பர் கயவர்கள் என்பது வள்ளுவன் கூற்று. மு.வ வும் கயமனிதர்கள் முகமூடி அணிந்த, பளபள உடுப்புகள் அணிந்து நடமாடும் அறமில்லா, ஈரமில்லா விசமிகள் என்று சாடுகிறார். வாங்க அலசுவோம்.

அது ஒரு அரசாங்க அலுவலகம். முதன்மை பொறுப்பாளர் பெயர்- ஆணவர் என்ற தலைமைக் கணக்கர் வேங்கோபர் என்ற ஆபிசர்க்கு கீழ் என்றாலும் ஆபிசரே அவனை நம்பும் அளவிற்கு வேடதாரி ஆணவர். சுந்தர விநாயகர் போன்ற அறிவு, அறமில்லா அரசியல்வாதிகள், பெருஞ்செல்வர்கள்தான் ஆணவருக்கு நண்பர்கள். ஆணவருக்கு சொகுசு விடுதிகள், கார்வசதிகள், உல்லாச வசதிகள் கொடுத்து கைமாறாக ஆதாயம் தேடுபவர்கள்.( i.e Honey Trap method) என்பது இன்றைய உளவியல் கருத்து.

ஆணவர் நெற்றியில் விபூதிப் பட்டை, அகலச் செந்தூரப் பொட்டு சிவப்பழமாகக் காட்சியளிப்பார். தொடர்ந்து சிகரெட்டை ஊதித்தள்ளுவார். பளபளவென்று கொழுத்த உருவம். ஆனால் சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நிறம் மாறும் நாகரீகப் பச்சோந்தி.

மற்றும் ஆணவர் சொல்லுக்கெல்லாம் ஆட்டம்போடும் நல்ல பாம்புபோல் மேடம் வசீகரம் என்ற காக்காபிடிக்கி, கோழ்ச்சொல்லி, ஏகாதிபத்திய வேடதாரி. குறிப்பாக ஆணவரின் அறம்மீறிய வசீகர வப்பாட்டி.

பியூன் மியார் ஆணவர் கொடுக்கும் சிறிய பணத்திற்கு குனிந்து நெளியும் அப்பாவி வேடதாரி.

பிரகாசம்,வெங்கடேசன், சகாயம்,குலசேகரன் போன்றோர் அலுவலர்கள். வம்புகளில் விலகி சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள். புரட்சி, கலகக் குணங்கள் இருந்தாலும் தங்களின் சூழ்நிலை அறிந்து அடக்கி வாசிப்பவர்கள். சகாயம், குலசேகரன் சிறிது துடிதுடிப்பில் வசீகரத்தின் கொடுமைக்கு ஆளாகி ஆணவர் மூலம் பனி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.

மாற்றுப்பணிக்கு நல்லையன் தாய் தந்தை இல்லா ஏழை. மென்மொழி சாதாரண விவசாயி மகள். அறிவுமிக்க, அறமிக்க பண்பாளர்கள். வள்ளுவன், காந்தி, விவேகனந்தர், குமரகிருபரர், ராமதீர்த்தர் போன்ற ஞானிகளில் சிந்தனைகளில் மெய்யறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் சேர்ந்தனர்.அறிவையும், அறத்தையும் வள்ளுவன் குறள்படி –315 -656 நன்கு ஆய்ந்தவர்கள். இதோ அந்தக் குறள்கள்; அறிவு vs அறம்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை -315

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை -656

இருப்பினும் அவர்கள் ஆணவர், வசீகரம் என்ற விச வலையில் சிக்கி தவிக்கும் காட்சிகள் இன்றைய சினிமா ஜெய்பீம் போல் இருக்கும். நல்லையன், மென்மொழி இருவரும் ஆணவருக்கும், வசீகரத்திற்கும் விரோதிகள் ஆயினர். நல்ல தெளிந்த உள்ளங்களை பனி நீக்கம் செய்வதில் சிக்கல்கள் இருந்தன. இருப்பினும் நல்லையன் பணிநீக்கம் செய்யப்பட்டான்.

வசீகரம் ஆணவரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பழைய அலுவலகத் தோழன் சகாயத்திற்கு வப்பாட்டி ஆகிறாள். இதை நேரில் பார்த்த ஆணவரே வசீகரத்தை கொலை செய்து விட்டு விசாரணையில் நல்லையன்,மென்மொழி மேல் பழியைப் போட்டு நல்லையனுக்கு தூக்குத்தண்டனை, மென்மொழிக்கு ஏழு வருடச் சிறைத்தண்டனை என்பது உறுதியானது.

இதற்கிடையில் அரசியல் மாற்றத்தால் சட்டங்கள் மாறின. இதற்கு மு.வ வின் கற்பனைச் சட்டவியல் திருத்தம் பிளேட்டோ போல் அமைக்கிறார். அதன்படி நல்லையன், மென்மொழி இருவரும் விடுதலை அடைகின்றனர். புதிய சட்டவியலால் கயமை ஆணவர் குற்றவாளி ஆனார். ஆனால் அக்கயவன் ஜெயிலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான் என்று முடிவடைகிறது நாவல்.

நாவலின் மகிமை:
வாங்க சிறிதுஅவர் கால அலங்கோல மனிதர்களின்அலுவலக அழுக்குகளை, வன்மங்களை, வஞ்சகங்களை அவலங்களை, அநாகரீகங்களை மு. வ. பார்க்கும் பார்வையை (PERSPECTIVES0 அலசலாம்.

1) முதலாவதாக அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை பார்ப்பவன் அடிமையாக, வாய்மூடி, தான் படித்ததை வெளிக்காட்டாமல் வாய் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்பது அன்றும், இன்றும் அரசியல், அலுவலகம், கல்விக் கூடங்கள், கட்சி அலுவலகங்கள், மொத்தத்தில் அனைத்து வகைப்பட்ட சமூக அலுவலகங்களிலும் இன்றும் தொடர் நிகழ்வுகள்தான் என்கிறார்.

2) சமுதாயத்தில் அனைவரும் சாக்ரடீஸ், காந்தி, புத்தர், விவேகானந்தர் ஆகவேண்டும் என்றால் முடியாது. ஓர் ஆலமரத்தில் எத்தனையோ பழங்கள் உதிர்ந்தாலும் சில விதைகள்தான் முளைக்கும். இதுதான் உலக யதார்த்தம் என்கிறார்.(page-157)

3) அலுவலர் பிரகாசத்தை ஆணவர் தனது அறைக்கு அழைத்து தவறே இல்லாத ஒன்றிற்கு “உனக்கு யார் பி.ஏ பட்டம் கொடுத்தது மடையா, பேடிப்பயலே என்ற ஆர்பாட்டம் அலுவலகமே அலறும், அதிரும் என்று சொல்லலாம். கொட்டினால்தான் தேள்; கொட்டவில்லை என்றால் பிள்ளைப்பூச்சி என்று தன்னை சமாதானப்படுத்தி சென்று இருக்கையில் அமர்வர் அப்பாவிகள். பாம்பிடம் பால் எதிர் பார்க்கமுடியாது; தேளிடம் தேனை எதிர்பார்க்க முடியாது, இது காலத்தின் கட்டாயம் என்ற மு.வ வின் பதிவுகள் சிந்திக்க வேண்டிய ஒன்று.

4) பணத்திற்காக சட்டம், நீதிமன்றம், அரசாங்கம் துணையாக உள்ளவரையில் எங்கும் ஊழல் இருந்தே தீரும். அது கோயிலையும் விடாது; கதர் சட்டையையும் விடாது என்ற மு.வ வின் ஆதங்கம் கி.மு நான்காம் நூற்றாண்டில் பிளேட்டோவின் “ குடியரசு” என்ற தத்துவ அரசியல் படித்தது போன்று இருந்தது.(page-153)

5)இந்த உலகம் முன்னுக்கு தள்ளுமோ பின்னுக்குத் தள்ளுமோ; பிறந்தாஞ்சு, வாழ்ந்து ஆகணும் என்றசமூக நிலையை நல்லையன் வாயிலாகக் கூறுகிறார்.
6) மென்மொழி தினமும் திருக்குறள் புத்தகம் கொண்டு வருவது காக்காபிடிக்கி வசீகர்த்திற்குப் பிடிக்கவில்லை. இது ஆபீசா, நூலகமா என்ற அலறல் கவனிக்கப்பட வேண்டிய விடயம். ( page-141)

7) இந்த நடமாடும் தேள்களும், பாம்புகளும் காலத்தால், சூல்நிலைகாளால் வலுவிழக்கும்.அப்பொழுது ஒழிப்போம்;அப்போது ஒழித்தால் என்ன?ஒழிக்காவிட்டால் என்ன? என்ற வாதங்கள் ஆய்வுக்குரிய விடயங்கள். மேலும் “ இதை ஊரறியச் செய்தால்தான் உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கும். முசோலியின் பிணத்தின் மீது இத்தாலிய மக்கள் காரி உமிழ்ந்து பழிதீர்க்க வேண்டியதில்லை என்று சிலர்எண்ணலாம்; ஆனால் அது பின்னால் சர்வாதிகாரிகளுக்கு பாடமாக அமைந்தது உண்மைதானே. அப்போதும் இறக்கம் காட்டி இருந்தால் அறம் விளங்காமல் மங்கிப்போகி இருக்கும். மேலும் எத்தனையோ நல்லவர்கள் இருந்தும் கூனிக்குறுகி அடங்கி கிடக்க வேண்டியதிருக்கே” என்ற இருவரின் ஆதங்க உரையாடல்கள் சிந்தனைக்குரியது. ( PAGE-198)

8) நல்லையன் நீதி மன்றத்தில் நீதிமன்ற அனுமதியோடு சுயமாக வாதாடும் காட்சி நெஞ்சை உலுக்கும் ஒன்று. “ நான் குற்றவாளியல்ல என்று வாதாட வரவில்லை; ஏனெனில் இந்தச் சட்டமும், பொறாமைக் குணங்களும் என்னை விழுங்கிவிடும் என்பது தெரியும் . நான் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில், நான் திக்கற்றவன், தாய்,தந்தை, உறவினர்கள், பாசம், பற்றுகள் இல்லா பரதேசி; ஆகவே நான் சட்டத்திற்கு பணியாதவன் என்று மரண தண்டனை கொடுங்கள். ஆனால் மென்மொழி பண்பானவள், குற்றமற்றவள் ஆகவே அவளுக்கு தண்டனை வேண்டாம் என்கிறான். அறிவை அறிவால்தானே உணரமுடியும்.

9) முடிவாக மழை பெய்யும் வரையில் வெப்பத்தால் வாடி வதங்கி வாழவேண்டியது இயற்கையின் கட்டாயம். அதேபோல் நல்ல சட்டங்கள் காலத்திற்கேற்ப மாறும் வரையிலும், அதை நேர்மையான முறையில் செயல் படுத்தும் வரையிலும் கயவர்களால் எளியவர்களை பலிகடாக்கள் ஆக்குவது என்பது வரலாற்றில் இன்றும் தொடர் நிகழ்வுதான். (ஜெய்பீம் படம்) இன்றும் அலுவலகங்களில் உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்து காக்கா பிடிக்கும் பச்சோந்திகள், கயவர்கள் உள்ளனர் என்பதை ஒரு வழக்கறிஞராக நன்கு அறிவேன்.

சில அலுவலகத்தில் பல்வேறு வகையான அவதூறு கடிதங்கள், கொலை மிரட்டல்கள் இன்றும் நீதிமன்றத்தில் உண்டு. மேலே கூறியது போல் திருக்குறள் புத்தகம் ஆபீசிற்கு கொண்டுவரக்கூடாது என்பதுபோல் இன்னும் ஆபிசில் பேப்பர், மேக்கசின் படிக்க விடமாட்டார்கள். முதலாளி, அய்யா, அண்ணாச்சி என்று போட்டுக் கொடுத்து பேப்பர், புத்தகம் செக்குரிட்டி மூலம் பறிமுதல் செய்யப்படும்.

“ஆட்டிவைத்தால் யார் ஒருவர் ஆடாதாரே உண்டோ? அடக்கி வைத்த்தால் யார் ஒருவர் அடங்காதாரோ உண்டோ?” என்ற தேவாரப்பாடல் சரிதானே.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

மனத்தால் வருத்துவது ஒருவனைக் கொல்லுவதற்கு சமம் என்று அன்றே வள்ளுவர் கூறியுள்ளார். அஃது இன்று இந்திய குற்றப்பிரிவுச் சட்டம் 500 படி தூக்குத் தண்டை என்கிறது. வள்ளுவன் அறத்தை ஆழ்ந்து உணர்ந்திருந்தால் இந்த குற்றச் செயல்கள் நடக்குமா? என்கிறார் மு.வ.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்கத் தத்துவவாதி டயோஜீனஸ்அறத்தை ஹரிக்கேன் விளக்கு வைத்து தேடினான்என்பது வரலாற்றுப்பதிவு; ஆனால் மு.வ நவநவீன அறிவியல் தொலைநோக்கு பூதக்கண்ணாடிகொண்டு அறத்தை தேடுகிறார். அதில் விளைந்த அறிவு முத்துக்கள் சில உங்களுக்காக:

கானல் நீரைக் கண்டு ஏமாறாதே; ஆய்வு செய் என்கிறார்.
நான் உடலால் என் தந்தையின் மகன்; ஆனால் உள்ளத்தால் வள்ளுவரின் மகன்;
தொல்காப்பியர் முதல் வள்ளுவர் வரை குருவிகளின் வாழ்க்கை மாறவில்லை ஆனால் மனிதர்களின் வாழ்க்கைகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டும் பழைய கொள்கைகளையே அசை போடுகிறதே? ஏன்? பகுத்தறிவின்மைதானே? என்கிறார்.

குழந்தைகளின் மூளைகள் படைப்பில் ஒன்றுதான்; முல்லை எங்கோ? எப்படியோ? குட்டையில் வளர்ந்தாலும், சாக்கடையில் வளர்ந்தாலும் , தூய நீர்கொண்டு மாட மாளிகைகளில் வளர்ந்தாலும் முல்லை முல்லைதான்; இந்த உண்மையை உணர்ந்தால் இதை விட பெரிய ஞானம் உண்டோ? சிந்தியுங்கள் என்கிறார்.

மனிதன் வெளித்தோற்றத்தில் பட்டு, பட்டை, பொட்டு, ருத்ராட்ஸ் என்ற பளபளப்பு ஆனால் உள்ளமோ துர்நாற்றம், துப்பாக்கி, யுரேனியம் போன்ற நச்சு பொருள்கள் கொண்ட நச்சுக் கிடங்கு என்கிறார். இருப்பினும் “ யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறன்தரவாரா என்ற அதீத மனித இருத்தலியக் கோட்பாட்டுத் தத்துவத்தை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து புதிய பார்வையில் சிந்தித்து, திறனாய்ந்து மீள் உருவாக்கம் செய்தால் அறம் மீண்டும் துளிர்விடலாம்என்கிறார். எங்கே எங்கே செல்லும் இந்த அறிவின்மை; யாரோ யாரோ அறிவாரோ; காலம் காலம் சொல்லும்.நீங்களும் அலசுங்கள். நன்றி.

You already voted!
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102633
Users Today : 0
Total Users : 102633
Views Today :
Total views : 428066
Who's Online : 0
Your IP Address : 18.97.14.82

Archives (முந்தைய செய்திகள்)