05 May 2025 12:52 amFeatured
(1945 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து ”ஏ! தாழ்ந்த தமிழகமே!” என்னும் தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவின் சில பகுதிகள்)
நாம் இன்றைய கவிஞர்களைப் பார்த்துக் கேட்பதெல்லாம் இதுதான்
தமிழனுடைய வீரத்துக்குத் தக்க சான்று உள்ளதைப் பாடுங்கள் என்கிறோம்.
புதிய கவிதைகளைப் பாடுங்கள் என்கிறோம்.
எங்கள் ஊனக் கண்களுக்குத் தெரியும் பொருள்களைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம்,
சாதாரண மக்களின் சதையைப் பிளக்கும்படியான கவிதைகளைப் பாடுங்கள் என்கிறோம்.
தாயின் தன்மை ததும்பும்படி பாடுங்கள் என்கிறோம்.
தேயிலைத் தோட்டத்திலே நம் இளம் பெண்கள் படுகின்ற இன்னலைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம்.
பாட்டாளி கொடிய பணக்காரனுக்கு அடிமை; பணக்காரன் பூசாரிக்கு அடிமை; பூசாரி ஏட்டுக்கு அடிமை;
ஏடு கலைக்கு அடிமை, கலை கலாரசிகர்களுக்கு அடிமை; கலா ரசிகர்கள் பழைமைக்கு அடிமை என்ற அடிமைத்தனம் அறுபடும் மார்க்கத்தைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம்.
இன்று கவிதைகள் இப்படிப்பட்டமுறையிலே வெளிவர வேண்டும். பாரதிதாசன் பாக்கள் அத்தகையன. அதனால்தான் அவர் பாக்களை மாணவர்கள் போற்றுகின்றனர். அவரைச் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - அவர் காரசாரமாகச் சாதியை, சமயத்தைக் கண்டிக்கிறார் என்பதற்காக! பாரதிதாசன் ‘வருணாசிரம‘த்தைக் கண்டிக்கிறார்.‘அவர் வருணாசிரமத்தைக் கண்டிக்கலாமா? சனாதனத்தைச் சாடலாமா? வகுப்புவாதத்தை வளர்க்கலாமா?‘ என்று சிலர் கேட்கின்றனர்.
உண்மையில் வகுப்புவாதம் இந்த நாட்டை விட்டுப் போகத்தான்-விட்டு விலகத்தான் -பாரதிதாசன் பாடுகிறார். கவிதைகளைக் கவண் கற்களாகப் பயன்படுத்துகிறார். அந்தக் கற்கள் வருணாசிரமத்தைத் தாக்குகின்றன.
அது யாருக்குச் சொந்தமான கோட்டையாக இருந்தால் என்ன? அது யாருக்குச் சொந்தமான கொத்தளமாக இருந்தால் என்ன? தாக்கட்டும்-தகர்க்கட்டும் என்கிறார். அந்தக்கோட்டைக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்க்கிறார்; அவர்களைத் தாக்குகிறார்.
‘சாதீயக் கொடுமையின் மேல் எந்த சிலாசாசனம் பொறிக்கப்பட்டு இருக்கிறது? யாருடைய முத்திரை மோதிரம் போடப்பட்டு இருக்கிறது‘ என்று பார்த்த நேரத்தில், ஒரு வகுப்பாரின் முத்திரை மோதிரம் தெரிந்தது. தெரிந்ததால்தான் நாமும் நம் கவி பாரதிதாசனும் தாக்குகிறோம் காரணத்தோடு! உச்சிச்சாதியார் என்னுடைய ஆருயிர் நண்பர்கள் ; எப்படி இருந்தால்? உச்சிச்சாதியார் மாத்திரம் தங்களுடைய குறையை நீக்கிக்கொள்வார்களானால்- இந்தப் பாரில் அத்தகைய தோழர்களைப் போலப் பரம திருப்தியாளர்கள் யாரும் எனக்கு இருக்க முடியாது. அப்படிக் குறையை நீக்கிக் கொள்ள கொஞ்சம் தன்னலமற்ற தன்மை வேண்டும். புதுமைக் கருத்து வேண்டும்; துணிவு வேண்டும்; அஞ்சா நெஞ்சம் வேண்டும்.
’காக்கை குருவி எங்கள் சாதி‘ –என்று பாரதி பாடிய இந்த நாட்டிலே, ‘சூத்திரர்கள்- மனிதர்கள்; எங்கள் குலம்‘ என்று சொல்வதற்கு இன்றும் அஞ்சுகிறார்கள் என்றால், நாங்கள் வீசுகிற குண்டு எந்தக் கோட்டை மீது வீழ்ந்தால் என்ன? அதிலிருந்து வெளிவரும் விஷவாயுக்கள்- நச்சு வாடைகள்-முடக்கு வாதங்கள் ஒழிய வேண்டும். உச்சிச்சாதித் தோழர்கள் மட்டும் நம்முடன் கைகோத்துத் தோளுடன் தோள் இணைந்து- ’நாம் சாதியை ஒழிப்போம்!‘ என்று எழுதியும், பேசியும், செயலிலே காட்டியும் வருவது போல் வரட்டும். வராவிட்டால் சும்மா இருக்கட்டும்; சும்மா இருக்காவிட்டால், சாதி ஒழிப்பை வலியுறுத்தும் நம்மை எதிர்க்காமலாவது இருக்கட்டும். எதிர்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் ஏளனம் செய்யாமலாவது இருக்கட்டும்; ஏன் என்று கேட்காமல் எதையாவது சாதி ஒழிப்புக்குச்செய்யட்டும் என்று இருக்கட்டும். பாருங்கள்-பத்து ஆண்டுகளில் சாதி ஒழிகிறதா, இல்லையா என்று! கவி பாரதிதாசன் கண்ட கனவு நனவாகிறதா, இல்லையா என்று!
இவற்றையெல்லாம் எண்ணித்தான்-நம்முடைய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சனாதன ஊற்றைத் தூர்க்க வேண்டும் என்கிறார். ‘வருணாசிரமத்தின் வாயிற்படியை அடை‘ என்கிறார். ‘வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் விவாதிக்க வேண்டிய பொருள்; கொலை வாளை எடு! முதலில் கொடியோர் செயலை அறவே ஒழிப்போம்!‘ என்றும், ‘மகராசர்கள் உலகாளுவதா ?‘ என்றும் கேட்கிறார்.
கொலை வாளினை எடடா! கொடியோர் செயல் அறவே! என்கிறார்.
அந்தக் காலத்திலே துன்பம் ஏற்பட்டால்
‘இட்டமுடன் என் தலையில் இட்டவனும் செத்து விட்டானோ,
முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரம் அவனுக்கே!‘ என்று பாரம், பழிகளை ‘அவன்‘ மேல் சுமத்தினார்கள். பதிலை எதிர்பார்க்காமல்,
இடைக்காலத்தில்,‘கேட்ட வரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள் ! கூட்டோடு எங்கே குடிபோனீர்?‘ என்று கடவுளைப் புலவர்கள் தேட ஆரம்பித்தார்கள்.ஆனால் பாரதிதாசனோ-‘கடவுளர்களைக் காண முடியவில்லை. ஆகையால் கடவுள் வந்து கடுங்கோலர்களைத் தண்டிப்பார் என்று நினைக்காதே! கொலை வாளினை எடடா! நாம்தான் அந்த மகோன்மத்தர்களின் மண்டையிலே அடிக்கவேண்டும்!‘-என்கிறார்.
அந்தக் கால மக்கள்- ‘கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டை விட, கடும் புலி வாழும் காடு நன்றே!‘ என்று அரண்மனையைவிட ஆரணியமே மேல் என்று ஆரணியம் புகுந்தார்கள் அரசாட்சியைப்பற்றிக் கவலைப்படாமல்.
பாரதியார் வந்தார்.
‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த சகத்தினை அழித்திடுவோம்!‘ -என்று அழகாக அரசியலைத் தாக்கச் சொன்னார் மக்களை. ஆனால், பாரதிதாசனோ கொலை வாளைக் கையிலே கொடுத்து நேரே நம்மைக் களத்திலேயே கொண்டு வந்து நிறுத்துகிறார்!
தமிழர் வீரத்தின் தனிச் சிறப்பு பாரதிதாசன் தென்றலைப் பற்றியும், தமிழைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும்தானே பாடினார், காதலைப் பற்றிப் பாடியிருக்கிறாரா என்றால் வேண்டிய மட்டும் பாடியிருக்கிறார். அவர் கவிதைப் பகுதிகளிலே எந்தப் பகுதியைப் படிக்காவிட்டாலும் காதல் பகுதியைப் பற்றி யாரும் படிக்காமல் இருக்க மாட்டார்கள் என்பதற்காக, நான் காதலைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.
காதலையும் வீரத்தையும் பாடும்படியும், பாடி ஆடும்படியும், அதை இசையிலே காட்டும்படியும், அவருடைய காவியங்களும் கவிதைகளும் சொல்கின்றன. தமிழ் நாட்டிலே காதலைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் புலவர்கள் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் காரணம்- தமிழ்நாட்டின் இயற்கை எழில்.இங்குச் சுற்றிப் பார்த்தால், இங்கிலாந்தில் காணப்படுவது போலச் சுண்ணாம்புக் குன்றுகள் தோன்றா. .அழகிய குன்றுகளுக்குப் பக்கத்திலே சாலைகள்; சாலைகளுக்குப் பக்கத்திலே சோலைகள்; வற்றாத சீவநதிகளுக்குப் பக்கத்திலே அவை பாய்ந்திடும் நன்செய்கள்; நன்செய்களிலே நிற்கும் பஞ்சை உழவர்கள்; அந்த உழவர்கள் பாடும் பள்ளு; அந்தப் பள்ளு நெஞ்சை அள்ளும் விதம்!
இந்தக் கவின் பொருந்திய காட்சி தமிழனுக்குக் காதலை ஊட்டுகிறது. காட்டை நாடாக்கி இருக்கிறார்கள். ஒரு காலத்திலே விந்திய மலைக்குத் தெற்கே காடாக இருந்ததைப் பிற நாட்டார் கண்டு மெச்சத்தகுந்த அளவு மட்டுமல்ல- பொறாமைப்படும் அளவுக்கு அழித்து, வீடுகளும் நாடுகளும் அமைத்திருக்கிறார்கள். வணிகத் திலே தழைத்தோங்கி இருக்கிறார்கள். வீரத்திலே திளைத்திருக்கிறார்கள். இன்னும் வீரம் போற்றப்படுகிறது
போர்க்களங்களிலே!தமிழனுடைய வீரம் மங்காதிருக்கக்காரணம்- தமிழனுடைய வீரத்திற்கும் பிறருடைய வீரத்திற்கும் இருந்த வேறுபாடே! தமிழன் என்றும் வட இந்திய இதிகாசங்களில் கூறப்படுவதைப் போல அக்கினியாஸ்திரத்தை உபயோகித்ததில்லை; பாசுபதத்தைப் பயன்படுத்தியது இல்லை. அவனுடைய ஆயுதங்கள்: அவனிரு பருத்ததோள்கள்; இடையிலே வாள்; வாள் ஏந்தக்கை; கைக்கு ஏற்ற கருத்து; கருத்துக்கு ஏற்றகளம், களத்துக்கு ஏற்ற காட்சி; அங்கு பிணக்குவியலைக் கண்டு பயப்படாத காட்சிக்கேற்ற கம்பீரம்!
கனக விசயரைக் கைது செய்யக் கங்கைக்குச்சென்றான் செங்குட்டுவன் என்றால்-
சென்றான் வீரர்களுடன்; வீரர்கள் சென்றனர் வாள்களோடு;
திரும்பினர் வெற்றியோடு. அன்று ஆரியம் தாள் பணிந்தது வாளுக்காக!
சேரன் செங்குட்டுவன் வெற்றி பெற்றான் என்றால்-
ஐயனுடைய அருளால் அல்ல;
மழையைப் பொழியும் ‘வருணாஸ்த்திரம்‘ இல்லாமல்,
அழிக்கும் ‘அக்கினியாஸ்திரம்‘ இல்லாமல்,
இலங்கையை ஆட்டிடுமாமே அந்த ‘வாயுவாஸ்திரம்‘ இல்லாமல்-சேரன் செங்குட்டுவன் சண்டையில் வெற்றி பெற்றான்.
இதிகாசங்களில் கூறப்படும் இந்த ‘அஸ்திரங்கள்‘ இராசராச சோழன், குலோத்துங்கசோழன் போன்றவர்கள் பர்மா மீது படையெடுத்த போதும் பிற நாடுகளை பிடித்தபோதும் பயன்படவில்லை; பயன்பட்டதாகச் சான்றுகள் இல்லை.
தமிழர்களுக்கு ஒரு வீசை எடையுள்ள இரும்பு; ஒரு சிறிய உலைக் கூடம்; கொஞ்சம் மூளை; இவை இருந்தால் போதும்- வாள் வடிக்க! வாள் வடித்து விட்டார்களானால்- அவர்களுக்கு முன்னமேயே இருக்கின்ற அஞ்சா நெஞ்சமும் அருமைக் கையும் போதும்.
பர்ணசாலைகள் அமைக்க வேண்டியது இல்லை; நெடும் பல யாகங்கள் செய்ய வேண்டியது இல்லை. ஐயனின் அருளைப் பெற, எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. அந்த மாதிரியான தமிழனின் வீரத்தை அழகாகப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
பாரதிதாசன் பாக்கள், தமிழனின் வீரத்தையும்- காதலையும் நினைவூட்டும். பாரதிதாசன் படம் அதற்கு உறுதுணையாய் இருக்கும். பாரதிதாசன் முகத்திலே அமைதி தவழாது; அதற்குப் பதிலாகப் புரட்சி வாடை வீசும்; கோபத்தீக் கொழுந்து வீசும்!
அவரது முகத்திலே மீசை கறுத்து முறுக்கேறியிருக்கும்! அவரது முகத்திலே யோகத்தின் சின்னங்களைக் காணமுடியாது; தியாகத்தின் தழும்புகளைக் காணலாம்! அவர் அண்மையிலே புதுவையில் சிலரால் காலித்தனமாகத் தாக்கப் பட்டார். ஆனால் புதுவையில் பட்டஅந்தத் தியாகத் தழும்புகள் இந்தப் படத்திலே தெரியாது. அந்த தியாக மூர்த்தியின் திருவுருவப்படம் தமிழ்நாடு எங்கனும்- மாட மாளிகைகளிலே மட்டும் அல்ல; மண்குடிசைகளிலே மட்டும் அல்ல;மக்களுடைய மனத்திலேயும்புத்தொளி வீச வேண்டும்.
அவரது ஆவேசம் எல்லாருக்கும் உண்டாகுமாக! அவரது ஒவ்வொரு கவிதையும் இந் நாட்டின் அடிமைத் தனத்தைத் தகர்க்கும் வெடி குண்டு ஆகுமாக!
Useful thoughts in new perspective