Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உழந்தும் உழவே தலை !- பாவலர் நெல்லைப் பைந்தமிழ்

15 Jan 2020 8:04 amFeatured Posted by: Sadanandan

You already voted!
-நெல்லைப் பைந்தமிழ்

"அறுக்கிற மாதத்திற்கு 'தை' என யார் பெயர் வைத்தது?" என்றார்  கவிக்கோ.

அவர் கூறியதற்கிணங்க துன்பங்கள் அறுந்து இன்பங்கள் கூடும்  நாளை தை எனக் கூறியது பொருத்தமே!
தமிழகத்தில் எத்தனையோ விழாக்கள் கொண்டாடினாலும் இந்த உழவர் திருநாளாகிய பொங்கல் நாள் ஒன்று மட்டுமே தனிச் சிறப்புடையது. ஏனெனில் ஏனைய விழாக்கள் யாவும் மதத்துடன் தொடர்பு படுத்தியதாய் இருக்க தைப்பொங்கல் ஒன்று மட்டுமே உழைக்கும் வருக்கத்துடனும் அதற்கு மூலமான கதிரவனுடனும் தொடர்புடையதாய் உள்ளது.

'கனைக்கதிர் முதலியை காமுற லிவைவதோ' என்னும் கலித்தொகைப் பாடலால் கதிரவனை தமிழர்கள் தெய்வமாக வழிபட்டனர் என்பதை ஐயமறக் கூறலாம்.

அக்காலங்களில் உழவே தலையாய தொழிலாகவும் மதிப்புடைய தொழிலாகவும் இருந்துள்ளது. யானை நின்றால் மறைக்கக் கூடிய கதிரையுடைய கழனி நிலம் என்றும் மூங்கிலையும் கரும்பையும் போன்ற வளரும் நெல் என்றும் இலக்கியங்கள் நெற்பயிரின் செழுமைதனை  விதந்து கூறுகின்றன. யானை நின்றால் மறைக்கக் கூடிய கதிரையுடைய கழனி நிலம் என்றும் மூங்கிலையும் கரும்பையும் போன்ற வளரும் நெல் என்றும் இலக்கியங்களில் நெற்பயிரின் செழுமைதனை  விதந்து கூறகின்றன.

கம்பர் வேளாண் மரபுகளை விளக்கி ஏரெழுபது என்னும் அரிய நூல் ஒன்றையும் செய்திருக்கின்றார். உழுதொழிலால் சிறந்தோர்கள் அந்நாளில் அரசர்களால் காவிதி பட்டம் பெற்றுள்ளதை இலக்கியங்கள் கூறும்.

மருத நிலத்தில் வந்து உழவுத் தொழில் ஒன்றையே சிறப்பாகச் செய்தவர்கள் உழவரென்றும்
களத்தில் வேலை செய்தமையால் களமரென்றும்
பிற நிலத்தார் போலல்லாது நிலையாய்க் குடியிருந்தமையால் குடியானவரென்றும் வேளாளர் கூறப்பட்டனர்.
பலவகைத் தொழிலாளருள் உழவரே தொழிலும் தன்மையும் பற்றிச் சிறந்த பிள்ளைகளாய் (மக்களாய்) இருந்ததால் அவர்கள் பிள்ளைமார் என்றும் சிறந்த வினை செய்ததால் வினைஞரென்றும் பிறருக்கு வேளாண்மை (உபசாரம்) செய்தமையால் வேளாளரென்றும் கூறப்பட்டனர். இவற்றில் பிள்ளைமார் என்பது இன்று சாதிப் பெயராகிவிட்டது என்பது தனி.

உழவர் உழவுத் தொழிலாலும் அரசர்க்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றும் கூறப்பட்டனர். மள்ளர்=வீரர். மல்லர் என்பது மள்ளர் எனத் திரிந்தது.

உழுவித்துண்ணும் வேளாளரில் ஓர் ஊர் முழுவதுமுடையவர் கிழார் என்றும் பல ஊர்களை உடைய குறுநில மன்னர் வேளிர் என்றும் கூறப்பட்டார். பெரிய புராணம் எழுதிய சேவூர்க்கிழார் சேக்கிழார் என்று அழைக்கப் பட்டமைக் காண்க. கிழார் என்றால் உரிமை என்று பொருள். இந்த கிழார் என்னும் சொல் அதே பொருளில் இந்தியில் கிசான் என்றே இன்றும் வழங்குகின்றது.

இவை ஒருபுறமிருக்க இந்த உழவர் திருநாளாகிய தைத்திருநாளை  தமிழகம் மட்டுமின்றி தமிழரிடமிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாந்த குழுவும் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். பெரிஷியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'ஒளிக்கடவுள்' வழிபாடாகத் தொடங்கி பின் உரோம் நாட்டில் பரவி கி.பி‌.3-ஆம் நூற்றாண்டு பெருஞ்செல்வாக்குப் பெற்று திகழ்ந்திருக்கின்றது.

இதற்குச் சான்றாக உரோமானியரால் Mitra என்ற ஒளிக்கடவுளுக்கு எழுப்பப்பட்ட கோவில் ஒன்று 1954 ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரின் அகழாய்வாளர்களால் கண்டு பிடிக்கப் பட்டது.

நடு ஆசிய நாடுகளில் கிடைக்கப் பெற்ற புத்தமதச் சார்புடைய ஆவணங்களில் கதிரவனையே அம்மக்கள் வணங்கியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இன்றிலிருந்து 1300 ஆண்டுகள் முன்பு பெண்டுகிஸ்தான் என்னும் இடத்தில் கட்டப் பட்டுள்ள பொளத்த கோவில்களில் காணப்படும் சுவர் ஓவியங்களால் தமிழர் வணங்கிய கதிரவன் மற்றும் திங்கள் ஆகியவற்றை ஆண், பெண் வடிவங்களாக அழகுடன் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தின் வரைபடம் தற்போது காபூல் தொல்லியல் காட்சியத்தில் வைத்து பாதுகாக்கப் படுகின்றது.

சங்க காலத்திற்கு முன்பே கதிரவனை தமிழர்கள் வணங்கி வந்தமை அறியப் படுகின்றது.

"பொருபடை தரூஉம் கொள்ளும் உழுபடை
ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே"

என்று புறநானூறு உழு தொழிலை போற்றி புகழ்கின்றது.

அதனால்தான் வள்ளுவரும்
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
. என்றார்.

ஆம் இந்த உழவர் திருநாளில் துன்பம் அறுந்து இன்ப இழைகள் வைக்கட்டும்.

Tags:
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 18.221.98.71

Archives (முந்தைய செய்திகள்)