25 Apr 2026 1:54 pmFeatured

-கரூவூர் இரா. பழனிச்சாமி
சித்தர் கருவூரார் பிறப்பு
தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கருவூரும் ஒன்று. பெருங்கற்காலம் முதல் இரும்புக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மை வரலாறு துவங்கிறது. கருவூர் ஆன்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது இது சேரர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது "கடும்பக்கட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமாவியல் நகர் கருவூர் முன்துறை" என அகநானூறும் பெருங்கடுங்கோ கருவூரிலிருந்து ஆட்சி செய்தான். ஆன்பொருநை ஆற்றின் கரையில் இருந்த வஞ்சி நகரை தலைநகராகக் கொண்டான்" என புறப்பாட்டில் கூறப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கருவூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சங்க இலக்கியங்களில் காணலாம். காவிரி ஆற்றோடு ஆன்பொருநையும் குடவனாரும் கலக்கும் கடல் போன்றவன் செங்குட்டுவன் என பதிற்றுப்பத்து புகழ்கிறது.
காவிரி ஆற்றுடன் ஆன்பொருநையும், குடவனாரும் கலக்கும் திருமுக்கூடலூர் கருவூரில் உள்ளது. யவன வணிகர்கள் தமிழ்நாட்டோடு கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் வணிகம் மேற்கொண்டிருந்தனர். கருவூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட காசுகளில் ரோமானிய அரசர்களின் அகஸ்டஸ், அந்தோனியர், டைப்பிரியஸ், க்ளாடியஸ் கான்ஸ்டாடினஸ் ஆகியோரின் உருவமும் பெயரும் பொறித்தவையாகும். ரோமானியக் காசுகளைக் கொண்டு கி.பி. 1-3 ஆம் நூற்றாண்டு வரை தமிழகமும், கருவூரும் கொண்டிருந்த வணிகத் தொடர்பு உறுதியாகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த கருவூரில் கருவூர் சித்தரின் தாய் தந்தையர் ஊர் ஊராக சென்று கோயில்களில் உள்ள பஞ்சலோக சிலைகளை செப்பனிட்டு கொடுத்தும், புதிய சிலைகளை உருவாக்கிக் கொடுத்தும் தொழில் செய்து பிழைத்து வந்தனர். அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்கள், சித்தர்கள் மேல் கொண்ட அன்பினாலும், பாசத்தாலும் அவர்களுக்கு தேவையானவைகளை தம்மால் இயன்ற அளவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை கருவூர் சித்தராவர்.
மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து அனைத்து திசைகளுக்கும் சென்று சிவாலயங்களில் சிவலிங்கங்களை உருவாக்கிக் கொடுத்தும், காசிக்கும் சென்று விஸ்வநாதர் ஆலயத்திலும் தங்க மயமான லிங்கத்தை உருவாக்கியும், பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக கருவூரார் ஊரெங்கும் சித்தர்களுடன் சேர்ந்து சித்தத்தன்மை அடைந்தார். சித்தர் நூல்கள் இவரை பொற்கொல்லர் மரபினர் என்று கூறுகின்றன. ஆனாலும் சிலர் தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர் என்றும் பெருமை பாராட்டிக் கொள்வர். ஆயிரம் வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த ஒரு அற்புத சித்தர் இந்த கருவூர் சித்தர். தமிழ் இலக்கியத்தில் பிரபலமாக அறியப்பட்ட 18 சித்தர்களில் ஒருவர். போகரின் சீடராவார்.
இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழனியில் நவபாஷண முருகன் சிலையை செய்த போகரின் தரிசனம் கிடைத்தது. அவரிடம் இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் சேவை செய்வதற்காக படைக்கப்பட்டவர்களே சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு வாழ்க்கை பற்றிய அறிய ஞானத்தைப் பெறுவாய் என ஆசிர்வதித்தார்.
தஞ்சாவூர்ப் பெரு உடையார் கோயிலுக்குப் பங்களிப்பு
தஞ்சை பெருவுடையார் (பிரகதீசுவர்) கோவில் என அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில் பொ. ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழப் பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் அரிய கிரானைட் கற்களால் அக்கால பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அறிவை வெளிக்கொணரும் வகையில் கட்டப்பட்டது, சிற்பி குஞ்சர மல்லன் இராசராச பெருந்தச்சன் (தலைமை கட்டிடக் கலைஞர்) மற்றும் தலை சிறந்த பொறியாளர்களால் முடிக்கப்பட்டது, இந்த கோவிலை கட்டும் போது பல பெரிய சவால்களை எதிர்கொண்டார். கோயிலின் கருவறையின் மூலவர் சிவபெருமான் பிரமாண்டமான சிவலிங்கத்தை பொருத்த முடியாத நிலை பூசாரிகளால் ஏற்பட்டது.
அட்டபந்தனம்?
உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அட்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துவார்கள். இந்த மூலிகை மருந்து பல நாட்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அட்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு (அட்ட) பொருள்கள் தேவை.
அட்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.
'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'
இந்த எட்டுப் பொருள்களைச் சரியான அளவு சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அட்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை (லிங்கத்தை) நிலைநிறுத்த வசதியாக இருக்கும். இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அட்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கிய நம்பிக்கை.
தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு
இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது. இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராசராச சோழனின் தமிழ்ப் பற்றும் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவலிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இத்தகைய சிறப்புகள் மிக்க தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு(கும்பாபிசேகம்) தடைபட்டு நிற்பதை அறிந்தகுருவான சித்தர் போகர் அறிவுரையின்படி கருவூரார் உடனே தஞ்சையை அடைந்து கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்று சரியான அளவில் எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கத்தை நிலை நிறுத்தி(பிரதிட்டையும் கும்பாபிசேகமும்) குடமுழுக்குசெய்து வைத்தார்.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்கும் லிங்கத்தை, முறையாக நிற்க வைத்தவரே கருவூர் சித்தர் தான். இராசராச சோழனின் குரு கருவூர்த் தேவர் ஆவார். இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டுத் தஞ்சை பெரிய கோயிலின் இராசகோபுரத்திற்கு நேர் பின்புறம் கருவூர்த்தேவருக்குச் சிறிய கோயிலை எழுப்பியுள்ளார் இராசராச சோழன்.
1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கி.பி. 985 – 1014 வரை ஆட்சி செய்த முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்தையும் கி.பி. 1012 முதல் 1044 வரை ஆட்சிசெய்த கங்கைகொண்ட இராசேந்திரசோழன் எழுப்பிய கங்கைகொண்ட சோழேச்சரத்தையும் நேரில் கண்டு மகிழ்ந்த கருவூர்த் தேவர் இவ்விரு கோயில்களிலும் திருவிசைப்பா பாடி அவைதம் பெருமைகளைப் பாரறியச் செய்துள்ளார்.
இரணியவர்மனும் போகர் சித்தரும்
சோழ மன்னர் இரணியவர்மன், ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரம் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அவன் தண்ணீருக்குள் ஓர் அதிசயம் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கிக் கண்களைத் திறந்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால் சிவனின் நடனக்காட்சி அவன் நெஞ்சை விட்டு அகல மறுத்தது.
எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும் அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளவரை உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து தான் கண்ட காட்சியை கூறி நடன சிவன் சிலை பத்தரை மாற்றுத் தங்கத்தால் வடிக்க வேண்டுமென்றும் அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப் போவதாகவும் உத்தரவு போட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதானால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ எக்காரணம் கொண்டும் செம்பு கலக்கக்கூடாது என்றும் என்ன செய்தெனும், தங்கத்தில் மட்டுமே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் சிலை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது! சிற்பிகள் பயந்தனர்.
இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் கருவூராரை அழைத்து சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் செய்தியை விளக்கினார். கருவூரா! நீ உடனே சிதம்பரம் செல் அந்த சிலைப் பணியை முடித்துக் கொடு என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில் சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே உங்கள் மனக்கலக்கத்தை அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம், இன்னும் இரண்டே நாழிகையில் சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே! நீர் யாரோ எவரோ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழ்நாட்டின் பெரும் சிற்பிகள் எங்களாலேயே 48 நாட்களில் செய்து முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும்? நீர் எங்களை கேலி செய்கிறீரா? இல்லை உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாராகிய உமக்கு அழகாகுமோ? என கோபமாகக் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தருக்கு தெரியாதா? ஆனால் அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர்.
கருவூரார் அறைக்குள் சென்றார். யாரும் உள்ளே வரக்கூடாது எனக் கட்டளையிட்டார். அது மிகுந்த பாதுகாப்புமிக்க இடம் என்பதால் அதற்கும் சிற்பிகள் சம்மத்தித்தனர். சொன்னபடி இரண்டே நாழிகையில் அறைக் கதவு திறந்தது. சிற்பிகள்! உள்ளே போய் பாருங்கள் சிலை தயாராகி விட்டது என்றார். சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தனர். நடராசப் பெருமான் பிரகாசித்தார். ஆஹா இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்ததில்லையே என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த நடனச்சிவனைப் பார்த்த இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணிய வர்மன் வந்தான். நடராசனைப் பார்த்ததும் தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ, அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை வானளவு பாராட்டினார். அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஒரு சந்தேகத்தை கிளப்பினார். அமைச்சரே! நீர் சொல்வதும் சரி தான். அப்படியே செய்து பாரும் என்றான் இரணியவர்மன்.
அமைச்சர் அறைக்குள் சென்றார், தங்கத்தை பரிசோதிக்கும் அதிகாரியை அழைத்தார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம், அரசே! இது முழுமையான தங்கச்சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் கொதித்துப் போனார். அரசரிடம் ஓடிவந்து மன்னா தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றிவிட்டனர். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது.. மேலும் எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள் தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். இந்த துறவியை நம்பி மோசம் போனோமே! முழுமையான தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற கட்டளையை இவன் மீறியதால் தானே நமக்கு வினை வந்து சேர்ந்தது என யோசித்தார்கள். மன்னரின் காலடியில் விழுந்து மன்னா தவறு நடந்து விட்டது. நாங்கள், இதோ நிற்கிறான் இந்தத் துறவியை நம்பி மோசம் போனோம். பெருமானின் சிற்பத்தை சுத்தத் தங்கத்தால் வடிக்க பல நாள் முயற்சித்தோம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் கூட எங்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்திருப்பீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் வந்த இவன் சில நாழிகைகளுக்குள் சிலைப்பணியை முடித்து விட்டான். அதுகண்டு நாங்களே ஆச்சரியம் அடைந்தோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.
துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளை விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள் என்றான். எல்லா சிற்பிகளும் தில்லையம்பலத்தானை கைகூப்பி வணங்கி, அன்புக்கடலே! அருள்வடிவே! நீ அனைத்தும் அறிவாய் உண்மை விரைவில் வெளிப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் ஞான அறிவுக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியவர்மன் முன்பு தோன்றினார். தன் முன்னாள் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற துறவியைக் கண்டு அதிசயித்தான். இரணிய மன்னா என்ன நினைத்து என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை அறிவில்லாத நீ இப்படிப்பட்ட முட்டாள்தனங்களை செய்வாய் என்பதிலும் வியப்பில்லை தான்! இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல், தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். அவனை உடனே வெளியே அனுப்பு. நான் போகர் சித்தர் இப்போதாவது புரிந்து கொண்டாயா? என்றதும் இரணிய மன்னன் கலங்கி விட்டான். சித்தரே தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன்! தங்கள் சீடனை வேண்டுமென்று அடைக்கவில்லை. பத்தரை மாற்றுத் தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்துள்ளனர். சித்தர் கருவூராரும் அதையே செய்யவே இப்படி செய்து விட்டேன் என்றான். சரி சரி இப்போதே என் சீடனை விடுதலை செய் என்று அவர் கூறவும், ஆணைகள் இடப்பட்டதும் காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை, அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினார். போகர் இன்னும் கோபமானார்.
இரணிய மன்னா விளையாடுகிறாயா? கருவூரார் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம்! அந்த சிலையைத் தூக்கி இந்தத் தராசில் வை. அந்த சிலையை விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன் என்றார். சீடர்கள் சிலையை எடுத்து தராசில் வைத்தனர். நடராசர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை வைத்தார் போகர். இதோ நீ விரும்பும் தங்கம், எடுத்துக் கொள். என் சீடனை என்னிடம் ஒப்படைத்து விடு என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பலத்தானை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையைக்கண்ட போகர் மனமிறங்கினார். இரணியா கலங்காதே கருவூரார் சிறையில் தான் இருக்கிறார். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டுள்ளான், நான் அழைத்தால் வருவான் என்றார். பின்னர் கருவூரா வெளியே வா என்றார் போகர். அக்கணமே அவர் முன்னாள் வந்தார் கருவூரார், குருவே தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன் என்றார். பின்னர் போகர், இரணிய மன்னனிடம் நடராசர் சிலை அமைக்க வேண்டிய முறை, கோவில் எழுப்ப வேண்டிய முறைகளைப் போதித்து கருவூராருடன் மறைந்து விட்டனர்.
நெல்லையப்பர் தரிசனம்
பின்னர் ஒருமுறை அவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று, நெல்லையப்பரை தரிசிக்கும் ஆசையில் சுவாமியின் பெயரைச் சொல்லி நெல்லையப்பா! நெல்லையப்பா! நெல்லையப்பா! எங்கே வா என மூன்று முறை அழைத்தார். நெல்லையப்பர் தரிசனம் கிடைக்கவில்லை. அட இங்கே நெல்லையப்பர் இல்லையாப்பா? என்று நகைப்புடன் கூற கோவிலைச் சுற்றி எருக்கம், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்து கோவிலை மறைத்து நின்றன. அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார். சித்தனின் கோபம் சிவனையும் நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும் போது நெல்லையப்பர் வழிமறித்தார். அப்பனே இத்தனை கோபம் ஆகாது. "நீ என்னைக் காண வந்த போது நைவேத்திய நேரம். நான் உன் குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று" என்று பக்குவமாய் சொன்னார். சரி போனது போகட்டும் திரும்பி வா திருநெல்வேலிக்கு என்று இதமாக அழைத்தார். சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் நெல்லையப்பர். அதனால் மகிழ்ந்த கருவூர் சித்தர் தனக்கு இறைவன் காட்சி கொடுத்த ஆவணி மூலத் திருநாளில் ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவிலில் காட்சி தந்து அருள் பாலிக்கிறார்.
கருவூரார் நூல்கள்
கருவூரார் சைவத் திருமுறைத் தொகுப்பான பன்னிரு திருமுறை வரிசையில் ஒன்பதாம் திருமுறையில் இவர் பாடியனவாகத் திருவிசைப்பாவில் பத்துத் திருப்பதிகங்கள் காணப் பெறுகின்றன.
மிகப்பெரிய யோக சித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர். உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். சைவ சமயத்தைக் கடைபிடித்த ஞான நூல்களை ஆராய்ந்தவர். சிவயோக சித்தி அடைந்தவர்.
வேப்பமரக் கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால், பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும். கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று விரல்களால் எடுக்கும் அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மாறும் என்கிற வேம்பின் மகத்துவதை முதன் முதலாகச் சொன்னவர் இவர், வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம், பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார். முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர்.
குரு போகர் போதனை
பிறகு பெரும் சித்தராகிய கருவூரார் கடைசியாக தாம் பிறந்த ஊராகிய கருவூருக்கு வந்து சேர்ந்தார். அவ்வூர் மக்களில் சிலர் அவரது மகிமையை உணரவில்லை, உதாசீனப்படுத்தினர். நிகழ்த்திய அற்புதங்களை சித்து வேலை என்று குற்றம் சாட்டினார். கருவூரார் மனம் வருந்திய போது போகர் அங்கு தோன்றினார். சீடனே! கவலை கொள்ளாதே, சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் பிறரது சொல்லடிக்காக வருத்தம் கொள்ளக்கூடாது. நம்மைத் தூற்றினாலும் நாம் அவர்களது நன்மை கருதியே செயல்பட வேண்டும். மனம் தளராமல் உன் கடமையைச் செய் என்றார். குருவின் போதனையை ஏற்ற கருவூரார் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் நீங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். காலம் போன் போன்றது. அதற்குள் உங்கள் கடமையை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை காக்க கல்ப சாதனை செய்யுங்கள் செல்வம், செல்வம் என அலையாதீர்கள். சம்பாதிக்க மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை அப்படி சம்பாதிப்பதில் பயனும் இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுடன் வரப்போவதில்லை. மக்கள் நலனே மகத்தான பணி என உரைத்தார். அம்பாள் (பராசக்தி) அருள் மட்டுமே நிலையான செல்வம் என போதிப்பார். பெரும்பாலானோர் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். கருவூரார் தனது மகிமையை நிரூபிக்க சில அதிசயங்களை செய்து காட்டினார். கோடைகாலத்தில் மழை பெய்யச் செய்தார். அவ்வூர் அம்மன் கோவில் கதவை தானாகச் திறக்கச் செய்தார். இவையெல்லாம் சித்து வேலை என்று கருதி ஆன்மிகத்தின் பக்கம் வர மறுத்தனர்.
வேதியர் வினை
சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர். வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம், மரணம் எனும் அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது. தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து ‘நவசிவாயம்’ எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது. அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி, குலம், நீத்துச் சிவத்தல யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார். சாதி சம்பிரதாயாங்களை புறக்கணித்தார். கருவூரில் உள்ள வைதிக வேதியர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக்காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல தந்தனர். அவர் செல்வாக்கு கண்டு பொறாமை கொண்டிருந்த அவ்வூர் வேதியர் சிலர், அவரது பெயரைக் கெடுக்க எண்ணினர். ஏற்கனவே ஊரிலிருந்த அனைத்து வேதியர் வீண்பகையும், பொறாமையும் கொண்டு நாளுக்கு நாள் பழி சுமத்தி மன்னரிடம் கொண்டு போய் நிறுத்தினர். இதற்காக மன்னனிடம் சென்று கருவூராரின் வீட்டில் மது வகைகள் இருப்பதாகவும், அவர் எப்போதும் போதையில் திரிவதாகவும் புகார் கூறினர். மன்னர் காவலர்களை அனுப்பி சோதனை செய்தார். கருவூராரின் வீட்டில் பூசைப்பொருட்களைத் தவிர எதுவுமே இல்லை. புகார் சொன்னவர்களை அழைத்த மன்னன் அவர்களைக் கடுமையாக கண்டித்தான். கருவூராரை வரவழைத்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மீண்டும் கருவூரார் மேல் வீண்பழிகள் சுமத்த முன்வந்தபோது மன்னர் கருவூராரை பற்றி முழுவதும் தெரிந்திருந்ததால் மற்ற வேதியர்கள் அனைவரையும் கோபம் கொண்டு விரட்டினார். பிறகு எப்படியாவது கருவூராரை கொன்று விடுவது என்று முடிவு செய்து அவர்கள் அனைவரும் ஒரு நாள் கத்தி, கம்புகளோடு ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். இப்படிப்பட்ட மக்களின் மத்தியில் வாழ கருவூராருக்குப் பிடிக்கவில்லை. இவர்களின் கீழ்த்தரமான காரியங்களை பார்த்து, இறைவனின் சித்தம் என கருவூரிலுள்ள ஆனிலைப்பர் கோவிலுக்குள் நுழைந்தார். கோவில் என்றும் பாராமல் கொலைகாரர்கள் அங்கும் நுழைந்தனர்.
அப்போது அவர்களின் கண் முன்னாலேயே ஆனிலையப்பா, பசுபதீசுவரா என்று வேண்டியபடியே கருவறையில் உள்ள சிவலிங்கத்தை தழுவினார். இனி கருவிலும் ஊறுதல் இல்லாதபடி இறைவனுடன் இரண்டறக் கலந்தார் கருவூரார். இறைவனும் அவரை தம்மோடு ஐக்கியப் படுத்திக்கொண்டார். இன்றளவிலும் கருவூரில் கல்யாண பசுபதீசுவரர் ஆலயத்திற்கு சென்றால் இவரது சன்னதியில் அருள்மிகு சித்தர்கருவூராரை தரிசிக்கலாம். அருள் பெறலாம்.
வேதியர் வினையாடல்களில் இறைவனடி சேர்ந்தவர்களில் களம் பல கண்டு வெற்றி வாகை சூடிய ஆதித்த கரிகாற்ச் சோழன், இறைவனைத் தழுவிய தில்லையில் நந்தனார் மட்டுமல்ல அருள்மிகு சித்தர் கருவூராரும் உண்டு.
(நன்றி : கருவூர்த் தலவரலாறு & Google)






Users Today : 57
Total Users : 113020
Views Today : 113
Total views : 442125
Who's Online : 1
Your IP Address : 216.73.216.114