Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அன்பு மகளின் அருமை மகளுக்கு

09 Feb 2024 12:43 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures sameera

அன்பு மகளின் அருமை மகளுக்கு” என்ற இந்த தொடரானது அனைவரது நினைவிலும் வாழ்ந்துவரும் பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் தென்னரசு மாத இதழை தொடங்கி அதன் முதல் இதழிலிருந்து நம்பி ஆறூர் நம்பி என்ற புனைப் பெயரில் ”மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல்” என மடல் வடிவில் எழுதிய தொடருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்தத் தொடரை அவர்தான் (பேராசிரியர் சமீரா மீரான்) எழுதுகிறார் என்று தெரியாதவர்கள் பலரும் அத்தொடரைப் பாராட்டி அவரிடமே கருத்துச் சொன்னார்கள். இதுவே அத்தொடருக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகும்.

அதன்பின் ”மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல்” என்ற தொடர் அன்பு மகளின் அருமை மகளுக்கு என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரை, பாவலர் அறிவுமதி அவர்களின் மதிப்புரை, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின் மற்றும் மராத்திய மாநில எழுத்தாளர் மன்ற இன்றைய தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் ஆகியோரின் வாழ்த்துரையோடு வெளிவந்த இந்தப் புத்தகம் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சிவசங்கர், கனிமொழி M.P. , என பலர் படித்து பாராட்டிய புத்தகமாகும்.

இந்தப் புத்தகம் ஒவ்வொரு தாத்தாவும் தனது பெயரன், பெயர்த்திகளுக்கு பாதுகாத்து கொடுக்கவேண்டிய அரிய பொக்கிசம் என இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இன்றைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பாராட்டி பேசினார்.

அத்தகைய புத்தகம் மீண்டும் தொடராக நமது தென்னரசு மின்னிதழில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த தொடரை வெளியிடுவதற்கு பெருந்தன்மையோடு அனுமதியளித்த பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் குடும்பத்தினருக்கு தென்னரசு சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நூலின் ஆசிரியர் பேராசிரியர் சமீராமீரான் அவர்களின் ”தன்னுரை” யுடன் தொடங்கும் இத்தொடர்
இனி மடல் வடிவில் 21 பாகங்களாக வரவிருக்கிறது.

என் படைப்புகளில் ஒன்று நூல் வடிவில் வருவது இதுவே முதன் முறை. எனவே, என் எழுத்துலக அனுபவம் பற்றி சற்று விரிவாகவே எழுத வேண்டும் எனத் தோன்றியது. இது ஒன்றும் சாதனைச் சரித்திரம் இல்லை. என்னைப் பற்றிய அறிமுகம்; அவ்வளவுதான்.

பள்ளிப்பருவத்திலேயே நூல்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டதால், என் வாழ்வும் இன்றுவரை எழுத்துகளோடு இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனது பள்ளிப்படிப்பு, பிறந்த ஊரான நெல்லை ஏர்வாடியிலும், கல்லூரிப்படிப்பு சென்னையிலும் அமைந்தன.

கதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களிலும் எனது எண்ணங் களை பள்ளிப்பருவத்திலிருந்தே வெளிப்படுத்தி வந்தாலும், கல்லூரிப் பருவத்தில் ஒரு நாடகக் கதாசிரியனாக பொதுவெளியில் அறிமுகமான போதுதான்,என் எழுத்துகளுக்கு முதல் அங்கீகாரம் கிடைத்ததாக உணர்ந்தேன். எனது நாடகத்துறை வழிகாட்டிகள் திரு. கோ.பா. அமிர்தலிங்கம், திரு. மாரியூர் குமரேசன் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்

கல்லூரி நண்பர் ஹமீது என்பவர் நடத்தி வந்த எழில் மற்றும் நண்பர் ஆணையூர் இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து நான் நடத்தி வந்த 'சங்கமம்' ஆகிய கையெழுத்து ஏடுகளில் கதைகள், கவிதைகள் எழுதியபோது நண்பர்கள் பலர் ஊக்கப்படுத்தினார்கள். என்னை பெரிதும் ஊக்கப்படுத்திய மாணவ நண்பர்களுள் முதன்மையானவர் இன்று சென்னை இலக்கிய உலகில் வைரவரிக் கவிஞராக வலம் வரும் என் அன்பு நண்பர் செம்மொழிக் கவிஞர் பிரபாகரபாபு.

வெளிவராமல் போன ஒரு திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய அனுபவமும் எனக்கு உண்டு. படம் பாதியிலேயே நின்று போனாலும் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கி என் எழுத்தை அங்கீகரித்த மலேசிய கவிப்புயல் கரு வேலுச்சாமி அவர்களை என்றும் மறவேன்.

விழுப்புரம் மாவட்டம், சித்தலம்பட்டு என்ற (திருக்கலூரை ஒட்டியுள்ள) ஊரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய போது, மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. சிறுகதை எழுத்தாளனாகவும் அங்கீகரிக்கப்பட்டதாக அப்போது நான் உணர்ந்தேன்.

மும்பை வந்த பிறகு முதல் மூன்றாண்டுகள் தொழில் ஈடுபாடு காரணமாக இலக்கியத் தொடர்பே இல்லாமல் இருந்தேன்.

பம்பாய் திருவள்ளுவர் மன்றப் பொதுச் செயலாளர் திரு. வி. தேவதாசன்,திருக்குறள் பேரவை அமைப்பாளர் அண்ணன் சீர்வரிசை சண்முகராசன் ஆகியோரின் அறிமுகத்திற்குப் பிறகுதான் மீண்டும் என் இலக்கியப் பயணம் தொடர்ந்தது. அப்போதுதான் என் இலக்கியப் பயணம் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கியப் பயணமாக அடையாளப்பட்டது.

திராவிட இயக்க உணர்வு அத்தனை எளிதாக என்னைப் பற்றிக் கொண்டதற்குக் காரணம் நான் பிறந்து, வளர்ந்த ஊர்தான். பள்ளிய பருவத்தில் எதைப் படிப்பது, எதை விடுவது என்பதை அறியாதிருந்த வயதில் இவற்றைப்படி என்று என்னைத் தூண்டியவர், நான் பிறந்த ஊரான நெல்லை ஏர்வாடியில் திராவிட இயக்கத்தின் வரலாற்று அடையாளமாய் வாழ்ந்த திரு. என். பி. எம். அப்துல் காதர் அவர்கள். அவர் படிக்கத் தந்தவை அனைத்தும் திராவிட இயக்க இதழ்கள்தாம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் எழுத்துகள்தாம் முதலில் எனக்கு அறிமுகமாகின. அப்போது தி. மு. கழக மேடைகளில் முழங்கிய எங்கள் ஊரைச் சேர்ந்த சாச்சா அலிசேக் மன்சூர், அண்ணன்மார் மஸ்தான், கோடையிடி காஜா போன்றோரின் மேடைப் பேச்சுகளும் என்னுள் திராவிட இயக்கம் சார்ந்த எண்ணங்களை வளர்த்தன. அந்த எண்ணங்கள் அடிமனத்தில் ஆழமாகப் பதிவாகியிருந்த காரணத்தினா லேயே, மும்பையில் திராவிட இயக்கப் பெரியவர்கள் மற்றும் தோழர் களின் அறிமுகம் கிடைத்ததும் அவை மடை திறந்து வெளிப்பட்டன.

மூத்த பத்திரிகையாளர் அண்ணன் சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் தூண்டுதலினால் மீண்டும் மும்பையில் எழுதத் தொடங்கினேன். என்னுடைய கதை, கவிதைகளை விட அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளையே மும்பை எழுத்துலகத் தோழர்களும் வாசகர்களும் விரும்புவதாக உணர்ந்தேன். அன்றைய மும்பைத் தமிழ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் சகோதரர் இராபர்ட் அமல்ராஜ், தமிழ் போஸ்ட் வார இதழின் ஆசிரியர் தம்பி இராஜா வாய்ஸ் ஆகியோர் எனது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி வந்தார்கள். என் எழுத்துக்களை முழுமையாகப் படித்து எப்போது உச்சி முகர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்துகிறவர் என் தமையனார் சேனி ஷேக் (சேனியப்பா).

மும்பை இலக்கிய உலகமும் தமிழ் அமைப்புகளும் ஒரு காலத்தில் திராவிட இயக்கப் பற்றாளர்களால் நிரம்பி வழிந்தன. இன்று அவ்வா றில்லை. எனினும், எங்கும், எவரிடமும், எப்போதும் என்னை திராவிட இயக்கத்துக்காரனாக அடையாளப்படுத்திக் கொள்ள நான் தயங்குவதில்லை. அதனால் சில இடங்களில் சில வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து நான் வருந்துவதுமில்லை.

தென்னரசு மாத இதழ் தொடங்கப்பட்ட பிறகு அதன் முதல் இதழிலிருந்து நம்பிஆறூர் நம்பி என்ற புனைப் பெயரில் அன்பு மகளின் அருமை மகளுக்கு என மடல் வடிவில் நான் எழுதிய தொடருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தத் தொடரை வெகுவாகப் பாராட்டியவர்களில் முதன்மையானவர் என் மூத்த தமக்கையார். நான்தான் எழுதுகிறேன் என்று தெரியாதவர்கள் பலரும் அத்தொடரைப் பாராட்டி என்னிடமே கருத்துச் சொன்னார்கள். அத்தொடருக்குக் கிடைத்த சிறந்த அங்கீகரமாக அதைக் கருதினேன்,

மும்பையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் மேடைப் பேச்சாளனாகவும் எழுத்தாளனாகவும் அறியப்பட்டு நான் இயங்கி வந்தாலும், இதுவரை என்னுடைய நூல் ஏதும் வெளிவர வில்லையே என்ற ஏக்கம் என்னை விட மும்பைத் தோழர்கள் சிலருக்கு அதிகமாக இருந்தது. மும்பை இலக்கிய உலக நண்பர்கள் சிலர் நூல் வெளியிட என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.

முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதியுள்ள என் அன்பு நண்பர் கவிஞர் பிரபாகரபாபுவும் அண்மையில் என்னை வற்புறுத்த, தென்னரசு இதழின் பொறுப்பாசிரியர் இரா. உமாவிடம் இது குறித்து கருத்து கேட்டேன் மூன்றாம் தலைமுறைக்கு முதல்தலை முறையின் மடல் என்ற தலைப்பில் தென்னரசு இதழில் தொடராக வந்த மடல்களை அன்பு மகளின் அருமை மகளுக்கு என்ற தலைப்பில் நூலாக வெளியிடலாம் என்றார். எப்போது வெளியிடலாம் என்று சிந்தித்த போது, மகன் சமீர் ஹாஜிரா திருமண வரவேற்பு விழாவில் வெளியிடலாம் என்று தோன்றியது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் அண்ணன் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களிடம் இதனைக் கூறியபோது, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாகவே வெளியிடலாம் என்று கூறி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார். இந்நூலைச் சீராக்கி செம்மைப் படுத்தி பதிப்பிக்கவும் வெளியீட்டு விழாவை சிறப்புற அமைக்கவும் தோழமை உணர்வோடும் ஒரு மகளுக்குரிய பாச உணர்வோடும் திட்டமிட்டு செயலாற்றியவர் தென்னரசு மாத இதழின் பொறுப்பாசிரியர் இரா.உமா.

நாற்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆசிரியப் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு கணக்குப் பாடம் கற்றுத் தருவதுதான் என் தொழில் கணக்குப் பாட வகுப்பிலும் அவ்வப்போது சமூகப் பிரச்சினைகள் குறித்து மாணவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்

ஆசிரியர்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பவன்.
மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் சமமாக பார்ப்பது அல்லது நடத்துவது என்று இந்திய மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தந்தை பெரியாரைப் படித்த பகுத்தறிவாளாகளுக்கு, மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பது நன்றாகத் தெரியும்.

குழந்தைகளுக்கு வழிபாட்டியலையும் வழிபாடு சார்ந்த வாழ்வியலை யும் எடுத்துச் சொல்ல பல வீடுகளில் யாரேனும் இருக்கிறார்கள். ஆனால் பொதுவான வாழ்வியல் செய்திகளைச் சொல்கிறவர்கள்தாம். நாளுக்கு நாள் அருகி வருகிறார்கள்.

குறள்நெறியும் பகுத்தறிவும் எல்லோருக்கும் பொதுவானது. இவை எந்த வழிபாடு சார்ந்த வாழ்வியலுக்கும் எதிரானவை அன்று. பொதுமைச் சிந்தனையையும் ஒற்றுமை உணர்வையும் வளர்க்க இவை உதவும். குறள்நெறி குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் சிறக்கச் செய்ய துணை நிற்கும். பகுத்தறிவு, மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நமக்கு உதவும்.

குறள்நெறி குறித்தும் பகுத்தறிவு குறித்தும் மும்பையில் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் தமிழ் அல்லாத பிறமொழி பேசும் மாணவர்களிடம் நான் விவாதிக்கும்போது, அவர்கள் மிகுந்த அக்கறையோடு கவனித் தார்கள்;கவனிக்கிறார்கள். அச்செய்திகள் அவர்களுக்கு ஏற்கத் தக்கவை யாக இருக்கின்றன என்பதை அவர்களின் முகக்குறிகள் காட்டுகின்றன.

மாணவர்களிடம் சமூகச் சிக்கல்களையும் கொள்கைவழி வாழ்வியல் சிந்தனைகளையும் விவாதிக்கும் பழக்கம் நான் கற்ற ஆசிரியர்களிட மிருந்தே எனக்கு வந்திருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியர் சிவ. சீதாராமன் அவர்கள் வகுப்பில் அரசியல் பேசத் தயங்க மாட்டார். இன்னொரு தமிழாசிரியர் துளசிராமன் அவர்கள் சமூக பிரச்சினைகள் குறித்தும் புதிய இலக்கியச் சிந்தனைகள் குறித்தும் பேசுவார்.

சென்னை புதுக்கல்லூரியில் படித்த போது தான் இடதுசாரி சிந்தனை குறித்தும் உலக இலக்கியங்கள் குறித்தும் அறியத் தொடங்கினேன். அவற்றை அறிய வைத்தவர்கள் என் கல்லூரிப் பேராசிரியர்கள்.

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள், கவியருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள், பேராசிரியர் மா. ரா. இளங்கோவன் அவர்கள் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பெறும் நல்வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. இவர்களைத் தவிர இயக்கத் தலைவர்கள், இயக்கத் தோழர்கள், இலக்கிய வழிகாட்டிகள் என பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் பலர், அவர்களுடைய பெயரையெல்லாம் குறிப்பிடத் தொடங்கினால் இந்த அறிமுக உரை இன்னும் நீளும்.

முன்பெல்லாம் தந்தை ஏற்றிருந்த கொள்கைவழி வாழ்வியலை பிள்ளைகளும் பின்பற்றி வளர்வது என்பது பெரும்பாலான குடும்பங் களில் நிகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இப்போதும் அவ்வாறு இல்லை. ஒரு சில குடும்பங்கள் தவிர பல குடும்பங்களில் பிள்ளைகள் சமூக அக்கறை இல்லாமலேயே வளர்வதைப் பார்க்கிறோம். மொழி, இனம், நாடு, சமூகம் குறித்த புரிதலே இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதே வேளையில் சாதி, மதம் சார்ந்த விருப்பு வெறுப்புகள் அவர்களிடம் திணிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

தன் மகளும் தன் மகனும் தன் கொள்கை வழி வாழ்வியலை உள்வாங்கிக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் பலருக்கு இருக்கிறது.

ஒரு முறை அண்ணன் இனமானப் பாவலர் அறிவுமதி அவர்களிடம் இது குறித்து கேட்டபோது சொன்னார். அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை. ஒருவருடைய கொள்கைவழிச் சிந்தனைகளை அவருடைய பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் போனாலும், அவரின் பெயரப் பிள்ளைகள் அவருடைய வழியில் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படலாம்' என்றார். அண்ணன் அறிவுமதியின் கருத்து எனக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அப்போதுதான் நினைத்தேன். மாணவர்களிடம் அவ்வப்போது பேசி வந்த செய்திகளை பெயரப் பிள்ளைகளுக்கு எழுதும் மடல்களாக பதிவு செய்து சேமித்து வைப்போம் என்று.

தென்னரசு இதழ் என்னுடைய அந்த விருப்பத்திற்கு செயல் வடிவம்

ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள் என்பது குறித்த தெளிவான, உறுதியான கருத்தை நான் அறிந்திருக்கவில்லை.

ஒருவருடைய பிள்ளைகளை அவருடைய குடும்பத்தின் அடுத்த தலைமுறை என்று கருதப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தாத்தா தன் மகள் வழி பெயர்த்திக்கு எழுதும் மடல்
என்பதால் மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல் என்று இத்தொடருக்குப் பெயரிட்டிருந்தேன். 'அன்பு மகளின் அருமை மகளே! என்ற ஒவ்வொரு மடலின் தொடக்க வரி, சொல்வதற்கு இனிமையாக இருப்பதாக பலர் குறிப்பிட்டதால், அன்பு மகளின் அருமை மகளுக்கு' என்பதையே நூலின் தலைப்பாக வைத்து விட்டோம்.

தன் பெயரப் பிள்ளைகள் முழுமையான தமிழ்ச் சூழலில் இந்திய நாட்டுக்குத் தேவையான பன்முகத் தன்மையைப் புரிந்து கொண்டு வளர வேண்டும் என விரும்பும் ஒரு தாத்தா தன் பெயரப் பிள்ளைகளுக்கு என்னென்ன எழுதுவார் அல்லது எழுத வேண்டும் என்ற வினாவுக்கான விடையாக மடல் வடிவில் சில செய்திகள் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, இந்த நூலில் வரும் தாத்தா, நான் இல்லை, அதாவது நான் மட்டுமில்லை, இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களாகவோ அல்லது உங்கள் உறவுகளில் ஒருவராகவோ கூட இருக்கலாம்.

நூல் குறித்த கருத்துகளை எனக்கு எழுதுங்கள். அவை என்னை திருத்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள அண்ணன் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மதிப்புரை வழங்கியுள்ள அண்ணன் பாவலர் அறிவுமதி, வாழ்த்துரை வழங்கியுள்ள தோழர் கோவி. லெனின், தம்பி முனைவர் வதிலை பிரதாபன், நூல் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நூலாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த தென்னரசு மாத இதழின் பொறுப்பாசிரியர் இரா. உமா, தட்டச்சு செய்து வடிமைத்த தம்பி செ. அர்ஜுனன், அட்டைப்படத்தை ஆக்கிக் கொடுத்த சென்னை அட்வியூ வடிவமைப்பாளர் ஹரிஷ், பொதுவாழ்வில் எனக்கு எப்போதும் துணை நிற்கும் மும்பை புறநகர் திமுக செயலாளர் சகோதரர் அலிசேக் மீரான் உள்ளிட்ட திராவிட இயக்கத் தோழர்கள். தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள், தென்னரசு குழுமத்தினர், இலக்கிய அன்பர்கள், நூலை பதிப்பித்து வெளியிட்டுள்ள பொதிகை பதிப்பகத்தினர், குழந்தைகள் வளர்ப்பையும் குடும்ப நிர்வாகத்தையும் முழுமையாக தானே சுமந்து கொண்டு என் தொழில் மற்றும் பொதுவாழ்வுப் பணிகளில் நான் சுதந்திரமாக செயலாற்ற வழியமைத்துத் தந்ததோடு, இதழ் மற்றும் நூல்களின் மெய்ப்பு சரிபார்ப்புப் பணிகளிலும் உதவியாக இருக்கும் என் வாழ்விணையர் சைபுன்னிசா மற்றும் என் குருதி உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • சமீரா மீரான்

அன்பு மகளின் அருமை மகளுக்கு தொடரின் முதல் பாகத்தில் சந்திப்போம்

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ravichandran
Ravichandran
2 months ago

My respected leader ayya Sameera meeran in Mumbai.

S.D.Sundaresan
S.D.Sundaresan
2 months ago

இது போன்ற தமிழை வாசிக்கும் திறன் இல்லா இளைய தலைமுறை இக்காலத்தில் அதிகம்.
பெயரன் பெயர்த்தி காலத்தில் இன்னும் குறையும் வாய்ப்பே அதிகம்.ஆங்கில எழுத்துருவில் தமிழ் எழுதும் நிலைமை இன்று உள்ளது.இதுவே தொடருமானால் எதிர்கால தமிழின் நிலை எண்ணி கலங்கி நிற்கிறது மனம்.
இந்த நிலை மாற ஏதேனும் செய்தால் நம் தமிழ் தொடரும்.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092492
Users Today : 6
Total Users : 92492
Views Today : 19
Total views : 410121
Who's Online : 0
Your IP Address : 18.221.13.173

Archives (முந்தைய செய்திகள்)