Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பெறாத பிள்ளைகள் – இரவிச்சந்திரன்.R

13 Feb 2022 5:24 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures ravi

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-30
படைப்பாளர் - R.இரவிச்சந்திரன்

ரகுராம் அவசரமாக, விழுப்புரம் பஸ்நிலையத்தின் உள்ளே, ஓட்டமும், நடையுமாக, வந்துக் கொண்டிருந்தார். எப்படியாவது சென்னை பஸ்சை, பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு, வேகமாய் வந்தார். ஆனால் சென்னை பஸ் போய் விட்டது. அவருக்கு மூச்சிரைத்தது. பஸ் நிலையத்தில், சேர் ஒன்றில் உட்கார்ந்தார். கையில் பெரிய பையெல்லாம் இல்லை. கொளுத்துகிற வெயில் தான்.. அவரை வாட்டியது. தண்ணீரை பாட்டிலை.. திறந்து குடித்தார். 

குடித்து முடித்து பார்த்த போது, தன் முன்னே, பசியில் வாடி கிடந்த கண்களோடு, ஒரு எட்டு வயது சிறுமியும், நான்கே வயதுள்ள சிறுவனும், கையை நீட்டிக் கொண்டிருந்தனர். கைகளில் சில்லறை காசுகள்.. தங்களை அவர் பார்த்ததும், 

"சார் சார் பசிக்குது சார்..  எதுனா வாங்கி கொடுங்க சார்.. எனக்கு கூட வேணாம் சார்..என் தம்பிக்கு இரண்டு இட்லியாவது வாங்கி கொடுங்க சார்..அவனுக்கு பசி சார்.." 

அந்த பெண் குழந்தை, இத்தனை சின்ன வயதில், இப்படி பேசியது ரகுராமுக்கு, கவலையாய் போனது. 

சுற்றும் முற்றும் பார்த்தார். பஸ் நிலையத்து ஓட்டல் ஒன்று, தெரிந்தது. 

"பாப்பா இங்கயே இருங்க.. டிபன் வாங்கி வரேன்.. இங்கயே இருக்கனும்.. இந்தா இந்த தண்ணியை குடிங்க.. தோ வரேன்..இந்த சேர்லேயே உட்காருங்க " சொல்லிவிட்டு, ஓட்டலை நோக்கி நடந்து போனார் ரகுராம்.  

திரும்பி வரும் போது, அவர் கைகளில், இரண்டு இட்லி பொட்டலங்கள்.. தண்ணீர் பாட்டில்கள்.. அவர்களிடம், கைகளை நன்றாக கழுவ சொல்லிவிட்டு, சேர்களில் வசதியாக, உட்கார வைத்து, பொட்டலங்களை பிரித்து தந்து , சாம்பார் கவர்களை பிரித்து, ஊற்றி சாப்பிட சென்னார். 

பாவம் குழந்தைகள், பசியில் வேகமாய், சாப்பிட்டு முடித்தனர். அந்த நிலையிலும், அந்த பெண் குழந்தை, 

"டாங்ஸ் சார்" என்றது. அதை கேட்டதும், ரகுராம் நெஞ்சில், நெகிந்து போனார். அந்த பெண் குழந்தையை அருகே அழைத்து, 

"பாப்பா உன் பேரென்ன..? "என்ற போது, "என் பேர் தமில்செல்வி... என் தம்பி பேரு..பேரு.. " யோசித்தவள், "சேகர் சார் " என்றாள். 

"தமிழ்செல்வி, உங்க அப்பா அம்மா, எங்க இருக்காங்க..? ஏன் நீங்க பஸ் ஸ்டான்டுல இருக்கீ்ங்க.. உங்க வீடு எங்க இருக்குமா" ரகுராம் கேட்டார். 

அந்த குழந்தை விழித்தாள்.. 

"எங்க அப்பாவும் அம்மாவும், பஸ்சு மோதி செத்துட்டாங்க..சார். அதோ அந்த ரோட்டுலதான்.. பஸ்சு திரும்பி, உள்ள வருதே அங்க தான்.. பஸ்சு, மோதுனப்ப எங்க அம்மா, எங்க ரண்டு பேரையும், தூரமா தள்ளி வுட்டாங்க .. அவங்க மேல பஸ்சு மோதிடுச்சு.. என் தம்பி எப்பனா காணாம போவான்னா.. அப்ப நான் எங்கயும் தேட மாட்ட.. அம்மா செத்து போன இடத்துக்கு போய், பாப்பேன்..அங்க ஓரமா நின்னு அழுவான்.. நான் கூட்டிட்டு வருவேன்.. இப்ப கூட நீங்க அந்த பக்கமா வந்தீங்கல .. அங்கதான் இருந்து உங்க பின்னாடியே, வந்தோம்.. இங்க ஒரு ஆயா இருக்கு பாவம்.. அது கூட எல்லார்கிட்டேயும், காசு கேட்கும்.. இப்ப அதுக்கு சொரம்.. படுத்துனு இருக்கு.. நான் தான் அதுக்கும், இட்லி வாங்கி தருவேன்.. சார் அந்த ஆயாக்கும்..இரண்டு இட்லி வாங்கி தரிங்களா.." வெகுளியாய் பேசிய குழந்தையை, பார்த்த ரகுராம் கலங்கி போனார். 

"வாங்கி தரேம்மா" சொன்னவர், 

"வாங்க போவோம்" என ஓட்டலுக்கு, அழைத்து போனார். நாலு இட்லியை, பார்சல் செய்து கொண்டு, அந்த ஆயா இருக்கும், இடத்தை நோக்கி, குழந்தைகள் இரண்டும், வழிகாட்ட நடந்தார். 

"மவராசனா கூட்டிட்டு போப்பா.. யார் பெத்த கொழந்தகளோ.. அழகு சொக்க தங்கங்க.. இதுங்க பிச்ச எடுத்து, எனக்கு இரண்டு , டிபன் வாங்கி தரும்ங்க.. ஆத்தா அப்பன, சாக கொடுத்திட்டு, நின்னுதுங்க.. எந்த ஊர்னு, கூட சொல்ல தெரியலை..இந்த மூனு மாசமா, போலீஸ் காரங்க கிட்ட, அநாத புள்ளிங்க இருக்குற எடத்துல சேர்க்க சொல்லி, எத்தன வாட்டி கேட்டும்.. யாரும் எதுவும் செய்யலீங்க.. நீங்க தெய்வமா வந்து, கேக்கறீங்க.. இதுங்களாவது, நல்லா இருக்கட்டும்..அழைச்சிட்டு போங்க சாமி" 

அந்த பாட்டியின் கண்களில், கண்ணீர்.. அந்த பாட்டியின் கைகளில் ஆயிரம் ரூபாயை, வற்புறுத்தி, திணித்த ரகுராமை, கையெடுத்து கும்பிட்டு, இரண்டு குழந்தையையும் அணைத்து, உச்சியில முகர்ந்து முத்தம் கொடுத்து, அனுப்பி வைத்தார். அந்த பாட்டி.. 

இரண்டு குழந்தைகளும்.. ஆயாவை விட்டு பிரிவதை, உணர்ந்து அழுதும்.. ரகுராமிடம் உள்ள அன்பான உள்ளத்தை, புரிந்து அவரோடு பஸ் ஏறின.. பஸ், நிலையத்தை விட்டு, திரும்பும் போது, அம்மா அப்பா பஸ் மோதி இறந்த, இடத்தை பார்த்தவாறே, அந்த குழந்தைகள் போயினர். 

ஊருக்கு வந்து, சேர்ந்த போது, அவர்களை எதிர் பார்த்திருந்தாள். கிருஷ்ணவேணி. பஸ்சில் மொத்தத்தையும், சொல்லி இருந்தார் ரகுராம். 

இருபது வருட தாம்பத்தியத்தில், குழந்தை இல்லாத கஷ்டத்தை, இந்த குழந்தைகள், தீர்க்க வந்ததை எண்ணி, கடவுளே கொடுத்த வரமெனவே, அவளும் உள்ளுக்குள்.. மகிழ்ந்துதான் போனாள். இங்கேயும் ஓர் உயிர் தங்களை, வரவேற்பதை அறிந்த, அந்த குழந்தைகளுக்கு இனம் புரியாத, மகிழ்ச்சி...

மூன்று மாதமான, அழுக்கு தீர புது அவதாரமாய், குழந்தைகள் குளித்து பின், பார்த்த போது.. அழகு குட்டி செல்லங்களாய் கிருஷ்ணவேனிக்கு, தெரிந்தார்கள். விசியமறிந்த, ரகுராமின் தங்கை மாலதி, அடுத்த தெருவிலிருந்து, பரபரத்து வந்தாள். 

"ஏன்னே..உனக்கு மூள குழம்பி போச்சா.. எங்கிருந்து புடிச்சி வந்த இதுகளை.. என்ன சாதியோ, என்ன எழவோ.. இப்ப இந்த பசங்கள வளக்கலைனா, என்னவாம்.. ஏன் என் மூனு பசங்கள்ல ஒன்ன வளக்கறது... ஏன் அண்ணி, நீங்களாவது சொல்லக்கூடாதா.. அண்ணனுக்கு.. இந்த தரித்திர புடிச்சதுகள..." சொல்லி முடிக்கு முன், ரகுராம் கத்தினார். 

"மாலதி வாயை மூடு.. உன் குழந்தையை எனக்கு கொடு.. வளத்துக்கறோம்'னு, கேட்டப்ப நீ என்ன சொன்ன..கூழோ கஞ்சியோ என் புள்ள என் கிட்டயே வளரட்டும்'னு நீ சொல்லல.. அத விட ஒரு உண்மையை மறந்து போயிட்ட... நீயும் நானும் யாரும்மா..என்ன சாதி..என்ன குலம்..இன்னிக்கு வரை தெரியுமா.. தோ.. இந்த குழந்தைங்க இடத்துல, இதோ போல ஒரு நாள் இதே வயசுல அழுதுட்டு, இருந்தோமே மறந்து போச்சா.. அப்போ இந்த வீட்டு அய்யன், நம்மல எடுத்து வளக்கலைனா.. நாம எங்க இருந்திருப்போம் மாலதி... பழச மறந்துடாத.. இனிமே இவங்க எங்க புள்ளைங்க.. வேற யாரோட புத்திமதியும், எங்களுக்கு வேணாம்..." கோபமாய் சொல்லிவிட்டு, தமிழ்செல்வியையும், சேகரையும் அணைத்துக்கொண்டார்.. 

மாலதி தன்னிலையை, உணர்ந்தவளாய்.. 

"அண்ணே..என்னை மன்னிச்சிடுங்க..இனிமே இவங்க இரண்டு பேரும் என் அண்ணன் பிள்ளைங்கதான்.." என்று மனதார சொன்னதை கேட்ட கிருஷ்ணவேணி, 

"பிள்ளைகளா.. இது உங்க அத்தடா " என்ற போது குழந்தைகளுக்கு, மகிழ்ச்சியே, உண்டானது.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Elakkiya
Elakkiya
2 years ago

சிறப்பான கதைக்களம்.. தலைப்புக்கேற்ற கதை.. அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்..

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 3.141.244.153

Archives (முந்தைய செய்திகள்)