Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மகாத்மாவின் மறுபதிப்பு – முகில் தினகரன்

12 Feb 2022 12:04 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures mugil

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-25
படைப்பாளர் - முகில் தினகரன், கோயமுத்தூர்

பெரிய பெரிய அறிஞர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு பேசிய அவ்விழாவில் அவர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் கைதட்டல் அடுத்து வந்த ஒரு சாதாரண மிமிக்ரி கலைஞனுக்குக் கிடைத்த போது எனக்குள் ஏகமாய் எரிச்சலே மூண்டது.  “என்ன இழவுடா இது…எவ்வளவு பெரிய ஆளுங்க..எத்தனை அற்புதமான கருத்துக்களை…மத ஒற்றுமையைப் பற்றி…மனித நேயத்தைப் பற்றி…தெளிந்த நீரோடையாட்டம் பேசிட்டுப் போனாங்க..அவங்களோட அந்தக் கருத்துக்களுக்கெல்லாம் கை தட்டாத இந்த முட்டாள் ஜனங்க…ஒரு பல குரல் மன்னன்…பூனை மாதிரி….நாய் மாதிரிக் கத்தி…யார் யாரோ நடிகனுக மாதிரிப் பேசி கோமாளிக்கூத்து பண்றான்…அதுக்குப் போயி…கையைத் தட்டி…ஒன்ஸ் மோர் கேட்டு….ச்சை…வர வர ஜனங்க ரசனையே ரொம்பக் கெட்டுப் போச்சுடா சாமி..என்ன தெரியும் இந்த மிமிக்ரிக்காரனுக்கு?”

நிகழ்ச்சி முடிவுற்றதும் அந்த மிமிக்ரிக்காரனைச் சுற்றி ஏகக் கூட்டம்….கையைக் குலுக்கறதும்…ஆட்டோகிராப் வாங்குறதும்…காணச் சகிக்கவில்லை எனக்கு.  “இவன் என்ன வானத்திலிருந்து குதிச்சவனா? அப்படி என்னத்தைச் சாதிச்சிட்டான் இவன்?”

சற்றுத் தள்ளி நின்று அந்தக் கண்ணராவிக் காட்சியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் என் முகச் சுளிப்பையும்  அங்கிருந்தே கவனித்துவிட்ட அந்த மிமிக்ரி இளைஞன் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தான். வந்தவன் வசீகரமாய்ப் புன்னகைக்க, பதிலுக்கு நானும் புன்னகைத்து வைத்தேன்.

 “என்ன சார் என்னுடைய ஷோ எப்படியிருந்தது?” சிரித்தபடி கேட்டவனை அலட்சியமாய்ப் பார்த்து, “பைசா பிரயோஜனமில்லாத ஷோ…மத்தவங்களோட நேரத்தைக் கொல்லுற மகா மட்டமான நிகழ்ச்சி….மொத்தத்துல… வேஸ்ட் ஆஃப் டைம் ...அவ்வளவுதான்”

அவன் சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் அழகாய்ப் புன்னகைத்து  “இல்ல சார்…நீங்க இந்தப் பல குரல் கலையைப் பற்றியும்…அதுக்கான பயிற்சியில் நாங்க படற சிரமங்களைப் பற்றியும்…முழுதும் தெரிஞ்சுக்காம..ஒரே வார்த்தைல ”டைம் வேஸ்ட்”ன்னு சொல்லிட்டீங்க…ஆனா…அதுல எனக்கு கொஞ்சமும் கோபமில்லை…ஏன்னா…இந்தக் கலை ஒருத்தருக்கு அமையறதுங்கறது..ஆண்டவன் கொடுக்கற பரிசு…வரப்பிரசாதம்…”

 “இருந்துட்டுப் போகட்டும்…இதுனால யாருக்கு என்ன பிரயோஜனம்?….ஏதோ உனக்கு மட்டும் அப்பப்ப கொஞ்சம் சில்லரை சேருது…அத்தோட சரி”

பதில் பேசாமல் அமைதியாய் என்னையே சில நிமிடங்கள் ஊடுருவிப் பார்த்த அந்த மிமிக்ரிக்காரன்,  “சார்…நீங்க இப்ப ப்ரீயா?…ப்ரீயா இருந்தா உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகலாமன்னு…”

உண்மையில் அப்போது எனக்கு எந்தவித அவசரப் பணியும் இல்லாத காரணத்தாலும், மேலும்  “இவன் எங்கேதான் கூட்டிட்டுப் போறான்னு பார்ப்போமே?”…என்கிற ஆர்வத்தாலும்  “ம்…நான் ப்ரீதான்..போகலாம்” என்றேன்.

அவனே ஒரு ஆட்டோவை கை தட்டி அழைத்தான்.  நாங்கள் இருவரும் ஏறிய பின் ஆட்டோ ஓடத் துவங்கியது. “எங்க கூட்டிட்டுப் போறான்?…ஒரு வேளை வீட்டிற்குக் கூட்டிட்டுப் போய்…இந்தக் கலையை எப்படிக் கத்துக்கிட்டான்…இதுவரைக்கும் எங்கெங்கெல்லாம் போய் இதைச் செய்திருக்கான்…எத்தனை மெடல்கள்…பரிசுகள் வாங்கியிருக்கான்னு காட்டப் போறானோ?” யோசித்தபடியே ஆட்டோவில் பயணித்தேன்.

வழியில் ஓரிடத்தில் ஆட்டோவை நிறுத்தச் சொன்னவன் அவசரமாய் இறங்கிச் சென்று அங்கிருந்த ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளை வாங்கிக் கொண்டு திரும்பவும் வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டான்.

 “ஓஹோ…வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி….இந்த ஸ்வீட்டையெல்லாம் வெச்சு…என்னை வரவேற்றுப் பேசினா நான் இவனோட பல குரல் கலையை மெச்சுவேன்னு நெனைச்சிட்டான் போலிருக்கு…ஹா…ஹா…நாம யாரு…இதுக்கெல்லாம் மசியற ஆளா என்ன?”

 “டிரைவர்…ஆட்டோவை அந்தப் பச்சை நிற பில்டிங் முன்னாடி நிறுத்துப்பா”

நின்றதும்,  “சார்…இறங்கலாம் சார்” என்றான்.

இறங்கி அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தேன். “அன்னை தெரசா முதியோர் இல்லம்”

 “இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்திருக்கான்?…நன்கொடைக்கு அடிபோடுறானோ?”

ஆட்டோவை காத்திருக்கச் சொல்லி விட்டு என்னிடம் திரும்பி, “வாங்க சார் உள்ளார போகலாம்” என்றவாறு நடந்தவன் பின்னால் நானும் நடந்தேன். அங்கிருந்த அலுவலக அறைக்குள் நுழைந்தோம். 

 “வாங்க மிஸ்டர். வாசன்…எப்படி இருக்கீங்க?” சிரித்தபடி வரவேற்ற மனிதருக்கு சுமார் ஐம்பது…ஐம்பத்தைந்து வயதிருக்கும்.

 “நல்லாயிருக்கேன் சார்…பை த பை…இவர் என்னோட நண்பா;…பேரு…….” மிமிக்ரிக்காரன் தயங்கி விழிக்க,

 “ஐராவதம்” என்றேன் நான்.

“வாங்க மிஸ்டர் ஐராவதம்…உங்களை மாதிரிப் பெரியவங்கெல்லாம் எங்க முதியோர் காப்பகத்துக்கு வருகை தர்றது…எங்களுக்குத்தான் பெருமை சார்” என்றபடி அந்தப் பெரியவர் என் கைகளைப் பற்றிக் குலுக்க,  நான் சிரித்த முகத்துடன் அவர் வரவேற்பை ஏற்றுக் கொண்டேன்.

“சார்…நான் நூர்ஜஹான் அம்மாவைப் பார்க்கலாமா?” மிமிக்ரி இளைஞன் அந்த மனிதரிடம் கேட்க,  மூவரும் அந்த அறையை விட்டு வெளியேறி சற்றுத் தள்ளியிருந்த வேறொரு அறைக்குள் நுழைந்தோம்.

உள்ளே ஒரு இஸ்லாமிய மூதாட்டி கருப்புக் கண்ணாடியுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மிமிக்ரி இளைஞன் நேரே அந்த மூதாட்டியின் அருகே சென்று அவள் காலடியில் உட்கார்ந்து கொண்டு, “அம்மா…நான் சம்சுதீன் வந்திருக்கேன்” என்று வேறொரு வித்தியாசமான குரலில் சொல்ல,

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.   “அடப்பாவி… “சம்சுதீன்”ங்கறானே…இவன் பேரை  “வாசன்”ன்னு அந்தப் பெரியவர் இப்பத்தான் சொன்னாரு…அதுவுமில்லாம குரலை வேற மாத்திப் பேசறான்…ஆஹா..கண்ணுத் தெரியாத கெழவிகிட்ட ஏதோ தில்லு முல்லுத்தனம் பண்றான் போலிருக்கே…”

 “யாரு..சம்சுவா?…வாப்பா…” என்றபடி கண் தெரியாத அந்த மூதாட்டி காற்றில் கைகளால் தேட அவன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு,

 “அம்மா…இந்தாம்மா…உனக்கு ரொம்பவும் பிடிச்ச..ஜாங்கிரி…காரா சேவு…” என்றான் அதே வித்தியாசக் குரலில்.

வாங்கிக் கொண்ட  அந்தப் பெண்மணி 'நீ சாப்பிடலையா கணணு” என்று கேட்க, “நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிம்மா” என்றான்.

அரை மணி நேர தாய்-மகன் உரையாடலுக்குப் பின்,  “அப்ப…நான் கௌம்பறேன்மா…உடம்ப பத்திரமா பாத்துக்கோம்மா…ஜாக்கிரதையா இரு” எழுந்தான் மிமிக்ரி இளைஞன்.

மறுபடியும் அந்த முதியோர் காப்பகத்தின் அலுவலக அறைக்கே வந்தோம்.   “அடுத்தது ஆல்பர்ட் தாத்தாவா?” அந்தப் பெரியவர் கேட்க சிரித்தபடியே  “ஆமாம்” என்றான் மிமிக்ரிக்காரன்.

தொலைபேசியை எடுத்து ஏதோ ஒரு நெம்பரை அழுத்திய அந்தப் பெரியவர்,  “யாரு…ஆல்பர்ட் அய்யாவா?…அய்யா.. நான் ஆபீஸ் ரும்ல இருந்து பேசறேன்…ஆஸ்திரேலியாவுல இருந்து உங்க மகன் பீட்டர் லைன்ல இருக்காரு…பேசுங்க” என்றவாறு  போனை மிமிக்ரிக்காரனிடம் நீட்டினார்.

 “அடப்பாவி…அவன் ப்ராடுக்கு நீயும் உடந்தையா?” உள்ளுக்குள் கொதித்தேன்.

போனை வாங்கிய அநத மிமிக்ரிக்காரன் இப்போது இன்னொரு புதிய குரலில் ஆஸ்திரேலியாவிலிருந்து பீட்டர் என்பவர் பேசுவது போல் பேசினான்.

“டாடி…ஐ யாம் பீட்டர்…எப்படி இருக்கீங்க?….அங்க உங்களை நல்லா கவனிச்சுக்கறாங்களா?…நேரா நேரத்துக்கு மருந்தெல்லாம் சரியா சாப்பிடறீங்களா?…கொரியர்ல உங்களுக்கு அமௌண்ட் அனுப்பியிருக்கேன்…”

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பேசிவிட்டுப்  போனை வைத்தவனை முறைத்தேன்.

தன் பாக்கெட்டிலிருந்து இரண்டு ஐநூறு ருபாய்க் கட்டுக்களை எடுத்து அந்தப் பெரியவரிடம்  கொடுத்து  “பீட்டர் அனுப்பிச்சதா சொல்லி…ஆல்பர்ட் தாத்தாவிடம் கொடுத்துடுங்க…அப்ப நாங்க வர்றோம்”

அங்கிருந்து கிளம்பி வந்து காத்திருந்த ஆட்டோவில் ஏறினோம். “டிரைவர் வண்டிய  “ஐஸ்வர்யா காலனி” க்கு விடுப்பா” என்றான் மிமிக்ரிக்காரன்.

நான் அவனிடம் என் சந்தேகங்களைக் கேட்க வாயெடுக்க சைகையால் என்னைப் பேச வேண்டாமென்று அவன் தடுக்க அமைதியானேன்.  “இவன் ஒண்ணாம் நெம்பர் டுபாக்கூர் பார்ட்டியா இருப்பான் போலிருக்கே..”

ஆட்டோ ஐஸ்வர்யா காலனிக்குள் நுழைந்து அவன் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு முன் நின்றதும், “இறங்கி வாங்க சார்..” என்றான்.  நானும் இறங்கி அவன் பின்னால் நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தேன். நைட்டி அணிந்த ஒரு பெண்மணி, “வாங்க வாசன்…உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்…”

 “அப்ப இவன் பேரு வாசன்தான்…அது சரி…இந்தப் பொம்பளை யாரு?…இங்க எதுக்கு என்னைய கூட்டிட்டு வந்திருக்கான்?”

 “என்ன பண்ணுது உங்க மின்மினிக்குட்டி?….,”

“அதையேன் கேக்கறீங்க…பால் குடிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டுப் படுத்திருக்கு”

“சரி..சரி..நீங்க கொண்டு போய் பாலை வைங்க நான் இங்கிருந்து குரல் கொடுக்கறேன்.”

எனக்கு  ஒன்றுமே புரியவில்லை. “என்ன பண்றாங்க இவங்க?….யாரந்த மின்மினிக்குட்டி?”

இப்போது அந்த மிமிக்ரிக்காரன் ஒரு பூனையைப் போல் கத்த எனக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலானது. கண் ஜாடையால் கேட்டேன், “என்னய்யா பண்றீங்க?”. அவனும் பதிலுக்கு கண் ஜாடையால் ஒரு அறையைக் காட்ட போய் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு குட்டிப்பூனை இவன் கத்துவதை கூர்ந்து கேட்டவாறே பால் குடித்துக் கொண்டிருந்தது.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் அங்கிருந்து புறப்பட்டோம். மீண்டும் ஆட்டோ பயணம்.

சிறிது தூரம் சென்றதும் மெல்லக் கேட்டேன் , “உன் பெயர் வாசன்தானே?....ஆனா அந்தக் குருட்டுப் பொம்பளைகிட்ட  “சம்சுதீன்”கறே…போன்ல யாரோ ஒரு பெரியவர்கிட்ட  “பீட்டர்”கறே…ஏன் இந்தப் பொய்…பித்தலாட்டம்…குரல் மாத்திப் பேசற தில்லுமுல்லுத்தனம்?… இடையில் பூனையாட்டம் வேற கத்தறே…ஒரு எழவும் புரியல” முகத்தில் வெறுப்பை அடைகாத்தபடி கேட்டேன்.

மெலிதாய் முறுவலித்த அந்த மிமிக்ரிக்காரன்   “சார்…அந்த இஸ்லாமிய மூதாட்டி என் நண்பன் சம்சுதீனோட அம்மா…அவன் போன வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான்…அவன் இருந்த வரைக்கும் தவறாம பத்து நாளைக்கு ஒரு தரம் வந்து.. தன் தாயைப் பார்த்து இதே மாதிரி ஸ்வீட்டெல்லாம் வாங்கி குடுத்துட்டுப் பேசிட்டுப்  போவான்… நானும் ரெண்டு மூணு தடவை அவன் கூட வந்திருக்கேன்”

எனக்கு எதுவோ லேசாய்ப் புரிபட  “அந்த சம்சுதீன் இறந்தது அவன் தாய்க்குத் தெரியாதா?”

 “ம்ஹூம்…இன்னிக்கு வரைக்கும் தெரியாது…நான்தான் சொல்ல வேண்டாம்னு தடுத்திட்டேன்...பாவம் சார்…அந்தத் தாய்க்கு இருதயம் ரொம்ப பலஹீனமான கண்டிஷன்ல இருக்குது..தன் மகனோட சாவுச் செய்தியைக் கேட்டா…கேட்ட மாத்திரத்திலேயே அது பொட்டுன்னு போனாலும் போய்டும் சார்…வாழ்க்கையோட இறுதிக் காலத்துல இருக்கற அந்த ஜீவனுக்கு மகனைப் பறி கொடுக்கற மாபெரும் சோகத்தைத் தர எனக்கு மனசு ஒப்பலை சார்…அதே நேரம் பத்து நாளைக்கு ஒரு தரம் வந்திட்டுப் போற மகனோட வரவு திடீர்ன்னு நின்னு போச்சுன்னா அதோட மனசுல ஒரு பயம்..சந்தேகம் வந்திடக் கூடாதுன்னுதான்….அந்த சம்சுதீன் எடத்தை நான் நிறைவு செய்யறேன்..பத்து நாளைக்கு ஒரு தரம் வந்து அவனை மாதிரியே ஸ்வீட்ஸ் கொடுத்து அவனை மாதிரியே குரல் மாத்திப் பேசிட்டிருக்கேன்…”

சொல்லிவிட்டு அவன் என்னையே நெகிழ்வோடு பார்க்க, “ம்…'மேலே சொல்லுப்பா” என்றேன்.

 “சார்…'நமக்கு ஒரு மகன் இருக்கான்…நாம செத்தா நம்ம காரியங்களை அவன் செய்வான்' கற அவளோட நம்பிக்கையை நான் சாகடிக்க விரும்பலை சார்”

 “சரி…அந்த ஆல்பர்ட் தாத்தா?…,”

 “ம்…அவரு கதை இதை விடச் சோகம்…அவரு மகன் பீட்டர் ஒரு ஸாப்ட்வேர் என்ஜினீயர் ஆஸ்திரேலியாவில் வேலை…சமீபத்துல ஆஸ்திரேலியாவுல நம்ம இந்தியர்கள் தாக்கப்படறதும் …கொல்லப்படறதும் அதிகமாயிடுச்சு…அது உங்களுக்கே தெரியும்னு நெனைக்கறேன்….” சொல்லி விட்டு அவன் என் முகத்தைப் பார்க்க, மேலும் கீழுமாய்த் தலையாட்டினேன்.

 “இவரு மகன் பீட்டரையும் நாலு மாசத்துக்கு முன்னாடி சுட்டுக் கொன்னுட்டாங்க……ஆல்பர்ட் தாத்தாவும்  நூர்ஜஹான் அம்மாவாட்டமேதான் ஹார்ட் பேஸண்ட்…. மகன் கொல்லப்பட்ட செய்தி தெரிஞ்சா இவரும் தாங்க மாட்டார்… அதனால இவருகிட்டயும் அதை மறைச்சிட்டோம்…..ஆறு மாசத்துக்கு முன்னாடி எப்பவோ ஒரு தடவ நான் இங்க வந்தப்ப… ஆபீஸ் ரூம்ல போன் அடிச்சுது…அப்ப அங்க யாருமே இல்லைன்னு நானே எடுத்துப் பேசினேன்… ஆஸ்திரேலியாவிலிருந்து பீட்டர் பேசினார்….ஆல்பர்ட் தாத்தாவைக் கேட்டார் லைன் குடுத்தேன்… அப்ப ரெண்டு நிமிஷம் மட்டுமே கேட்ட அவரோட குரலை மறுபடியும் ஞாபகத்துக்கு கொண்டு வந்து அதை பிராக்டீஸ் பண்ணி… ஆல்பர்ட் தாத்தாவுக்கு கொஞ்சமும் சந்தேகம் வராதபடி பண்ண நான் பட்ட பாடிருக்கே…அப்பப்பா…அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்”

நான் அவனை ஊடுருவிப் பார்த்தேன். “ச்சே…என்ன ஒரு பெரிய மனசு இவனுக்கு…இவனைப் போய் நான்… தப்பா நெனச்சு… தப்புத்தப்பாய்ப் பேசி…”

 “அந்தக் குட்டிப்பூனையோட தாய் ஒரு வாரத்துக்கு முன்னாடி நாலஞ்சு குட்டிகளைப் பெத்துப் போட்டுட்டு தண்ணித் தொட்டில விழுந்து செத்துப் போச்சு….அது செத்தப்புறம் குட்டிகளும் வரிசையா ஒவ்வொண்ணா செத்திடுச்சுக……இது ஒண்ணுதான் பாக்கி…இதுவும் தாய் ஏக்கத்துல பால் குடிக்காம  கிட்டத்தட்ட சாகற நெலமைக்கு வந்திடுச்சு.. அப்பத்தான் அந்தம்மா வந்து என்கிட்ட சொன்னாங்க.. யோசிச்சேன்…'எப்படிடா அந்தக் குட்டியைக் காப்பாத்தறது?”ன்னு…'டக்”குன்னு ஐடியா வந்திச்சு…பக்கத்து அறையிலிருந்து தாய்ப்பூனை மாதிரிக் கத்தினா அதுக்கு அம்மா பக்கத்துலதான் எங்கியோ இருக்கு என்கிற நம்பிக்கையும் தைரியமும் வரும்…அப்படி வந்தாலே அது பால் குடிக்க ஆரம்பிச்சிடும்னு நெனச்சு அதை செஞ்சு பார்த்தேன்….அதே மாதிரி அது பால் குடிச்சுது…இப்ப ஓரளவுக்கு உசுரு புடிச்சிடுச்சு… இப்ப சொல்லுங்க சார்…என்னோட பல குரல் வித்தையால என்ன பிரயோஜனம்னு கேட்டீங்களே இன்னிக்கு அந்த இஸ்லாமியத்தாய் உயிரோட இருக்கறதுக்கும்….அந்த கிறித்தவ தாத்தா மகிழ்ச்சியோட இருக்கறதுக்கும்  காரணமே என்னோட பல குரல் வித்தைதான் சார்.. ஆறறிவு மனிதனை மட்டுமல்ல சார்…ஐந்தறிவு   ஜீவனுக்கும் உசுரு கொடுத்திருக்குது  என்னோட இந்த பல குரல் கலை”

ஒரு கனத்த அமைதிக்குப் பின் மெல்லச் சொன்னேன்   “தம்பி…அங்க… அந்த விழா மேடைல பல அறிஞர்கள்…சான்றோர்கள்…என்னென்னவோ பேசினாங்க…மத நல்லிணக்கத்தைப் பற்றி… மனித நேயத்தைப் பற்றி…. ஏதேதோ அறிவுரைகளை மக்களுக்குச் சொன்னாங்க…அவங்க வெறும் வார்த்தையால மட்டுந்தான் சொன்னாங்க நீ… வாழ்க்கைல… செயல்ல அதைக் செய்து காட்டிட்டிருக்கே…. நீ… நீ…” என்னையுமறியாமல் என் வயதில் பாதியே இருக்கும் அந்த மிமிக்ரி இளைஞனை கை கூப்பித் தொழுதேன். எல்லாக் கலைகளுக்குள்ளும் மனித நேய வேரும்….மனிதாபிமானத் தளிரும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது…அதை தழைக்க வைப்பதும்….தளிரிலேயே நசுக்கி விடுவதும் நம் மனப் போக்கில்தான் உள்ளது என்கிற உண்மையை எனக்குத் தெளிய வைத்த அவன் பல குரல் மன்னனல்ல... அந்த மகாத்மாவின் மறுபதிப்பு.

You already voted!
5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
உமா அபர்ணா
உமா அபர்ணா
2 years ago

மிக அருமையான கதை சகோதரா

உஷா சங்கரநாராயணன்
உஷா சங்கரநாராயணன்
2 years ago

மிக அழகாக மனிதம் சொன்ன கதை

மோ. ரவிந்தர்
மோ. ரவிந்தர்
2 years ago

அருமையான கதையோட்டம் தோழர் இன்னும் இதுபோல் பன்முகம் கொண்ட கதைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

கோவை புதியவன்
கோவை புதியவன்
2 years ago

சிறுகதை மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்

Chinnanchirugopu
Chinnanchirugopu
2 years ago

இப்படி ஒரு மிமிக்ரி கலைஞரா! மனதில் மிக உயர்ந்தவராக திகழ்கிறார். சிறப்பான சிறுகதை.
-சின்னஞ்சிறுகோபு, சிகாகோ.
வட அமெரிக்கா.

இளவல் ஹரிஹரன்
இளவல் ஹரிஹரன்
2 years ago

கதை மிக அருமை முகில் தினகரன் சார்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 3.144.104.29

Archives (முந்தைய செய்திகள்)