Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஆனந்த அலை – செ.புனிதஜோதி

11 Feb 2022 11:44 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures PUNIDHA

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-24
படைப்பாளர் - செ.புனிதஜோதி, சென்னை

மகேஷுக்கு அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை. ஒரே பரபரப்பிலிருந்தாள். அவளின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்ற பரிதவிப்பும், பதட்டமும் ஒட்டிக்கொண்டது.

  பலமுறை கண்ணாடி முன் நின்று நின்றுபடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுவயதில் பல மேடைகளில் பேசியவள்தான். ஏன் பிளஸ் டூ படிக்கும்போது  மாநில அளவு பேச்சு போட்டியில் முதல் பரிசு அமைச்சர் கரங்களால் வாங்கியவள் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் தொலைக்காட்சியில் கவியரங்கு அழைப்பு வந்துள்ளது என்றவுடன் அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை.

  பலமுறை படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள். இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு முணங்கிக்கொண்டே படுத்திருந்தாள். வீட்டிலுள்ள அனைவரிடமும் மாற்றி, மாற்றி தன்னுடைய கவியரங்கத்தில் நிகழக்கூடிய கவிதையை வாசித்து வாசித்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

 விடிந்தவுடன் வேகமாகக் குளித்து பட்டுப்புடவை எல்லாம் கட்டிக்கொண்டு சொன்ன நேரத்திற்கு முன் தொலைக்காட்சி நிலையத்திற்குள் சென்று விட்டாள். பலமுறை வந்தவர்கள் என்பதால் மிகவும் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர், அவளோடு பேசக்கூடிய கவிஞர்கள். வந்த அனைவருக்கும் டீ ,பிஸ்கட் எல்லாம் கொடுத்த பிறகு மேக்கப் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

 எல்லாம் மகேஷீக்கு புதிதாக இருந்ததால் அச்சம் அவளுக்குள் தொற்றிக்கொண்டது. அவள் முகம் இருளடைந்து கிடந்தது. "கடவுளே நல்லபடியா பேசி விடனும்" தனக்குள்ளே வேண்டிக்கொண்டே மேக்கப் அறைக்குள் நுழைந்தாள்.

 மேக்கப் போடும் பெண்மணி ஒவ்வொருவருக்கும் பவுண்டேஷன், லிப்ஸ்டிக் போட்டு அனுப்பினாள். வயதானவர்கள் கூட சற்று வயது குறைந்தவர்களாக தெரிந்தனர். மகேஷூ வந்து அமர்ந்தவுடன் புதுசா என்று கேட்டாள் அப்பெண்மணி.  முகத்தில் பதற்றம் தெரிகிறது போல, அதனால் தான் அந்த அம்மா கூட கேட்குது  என மனசுக்குள் சொல்லிக்கொண்டே "இல்லையே" என்று முகத்தைச் சாதாரணமாக மாற்றிக்கொண்டாள்.

 அவளுக்குள்ளே ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்ற வார்த்தையை ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

 இன்னும் ஒரு சிக்கல்.பேச்சாளர் ஆறுபேர், நடுவர் ஒருவர், இவள் ஒருத்தி தான் பெண் .பேசும் அறைக்குள் அனைவரையும் அழைத்தனர். அங்கே பெரிய, பெரிய கேமராக்கள், லைட் என்று பயமுறுத்தியது. அங்கேயும் ஒரு பெண்கூட கிடையாது. தொண்டைக்குள் அச்சத்தை அடக்க முடியாதவளாய் திணறித்திரிந்தாள். திக்கென்ற திசையில்

தடுமாறும் ஓடத்தைப் போலத் தடுமாறி நின்றாள்.

  அந்த சமயத்தில் கவியரங்கத்தின் தலைமை பொறுப்பேற்றுள்ள பெரியசாமி ஐயா அம்மா மகேஷ்வரி என அழைத்தார். தூங்கிக் கொண்டிருந்தவள் விழித்துக்கொண்டதைப் போல் சுதாரித்து ஐயா என்று அழைத்தவாறே அருகில் சென்றாள்.

  "உன்னோடு யாருமா வந்தா"  என்று கேட்டார். கணவர் தான் ஐயா எனப் பதில் சொன்னாள். நீங்கள் வரத் தாமதம் ஆனதால் அவர் அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார் . அப்படியா அம்மா என்று சொல்லிக் கொண்டே சக கவிஞரை அழைத்து மகேஷை அறிமுகப்படுத்தினார். பெரிய பேச்சாளர். உலகமே இந்த அம்மா பாக்கெட்டுல தான் என்றார். இப்ப நம்ம அறம் நிகழ்ச்சிக்குக் கூட வரதில்ல, உலகம் முழுவதும் பறந்துக்கிட்டுல இருக்காங்க என்றார். எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் ஐயா. "நான் என்ன செய்தேன், உன் திறமையில தான் வளர்ந்திருக்க" என்று சொல்லும் போதே பழைய நினைவுகளுக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள்.

 கொரானா காலமென்பதால் ஜூம் மூலம் பல தமிழ் மன்றங்கள் இலக்கிய நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தன. அதில் ஒன்றுதான் ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியர் பெரியசாமி தமிழ் ஐயாவின் அறம் என்ற அமைப்பு. தோழியின் மூலமாக இந்த தொடர்பு கிடைத்தது. அதன் பிறகு அங்கே நடக்கும் நிகழ்ச்சியில் பார்வையாளராகச் சென்று ,சிறப்பு விருந்தினரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பதும், அவர்கள் சொன்ன செய்திகளை அப்படியே தொகுத்து கவிதையாக வடித்து வாசிப்பது கைவந்த கலையாக மாறியது மகேஷூக்கு.

 அதனால் வெகு சீக்கிரமாக எல்லோரிடமும் பாராட்டுக்கள் குவிந்தன. அவளின் கம்பீரமான பேச்சு, அழகிய தோற்றம், உடனே கவிதை வடிக்கும் பாங்கு அவளின் வளர்ச்சிக்குப் பக்கத் துணையாக நின்றது. பெரியசாமி ஐயாவிற்குப் பிடித்துப் போக பல நிகழ்ச்சிகளில் அவளுக்கு வாய்ப்பு வழங்கினார்.

 இதேபோல பல்வேறு தமிழ் சான்றோர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பேச வாய்ப்பு கிடைத்தது. வெகு சீக்கிரமாகவே எல்லா தமிழ் மன்றங்களிலும் அறிமுகம் அவளுக்குக் கிட்டியது. வட அமெரிக்கா நடத்தும் ஜூம்நிகழ்ச்சி மற்றும் லண்டன், பக்ரைன் அயல்நாட்டு
தமிழ் மக்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிட்டியது.

 அம்மா மகேஷ்வரி  என்று கூப்பிடும் சத்தம் கேட்டவுடன்... கனவிலிருந்து விழித்துக் கொண்டவள் போல சுதாரித்து, ஐயா என்றாள்.

 டைரக்டரை அறிமுகப்படுத்தி வைத்தார். வணக்கம் செலுத்தியவருக்குப் பதில் வணக்கம் செலுத்தினாள்.

 தனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வதை உணர்ந்த நிலையிலே கடந்த காலத்தில் அவளுடைய கனவுகள் அடுப்படியிலும், டைரியிலும் மறைந்து கிடந்தவை. இன்றைய கொரானாக் காலத்தில் கவிதை நூலாகவும், மேடைப் பேச்சாகவும்  வெளிச்சத்திற்குள் வந்ததைக் கிள்ளிப்பார்த்துப் புன்னகை செய்துகொண்டாள்.

 என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் ஜூம் நிகழ்ச்சிகள் மூலம் வெளிவந்துள்ளனர் இந்தக் கொரானாவை தூற்றுவதா,? வாழ்த்துவதா? என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டாள்.

 எல்லோரையும் மேடையில் அமரச்சொன்னார் தலைவர் பெரியசாமி. கேமராவிற்குள் எல்லோரும் அடங்குமாறு நாற்காலிகள் மாற்றி அமைக்கப்பட்டது. கேமராவை எப்படி பார்க்கவேண்டும், எப்படி வணக்கம் வைக்கவேண்டும்  என்பதையும், யாருக்குப் பின் யார் வரவேண்டும், அவர்களைப் பற்றி தலைவர் சொல்லும்வரை எழுந்திருக்கக்கூடாது போன்ற வழிமுறைகள் சொல்லப்பட்டன.

 எல்லோருக்கும் ஒத்திகையும் கொடுக்கப்பட்டது. அதுவரை அச்சத்தில் இருந்த மகேஷுக்கு கொஞ்சம் பதற்றம் விலகியது.

 ஸ்டாட்,ரோலிங், டேக்,ஆக்சன், ஓகே என்ற வார்த்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன.அவளுக்கு அத்தனையும் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆக்ஷன் என்று தொடங்கிய உடன் பெரியசாமி ஐயா பேசத் தொடங்கினார். அவர் பேசும்போது  திக்கிவிட்டார். உடனே கட்,கட் என்று சொல்லி மறுபடியும் எடுக்க ஆரம்பித்தனர்.இதே போல் இரண்டு, மூன்று முறை நிகழ்ந்தவுடன் திரும்பவும் எடுத்தனர். வந்த பேச்சாளருக்கும் இதே போன்று நடக்கவே அவர்களுக்கும் கட் என்று சொல்லியே எடுத்தனர்.

 இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஷூக்கு அச்சம் முழுவதும் விலகியது. இப்படியாக ஒவ்வொருவராய் பெரியசாமி ஐயா அழைக்க பேசினார்கள். அடுத்து மகேஷ் தான் பேசவேண்டும். சிறிது அவளுக்குள் பதற்றம் சூழ்ந்தது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவளை அழைத்தவுடன் பேசத் தொடங்கினாள். எப்போதும் பேசுவதை விட மிகவும் சிறப்பாகப் பேசி முடித்தாள்.

அனைவரும் பேசிமுடித்த பின்னர்,

 இயக்குநர், ஒளிப்பதிவாளர், பெரியசாமி ஐயா, சகபேச்சாளர்கள் மகேஷை மிகவும் பாராட்டினர். நீங்கள் தான் ஒரு கட் கூட வாங்காம, மிகவும் தெளிவான உச்சரிப்போடு பேசினீர்கள் என்று சொன்னவுடன் தலைகால் புரியவில்லை. மிகுந்த சந்தோஷத்தில் நன்றி கூறினாள் அனைவருக்கும். பெரியசாமி ஐயாவின் காலில் விழுந்தாள். அம்மா...அம்மா... எழுந்திருமா நல்லா வருவமா என்று ஆசிர்வதித்தார்.

 கேமராமேன் அவள் முகத்தை ஸ்க்ரீனில் காண்பிக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அனைவரிடமும் விடைபெற்று ,பேருந்து நிலையத்துக்கு நடக்க ஆரம்பித்தாள்.

 அவளின் காதுகளில், டேக்,ஆக்‌ஷன்,கட்,ஓகே என்ற வார்த்தைகள் இளையராஜாவின் இன்னிசையாய் ஆனந்த அலையாய் வீசிக்கொண்டிருந்தது. அவளின் பயணம்  நம்பிக்கையைப் பற்றி நடைபோடத் துவங்கியது.

You already voted!
4.6 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
சக்கையா
சக்கையா
2 years ago

முதல் தொலைக்காட்சி அனுபவத்தை படபடப்புடனும் பரபரபரப்புடனும் சிறுகதை சொல்லியிருக்கிறது.

முதல்வன் திரைப்படத்தில் அர்ச்சுன் ஊடகவியலராய் ரகுவரனை நேர்காணல் செய்யும் முன் ஏற்படுகிற பதட்டத்தையும. வெற்றிகரமாய் அந்த நேர்காணலை முடித்து ஒருநாள் முதல்வரான உணர்வையும் நினைவூட்டிய சிறுகதை

அருமை

இரா.மஞ்சுளா காந்தி
இரா.மஞ்சுளா காந்தி
2 years ago

பல பெண்களின் அனுபவம் தங்கள் வரிகளில் அருமை புனிதா
எதார்த்தமாக உள்ளது வாழ்த்துகள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 18.190.156.212

Archives (முந்தைய செய்திகள்)