Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

வாரிசு – பூபதி பெரியசாமி

11 Feb 2022 1:02 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures boobadhi

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-23
படைப்பாளர் - பூபதி பெரியசாமி, புதுச்சேரி

‘காலை டிபன் 10 ரூபாய்… மதிய சாப்பாடு 20 ரூபாய்…’ என்ற விளம்பரம் தாங்கியிருந்த ‘அருந்ததி உணவகம்’ சாய்தளப் பலகையும், வாடிக்கையாளர்கள் உணவருந்தும் மரப்பலகைகளும், உயிர்ப்பின்றி மூலையில் முடங்கிக் கிடந்தன. வழக்கமாகச் சாப்பிடும் வாடிக்கையாளர்கள், வந்து பார்த்து ஏமாந்து திரும்பிச் சென்றனர்.

 “எதிர்பாராம எல்லாமே ‘சட்’டென முடிஞ்சி போச்சுங்க ஐயா. பசின்னு வந்துட்டா பணத்தைப் பார்க்காம, வயிறு நிறைய சாப்பிட வச்சி அனுப்புவாங்க அருந்ததி அம்மா இழப்பு பேரிழப்புதான். அது நமக்கு மட்டுமில்ல ஐயா… நம்மை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும்தான். வந்து ஏமாந்து போறவங்களைப் பார்க்கவே, மனசுக்குக் கஷ்டமா இருக்கு. சீக்கிரம் உணவகத்தைத் திறக்கணும்…”

கையில் தேநீர் டம்பளருடன் நின்றிருந்த வரதனின் கவலைக் குரல் கேட்டு நிமிர்ந்த நடேசன், வெறுப்பாய்க் கையில் அதை வாங்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.

கொரோனா பெரும் தொற்றால், மனைவி அருந்ததியைப் பறிகொடுத்த அவரது செல்போன் ‘வாட்ஸப்’பில், இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே தோட்டத்துக்குச் சென்றார்.

 கட்டியிருந்த நாட்டுப் பசு, கன்றுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு ‘அப்படி இப்படி’ உடலை அசைத்தது. தினமும் தீவனம் வைக்கும் அருந்ததியைத் தேடுவதை அவரால் உணர முடிந்தது.

வழக்கமாக… காலையிலேயே மது போதையில் இருக்கும் நடேசன், கடந்த சில நாட்களாய் துக்க விரதத்தினால், சுத்தபத்தமாகப் பத்து நாட்களைக் கடத்தி விட்டார்.

ழ்ந்த சிந்தனையில், அமைதியாய் இருந்த அவர், ‘சட்டென’ இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே புறப்படத் தயாரானார்.

  “என்னய்யா... இந்த நேரத்துல எங்கக் கிளம்பறீங்க. வேணாம் ஐயா. விரதம் இன்னும் முடியல…” கெஞ்சினான் வரதன்.

 “மனசு சரியில்லடா வரதா. கொஞ்ச நேரத்துல வந்துடறேன்…” சொல்லிக் கொண்டே வாகனத்தை எடுத்து, வானத்தை அண்ணார்ந்து பார்த்தார்.

வெயில் மெல்ல வெளியில் தலைகாட்டத் துவங்கியது. பித்துப் பிடித்தவன் போல் வாகனத்தை ஓட்டிய நடேசன்… திடீரென, சாலையோரமிருந்த ஒரு மரநிழலில் நின்றார்.

 சில நாட்களாகவே… உறக்கமின்றி இருந்ததால், துண்டை விரித்துத் தலையில் கைவைத்துப் படுத்தார். யோசனைகள் பல வருவதும் போவதுமாய் இருந்தன.

 “முதுமையில், ஒரு ஆண் இழக்கக் கூடாத முக்கிய சொத்து மனைவிதான். அவளையும் இழந்து… ஒரு வாரிசும் இல்லாம… குறையோடவே எதுக்கு வாழணும்…” மனம் பல கேள்விகளைக் கேட்டது. குழப்பதிலிருந்த போது, வரதனிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது.

 “சீக்கிரம் வந்துடறேன் வரதா…” அவசரமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு, மதுக் கடைக்குப் புறப்பட்டபோது… மூதாட்டி ஒருவர், வாகனத்தைக் கையசைத்து நிறுத்தினார்.

 “சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஐயா. பசியில உயிர் போகுது. கையில பத்து ரூபாதான் இருக்கு. எங்களைப் போன்ற ஆதரவற்றோருக்கெல்லாம் காசு பணம் கராறய் வாங்காம சாப்பாடு கொடுத்த அருந்ததி அம்மாவும் போய்ச் சேர்ந்துடாங்களாம். ஒரு பத்து ரூபா இருந்தாக் கொடு சாமி…” பரிதாமாய்ச் கெஞ்சினார் மூதாட்டி.

வயிற்றுப் பசியால், மூதாட்டியின் உடலில் தெம்பின்றிச் சோர்வாய் இருப்பதை உணர்ந்து, உடனே அருகிலிருந்த டிபன் கடைக்குச் சென்று, இரண்டு பார்சல்களையும், தண்ணீர் பாட்டிலையும், வாங்கிக் கொடுத்தார்.

 “பசிச்ச வயித்துக்கு, சாப்பாடு கொடுத்திருக்கியே. நீண்ட காலம் நீ நல்லா இருக்கணும் சாமி. உனக்கு வாழ்க்கைப்பட்ட மகராசி நூறு வயசு நோய் நொடியில்லாம இருப்பா…”

 நடேசனை யாரென்று அறியாத மூதாட்டி, அவசரமாய்ச் சாப்பிட ஆரம்பித்தார். மனக்குமுறலை அடக்க முடியாத நடேசன்… விரைவாய் வீடு வந்து சேர்ந்து, நிதானமாய் ஒரு குளியல் போட்டார்.

கொடிக் கயிற்றில் துவைத்துக் காயப்போட்டிருந்த வெள்ளை வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு, ஈரத்தலையுடன் கூடத்திலிருந்த அருந்ததியின் படத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.

அருகே வந்த வரதன், “எப்படியும் சரியாகி வந்துடுவாங்கன்னுதான் நினைச்சேன் ஐயா. இவ்வளவு சீக்கிரம், அம்மா நம்மை விட்டுப் போயிடுவான்னு, கனவிலும் நினைச்சுக்கூடப் பார்க்கல. உணவகத்தைச் சீக்கிரம் திறந்து நடத்தணும். அதுக்கு, ரொம்ப காலம் நீங்க நல்லா இருக்கணும். அதனால, அந்தப் பழக்கம் மட்டும் வேணாம் ஐயா. அப்புறம், எனக்குன்னு யார் இருக்கா?” கனத்த மனதோடு சொன்ன அவனை ஏற இறங்கப் பார்த்தார் நடேசன்.

  அதன் பின், அவனுக்குப் பேச வார்த்தை வரவில்லை. சில கனம் சூழல் அமைதியாய் இருந்தது. நடேசனை வற்புறுத்திச் சாப்பிட வைத்தான் வரதன்.

 ஊர் முற்றிலும் அடங்கிப் போயிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கியும், உறக்கம் வரவில்லை. தெரு நாய்கள் சில, அழுது ஓய்ந்தன. புரண்டு புரண்டு படுத்துப் பொழுது போய்க் கொண்டிருந்தது.

றுநாள் இன்னும் முழுமையாக விடியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து, சன்னல் கதவுகளைத் திறந்து பார்த்தார் நடேசன். அதிகாலை விடிவெள்ளி தெளிவாய்த் தெரிந்தது. நீண்ட நாளாய் ஓய்வெடுக்கும் உணவக அடுப்பின் அருகே, முதன் முறையாகச் சென்ற நடேசன், சில கணம் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 “என்னை எழுப்பக் கூடாதா ஐயா…?” சொல்லிக் கொண்டே, காய்ச்சின பாலை அருந்ததி படத்தருகே வைத்தான் வரதன். கவலையும் அமைதியுமாய் இருந்த வீட்டின் ‘துக்கக்களை’ சிறிதும் குறையவில்லை.

ருந்ததி இறந்து பதினாறு நாட்கள் கடந்து விட்டது. செய்து முடிக்க வேண்டிய காரியங்களும் எளிமையாய் முடிந்தது. மீண்டும் ஆழ்ந்த யோசனையிலிருந்த நடேசனை, ஏழு முறை அடித்து ஒய்ந்த சுவர்க் கடிகார ஒலி, நினைவுக்குக் கொண்டு வந்தது.

தெளிவாய் இருந்த அவரைப் பார்த்த வரதனுக்கு, ‘மீண்டும் ஆரம்பிச்சிடுவாரோ…’ என்ற பயம் மனதில் லேசாக உண்டானது.

‘உணவகம் பத்து நாளுக்குமேல் இயங்காததால, பணம் சுத்தமா இல்ல. வங்கிச் சேமிப்பும் கிடையாது. அவளுக்குன்னு குண்டுமணி நகை இல்லை. இருப்பதென்னவோ அவளோட, அன்றாட உண்டியல் சேமிப்பும்தான்…’ முணுமுணுத்தபடி, பூஜை அறைக்குள் சென்றார் நடேசன்.

 “ஐயா… தயவு செய்து, உண்டியல் பணத்தை எடுக்க வேணாம். ஒரு வருஷம் ஆகாம இறந்தவங்க பொருளை எடுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…” என்றான் வரதன்.

“அவசரமா, உடனே பணம் வேணும் வரதா…” உண்டியலைப் பார்த்தபடியே இருந்தார் நடேசன். சட்டென, உண்டியலை எடுத்த வரதன், அருந்ததியின் படத்தருகே வைத்துவிட்டு அமைதியானான்.

றுநாள் காலை விடிந்ததும், வரதனைத் தேடினார் நடேசன். எங்கும் அவனைக் காணவில்லை. அவன் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல மணி நேரமாகியும், அவனிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

பதற்றமும் கவலையுமாய், வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்தபோது, திடீரெனச் சந்தேகம் வந்து, அவன் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தார். வரதனின் உடமைகள் கலைந்து கிடந்தன. சாமி படத்தருகே இருந்த, அருந்ததியின் சேமிப்பு உண்டியலையும் காணவில்லை.

 “துணைக்குன்னு கூட இருந்த வரதன் இப்படிப் பண்ணிடானே. உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய, அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ. பிள்ளையைப் போல வளர்த்தாளே. படு பாவி….” நினைத்து நினைத்துப் பதற்றத்தில், உடல் வியர்த்தபடியே இருந்தது.

புலம்புவதால் பலன் ஏதுமில்லை என உணர்ந்து, சட்டெனக் கிளம்பி புகார் கொடுக்க காவல் நிலையம் கிளம்பினார் நடேசன்.

அப்போது, ஒலியெழுப்பியபடி வந்த போலீஸ் வாகனம் ஒன்று, வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து, இரு காவலர்களும் வரதனும் இறங்கினர்.

பயந்து பதற்றமான நடேசன், “ஐயா… நானே, இவன் மீது புகார் கொடுக்கக் காவல் நிலையம் கிளம்பினேன். நல்ல வேளை… நீங்களே இழுத்து வந்துட்டீங்க…” என்றார்.

“என்ன சொல்றீங்க நீங்க?” நடேசனிடம் பேசிக்கொண்டே, வாகனத்திலிருந்த மளிகை மற்றும் காய்கறி மூட்டைகளை காவலர்கள் இறக்கி வைத்தனர். அமைதியாயிருந்த நடேசனுக்குக் குழப்பம் அதிகமானது.

“கொரோனா காலம் என்பதால், வாகனங்கள் அதிகம் ஓடல. ரோந்து போகும்போது, காய்கறி மளிகை மூட்டைகளோடு நின்றிருந்த இவரை விசாரிச்சோம். உங்க உணவகத்துக்குப் போகணும்னு சொன்னார். அம்மா கையால, பலமுறை நாங்களும் சாப்பிட்டிருக்கோம். அதான், சிரமம் பாராமக் கடைக்கு அழைச்சி வந்தோம்…” யதார்த்தமாய் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

மன்னிப்புக் கேட்பதன் அடையாளமாக, நா தழுதழுக்கக் கண்கள் கலங்கிய நடேசன், “என்னடா வரதா இதெல்லாம். இவ்வளவு மளிகை காய்கறியெல்லாம் இருக்கே. இதுக்கெல்லாம் பணமேது?” என்றார்.

“ஐயா… பத்து வயசிருக்கும்போது அனாதையா வீட்டுக்கு வந்தேன். பசின்னு வந்து எனக்கு, சாப்பாடு போட்டு தங்க இடமும் கொடுத்து, ஓரளவு படிக்கவச்சி, ஒரு பிள்ளையைப்போல அம்மா என்னைப் பார்த்துக்கிட்டாங்க.

 அவங்க கையால தினமும் சாப்பிட்டேன். உப்பிட்ட வீட்டுக்கு, நானும் ஏதாவது செய்யனும்னு நினைச்சேன். பல வருஷமா சேமித்து வச்சப் பணத்துலதான், இந்த மளிகை காய்கறியெல்லாம் வாங்கினேன்…” என்ற வரதனை வாஞ்சையோடு பார்த்தார் நடேசன்.

‘அருந்ததியின் உண்டியல் பணத்தைப்பற்றிக் கேட்கலாமா?’ மனம் நினைக்கும்போதே, உண்டியலைக் கையிலெடுத்துக் கொடுத்தான் வரதன்.

‘டேய் வரதா. உன் ஐயா இப்படி இருக்காரே. உடம்பு கிடம்பு கெட்டுப் போச்சுன்னா, நமக்குன்னு கொடுத்து உதவ யார் இருக்கா? பாத்துக்க நாம இருக்கோம். ஆனா, செலவுக்குப் பணம் வேணுமில்ல…’ அப்படின்னு சொல்லிச் சொல்லி, சிறுக சிறுக அம்மா சேர்த்து வச்ச பணம். அதனாலதான், உங்களை அதை எடுக்க வேணாம்னு சொன்னேன்…”

வரதனைப் பெருமையுடன் பார்த்த நடேசன், உண்டியலைக் கையில் வாங்கி, மீண்டும் அருந்ததி படத்தருகே வைத்தார். அவர் மனதில் இருந்த பாரம் முற்றிலும் குறைந்தது.

றுநாள் காலை…‘அருந்ததி உணவகம்’ மீண்டும் உயிர் பெற்றது.  இருவரும் சுறுசுறுப்பாய் இயங்கினர். நெற்றியில் திருநீறு பூசியபடியிருந்த நடேசன், வாடிக்கையாளர்களுக்கு வயிறார ‘டிபன்’ பரிமாறிக் கொண்டிருந்தார்.

“உணவின்றித் தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும் சாப்பாடு இலவசம்…” என எழுதப்பட்ட கரும் பலகையை, உணவக வாசலில் எழுதி வைத்தான் வரதன்.

 கண்கள் கலங்க அவனைப் பார்த்த நடேசன், “ஒரு வாரிசு இல்லையேன்னு, பல நாட்கள் வருத்தப்பட்டேன். இனி அந்தக்குறை இல்லை…” கண்களில் வழிந்தோடிய ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, உணவக வேலைகளைத் தொடர்ந்தார்.

You already voted!
4.1 19 votes
Article Rating
Subscribe
Notify of
guest
19 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajamani
Rajamani
2 years ago

Nice content and concpet also very interesting to read proud of you sir

க.இராஜசேகரன்
க.இராஜசேகரன்
2 years ago

பூபதி பெரியசாமி அவர்களின் வாரிசு சிறுகதை படித்தேன்.கண்கள் கலங்கிவிட்டன.நல்லவர்களை ஏதோ ஒரு வடிவில் கடவுள் காப்பாற்றி விடுவார் . முற்பகல் செய்த நற்செயல்கள் வரதன் வடிவில் அவருக்கு உறுதுணையாக உள்ளன.அற்புதமான சிறுகதை!ஆசிரியருக்கு பாராட்டுகள்! அன்புடன் க.இராஜசேகரன், மயிலாடுதுறை

Mohanraj
Mohanraj
2 years ago

கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை தீர்மானிக்க முடியவில்லை.கடைசி வரையிலும் மிகவும் சுவாரஸ்யமாக பயணம் செய்கிறது. வாசிப்பவனுக்கு ஆர்வத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தும் கதை மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. வாழ்த்துகள்

ARAVIND
ARAVIND
2 years ago

Very nice Story Sir based on Moral Values. Need of the Hour.

Nandakumar
Nandakumar
2 years ago

Good Very good

Ganesan
Ganesan
2 years ago

Joined

Batmanabane
Batmanabane
2 years ago

இன்றைய சூழலுக்கு ஏற்ப கதை உள்ளது. ஆராயாமல் யார் மீதும் குற்றம் சுமத்தக் கூடாது

மகேஸ்வரன்.R
மகேஸ்வரன்.R
2 years ago

வாழ்வின் எதார்த்ததை நமக்கு நல்ல பதார்த்தமாக பக்குவமாக தந்துள்ள பூபதி பெரியசாமி சாருக்கு வாழ்த்துகள்

Dr. Rajaram Gopal
Dr. Rajaram Gopal
2 years ago

Nice and touching story .

R KOTHANDAN
R KOTHANDAN
2 years ago

It’s a heartfelt shot story, nice

வாணி
வாணி
2 years ago

எளிய நடையில் அமைந்த இனிய கதை. கொரோனாவால் உறவுகளை இழந்து நிற்கும் நெஞ்சங்களை நெகிழச் செய்யும் கதை.

D.Kangeyan
D.Kangeyan
2 years ago

கடுகு

D.Kangeyan
D.Kangeyan
2 years ago

அருமையான நெஞ்சை நெகிழச்செய்த கதை,கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அதுபோல் சிறுகதை என்றாலும் அதன் தாக்கம் மனதைவிட்டு நீங்க மறுக்கிறது. பசித்த வயிற்றுக்கு உணவு அளிப்பதைப் போன்ற ஒரு ஈகை வேறு எதுவாக இருக்கப் போகிறது. வாழ்த்துகள். தரமான சிறுகதை. வெற்றி பெற விழைகிறேன்

Last edited 2 years ago by D.Kangeyan
சாந்தி சந்திரசேகர் மதுரை
சாந்தி சந்திரசேகர் மதுரை
2 years ago

சிறப்பு

உஷா
உஷா
2 years ago

அருமை

கவிஞர் மழலை கோபால்
கவிஞர் மழலை கோபால்
2 years ago

மிக அருமையாக எடுத்துச் சென்றுள்ளீர்…வாழ்த்துகள்…

Ezhilarasi
Ezhilarasi
2 years ago

அருமை

முரளி
முரளி
2 years ago

அருமையான கரு
சிறந்த படைப்பு
கண்ணீரை வரவழைத்துவிட்டது
நடேசன் கதாபாத்திரம் அருமை

K.B. Santhi
K.B. Santhi
2 years ago

அனைத்து கதைகளும் அருமை ஐயா.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 18.189.22.136

Archives (முந்தைய செய்திகள்)