Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கல்லிலே கலைவண்ணம் கண்டாள் – அபிகிருஷ்ணா

01 Feb 2022 12:06 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-16
படைப்பாளர் - அபிகிருஷ்ணா, மந்தைவெளி,சென்னை

1969 இஸ்ரோ உருவான ஆண்டு, ஒரு தேசிய கட்சி இரண்டாக பிரிந்த ஆண்டு … … … … … … … இப்படி பல நிகழ்வுகளுக்கு வித்திட்ட இந்த ஆண்டில் என் மனதில் மைல்கல் ஆக பதிந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நான் ஹரிஹர சுதர்சனன் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பூசாரியாக இருக்கும் மனோகரன் சுதர்சனனின் பிள்ளை. குருகுலத்தில் மந்திரங்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் கற்றுக்கொண்டு அந்த வருடம் தான் நான் என் தோப்பனாருடன் சேர்ந்து கோவில் பூஜை செய்ய ஆரம்பித்தேன்.

முதல்நாள் என் தோப்பனாரும் கோவில் தர்மகத்தாவும் எனக்கு கோவிலின் கட்டுப்பாடுகளைப் பற்றி சொன்னார்கள். அது என்னவென்றால் மேல் ஜாதியில் இருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்குள் வர அனுமதி உண்டு, வேறு எவரும் அந்த கோவிலுக்குள் வரக்கூடாது. அதேபோல் கோவில் பிரசாதத்தையும் நடை சாத்தி வெளியே செல்லும் பொழுது தான் கீழ்ஜாதி மக்களிடம் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். 

அவர்கள் கூறியபடியே நானும் நடக்க ஆரம்பித்தேன். முதல் நாளே எனக்கு இரண்டு விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தியது. ஒன்று நான் சிறுவயதில் பார்த்த அந்த கிருஷ்ணர் இராதை விக்ரகம், அழகு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருந்தது. மற்றொன்று கோவிலுக்கு வெளியே ஒரு கல்லின் மீது நின்று நெடுநேரமாக கிருஷ்ணர் இராதை விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர்.

கோவிலில் பூஜை தொடங்கி நடை சாத்தும் வரை அந்த கல்லின் மீது நின்று சாமி விக்ரகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். கோவில் நடை சாத்தி விட்டு வெளியே வந்து மற்ற ஜாதியை சேர்ந்தவர்களுக்கு பிரசாதத்தை கொடுக்கும் பொழுது அவரை காணவில்லை. இப்படி தினமும் பூஜை நடக்கும் பொழுது அந்த வெயிலிலும் கல்லின் மேல் நின்று விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர் பூஜை முடிந்ததும் காணாமல் போய்விடுவார். இதை நான் தினமும் கவனித்தேன்.

ஒரு நாள் உடல்நலக் குறைவினால் என் தோப்பனார் கோவில் பூஜைக்கு வரவில்லை. அதனால் நான் மட்டும் அன்று கோவிலை திறந்து பூஜை செய்தேன். எப்பொழுதும் போல அந்த முதியவரும் அந்த வெயிலிலும் கல்லின் மீது ஏறி நின்று சுவாமியை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரிந்து கொள்ள நினைத்தேன்.

பூஜையை அன்று வேகமாக முடித்து விட்டு அந்த முதியவர் செல்லும் முன்பு நான் அவர் அருகே சென்றேன். அவரிடம் நான் உங்களை பல நாளாக இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கோவில் நடை சாத்தும் பொழுது நீங்கள் காணாமல் போய் விடுகிறீர்கள்! ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர், சாமி கோவில் சாத்திர வரைக்கும் சாமியை பார்த்துட்டு இருந்துட்டு அப்புறம் என் வேலைய பாக்க போயிடுவேன்.

என்னங்கய்யா சொல்றீங்க எனக்கு புரியல.

சாமி இப்ப நீங்க என் கூட நின்னு பேசுறத உங்க அப்பா இல்ல வேற யாராவது பார்த்தா பிரச்சினை ஆயிடும். இன்னும் வேற ஏதாச்சி கேட்கணும்னா சாயங்காலமா படித்துறைக்கு வாங்க சாமி என்று கூறிவிட்டு அந்தப் பெரியவர் அங்கிருந்து சென்றார்.

நானும் அந்த பெரியவர் சொன்னது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் குழப்பத்துடன் அன்றைய பூஜையை முடித்துவிட்டு அவர் சொன்னபடி படித்துறைக்கு போய் காத்திருந்தேன். அந்த முதியவரும் அங்கு வந்தார். அவரிடம் அவரைப் பற்றி தெளிவாகக் கூற சொன்னேன்.

அவர், சாமி நான் ஒரு கல்தச்சர் குடும்பத்தை சேர்ந்தவன் எங்க பாட்டத்தான் அந்த கிருஷ்ணர் ராதை சாமி சிலையை செதுக்குனது, அப்போ எங்க குடும்பத்துக்கு இந்த ஊர்ல நிறைய மரியாதை கொடுப்பாங்க சாமி, சாமிய கிட்ட பாக்குற அனுமதியும் எங்களுக்கு இருந்துச்சி ஆனா எங்க ஐயா குயவர் இனத்தைச் சேர்ந்த எங்க அம்மையே காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு சாமி, அதனால ஊர்த்தலைவர் எங்க குடும்பத்தை இந்த ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க. எங்க அப்பாவையும்  சிலை செய்யுற தொழில செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்க. குயவர்கான பானை செய்யிற தொழில தான் நாங்க செய்யணும் உத்தரவு போட்டுட்டாங்க சாமி, 

அதனால எங்க ஐயா நானு எல்லாருமே பானை செய்யும் தொழில் தான் செய்யிறோம் சாமி, நானும் எங்க ஐயா மாதிரியே காதலிச்சி வேற ஜாதி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவ பாக்குறதுக்கு எங்க குலசாமி பேச்சியம்மா, பொன்னுத்தாயி மாதிரி அவ்வளவு அழகா இருப்பா. ஆனா அழகிருக்குற இடத்துலதான் அந்த கடவுள் ஏதாச்சு குறைய வைப்பான். அந்த மாதிரி அவளுக்கு ரெண்டு கண்ணு தெரியாது.

எங்களுக்கு குழந்தை குட்டினு எதுவும் கிடையாது. அவளுக்கு நான் எனக்கு அவ. இப்படித் தான் எங்க வாழ்க்கை ஓடுது, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க  கல்யாண நாள் அன்னிக்கு அவகிட்ட அவளுக்கு  ஏதாச்சி ஆசை இருக்கான்னு கேட்டேன். அதுக்கு அவ அந்த கிருஷ்ணர் ராதா சிலையே பாக்கணும்ன்னு சொன்னா.

கண்ணு தெரிஞ்சவள இருந்தாளாவது கோயிலுக்கு வெளியே நிக்க வச்சி சாமி சிலையை காட்டி இருப்பே. ஆனா அவளுக்கு சாமி சிலையை தொட்டு பார்த்தா தான் அந்த சாமிய பார்த்தமாதிரி இருக்கும். அதுக்கு இந்த ஊரு ஜனம் ஒத்துக்காது அதனால தினமும் இங்கே வந்து சாமி சிலையை நல்லா பாத்துக்கிட்டு. வீட்டுக்குப்போய்  அத அப்படியே கல்லுல சிலை வடிப்பேன்.

இப்படியே வருஷம் போயிட்டு இருக்கு சாமி. அப்போ நீங்க  விக்கிரகத்தை வடித்து முடிச்சிட்டீங்களா!. இல்ல சாமி நான் எங்க பாட்டன் ஐயா அளவுக் கெல்லாம் சிலை செய்ய மாட்டேன். ஏதோ எனக்கு தெரிஞ்சதை வெச்சு கொஞ்சம் கொஞ்சமாக செஞ்சுகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த சிலையை செஞ்சிடுவேன் சாமி என்று சொன்னார்.

நீங்க விக்ரகத்தை வடித்ததும் நான் வந்து பார்க்கலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் தாரளமா சாமி என்றார். தினமும் செய்கையில் விக்ரகத்தை வடித்து விட்டாரா என்று நான் கேட்பேன். அவரும் இன்னும் இல்லை என்று சொல்வார்.

இப்படியே பல நாள் போனது ஒரு நாள் அந்த முதியவர் அவர் நின்று கொண்டிருந்த கல்லுக்கு மீது ஒரு கல்லை வைத்து ஏறிநின்று சாமியை பார்க்க முயற்சி செய்தார். கல் தடுக்கி அவர் கீழே விழுந்தார். அவரை ஓடிப்போய் நான் தூக்கி சென்றேன். ஆனால் என் தோப்பனார் என்னை திட்டி கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். அன்று கோவிலில் பூஜை செய்வதில் என்னால் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை.

பூஜைக்குப் பின்னர் தோப்பனாருக்கு தெரியாமல் அந்தப் பெரியவரைப் பார்க்க ஊருக்கு வெளியே சென்றேன். அந்தப் பெரியவரும் படித்துறையில் கவலையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று ஏன் கல்லுக்கு மீது கல் வைத்து நின்று இப்படி விபரீதச் செயலை செய்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் சாமி சிலைய கிட்டத்தட்ட செதுக்கு முடிச்சுட்டேன் சாமி ஆனா ராதை யோட முகத்த மட்டும் செதுக்க முடியல, இங்க இருந்து பார்த்தா கோவில்மணி ராதை ஓட முகத்தை மறைக்குது என்னால தெளிவா ராதையோட முகத்த பார்த்து செதுக்க முடியல என்று வருத்தப்பட்டார். நான் அவரிடம் நாளைக்கு நான் எப்படியாவது கோவில் மணியை கழட்டி விடுகிறேன், இராதை முகத்தை நீங்க தெளிவா பார்க்கலாம் என்று அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு ஆத்துக்கு சென்றேன்.

மறுநாள் தோப்பனாரிடம் கோவில் மணி சரியாக அடிக்கவில்லை என்று கூறி கோவில் மணியை அகற்றினேன். தூரத்திலிருந்து அந்த முதியவர் இராதை முகத்தை பார்த்தால்  இப்பொழுது தெளிவாக தெரியும். அந்தக் கல்லுக்கு அருகில் போய் நின்று ராதை முகம் தெரிகிறதா என்று நான் பார்த்தேன். தெரிகிறது! மகிழ்ச்சியோடு பூஜை செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால் அன்று அந்த முதியவர் கோவிலுக்கு வரவில்லை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆனது அந்த முதியவர் கோவிலுக்கு வரவில்லை. என்ன ஆனது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன். யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் இருக்கும் அவர் ஆத்துக்கு சென்றேன்.

அங்கு அவர் படுத்துக் கொண்டிருப்பதை கண்டேன். அவர் என்னை பார்த்ததும் பதறி எழுந்து உட்கார முயற்சித்தார். நான் அந்த முதியவரிடம் பரவாயில்லை என்று கூறி படுக்கும்படி சொன்னேன். கீழே விழுந்ததில் அவரது கால் எலும்பு உடைந்து விட்டதாகவும் அதனால் இன்னும் சில மாதங்களுக்கு அவரால் நடக்க முடியாது என்றும் சொன்னார். அதைக்கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது இராதை முகத்தை எப்படி அவர் வடிப்பார் என்று புரியாமல் குழம்பினேன். சரியாக அந்த சமயத்தில் அவரது மனைவி வீட்டிற்குள் வந்தார்கள். கணவரிடம் யார் வந்து இருப்பது என்று கேட்டார். அவரும் கோவில் பூசாரி மகன் வந்துள்ளார் என்றார்.

அவரது மனைவியும் உங்கள பத்தி என் வீட்டுக்காரர் நிறைய சொல்லி இருக்காரு என்று கூறினாள். இவர் வடிச்ச சிலையை பார்க்க வந்திருக்கீங்களா? என்று கேட்டு சிவற்றுக்கு ஓரமாக இருந்த துணி போட்டு மூடி வைத்துயிருந்த அந்த விக்கிரகத்தை திறந்தாள். நான் கோவிலில் பார்த்த விக்ரகத்துக்கும் இங்கு இவர் செதுக்கிய விக்கிரகத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் கூற முடியவில்லை.

கிருஷ்ணர் விக்ரகம் அச்சு அசல் அப்படியே இருந்தது. கிருஷ்ணரின் கண்கள், அவரது புல்லாங்குழல், அவர் கிரீடத்தின் மீது இருக்கும் ஒரு மயில் தோகை என்று அச்சுப் பிசகாமல் அப்படியே இருந்தது. அந்த வியப்புடன் பக்கத்தில் இருக்கும் இராதை சிலையின் முகம் எவ்வாறு வந்துள்ளது என்ற குழப்பத்துடன் இராதையின் காலிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி முகத்தைப் பார்த்தேன். ஆச்சரியத்தில் வியந்தேன், உருவம் அப்படியே கோவில் இருக்கும் இராதையின் உருவம்தான் ஆனால் முகம் வேறு,

அந்த முகத்தைப் பார்த்தால் உண்மையாக ஒரு பெண் நிற்பதுபோல் தோன்றியது, அவ்வளவு அழகு. அப்போது வீட்டிற்கு பின்னே மாடு கத்தும் சத்தம் கேட்டது. அவரது மனைவி மாட்டுக்குத் தண்ணி காட்டிட்டு வரேன் என்று கூறி வெளியே சென்றாள். கண் தெரியாவிட்டாலும் அவர் நடையில் எந்த தடுமாற்றமும் இல்லை. நான் அந்த முதியவரிடம் இந்த இராதையின் முகத்தை எப்படி செதுக்கினார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என் பொஞ்சாதி முகத்த தான் ராதை முகமா செதுக்கி இருக்கேன் சாமி.

இதுக்கப்புறம் எத்தனை மாசம் கழிச்சு நான் கோவிலுக்கு வந்து ராதை முகத்தைப் பார்த்துவிட்டு இங்க வந்து சிலை செதுக்குவேனு எனக்கு தெரியல அதனால என் பொஞ்சாதி முகத்தை மனசுல வச்சுக்கிட்டு ராதை முகத்த செதுக்கிட்டேன். இத என் பொஞ்சாதி தொட்டுப் பார்த்து சந்தோஷத்தில அவ முகம் ரோஜா பூ மாதிரி செவந்தத நான் பார்த்தேன்.

அந்த சந்தோஷத்த சொல்றதுக்கு வார்த்தையே இல்லை சாமி என்றார். அவரிடம் என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் உடலை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்த விக்கிரகத்தை வணங்கினேன். பின் என் ஆத்துக்கு கிளம்பினேன். வரும் வழியில் எல்லாம் அந்த விக்கிரகத்தின் தோற்றம் என் கண் முன்னே வந்து கொண்டே இருந்தது.

1969 என்றால் பல முக்கிய நிகழ்வுகள் இந்த உலகிலும், இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த முதியவரும் அவரது மனைவியும் அந்த விக்கிரகத்தின் தோற்றமும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

You already voted!
3.5 16 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
HARIHARAN.K
HARIHARAN.K
2 years ago

Super🔥🔥🔥🔥
I want to see her face in that statue
l feel like reading again #good writer

Rathika Mahadeva
Rathika Mahadeva
2 years ago

கண்களில் கண்ணீர். இது கதை அல்ல நிஜம். கறப்பனையில் நிஜத்தை த்த்ரூபமாக்கிய தம்பி அபிக்கு மனமார்த்த பாராட்டுக்கள்.

Suhramani
Suhramani
2 years ago

வாழ்த்துக்கள் தங்களது கதையை படிக்கும் போது மகிழ்ச்சியா சோகமா எதிர்பார்ப்பா தெரியாத ஏதோ ஓர் உணர்வு இழையோடியதை உணர முடிந்தது. ஜாதி குறித்த அவலத்தை யாரும் புண்படாதவாறு தொட்டுச் சென்றது அருமை. தொடர்ந்து உங்கள் படைப்புகள் வரட்டும். வாழ்த்துக்கள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 3.16.29.209

Archives (முந்தைய செய்திகள்)