Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

காதல் பூட்டு – த.செந்தில் குமரன்

27 Jan 2022 10:44 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-11
படைப்பாளர் - த.செந்தில்குமரன், கடிநெல்வயல், வேதாரணியம்

முருகன் பேருந்தை விட்டு இறங்கி நடக்கும் பொழுது பனிக்காற்று காது துளைக்கிறது. சாலையின் இருபுறமும் அடர்ந்த சவுக்கு தோப்பின் இருள், குளிர் சாலை எங்கும் ததும்பி பொழிகிறது.

கோனார் காட்டின் ஆட்டுப்பட்டியில் இருந்து வேட்டை நாய் உறுமி குறைக்கிறது. உயர்ந்து எழுந்த லாந்தர் வெளிச்சம் முகம் தேடுகிறது.

"பனி அதிகமா இருக்கு டீ குடிச்சு போறிங்களா தம்பி "

"அப்பா எங்க வீட்டிலே சாப்பிட்டு போயி இருக்காங்க தம்பி. நான் வேத்து ஆளு இல்ல"

மார்கழி பனிக்கு இதமான பனங்கட்டி டீ.

அக்காவுக்கு தெரிந்தால் கோவிப்பாள்.

ஆட்டு மொச்சை வாடையில் இவரால் மட்டும் எப்படி தூங்க முடிகிறது ?

மெல்ல ஒரு வெளிச்ச புள்ளி அவனை கடந்து போகிறது. எங்கே ஏறி கொண்டு விடுவானோ என்கிற வேகத்தில் அவனை கடக்கிறது மிதிவண்டி .

ஆற்று பாலத்தில் நடக்கையில் மிதமான சூடு தழுவி ஆற்றின் மைய பகுதியை நினைவூட்டுகிறது.

படித்துறையின் விளிம்பில் மீன்கள் முட்டி முட்டி மீள்கின்றன. கால்களை நீர் நனைத்து அமர்கையில், மீன்கள் கொத்தி கொத்தி உணவு தேடுகின்றன. அவற்றின் பசி அவைகளே அறியும்.

மிதி வண்டியை நிறுத்திவிட்டு காவேரி  வருகிறாள். அவன் அருகே அமர்கிறாள் மீன்களின் பசி அவளின் கால்களையும் பதம் பார்க்கின்றது

"உன்னை பாக்க மட்டும் வரலே. நான் தலை குளிக்கணும்" என்கிறாள்

பொழுது புலரும் முன்பே கருவேல மரங்கள் நிறைந்த ஊரின் தெற்கு பகுதிக்கு பெண்களும் சிறுவருமென விரைவார்கள். அந்த பகுதி காலையில் நிரம்பி வழியும்

காலை கடன் கழிக்க பெண் பிள்ளைகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். கூடவே சில வயதானவர்களும் துணைக்கு வருகிறார்கள்

தூரத்தில் ஆள் நடமாட்டம் அதிகரிக்க "நான் போகிறேன்" என்கிறான்

படலை திறக்க முற்படுகையில் அம்மா தலை துவட்டியவாறு வருகிறாள்

"பொழுது விடுஞ்சு வரக்கூடாது. எவ எவ என்ன சொல்லுவாளோ " என்கிறாள் அம்மா.

விடுமுறை நாட்கள் முருகனுக்கு பயனுள்ளதாக கழிய வில்லை. பனி காலம் முடியும் முன்பே புத்தாண்டு மலர்ந்து விடுகிறது.

மதியம் வந்ததாய் அக்கா ஒரு கடிதத்தை தந்து செல்லுகிறாள். அது ஏற்கனவே படிக்கப்பட்டு இருந்தது

"பிரியம் மிகு முருகன், உன் கடிதம் என் மேசை மீது பிரிக்க படாமல் கிடக்கிறது. அதுவே எனக்கு உறுத்தலை தருகிறது. உன் முத்தான வரிகளை உறவாட மனம் விருப்பினாலும், ஒரு பயம் என்னுள் கிடக்கிறது.

உன் சமீப கடிதங்கள் எனக்கு எதோ ஒன்றை சொல்லாமல் சொல்கின்றன . அது நிஜமா என்றும் எனக்கும் தெரியவில்லை. இல்லை என்று நீ சொல்லி விடுவாயோ என்றும் அஞ்சுகிறேன்.

ஆமாம் என்று விட்டால் தொண்டை குழிக்குள் இறங்காது உணவு .

உனக்கு புரிகிறதா என் நிலைமை?

நாடியம்மன் திருவிழா நம்மை உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறேன் "

அன்புடன் இனியா."

இன்று நாடியம்மன் திருவிழா. மனோவை பார்த்து வரலாம் என முருகன் நினைக்கிறான். இரண்டு மணிநேர பேருந்து பயணம். முருகனின் ஜீவன் அங்கேதான் இருக்கிறது.

பேருந்தில் திருவிழா கூட்டம் அள்ளுகிறது. மனோ வீட்டில் இருப்பானா என்று தெரியவில்லை. மாமா வீட்டில் கூட இருக்கலாம்.

மனோ வீட்டில் மனோவையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்கள். அம்மா, மனோ, இனியா, தங்கை மற்றும் தம்பி. அவன் மாமா பக்கத்துக்கு தெருவில் வசிக்கிறார். பெரிய குடும்பம். முருகனும் அந்த வீட்டில் ஒரு பிள்ளை ஆகி விட்டான்.

பேருந்து நிலையம் இறங்கி நடந்து தெரு திரும்புகையில் மாடிப்படி வளைவில் இனியா அமர்ந்திருக்கிறாள். தெருவிலே விழிகளை விட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு முறை மனோவை காண வரும் பொழுதும் இதே மாடிப்படி வளைவிலிருந்து இவனை எதிர் நோக்கி காத்திருப்பாள் இனியா . புன்னகை மாறாமல் கை அசைப்பாள்.

மழை தூவானம் இட்டபடி இருக்கிறது மணல் வாசம் ருசித்து வீடு நுழைகிறான் இவன்

நிலைப்படி குனிந்து தாழ்வாரம் கடக்கையில் மனோவின் தம்பி ஓடி வந்து கை பற்றி கொள்கிறான் அக்கா மாடியில் இருக்கா என்கிறான்

மனோவின் அம்மா வந்து எட்டி பார்த்து காபி கலக்க செல்கிறாள். திண்ணை அமர்கிறான் இவன். எதிர் திண்ணையில் பச்சை வயல் மனது படித்து முடித்து கவிழ்ந்து கிடக்கிறது.

மனோவை காலைலேருந்து காணவில்லை. தங்கைக்கு கல்லூரி விடுமுறை இல்லை என அம்மா அடுக்களையில் பேசுகிறாள். இனியா  மாடி விட்டு கீழே வரவே இல்லை.

கரும் திரவம் ததும்ப இரண்டு டம்ளர்கள் எதிரே வைத்து செல்கிறாள் அம்மா. இனியா  கொலுசொலிக்க கீழே வருகிறாள். நிலை பிடித்து எதிரே நிற்கிறாள்.

என்றுமே கொலுசு அணிவாள் இல்லை. தாவணியே பிடித்த உடை. இன்று புதிதாய் தழைய புடவை கட்டி நிற்கிறாள். நெற்றியில் எப்போதும் இடும் சந்தனம். மஞ்சள் முகம். கண்கள் தாழ்ந்திருந்தது.

கையில் இரவல் கவிதை புத்தகம் திறந்தே இருக்கிறது. ஆனந்தி உள் நுழைகிறாள். இவனை பார்த்து எப்போ வந்தே என்கிறாள். செல்லமாய் தலையில் தட்டி செல்கிறாள்.

சிநேகிதிகள் பேச துவங்குகிறார்கள்.

மனோ இன்னும் வரவே இல்லை. ஒரு மணி பஸ் பிடிக்க போக வேண்டும் என்கிறான் இவன். இனியா  அடுக்களை நோக்கி நகர்க்கிறாள்.

ஆனந்தி "என்ன முருகா சொல்லிட்டியா" என்கிறாள்.

பின்பு "அம்மா சூப்பர் வத்த கொழம்பு வச்சி இருக்காங்க. சாப்பிட்டு மூணு மணி பஸ்ஸுக்கு போ " என்று சொல்லிவிட்டு விடை பெற்று போய்விட்டாள்.

இரவல் கவிதை இப்போது இவனிடம் வருகிறது. புத்தகத்தின் கடைசி பகுதியில் வெளியாகி இருந்த இவனின் கடிதத்தின் வரிகள் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது

அம்மா பரிமாற இனியா  மற்றும் தம்பியோடு தரையில் அமர்ந்து சாப்பிடுகிறான் இவன்.

அம்மாவின் வத்தல் குழம்பு காரமும் இனிப்பும் கலந்து இருந்தது. வெல்லம் இட்டிருக்க வேண்டும். சாப்பிட்டு முடிந்து அவள் தட்டிலே கை கழுவ, இவன் பின் கட்டு நோக்கி நகர்கிறான்.

அம்மா தட்டுகளை கழுவ பின்புறம் வருகிறாள்.

"எங்களையும் கொஞ்சம் நினைச்சு பாருங்கப்பா. எனக்கு இன்னொரு பொண்ணும் இருக்குப்பா" என்கிறாள் அம்மா.

வெளியே மழை பெய்ய ஆரம்பிக்கிறது.

“மனோ இன்னமும் சாப்பிட வரல. “

தம்பியோடு அவள் தாழ்வாரம் அமர்ந்து மழை ரசிக்கிறாள். அழுக்குகளை கழுவி வீதி துடைக்கிறது மழை.

திருவிழா பார்த்து ஒன்பது மணி பஸ்க்கு போ என்கிறாள் அம்மா. மழை தணிந்து வெளிச்சம் வீதி வருகிறது.

அனைவரும் மாமா வீடு போகிறார்கள். மனோவை தேடி முருகனும் கூடவே செல்கிறான்.. அத்தை பெண்களுடன் அரட்டையில் அவள். அங்கேயும் மனோ இல்லவே இல்லை.

மெல்லிய வேதனை படர்கிறது. புகை பிடிக்க மாடி செல்கிறான் இவன். மாடி அறையில் வரிசையாய் மாட்ட பட்டிருந்த புகை படங்களை பார்த்தவாறு நிற்கிறான்.

இவன், மனோ,இனியா  மற்றும் ஆனந்தி மகிழ்ந்திருந்த ஒரு தருணம் பெரிய புகை படமாய் இருக்கிறது

முருகா கீழே வா வென ஆனந்தி அழைக்கிறாள். கூட்டமாய் தெருவில் நடந்து கூட்டத்துடன் கலக்கிறார்கள் அவர்கள் . மயிலாட்டம் ஒயிலாட்டம் அவர்களின் தெரு ஊர்வலம் துவங்குகிறது.

பெண்களின் சிரிப்பு சப்தம், அப்பாக்கள் அண்ணாக்கள் மாமாக்கள் அலம்பல், சலம்பல்கள், விசில் சப்தம் வீதி நிறைகிறது. கூட்டம் தெரு திரும்பி அவர்களின் டீ கடை அருகே நிற்கிறது.

ஆனந்தி அருகே வந்து தோள் தட்டுகிறாள். மனோ உள்ளேதான் இருக்கிறான் என்கிறாள்.

இருண்ட மூலையில் புகைத்தவாறு அவன் அமர்ந்து இருக்கிறான். மெல்லிய உருக்கும் இசை அறை முழுவதும் தவழ்ந்து கொண்டு இருந்ததது

"எல்லோருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு வாழ்விலே"
"இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு ஏற்றமுண்டு உலகிலே"
"மண் மீதிலே எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள்"
"ஒன்றல்லவே ஓர் ஆயிரத்தையும் தாண்டி நிற்கும் தேவைகள்"

ஜேசுதாஸ் உருகி கொண்டு இருந்தார்.

அவன் அருகே அமர புகைக்க வில்ஸ் ஒன்றை தருகிறான் மனோ .

வெளியே ஆராவாரம் அதிகரிக்கிறது. மயில்கள் பாய்ந்து பாய்ந்து ஆடுகின்றன. ஆட்டக்காரர்கள் மிகுந்து உக்கிரத்துடன் ஆடுகின்றனர்.

ஊர்வலம் நகர நீ போ என்கிறான் மனோ.

இருள் கவிழ்கிறது.

ஊர்வலத்தில் அம்மா அருகே இவன் நடந்து செல்கிறான்.சுற்றிலும் உறவுகள் சூழ நெகிழ்வாய் இருக்கிறான்.

மனோவின் வீட்டின் அருகே ஊர்வலம் வருகிறது. அதே மாடி படி வளைவு. முருகனும் இனியா யும் சேர்ந்து இப்பொழுது அதே வளைவை பார்க்கிறார்கள்.

பேருந்து நிலையம் கடந்துதான் நாடியம்மன் கோவில் சேரவேண்டும். நெஞ்சில் எதோ ஒரு பாரம் அழுத்துகிறது.

அம்மாவும் ஆனந்தியும் இவர்களின் பின்னே நடந்து வருகிறார்கள்.

பேருந்து நிலையம் அருகே வரும் போது இனியா  இவனை நெருங்கிக் கொள்கிறாள். மெலிதாய் இவனின் கரத்தை பற்றி கொள்கிறாள்.

என்னடி இது என்று ஆனந்தி பதட்டத்துடன் இனியா  காதில் சிடுசிடுக்கிறாள்.

மெல்ல இவன் மீது சாய்ந்தும், சாயாமலும் நடக்கும் அவளையும், அவளின் ஈரம் கசியும் விழிகளையும் விலக்கி பேருந்து நிலையம் உள் நுழைகிறான் இவன்.

You already voted!
4.3 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Viji
Viji
2 years ago

Wonderful

Muru
Muru
2 years ago

அருமை

முருகன் குன்னலூர்

Dr. S. Vaiyapurirajan
Dr. S. Vaiyapurirajan
2 years ago

The narrative method is really impressive.

madhanmohan25383@gmail.com
madhanmohan25383@gmail.com
2 years ago

சிறப்பு மிக சிறப்பு

கணேசன்
கணேசன்
2 years ago

அருமை, கதை என்னையும் அதனுடன் கூடவே பயணிக்க வைக்கறது. அத்தணையும் எதார்தம்,

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 18.219.22.169

Archives (முந்தைய செய்திகள்)