Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஆனவண்டி – இரஞ்சித்குமார்

15 Jan 2022 10:59 pmFeatured Posted by: Admin

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி
படைப்பாளர் - இரஞ்சித்குமார், பெங்களூரு

அன்று 2016, ஜனவரி 14- வியாழக்கிழமை கடும் மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை வேலை 
தேநீர் இடைவேளையின் போது  அலுவலக வெளிப்புறம் மாடிப்படிக்கட்டில் வந்து அமர்வது  வழக்கம். 
கையில்  தேநீர் கண்முன் அந்தி மாலை. அலுவலகத்தின் அருகில் முழுவதும் பச்சைபசேர் என்ற
காட்சி! சேர நாடல்லவா நான் பணிபுரிந்தது! பசுமையும், நீலக்கடலும்  ஒருசேரக் காட்சி தரும்  இடம்! எர்ணாகுளம் என்ற கொச்சி! இயற்கை ஆதிக்கம் செலுத்தும் நிலம்! தேநீர் 
இடைவேளையின் போது நண்பர்களுடன் கதையாடுவது வழக்கம் அப்போது தோழி ஒருவர்  கேட்டார் “நிங்கட நாட்டுல எந்தாடோ இ ஜல்லிகட்டுண்ட பிரசனம்” அதற்குப் பதில் கூறினாலும்  அவர்களுக்கு  உணர்வுப்பூர்வமாக  எட்டுமா என்பது எனக்கு தெரியவில்லை.  எப்படி அவருக்கு  புரிய வைப்பது ஜல்லிக்கட்டு தமிழரின் வாழ்வின் ஓர் அங்கம் என்று! 

அதை உணர்த்த நான் ஒரு பதில் கேள்வி கேட்டேன். “டோ கேரளத்தில் உள்ள அம்பலத்திலு 
ஆனைகள நிறுத்தாம் பட்டிலானு சர்கார் பரஞ்சால் நிங்களு கேக்கும்?” அதாவது கேரளத்தில்
கோவில் உற்சவங்களில் யானைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டால் 
நீங்கள் கேட்பீர்களா"? என்று கேட்டு முடிப்பதற்குள் சட்டென "அது பட்டில்லா மோனே"  அது  முடியாது என்று பதில் வந்தது! நான் சொன்னேன் அதே தான்  ஜல்லிக்கட்டில் எங்கள்
நிலைப்பாடும்

வழக்கம் போல் அன்று அலுவலகத்தில் வேலை போய்க் கொண்டிருந்தது! உள்ளத்தில் ஒரு 
குதூகலம்! சொந்த ஊரை விட்டு வெளியேறிப் பிற இடங்களில் பணிபுரிந்து விடுமுறைக்கு 
மட்டும்  ஊர் வந்து செல்வோர் மட்டுமே உணரக்கூடிய குதூகலம்! அதுமட்டுமில்லை காரணம்!

மறுநாள் வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால்
மொத்தமாக மூன்று நாள் விடுமுறை ஊரில் பொங்கலைக் கொண்டாடலாம் அல்லவா! எனவே 
ஒரு மாதத்துக்கு முன்பே ஆனவண்டியில் மதுரைக்கு டிக்கெட் போட்டுவிட்டேன்!

என்னது ஆனவண்டியா? ஆம்! ஆனவண்டி தான்! நீங்கள் என்னவோ ஆனவண்டி என்றவுடன்  யானை மேல் பயணப்படும் பெரிய சேரமன்னன் இவனோ என்று நினைத்துவிட வேண்டாம். 
ஆனவண்டி என்பது பாமரனும் பயணிக்கும் பட்டத்து இரும்பு யானை! ரயிலை இரும்பு குதிரை
என்று எப்படி முற்காலத்தில் அழைத்தார்களோ! அது போல் கேரளத்தில் இந்த சாதாரண 
பேருந்துக்கு இன்றும் செல்லப்பெயர் ஆனவண்டி அதாவது கேரள அரசின் போக்குவரத்துக் 
கழகப் பேருந்து. குளிர்சாதன வசதி, டிவி, ஸ்பீக்கர் இப்படி எந்த ஒரு தொந்தரவும் இல்லாத 
சாதாரண பேருந்து தான் அது! ஆனால் உருவம் பார்ப்பதற்கோ சிவப்பு நிறம் பூசப்பட்ட யானை.

யானைமேல் அமர்ந்து பயணிக்க ஒரு மெத்தை இருக்குமே! அது தான் இந்த ஆனவண்டியின் 
பயணியர் இருக்கை. இதில் அமர்ந்து பயணிக்கும் போது யானை மேல் அமர்ந்தால் உயரத்தில் 
இருந்து எந்த காட்சியைக் காண முடியுமோ அதே போன்ற காட்சிகளை இந்த பேருந்தின் ஜன்னல்கள் 
வழி காணலாம். ஏனெனில் இந்த ஆனவண்டியின் பெரிய ஜன்னல்களில் கண்ணாடிகளே இருக்காது. 

பொதுவாக மதம் கொண்ட யானை தான் சீற்றத்தோடு இருக்கும் ஆனால் இந்த ஆனவண்டி 
எப்போதும் சீற்றத்துடன்தான் இருக்கும் ஏனென்றால், பாகன் அப்படி! வேற யாரும் இல்லேங்க  நம்ம ஓட்டுநர் தான். பெரும்பாலும் கேரளம் மலை சார்ந்த பகுதி என்பதால் அங்கு ஓட்டி பழகிய 
ஓட்டுனர்களுக்கு நேரான சாலையில்பேருந்து ஒட்டுவது என்பது எளிது! எனினும் மலைச் சாலையில் அவர்கள் காட்டும் சாகசம் இருக்கே ஆஹா!!! சர்க்கஸ் வித்தையை மிஞ்சிவிடும்! 

அந்த ஆனவண்டி பயணம். மாலை 7.45 மணிக்கு பேருந்து புறப்படும் காலை 5.30 மணிக்கு  மதுரை வந்தடையும்.அப்படிப்பட்ட ஆனவண்டி பயண நினைவிலேயே வியாழன் ஓடியது! 
ஆனால் என் நேரமோ என்னவோ அலுவலகத்தில் பணி முடிந்த பாடில்லை. மணியோ 7 
ஆகிவிட்டது. அந்த நொடியில் அலைபேசியில் வந்த குறுந்தகவல் “பேருந்து சரியான நேரத்தில் 
7:45 மணிக்குப் புறப்படும் நடத்துனர் பெயர் அனந்தன் என்று! படித்தவுடன் சட்டென்று எனக்கு 
சிந்தையில் தோன்றியதோ “அனந்தனும்! ஆனவண்டியும்!” படபடவென்று அலுவலகத்தில் பணியை 
முடித்து அங்கிருந்து கிளம்பினேன். “அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!” 
என்று கூறிய கையோடு என் பயணத்திற்கான பையை தூக்கி விரைந்தேன் யானை தொழுவம் நோக்கி! 
அதாவது ஆனவண்டி நிற்கும் பேருந்து நிலையம் நோக்கி! எப்படியும் பேருந்து நிறுத்தம் செல்ல  இருபது நிமிடத்திற்குக் குறையாமல் எடுக்கும். 

மனதில் ஒரு பதற்றம்! “பேருந்தைப் பிடித்து விடுவோமா” என்று! எப்பொழுதும் என் பயணம் 
அப்படிதான் இருந்திருக்கிறது இது வரை. இதற்கு முன் சென்னையில் ரயில் புறப்படும் 
நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னரே சென்று கண் முன்னே எனக்காகக் காத்திருந்த ரயிலைத் 
தவறவிட்டு நான் முட்டாளாகிய கதை வேறு கண்முன்னே வந்து சென்றது. ஒரு வழியாக 
7:45 க்கு சரியான நேரத்தில் வந்து ஆனவண்டியில் அமர்ந்தவுடன் தான் உள்ளம் பெருமூச்சுவிட்டது சிந்தையில் பொங்கலோ பொங்கல் என்றது!

ஓரிரு நிமிடத்தில் அனந்தன் வந்தார். அவர் தான் பேருந்து நடத்துனர். நல்ல திடகாத்திரமான 
உடல், வழுக்கைத் தலை. மாநிறம், ஒரு பெரிய கண்ணாடி! நம் ஊரில் நக்கலாக சோடாபுட்டி 
என்பார்களே! அது போன்ற கண்ணாடி அணிந்தவர்.

பஸ்சில் ஏறியவுடன் “சீட் ரிசர்வ் செய்த ஆளுக்கார் மாத்திரம் இருக்கி மட்டவரு தாழ வெயிட் எய்யு” 
என்றார். அதாவது முன்பதிவு செய்தவர்கள் அமருங்கள் மற்றவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி 
கீழே காத்திருங்கள் எனக் கூறினார். 

முணுமுணுத்துக்கொண்டே சிலர் கீழே இறங்கினார்கள் அதில் ஒருவன் “எல்லாரும் ரிசர்வ் பண்ணுனா  நாங்க எப்படி ஊர் போறது” என்றது காதில் விழுந்தது. அனந்தன் முன்பதிவு செய்த 
சீட்டுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். என் அருகில்  வந்து ஐகோர்ட் மகாராஜா என்றார்!  “என்னடா இது ஐகோர்ட் மகாராஜாவா?” நான் திருதிருவென முழித்தேன். என் அருகில் 
அமர்ந்தவர் அடையாள அட்டை எடுத்து நீட்டினார். பிறகு தான் விளங்கியது அது அவர் பெயர் 
என்று! அதுவரை எங்கும் கேட்டிராத பெயர்! “ஐகோர்ட் மகாராஜா” பெயரிலேயே என்ன கம்பீரம். ஆனால் ஆள் என்னவோ சிறிய உருவமாகத்தான்  இருந்தார்.

டிக்கெட் ஆய்வு முடிந்தது “கேரிக்கோ! கேரிக்கோ! கேரிக்கோ!” எனக் கீழே நின்றிருந்தவர்களைப் 
பேருந்தில் ஏறிக்கொள்ள சொன்னார். நாணிலிருந்து புறப்பட்ட அம்பு போல, மதயானைக்கூட்டம் 
வருவது போன்று சடசடவென கூட்டம் கட்டியேறியது. அதில் ஒரு பெரியவர் “ஏய் ரசக்கிளி மவனே 
பொறுத்து போப்பா என்ன அவசரம்” என்றார் அவர் பெயர் தலையாரி அப்படிதான் அவரை அங்கே 
அழைத்தனர், பதிலுக்கு “அப்பறோம் எனக்கு இடம் கிடைக்காதப்பு ஊரு வர நின்னு வரணும் என்றார்”

அப்படி அடித்துப் பிடித்து ஏறியவர்களில் ஆண், பெண், குழந்தைகள் முதியவர்கள், அனைவரும் 
அடக்கம். ஒன்று புரிந்தது அவர்கள் அப்படி அடித்து புடித்து எறியும் அவர்களுக்கு இருக்கையில் 
இடமில்லை! அனைவரும் பேருந்தின் நடுவில் நடைபாதையில் அமர்ந்து வரவேண்டும் அதற்கே 
இடம் கிடைக்க அவ்வளவு அக்கப்போர். அவர்கள் எர்ணாகுளத்தில் தினக்கூலி மீன்வியாபாரம் 
முறுக்கு வியாபாரம் போன்ற சிறுகுறு தொழில் செய்பவர்கள் என அனைவரும் இருந்தனர்.

இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் பெருவாரியான சீட்டை முன்பதிவு செய்து விடுவதால் அவர்களுக்கு  வேறு வழி  இல்லை! ஆனால்  அனந்தனுக்கு  அதில் பயணம் செய்யும் சிலரை நன்கு தெரிந்திருக்கிறது! அவர்கள் அடிக்கடி பயணிக்கும் 
பயணிகள் என்பதால், அனந்தனிடம் “என்னப்பா ஏதாச்சும் சீட் காலியா இருக்கா” என்று 
அன்புகலந்த உரிமையுடன் தலையாரி என்ற அந்த பெரியவர் கேட்க “கோட்டயம் வரட்டே” 
என்றுஅனந்தன் சொன்னார். 

என் பின் இருக்கையில் அமர்ந்த ஒரு முஸ்லீம்பாய் அமைதியாக அலைபேசியில்  சொன்னது
காதில் விழுந்தது  “நாளைக்கு பள்ளிவாசல்ல  பொங்கல்  வைக்கணும்ப்பா அதற்கான  ஏற்பாட 
செஞ்சுருங்க”  என்று!  அன்று வரை நான் பொங்கல்  என்பது இந்துக்களின்  பண்டிகை என்று 
கருதி இருந்தேன்!  அன்று உணர்ந்தேன்  பொங்கல் என்பது தமிழ் பேசும்  ஒவ்வொருவரின் 
பண்டிகை  என்பதை! 

மணி எட்டு ஆயிருச்சே இன்னும் ஏன் வண்டி எடுக்கல என்று நினைத்துக்கொண்டிருந்த நிமிடம்
“டம்” என்ற ஒரு சத்தம்! ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தினார்.

டிங்! டிங்! டிங்! டிங்! டிங்! டிங்! டிங்! டிங்கென மற்றோரு சத்தம் என்னவென்று பார்த்தபோது 
அனந்தன் பின்னல் இருந்து ஒரு கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார் என்னடா இது வித்தை 
என்று அந்த கயிற்றைத் தொடர்ந்து பார்த்தேன் அது முன்னால் ஓட்டுநர் அருகில் இடதுபுறம் 
இருந்த மணியை இயங்கிக் கொண்டிருந்தது. நம் ஊரில் ஓட்டுனருக்கு விசில் அடித்து சமிக்கை 
கொடுப்பார்கள்  அங்கோ மணி போன்ற  அமைப்பு  பொருத்தப்பட்டிருந்தது.

பின்னர் தான்  யோசித்தேன் “ஆனவண்டியல்லவா இது! யானை வரும் பின்னே! 
மணி யோசை வரும்  முன்னே!” என்று நானே நினைத்துக் கொண்டேன்.” 

ஒரு வழியாகப் பயணம் தொடங்கியது! எர்ணாகுளம், கோட்டயம், காஞ்சிரப்பப்பள்ளி, 
முண்டக்காயம், குட்டிக்கண்ணம், வண்டிப்பெரியார், குமுளி, தேனி, உசிலம்பட்டி, மதுரை 
-இது பேருந்தின் வழித்தடம். பயணம்  தொடங்கி  ஒரு இருபது நிமிடத்தில் அனந்தன் 
"லைட்  ஆஃப் செய்யோ" என்று ஓட்டுனரிடம் சொன்னார் பட்டென்று ஒரு காரிருள். 
பேருந்தில் விளக்கு  அணைக்கப்பட்டது!  ஒரு மணிநேரம் சென்றிருக்கும்.  அடுத்த ஊரான  கோட்டயம் நகருக்குள் ஆனவண்டி சென்றது. ஓட்டுநர் விளக்கை ஆன் செய்தார்.

கோட்டயம்  பேருந்து  நிலையத்தில்  ஒருவர் ஏறினார் ஆனால்  பேருந்தில்  நிற்கக் கூட 
இடம் இல்லை இவர் எப்படி வருவார் என்று  யோசித்தேன். அவர்  பையை  தூக்கிக்கொண்டு  கடும் நெரிசலுக்குள்  ஊர்ந்து வந்தார்.  நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த  தலையாரி “ஏம்ப்பா இப்படி போட்டு உரசிகிட்டுபோற ”  என்றவுடன்  “சீட் ரிசர்வ் 
பண்ணிருக்கேன்யா போய் உக்கார வேணாமா” என்றார்! கடைசியில் பார்த்தால் பேருந்து 
புறப்படும் போது தலையாரியிடம் திட்டு வாங்கிய அதே ஆள் அமர்ந்திருந்த சீட்டு 
இப்போது ஏறிய ஆளுடையது. அனந்தன் அவருக்குச் சீட்டை மாற்றிக்கொடுத்தார். 

இதைப் பார்த்த தலையாரி  “ஏன்டா ரசக்கிளி மவனே இதுக்கு தான்  என்ன  முந்திகிட்டு   
இடுச்சி ஏறுனியா!  ஒழுங்கா  என் பின்னாடி வந்திருந்தா கீழயாச்சும்  உம்பாட்டுல  உக்காந்த்து கந்திருப்ப! இப்ப நின்னுகே வா ஊரு வர!” என்று நைய்யாண்டி அடித்தார். அதற்கு அவன் 
“தலையாரி ஒழுங்கா உக்காந்து வா அடுத்தவன் விஷயத்துல எப்பப்பாத்தாலும் தலையை 
குடுக்காத”  என்று ஒரு  சிறு அதட்டல் போட்டான். இருவரும் ஒரு ஊர்க்காரர்கள் போலும்.

பின்னர் தான் தெரிந்தது அடுத்தவர் சங்கதியில் எப்பொழுதும் தலையை நுழைப்பதால் தான் 
அந்த பெரியவர் பட்டப் பெயர் தலையாரி என்று! மீண்டும் பேருந்து புறப்பட்டு  ஐந்து நிமிடம்தான்  ஆனது “ஐயோ என் காச காணோம்! என்னங்க வச்சிருந்த காச காணோம்ங்க!” என்று அருகில் 
இருந்த கணவனிடம் சொல்கிறார் அவர் “ஏய் ஒழுங்கா பையில தேடு என்கிறார்!”

“இல்லங்க கட்டப்பபைலதான் வச்சிருந்தேன் இப்போ இல்ல” என்று சொல்ல ஒரு பதற்றம் 
நிலவுகிறது அனந்தன் ஓட்டுனரிடம் “ஏடோ வண்டி ஸ்டேஷன்லெக்கி விடு!” என்ற காந்த குரலில் 
சொல்கிறார். ஓட்டுநர் காவல் நிலையம் நோக்கி வண்டியை கொண்டு சென்றார்! வழக்கம் போல் நம் 
தலையாரி தலையிடத் துவங்கினார்! பேருந்தில் பதற்றம் அதிகரித்தது!

“எம்மா பையில நல்ல பாத்துக்கம்மா ம்மோவ்!” என சொல்ல மீண்டும் அந்த பெண் மீண்டும் 
நன்றாகச் சோதனை செய்கிறார். மீண்டும் தலையாரி “எலேய் எவனாச்சும் எடுத்து 
தொலைஞ்சிருந்தா குடுத்துருங்கடா! வெட்டியா அம்புட்டு பயலும் போய் ஸ்டேஷன்ல 
நிக்கனும்டா டேய்!” என்று இருந்த இடத்தில இருந்தே கணீர்! கணீர்! என குரல் கொடுத்தார்!

அந்த பெண்ணும் “எப்பா உழைச்ச காசுப்ப கஷ்டப்பட்டு யாவாரம் பாத்து சேத்துவச்சது 
எடுத்திருந்தா குடுத்துருங்கப்பா” என்று கண்ணீருடன் கூச்சலிட்டார். சிலர் “எவனாச்சும் 
எடுத்தாலும் கீழ போட்டுருங்கடா” என சொல்லிக்கொண்டிருந்தபோது ஆனவண்டி 
காவல்நிலையம் வந்தடைந்ததுஇது மொத்தமும் நிகழ்ந்தது பதினைந்து நிமிடத்தில்! 

அனந்தன் “டோர் துறக்கு” என்று சொல்ல கதவை பொத்தானை அழுத்தி திறந்தார் ஓட்டுநர். 
வண்டி ஆனவண்டியாயிருந்தாலும் கொஞ்சம் டெக்னாலஜியும் இருக்குல்ல! அனந்தன் 
இறங்கியவுடன் “கதவு அடக்கி” எனக் கூற கதவை மூடினார் ஒட்டுநர் யாரும் இறங்கிச் 
சென்றுவிடக்கூடாது என்பதால்!

“காசு எவ்வளவும்மா” என்று தலையாரி கேட்க “இருபத்தையாயிரம் ரூவா” என்றார் அந்த பெண். 
அப்போதும் ஒருவன் “எம்மா நல்ல காலுக்கு கீழ, சீட்டுக்கு கீழல்லாம் பாரும்மா” என்றான் யார் 
என்று தெரியவில்லை! பயணம் துவங்கும் போது இருந்த குதூகலம் இப்போது எனக்கு 
ரணகளம் ஆனது பொங்கலுக்கே பொங்கலா! என்று மனம் புலம்பிக்கொண்டிருந்தது! 

எனினும் பாவம் உழைத்த பணத்தைத் தொலைத்த வலியின் ஒலி காதுகளில்! மனம் சற்று 
சோர்ந்தது! “காசு இங்க கீழ இருக்கு சீட்டுக்கடில கிடக்கு!” என்று அந்த பெண் சொல்ல அதே 
சமயம் அனந்தன் காவலரை அழைத்து வந்தார். எனக்கு இடையில் ஒருவன் கத்தினான் 
“சீட்டுக்கடில நல்லா பாரும்மா” என்று அவன் மீது சந்தேகம். எனனென்றால் முன்னர் அதே 
இடத்தில் காசு இல்லை என்று அந்தப்பெண் சொன்னார் பின்னர் அனைவரும் கூச்சலிட்டவுடன் 
காவலரை அழைக்க அனந்தன் சென்றவுடன் எப்படி அதே சீட்டுக்கு அடியில் காசு வந்தது என்று 
தெரியவில்லை! 

தலையாரி அந்த பெண்ணிடம் “எம்மா காசுப்பணத்த சூதானமா வைக்க வேணாமா! இப்ப பாரு 
தேவையில்லாத வேல, வெட்டி அலச்சல் அம்புட்டு பயலுக்கும்” என்று கடிந்து கொண்டார். 
பின்னர் எனக்குத் தெரிந்து ஊர் சென்று சேரும்வரை அந்த பெண்ணும் அவரது கணவரும் 
உறங்கியிருக்க வாய்ப்பில்லை. 

வண்டி கிளம்பியது! முண்டகாயம் கடந்து குட்டிக்கண்ணம் அடைந்தது அங்குக் காட்டில் ஒரு
இடத்தில் ஆனவண்டி நின்றது அனந்தன் “ஒரு பத்து மினிட்டு வண்டி நிக்கும் மூத்திரம்
போனுங்கி பொக்கோ” என்று கூற அனைவரும் அப்பாடா என்று இளைப்பாறினர்!
மேலும் வண்டி நிறுத்தியிருந்த அந்த இடமே பனிமூட்டத்தோடு சேர்த்து புகைமூட்டமும் ஆனது!
எல்லாரும் புகைக்கத் தொடங்கினர் ஓட்டுனரும் ஒரு புகை போட்டுக்கொண்டார்!

நான் இறங்கி சற்று நின்றுகொண்டிருந்தேன் காட்டுவழி பயணம் முற்றிலும் அபாய வளைவுகள்
பேருந்தில் உறங்க முடியாத ஒரு வழித்தடம் அது! அப்போது தலையாரி அவர் ஊர்க்காரரோடு
மரத்தின் பின்னால் ஒதுங்கியதைப் பார்த்தேன்! அவர்கள் பேருந்தில் சற்று முட்டிக் கொண்டனர்
அல்லவா! பின்னர் பார்த்தால் அங்கே இருவரும் அவர்களிடம் இருந்த மீதி மதுவை மண்டிக் கொண்டிருந்தார்கள்! “இதுதான் குளிர்காய்வது போலும்!” என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்!

பஸ்சில் ஏறிய தலையாரி அனந்தனுக்கு இருநூறு ருபாய் கொடுத்தார் “எப்பா இந்தாப்பா

பொங்கலுக்கு வச்சுக்கோ” என்று அனந்தன் அதை வாங்க மறுத்தார் அதுமட்டுமில்லை
“டோ ஏன்ட சர்விஸிலு இது வர யாரிடத்தும் பைசா மேடிச்சிட்டில்லா” என்று ஒரு அதட்டல்
இட்டதால் ரூபாயை பையில் வைத்த தலையாரி ஒருவழியாக உறங்கினார்! ஆனவண்டி
ஒருவழியாக குமுளியை அடைந்தது!

எனக்கு மீண்டும் ஒரு பெருமூச்சு! ஒரு வழியாகத் தமிழக எல்லையை அடையப்போகிறோம் என்று.
குமுளி ஒரு விழாக்கோலம் போலத் தான் எப்பொழுதும் இருக்கும். அந்த மாநில எல்லை சோதனை சாவடி, சுற்றுலாப் பயணிகளைக் கவர பளிச் என்று ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கடைகள்! பார்க்கும் போதே மனதில் ஒரு புத்துணர்வு! நம் ஊர் எல்லை வேற வரப்போகுது சொல்லவா வேணும்.

பின்னர் மூன்று கொண்டை ஊசி வளைவு, ஐந்து மாவட்ட தாகம் தீர்த்த பென்னிகுக்கின் மணிமண்டபம்
கடந்து கம்பம் அடைந்தது ஆனவண்டி. மணியைப் பார்த்தேன் அதிகாலை 2:15. பின்னர் கண் அசைந்து எழுந்தால் உசிலம்பட்டி! தலையாரி துவங்கினார் ”எப்பா வந்தாச்சுப்பா! எலேய் ரசக்கிளி மவனே! டேய்!
ஊரு வந்து சேந்தாச்சுடா! ஜல்லிக்கட்டு வேற நடுக்குமான்னு தெரியல!” என்று கூற அங்கே
உசிலம்பட்டி நகரின் சாலை ஓரத்தில் ஒரு டீக்கடையில் ஆனவண்டி நின்றது.

நேரம் சரியாக அதிகாலை 3:30 கடையில் பாய்லர் கொதித்துக்கொண்டிருந்தது. அதிரசம், முறுக்கு
இதெல்லாம் விட அந்த கடையில் கேசரி சுட! சுட! ஒரு தட்டில் இருந்தது. அனந்தன் அந்த கடைமுன்
சென்றதும் கடைக்காரர் ஒரு சிறு துண்டு கேசரியைச் செவ்வகமாக வெட்டி வாழை இலையில் அழகாய் வைத்துக் கொடுத்தார். புரிந்தது அனந்தன் அங்கு வாடிக்கையாளர்!

நான் அந்த நேரத்தில் சுவைத்த கேசரியும், டீயும் மறக்க முடியாத பண்டம். அனந்தன் ஐந்து நிமிடத்தில்
முடித்து விட்டு பஸ்சில் ஏறினார்! பயணிகளும் பின்னால் வேகமாக ஏறினோம்! தலையாரியும் டீக்கடையிலிருந்து அனந்தனிடம் “ஏப்பா திங்கக்கிழம பாப்போம்ப்பா!” என்று அனந்தனிடம்
சொல்லிவிட்டுக் கிளம்பினார். அதன் பின் ஆனவண்டி உசிலம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்தது பேருந்தில் இருந்த பெருவாரியானவர்கள் இறங்கினர் கிட்டத்தட்ட ஆனவண்டி நிசப்தம் ஆனது!

மதுரையின் எல்லையை அடைந்தோம்! நான் இறங்க வேண்டிய இடம் வந்தது! நடத்துனர் அனந்தன் அவர்களிடம் போய் நான் இங்கே இறங்க வேண்டும் என்றேன்! ஒரு கணம் யோசிக்காது டிங்! டிங்!
டிங்! டிங்! டிங்! மணியை இசைத்தார்! ஓட்டுநர் சட்டென்று ஆனவண்டியை நிறுத்தினார்! அந்த இடம்
பேருந்து நிறுத்தம் கூட இல்லை. அந்த இடம் என் வீட்டில் இருந்து மிக அருகில் நடந்து செல்லும்
தூரம் தான். பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன்! மீண்டும் டிங்! டிங்! டிங்! டிங்! டிங்! ஆனவண்டி
என் கண் முன்னே சட்டென மறைந்தது!

வீட்டை அடைந்தேன்! பொங்கலோ பொங்கல்! என வாசலில் வரைந்த வண்ணக்கோலம் வருக! வருக!
என வரவேற்றது! பொங்கல் போன பின் வாசலில் இட்ட கோலம் மறைந்தது! ஆனால் ஆனவண்டி
பயணத்தில் என்னோடு பயணித்த அனந்தன் ஏட்டனும், தலையாரியும், ரசகிளி மகனும், கூக்குரலிட்ட பெண்ணும் கதை மாந்தர்களாக என் நெஞ்சில் நிற்கின்றனர் ஆண்டுகளாகியும்! விமானத்தில்
பயணித்துள்ளேன்! ரயிலில் பயணித்துள்ளேன்! ஆனால் இந்த ஆனவண்டி பயணம் மிக மிக இனிது!
அது நினைவில் உள்ளது! 

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

You already voted!
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Samuel
Samuel
2 years ago

Nice story. Super da. Good.keep it up my Dr nanba

Sanjeev
Sanjeev
2 years ago

👍🏻🔥🔥🔥

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092531
Users Today : 5
Total Users : 92531
Views Today : 7
Total views : 410194
Who's Online : 0
Your IP Address : 18.217.182.45

Archives (முந்தைய செய்திகள்)