Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பசி!!! – எஸ்.ராம்கபிலன்

15 Jan 2022 1:44 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி
படைப்பாளர் - எஸ்.ராம்கபிலன், தேவக்கோட்டை

அந்த ஆலமரத்தின் உடல் மட்டுமல்ல  மனமும் மிகப்பெரியதுதான்...

தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருவோர்க்கு இல்லை என்று கூறாமல், தன்னிடம் உள்ள இலைகளின் நிழல் கூட ஒரு எறும்புக்கு ஓய்வெடுக்க  உதவும் என்று நினைக்கும் இரக்கக் குணம் கொண்ட மரங்கள் இன்னும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தன் மீது உள்ள கிளைகளைப் பறவைகளுக்கும், மரப்பட்டைகளை எறும்புகளுக்கும், சின்னஞ்சிறு  பொந்துகளைக்  கிளிகளுக்கும், ஆங்காங்கே உள்ள விரிசல்களை மரப்பல்லிகளுக்கும் வாழ இடம் கொடுத்துப் படர்ந்திருக்கும் அதே ஆலமரம் தான், கீழே கோணிச்சாக்கில்  தோல்கள் சுருங்கி, நெஞ்செலும்புகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த  மூக்குப் பொடி தாத்தாவுக்கும் உயிர் கொடுத்துவந்தது...

சட்டை அணியாமல், சாயம் வெளுத்துப் போன அழுக்கு படிந்த வேஷ்டியை ஒழுங்காக இடுப்பில் சொருகாமல், பழைய அலுமினிய தட்டை வைத்துக் கையேந்திக் கொண்டிருந்தார் அவர்..

சாலையில் பலரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த போதும்,

அவருடைய தட்டு மட்டும் அசையாமல் அண்ணாந்தபடிஅப்படியே இருந்தது.. அருகில்  நடைமேடை அமையப்போவதால், "இந்தப் பக்கம் மக்கள் நடப்பதற்குத் தடை" என்ற எச்சரிக்கை பலகை வைத்துக்கொண்டு, காவலர் ஒருவர் வாகனங்களைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தார்..

இதை அனைத்தையும் எதிரே உள்ள பேருந்து நிழற்குடையில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்...

பேருந்து எப்போது வருமென்று குழப்பத்தில் வலதுபுறம் பார்த்து விட்டுத் திரும்பும் போதெல்லாம் என்னை அறியாமல் தாத்தாவை நோக்கி  கண் போகும்....

அவரை பார்க்கும் போதெல்லாம்  என்னுடைய தாத்தா ஞாபகம் நினைவில் வந்து மறைந்தது...

இவருக்கு பசிக்குமா? ஏன் இப்படி இங்கே வந்து உட்கார்ந்திருக்காரு?

சிறு வயதில் எப்படியெல்லாம் இருந்திருப்பாரோ? என்று அவருடைய வரலாற்றை நோக்கி சிறிது நேரம் எனது சிந்தனை போகும்..

என்னதான், மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாலும் கிளைகளுக்கு நடுவே  பாயும்  சூரிய ஒளி மெல்ல மெல்ல அவரின் உடலில் படர்ந்தது.

முணு முணுத்தபடியே  சுற்றித்திரியும் சின்னஞ்சிறு கொசுக்களை விரட்டியும், வயிற்றைச் சொரிந்து கொண்டும், மழைப் பாம்பு போல நெளிந்து கொண்டிருந்தார் அவர். தட்டில் பணமில்லை என்று கவலைப்படுகிறாரோ... என்னவோ... ‌என் கையில் டிக்கெட் காசு போக ஐந்து ரூபாய் மீதமிருந்தது,

மெயின் ரோட்டுக்கும், ஆலமரத்துக்கும் நடுவே சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அக்கரைக்குச் செல்ல, ஒரு ஆள் மட்டும் நடந்து செல்லும்அளவுக்கான மெல்லிய மரப்பலகை அந்த மரத்தின் அடிவாரத்தையும் மெயின்  ரோட்டையும் இணைத்தது..

கயிற்றில் நடந்து வித்தை காட்டுபவன் போல மெல்லமாக அந்த மரப்பலகையில் கால் வைத்து நடந்து சென்றேன்.கீழே கறுப்பான காட்டாறு(சாக்கடை) ஓடியதைப் பார்க்கும் போதெல்லாம் என் கால்களில் ஏற்படும்  கூச்சம் உடலில் சிலிர்த்தது...

மெதுவாக அந்த மரத்தின் நிழலுக்குள் நுழைந்தேன்.. அங்கே காலியாக இருந்தது அவரது தட்டு மட்டுமல்ல, அவருடைய சுருங்கிய வயிறும் தான்..

வறண்ட நிலம் போல இருக்கும் அந்த  உதடுகள் நீரை நோக்கி அண்ணாந்த படியே இருந்தது..

பாட்டிக்கு மெல்லுவதற்கு ஏதுவா இருக்குமென்று வாங்கிச் சென்ற பொரியுருண்டை பையிலிருந்தது. அதனை அவரிடம் நீட்டினேன்... வாங்காமல் அமைதியாக இருந்தார்.

அருகே உள்ள குச்சியைப் பார்த்த பிறகு தான், அவருக்கு  கண் தெரியாது என்ற விஷயமே  எனக்கு புரிந்தது...

பொரியுருண்டையை தட்டில்  வைத்து, அதனை அவரின் தொடையில் வைத்தேன். அதனை தடவிப் பார்த்துவிட்டு வாய் குளற ஏதோ பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கம்பை தரையில் இரண்டு அடி அடித்துவிட்டு ஓடியா... ஓடியா... க்கீச்... க்கீச்.. என்று கத்தியதும், இவரைப் போல மெலிந்து இருந்த குட்டிப் பூனையும், அதன்  தாயும் என்னைப் பார்த்து  பயந்தபடியே மெதுவாகத்  தட்டுக்கு வந்தது.

கோணிச்சாக்கிற்கு உள்ளே சொக்கண் மூக்குப்பொடி பொட்டலம் ரப்பர் பேண்டில் சுற்றி இருந்தது. மூவரும் வேகவேகமாக உருண்டையை ருசித்தனர்.

மனசு கேட்காமல் பையில் மீதமிருந்த இரண்டு உருண்டையையும் தட்டில் வைத்தேன்.
பல் இல்லாத தாத்தாவுக்கு தீடிரென பல் முளைத்தது போல,  உதட்டிற்கு வெளியே ஒட்டிக் கொண்டிருந்தது அந்தப் பொரி.

பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதினாலோ என்னவோ அவருடைய கால்கள் வீங்கி இருந்தது.
பசி வந்தால் பத்தும் பரந்து போகும் என்பதை அன்றே நேரில் பார்த்து உணர்ந்தேன்.

கூடவே பசியிலிருந்த ஈக்களும் தாத்தா சாப்பிட்ட பொரியுருண்டையின் இனிப்புக்காக அவரின்கை, கால்களில் மொய்த்துக் கொண்டிருந்தது. 

ரொம்ப நேரம் என்னால் அந்த குமட்டும், கவிச்சி நாற்றத்தின் நடுவே நிற்கமுடியவில்லை.

பேசத் தெரியாத ஊமையாகநின்று விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

பலகையில் ஏறி ரோட்டை கடந்து வந்து, மீண்டும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்... புன்னகையுடன் பூனையோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்அவர்.

என்னவாக இருக்கும்? என்று மீண்டும் ஒரு கேள்வி என்னிடம் தொற்றிக் கொண்டது.. அருகில் இருந்த பூக்கடையில் தாத்தாவைப் பற்றி விசாரித்தேன். 

அவர் எனக்கு எதுவும் தெரியாது, அந்த செருப்பு தைப்பவரிடம் கேளுங்கள் என்றதும். பஸ் ஸ்டாபிற்கு கீழே உட்கார்ந்துசெருப்பு தைப்பவரிடம் சென்றேன். 

அருகில் போனதும் என்னுடையசெருப்பையே ரொம்ப நேரம் குனிந்துபார்த்துவிட்டு சில நொடிகள் கழித்தே மெதுவாக நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தார். 

ஐயா, அங்கே ஆலமரத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கும் அந்தத் தாத்தாவைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?  ஏன் தம்பி கேட்குறீங்கஎன்றுஆச்சரியத்தோடு கேட்டார் அவர்.? 

சும்மா தான் ஐயா. அவரைப் பார்த்ததும் இறந்து போன என்னோட தாத்தா ஞாபகம் வந்தது அதான் கேட்கிறேன். 

பின் அவருடைய வரலாற்றை செருப்பு தைப்பவர் கூறினார்.

அவர் என்னைவிட ஆறு வயது மூத்தவர் தம்பி. சின்ன வயசுல அவருக்கு நல்லா கண்ணு தெரிஞ்சுது. அவர் வீடு நம்ம இரயில் தண்டவாள பாலத்திற்கு அடியில்தான்.. 

சரியா 1983- வருஷம், அந்த கூவத்துப் பகுதிகள்முழுவதும் ஏதோ விஷக் காய்ச்சல் பரவியது. 

இவர் குப்பைமேட்டில் பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கும் போது ஏதோ ஊசி கையில் ஏரி. கொஞ்ச நாளில இவருக்கும் அந்த விஷ காய்ச்சல் தாக்கிடுச்சு.

 மருந்து, மாத்திரையும் ஒழுங்கா சாப்பிடாமல் அந்தக்காய்ச்சல் அவருடையகண்ணையும், காதையும் பாதுச்சுருச்சு. 

பிறந்ததில் இருந்து கண்ணு தெரியலைனா பரவாயில்லை, ஆனால் கொஞ்ச நாட்களுக்கு கண் தெரிஞ்சுட்டு அப்புறம் கண் தெரியலைனு ஆனதும், அந்த வேதனை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்து,   ரயில் அடிச்சு  அவருடைய வலதுகால் காணாமப் போய்டுச்சு. 

என்ன பன்றது எல்லாம் விதி தம்பி. பேசிக் கொண்டிருக்கும் போது பஸ் வந்ததும் ஏறி ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து, பஸ் அங்கிருந்து நகரும் வரை அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் மனம் ஏதோ இருக்கமாகவே இருந்தது.. வீட்டிற்கு வந்ததும்  நாற்காலியில் உட்கார்ந்து ஏழு மணி செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன்..

இரண்டு நாட்களுக்குக் கனமழை என்று கடைசியில் வானிலை அறிக்கையில் கூறியதும், தாத்தா  இந்த மழைக்கு என்ன பண்ணுவாரு? என்று மீண்டும் அவரின்  நினைவு தொற்றிக் கொண்டது..

விளக்கை அனைத்து விட்டுப் படுக்கையில் உறங்கினேன்..

தூக்கத்திலும் என் நினைவுகள் அந்த ஆலமரத்தில் சுற்றித்திரியும் பூச்சிகள் போல தாத்தாவையே சுற்றித்திரிகிறது....

You already voted!
5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Sutharsanan S
Sutharsanan S
2 years ago

கனமான கதை…💔… சோகத்தின் துளிகள் நிழலாடியது…

Jheeva
Jheeva
2 years ago

Good story.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 3.139.90.131

Archives (முந்தைய செய்திகள்)