Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மனசுக்குள் மத்தாப்பு – கவிஜி

21 Jan 2022 10:55 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-09
படைப்பாளர் - கவிஜி, கோயம்புத்தூர்

தேவதைகள் பிறக்கிறார்களோ இல்லையோ... நடக்கிறார்கள். 

அந்த நகர சந்துக்குள் இருந்து ஒரு போலாந்துக்காரியை போல உடை அணிந்து வந்து கொண்டிருந்தவளை காண கண் கோடி தான் வேண்டும்.சினுக் நடைக்கும் சிக் நடைக்கும் இடையே...  புல் நுனி கொண்ட  பனித்துளியின் அசைவைப் போல.....அந்த நடை ஒரு இளவரசி நடை. இன்டெர்வியூவுக்கு போய் விட்டு வருபவளைப் போல இருந்தாள்.

கண்டதும் காதல் தான். காண காண தலைக்கேறட்டும்.இங்கு எதற்கு வந்தேன் என்பது கூட மறந்துபோனது. இனி எங்கு போவது என்பது கூட மறக்கலாம். நேற்றுவரை நான் யார் என்று தெரியாது. நாளை கூட நான் யாரென்று மறந்து போகலாம். இன்று இந்த நேரம்.. இந்த நொடி..அவளுக்கு ஒரு யாரோவாக அவள் முன்னே நிற்கிறேன்.இது சிற்பத்தின் சிந்தைக்குள் சிலிர்த்தெழும் சிற்பியின் உணர்வோவியம். 

தலை அசைத்தலில் இசை பிறக்கும் என்கிறேன்.கண் சிமிட்டலில்... கவிதை கிறங்கும் என்கிறேன். கை வீசி நடையை சமநிலைப் படுத்தலில்... இடை கூசி எம்மை தன் வசப்படுத்தும். குட்டை பாவாடையில்...
கிட்ட நெருங்குகையில்....

மறுநாளும் இன்றே வராதா......என்று ஏங்கினேன். மறுநாளிலும் ஓர் இன்று தான் வந்தது.

நேற்றைய இயல்பு இன்றில்லை. இன்றைய பதட்டம் நன்றாக இருக்கிறது. யார் அவள்.

சுருள் முடியில்... அருள் வந்தாடும்..... கொண்ட பூக்கள். கொண்டியிட்ட கொண்டையிலும்...
கண்டம் தாண்டி வந்த சூரிய குறுகுறுப்பு. நேரம் கூட...... நெற்றியில் கத களிக்கும் காதல். கைகளை சரியாக நெஞ்சோடு குவித்துக் கொண்டிருந்தேன். அவள் வருகையில் வேண்டினால்.......வேண்டினால் வருவாள் என்பதாக மாறட்டும்.

பேரின்பம் அவள் நடையில் தானே ஆரம்பிக்கும்... இன்று என்ன ஆடையோ.

ஒரு யூத பெண்ணைப் போல காட்டியது அவளின் இன்றைய ஆடை. ஒரு யாக நடை இன்று.என்ன மாயம் இது. நாடககாரியாக இருப்பாளோ. ஆடையில் தான் மொத்தமாக வித்தியாசம் என்றால்.... ஒப்பனையில் கூட.... ஏன் நடையில் கூட. 

நடையா இது நடையா... என்று நடிகர் திலகம்..நடப்பது போல. முதலில் ஒட்டவே இல்லை. சற்று நேரத்தில்..நடைக்கு தகுந்தாற் போல எடை பூக்கள் ஏறி இறங்க...ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்.
நடந்து பார்க்கிறாள்...போல. எங்கிருந்து வருகிறாள்...இந்த சந்துக்குள் தான் வீடா... இல்லை அலுவலகமா... மாயத்தில் இருந்து வருவது போல அவள் வருகையில்... வெளிச்சம் கூட கூடி குறைந்து ஒளிர்ந்து மிளிர்ந்து. இரவு பாரில் வேலை செய்யும் ஒரு பளபள சிங்காரியின் சாயலோடு இருப்பவளிடம்... "
நேத்து தான் பார்த்தேன்.....நேத்தே லவ் வந்திருச்சு...அதான் இன்னைக்கும் பார்க்க வந்தேன்" என்று மணிரத்னம் பட ஹீரோ மாதிரி அடித்தொண்டையில் தூரத்தில் இருந்து கத்தலாமா. தலையில் செல்லமாக அடித்துக் கொண்டேன். தலையே செல்லமாக்களால் ஆனது போல...... அனல் காற்றிலும்... ஆசுவாசம் அசைத்தது.  

நாள் ஒன்று போனால் காதலில் பூ ஒன்று முளைக்கும். இன்று எப்படியாவது..... அவள் கால் விரல் நகமாய் பளிச்சிட வேண்டும் அவளுக்கும் முன்பாக. திக்கென்று என் கண்கள் சுருங்கின. அவள் ஒரு போதைக்காரியாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தாள்.ஒரு பிரெஞ்சுக்காரியின் கழுத்திருகிய ஆடை சோகத்தில் ஆழ்த்தியது.வாயை அசைப்பது கூட கொடுமையாக இருந்தது.அய்யயோ.... என கருமம் இது... சாலை ஓரத்தில் திறந்து கிடக்கும் சாக்கடையில்.... வாந்தி எடுத்தாள்.எக்கி எக்கி எடுத்தவள்...கைக்கருகே மீந்து தொங்கிய ஆடையை இழுத்து சுருட்டி வாயைத் துடைத்துக் கொண்டாள். சரி.. காதலின் ஒரு நிலை தானே இதுவும். 

ஏன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறாள். நின்று யாரிடமோ அலைபேசியில் பேசினாள்.

முக பாவனைகள் கூட நேற்றைக்கும் இன்றைக்கும்... மாறி இருந்தது.

மறுநாள்... பேண்ட் சட்டையில்.... ஒரு அமெரிக்ககாரியைப் போல இருந்தாள். நடை தான் கிராமத்து சிட்டை நினைவூட்டியது. 

"என்ன மாமோய்... என்னைய கட்டிக்கறயா...?" என்று யாரிடமோ போனில் பேசிய போது இடி விழுந்தாற்
போல உணர்ந்தேன். என்ன நடக்குது? எல்லாமே மர்மமா இருக்குது.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரகசிய பெட்டிதான்.தோண்ட தோண்ட கிடைப்பதை விட தோண்டாமலே கிடைப்பது ஏராளம். 

ஒரு கிழவியை போல அவள் நடந்து வந்த அன்று தான்.... நான் பக்கத்தில் நிறுத்தியிருந்த பைக் கண்ணாடியில் வேகமாய் என் முகத்தை ஒரு முறை ஆழமாய் பார்த்துக் கொண்டேன். நகர இரைச்சலில்... நான்கு சாலை சந்திக்கும் இடத்தில்...... மூன்றாவது சாலையின் உள்ளொடுங்கிய..... பின் கட்டடத்தில் இருந்து தான் வெளியே வந்து கொண்டிருக்கிறாள். அந்த பளிங்கு கட்டடத்தில் என்ன நடக்கிறது. 

இவள் வேலைக்கு வருகிறாளா........வேலை முடிந்து வருகிறாளா.ஒரு வேளை வீடே இது தானா. இத்தனை பெரிய வீடா.இனியும் கட்டுப்படுத்த முடியவில்லை.காதலின் தூரங்கள் நெருக்கத்துக்கு ஏங்கின. 

கண்டிப்பாக அது நாடக கம்பெனி தான் போல. அதனால் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஒப்பனையில் வருகிறாள். அவள் ஒரு மெத்தட் ஆக்டர் தான். அந்த கதாபாத்திரமாகவே வெளியே வருகிறாள். சினிமாவுக்கு போனால்... சினிமாவே உச்சத்துக்கு போகும். அங்கம் கொஞ்சம் தெரிய உடுத்தியிருந்த ஆடையில் வயது குறைந்திருந்தது அவளுக்கு. வனப்பு நிறைந்திருந்தது எனக்கு. கனவொட்டி  நீந்தும் சிறு நதி போல இந்த நடை. மிக அருகில் பின் தொடர்ந்தேன். பேரின்பம் இப்படித்தான் வாசம் வீசும். கொளுத்தும் வெயிலின் ஊடாக தென்றலை கூந்தலாட்டி நடந்தாள்.தேகத்தில் தேன் சொட்டும் வயதின் வியர்வை துளிகளில் நான் உருண்டேன்.  

ஆனாலும் நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்தது. காதலின் தத்துப்பிள்ளை சந்தேகம். சந்தேகம் தேக சந்துகளில் நடந்து நடந்து பார்த்தது. 

வழக்கமாக அவள் வரும் நேரத்துக்கு முன்பாகவே நகர சந்துக்குள்.. ஒரு ழகரகாரனை போல நுழைந்து விட்டேன். ஒரு சினிமா செட்டப் போல....நகரத்தின் அத்தனை பரபரப்பும் சடுதியில் காணாமல் போக....சந்தின் கதவைத் திறந்தாள். பேரமைதியோடு ஒரு காட்டு பங்களா. கதவைத் திறந்தால் பின்னால் காடு விரிந்து கிடப்பது போல நொடியில் நிகழ்ந்து விட்ட மாயம்.நோக்க நோக்க நையப்புடைக்கும் நம்பிக்கை......என்ன வகை மாயம். 

இந்த வீட்டுக்குள் இருந்தா வருகிறாள்....! சுற்றும் முற்றும் ஒரு முறை சுற்றியும் மறு முறை சுற்றாமலும் பார்த்தேன்.

ஆங்கங்கே சில வீடுகள்..சில கடைகள்.ஆனால் அவையாவும் சடுதியில் நகர்ந்து நகர்ந்து தூரத்தில் இருப்பதாக ஒரு கற்பனை எனக்குள். எது சரி..... எது தான் சரி......நான் மெய்ம்மறந்து நடப்பது போல அல்லது மிதப்பது போல... அந்த பங்களாவை சுற்றி சுற்றி வந்தேன். வந்தால்... இதற்குள் இருந்து தானே வர முடியும். குட்டி போட்டால் தேவலை காதல் பூனை. அத்தனை சுமை.பொன்னிற சூரியன் கூட இன்று என்னிறம் தான். இனம் புரியாத படபடப்பு.இனம் புரிந்தாலும் அது படபடப்பு தான்.இசை தட்டு தலைக்குள் சுழல.... இதய தட்டில்... இளையராஜா நகங்கள்.

பங்களாவை ஒட்டி இருந்த மரத்தில் இருந்து விழுந்த இலைமறை காய் நிழலில் இசை மறை இறகு.

பெருங்கதவை தள்ளி பார்த்தேன்.பெருமூச்சு கதவுக்கும். 

ஏரியாவுல கில்லி நாம. எகிறி குதிப்பதில் அந்நியன் நாம. பின் சுவர் ஏறி மென் பூனையாய் நகர்ந்தேன். காதலின் தேவையில்... உலகை விலக்கி உள்ளே குதித்து வராண்டா தாண்டுகையில்....ஏதோ முனுமுனுப்பு சப்தம்.தொண்டைக்குள் சிக்கிய எலிகளின் கரகர ஒலி எங்கிருந்தும். மெல்லிய இசை..... எதிரொலித்துக் கொண்டிருக்க... மேகம் சூழ்ந்த இருள் அந்த முகப்பில். 

இது வரை இருந்த மனநிலை இப்போது மாறி இருந்தது. அது.... இதுவரை இல்லாதது. பங்களாவின் முகப்பும்.. அதன் தோற்றமும்..ஒரு மாயத்தின் மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இயங்குவது போல இருந்தது. கால்கள் தயங்கும் பளிங்கு கற்களில்... தரை விரிப்புகள்... தவம் உருட்டிக் கொண்டிருக்க... மெல்ல திறக்கும் கதவில் கை வைத்தேன். வேகமாய் திறந்து கொண்டன உள் விரிந்த கைகள். ஒரு கணம் கண்கள் சுழல... நடுங்கிய உடலோடு... சுவரோரம் சரிந்து என் மூச்சு எனக்கே கேட்க அந்த பரந்து விரிந்த அறையைக் கண்டேன். அந்தரத்தில் தொங்கும் அந்தகார பால்வெளி அது. இன்னும் இன்னும் கண்களை மின்னும் மின்னும்
பயத்தோடு பரிதவிக்கும் உடல் மொழியில் மூச்சற்று உள் வாங்கினேன். ஒரு கார்பரேட் நிறுவன கனகச்சிதம் உள்ளே சுழன்றது.

அங்கே.... அங்கே.... ..ஆங்காங்கே....

சிலர் பிணங்களை போல வரிசையாக படுத்துக்க கொண்டிருந்தார்கள்.படுத்திருந்த ஒவ்வொருவர் கால் அருகேயும் ஒருவர் நின்று கொண்டிருந்தனர். அறையின் வெப்ப நிலை குளிர்ந்து கொதித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

என்ன நடக்குது.... அறை புகை சூழ்ந்த மயானம் போன்ற பிம்பத்தில் சாம்பல் சாயல் பூசி இருந்தது.மஞ்சள் நிற வெளிச்சம் அறையின் மையத்திலிருந்து மேலெழும்பிய ஊது பத்தி புகை நெளிந்து நேரம் ஓட்டிக் கொண்டிருந்தது. என் கண்கள் சுயநலத்தோடு அந்த போலாந்துக்காரி சாயலைத் தேடியது. அதற்கு முன் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த அந்த சம்பிரதாயங்கள் உள்ளே போட்டு பூனையை உருட்டிக் கொண்டிருந்தது.

தாடிக்கு வாய்த்த கிழவன் ஒருவன்.... சம்மணமிட்டு அமர்ந்து ஏதேதோ முனங்கி கொண்டிருந்தான். பிசாசுகளின் மொழியென... பில்லி சூனிய நிலையென.... சித்து வேலை என அந்த அறையில்..இவர்கள் என்ன வேற்று மனிதர்களா. என்ன நடக்கிறது....நான் கண்களை கூர்ந்தேன்.கழுத்துக்குள் எச்சில்......வலியோடு இறங்கியது. முதுகு நடுவே வியப்பு கோடு வியர்வை உருட்டியது.முகத்தில் முழுதும்... துயர பாடு. 

கிழவன் மந்திரத்தை நிறுத்தி விட்டு... "எது வேணும்...?" என்றான். 

எதிரே ஒரு பாதி வயதுள்ளவன்.... ஒவ்வொரு பிணமாக பார்த்துக் கொண்டே வந்து..... "இது வேணும்...!" என்றான்.

அந்த இது எது என்று எட்டிப் பார்த்தேன். கிடைத்த சந்தில்..... கிடந்த அது ஒரு கல்லூரி மாணவன். தூக்கி வாரி நடுக்கியது.பிணங்களைக் கொண்டு என்ன வித்தை செய்கிறார்கள்.

சரி என்ற கிழவன் சபிப்பது போல எதுவோ செய்தான். உடலை முறுக்கி..... தலையை சுழற்றி....விரல்களில் வெற்றிடம் நசுக்கி.... நாவில் நர்த்தனம் நடத்தி....தந்தது வரமோ என்னவோ.அடுத்த கணம் பாதி வயதுக்காரன் சரிந்து விழுந்தான். அடுத்த நொடி கல்லூரிக்காரன் எழுந்து அமர்ந்தான். 

நன்றி சொல்லி... தன்னை குனிந்து பார்த்த கல்லூரிக்காரன் உடலில் உள்ள  பாதி வயதுள்ளவன்...... துணிக் கடையில் புது துணி அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று சுற்றி சுற்றி பார்ப்பது போல தன் புது உடலை ஆவலோடு சுற்றி சுற்றி பார்த்தான். முகத்தில் தேஜஸ் கூடி கல்லூரி வயது உடலுக்கு வந்திருந்தது....  அவனுக்கே பெருமிதம் தந்திருக்க வேண்டும்.நின்றபடியே பறப்பது போன்ற பாவனையில்... நன்றி சொல்லி வணங்கி எழுந்து ஓடினான்.திறந்திருந்த கதவுக்கு வெளியே அவன் உள்ளே பாதி வயதுக்காரன்.வெளியே கல்லூரிக்காரன்.

இந்த வாழ்க்கை சலிப்பு தட்டும் வட்டத்தால் ஆனது. மனிதன் தன்னை மறக்க நினைக்கிறான்.
தன்னிடமிருந்தே தான் தப்பித்துக் கொள்ள விரும்புகிறான்.மூட்டை முடிச்சை தூக்கி மூளைக்குள் வைத்துக் கொண்டு திரியும் அவலம்... இன்னொன்றை தேடி ஓடுகிறது. விடுபடுதலில் இருக்கும் மனம் தன்னுடலைத் தான் முதலில் வெறுக்கிறது. துக்கத்தை உதற நினைக்கும் மனதுக்கு சுற்றுலா நாள் மாதிரி......ஒரு விடுமுறை தினம் போல... இந்த இன்னொரு உடல்.ஒன்றிலிருந்து விடுபட இன்னொன்று தேவை இங்கு.அது தான்... இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

கூடு விட்டு கூடு பாய்தல். ஆதி கலை.

ஆடை மாற்றுவது போல ஆளை மாற்றிக் கொண்டு நகர்கிறது நசுங்கிய மனம்.இந்த பூமியில் நீ ஒரு நாள் தான் வாழ்கிறாய்.அது தான் ஒவ்வொரு நாளும் இங்கே கூடு விட்டு கூடு பாய்கிறது.புத்தாடை அணிவது போல தான்... புத்துடல் புகுவது.

தொடர்ந்து தன்னை தானே சுமப்பதும் கூட சலிப்பு தான்.என் கண்ணாடியில் நானொரு பழைய தத்துவம்.பக்கத்து வீட்டு ரசம் கூட சுவை கூட்டும். கிண்ணம் நீட்ட தயங்காதே.ஆதி வெறியில் துவங்கிய அதே தினங்கள் சலிப்பு. மனதின் ஆழம் தூங்குவதில்லை. சமாதானப் படுத்தும் உடலே மந்திரம். அது காலத்துக்கும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கவே விரும்புகிறது. சரி தவறு தாண்டி.......இருத்தலின் இயலாமை இன்னொன்றில் இருத்திக் கொள்ள....." தாடி கிழம் பேசிக் கொண்டிருக்க.... ஒவ்வொரு உயிரும் வேறு வேறு உடல் பூண்டு விடுதலையின் வெளிர் நிறத்தோடு வெளியேறிக் கொண்டிருந்தது.

பயம் மூளைக்குள் ஊர்ந்தாலும்.... பரவசம்..மனதுக்குள் ஓடியது. நிலை தப்பிய என் கால்கள் நடப்பதை மெல்ல உள் வாங்கின. இதனால் தான் ஒவ்வொரு நாளும் வேறு வேறு உயிர் அவள் உடலில் நடந்து வந்திருக்கிறது. முன் பின் வந்தோரெல்லாம் வேறு உடலில் வேறு உயிர் பூண்டு தான் வந்திருக்கிறார்கள். விநோதங்களைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். எந்த உயிருக்கு என்ன நடையோ அந்த நடை தானே அந்த உடலுக்கு. 

”உடலைத் தத்துக்கொடுத்து உடலை தத்து எடுக்கும்... புள்ளியில்... ரகசியங்கள் இயல்பு. ஒருமுறை உடல் தாவும் உயிர் மீண்டும் தன் உடலுக்கு தாவும் நிலை அங்கே இல்லை.எந்த உடல் எந்த உயிரில் என்பது கணக்கில் கொள்ளாதது.அது தான்... மொத்தமாக மறைந்து போகும் தானற்ற தத்துவம். உடல் என்பது அதிகாரம். அது தனக்கு பழகாத வரை உள்ளம் பூந்தொட்டி தான். ஆக..... தினம் ஒரு உடல்..தினம் ஒரு பிறவி. காலையில் தோன்றி மாலையும் உதிரும் பூக்களின் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் தேன் சிந்தும்...." கிழம் தொடர்ந்து கொண்டிருந்தது.

கூடு விட்டு கூடு பாய்தல் நிகழ நிகழ... அது ஒரு மாயாஜால நிகழ்ச்சி மாதிரி தான் இருந்தது.பார்க்கவே குதூகலமாக ஒரு சிறுவனின் மனநிலைக்குத் தள்ளியது.

இந்த பங்களா வானத்தில்.... இனங்கள் இல்லை.சமங்கள் தான். உடலும் உயிரும் பொதுவில் போட்டு பொதுவாய் இணைந்து கொள்தல்.... தானை உதற தவத்தை நிகழ்த்துகிறது....போல. பற்றற்று இருக்க புத்துடல் புகுவது சுகம் தான் போல. ஒருமாதிரி இவர்களின் உலகம் புரிய ஆரம்பித்திருந்தது. பயம் மெல்ல ஆச்சரியத்தில் அசைந்து அசையாமல் பார்த்தது. பட்டென்று மனம் பதைபதைக்க... வந்த வேலையை விட்டோமே என்று தேட ஆரம்பித்தேன்.

சரமாரியாக தேடிய கண்களில்....தேகம் சரிந்து கிடந்த போலந்துக்காரி.....வரிசையில் கடைசியாக கிடந்தாள்.உற்று நோக்கும் முன்னே உற்றம் நோக்கி ஓடி சென்று அவள் கால் அருகே நின்றேன். காதல் அருகே நின்றது போல மனசுக்குள் மத்தாப்பு. ஆனாலும்...பின்னால் வரிசையாய் ஆணும் பெண்ணுமாக எந்த உயிரோ எந்த உடலிலோ.பார்த்த கணம் தலை சுற்றியது.

எங்கே வந்தவனைக் காணோம் என்று என் நண்பன் நான் நிற்கும் இடத்தில் நின்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருக்க..... மிகு மிகு சந்தோஷமாக அவள் உடலில்... பங்களா சந்தை விட்டு வெளியேறி நடந்து கொண்டிருந்தேன். அவள் உடலில் நிரம்பி இருந்த தருணம்... காதலின் உச்சத்தில்... பேராசையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தது போல இருந்தது. ஒவ்வொரு அடுத்த நிமிடமும் அபூர்வமானவை.  ஆச்சரியமானவை  இவ்வுடலில். யாருக்கு எப்படியோ..எனக்கு அவளுடலில் நிறைந்திருக்கும் இந்த தருணம்.... காதலில் உறைந்திருக்கும் புனிதம். மற்றவருக்கு எப்படியோ... எனக்கு இது விடுபடுதல் இல்லை... உடன்படுதல்.

யோசித்தபடியே... நின்று நிதானிக்கையில்...என்னைத் தொடர்ந்து எனக்கு பின்னால்... வந்து கொண்டிருந்த என் உடலை...ஆச்சரியத்தோடும் ஆசையோடும் பார்த்தேன். 

அதே ஆச்சரியத்தோடு.... ஆசையாக......என் பெண்ணுடலை பார்த்துக் கொண்டே வந்த என்னுடலுக்கு அதே இளவரசியின் மெல்லிய நடை. 

You already voted!
2.3 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
சரவணக் கார்த்திகா
சரவணக் கார்த்திகா
2 years ago

கதைக்குள்ளே உயிர் ஒன்று உள்ளே புகும் நேரம் இங்கே சிந்தனை முழுக்க புது மலர் ஒன்று முகிழ்கிறது…. வாசிக்க வாசிக்க வண்டு குடையுது…. எங்கோ நகர்கிற வெளிச்சப் புள்ளியை அடையும் நேரம் கூடு விட்டுப் பாய்கிறது உயிரின் ஒளி! மனதின் வழி!!!

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 3.138.138.144

Archives (முந்தைய செய்திகள்)