Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உயிர் – ஆனந்த சிவா

31 Jan 2022 11:28 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-15
படைப்பாளர் - ஆனந்த சிவா, விருக்கம்பாக்கம், சென்னை.

ரு மாதத்துக்கும் மேலாக விவசாயத்தையே முழுமையாக நம்பி வாழும் தஞ்சை மாவட்ட கிராமங்களுக்கு ஐந்து மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது..! அதுவும், எப்போது வரும்? எப்போது போகுமென்பதையும் சொல்ல முடியவில்லை?

எப்பாடுபட்டாலும் எந்தவிதத்திலும் லாபம் கிடைக்காது என்று தெரிந்தாலும், தங்களின் வாழ்க்கையைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் விவசாயத்தைத் தவமாகச் செய்யும் விவசாயிகள், இரவு - பகலாகக் காத்திருந்து, இருக்கும் ஓரிரு மோட்டாரைக் கொண்டு, மின்சாரம் வருவதற்காகக் காத்திருந்து தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்..!

ஆற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள பயிர்களெல்லாம் ஏறக்குறைய கருகிப்போய்விட்டன..! சில விவசாயிகள் தங்களின் வயல்களில் ஆடுமாடுகளை மேய விட்டுவிட்டனர்...

பலரையும் போலக் கந்தசாமியும் வீட்டுக்குப் போய் ஒருவாரம் ஆகிவிட்டது... அவருடைய மனைவி செல்லம் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்...

கந்தசாமியின் மகன் ராகவன் சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்கிறான்... அடுத்த புதனன்று அப்பா, அம்மாவை சென்னைக்கு வரும்படி அழைத்திருக்கிறான்... ராகவனுடைய குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் அழைத்திருந்தான்..!

இளந்தளிர்களான பேரக்குழந்தைகளைப் பார்க்க போகவேண்டும் என்ற ஆசை அவருக்கு... ஆனாலும், செவ்வாய்க் கிழமைக்குள் நெல் வயலுக்கு இரண்டு தண்ணீர் பாய்ச்சிவிடவேண்டும்..! அப்போதுதான் சென்னையிலிருந்து திரும்பி வருவதற்குள் வயல் காய்ந்து தளிர் பயிர்கள் கருகிப்போகாமல் இருக்கும்... அதனால்தான் வாரக்கணக்காக வீட்டுக்குக் கூடப்போகாமல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலிலேயே கிடக்கிறார்..! ஆனால், மின்சாரம் வருவதைப் பார்த்தால் மோட்டாரிலிருந்து ஒரு தண்ணீர் பாய்ச்சுவதே பெரும்பாடாய் இருக்கும் போல் தெரிகிறது...

கந்தசாமிக்கு சென்னையில் ஒரு நாள் இருப்பதென்பது பெரும் தண்டனையாகவே இருப்பதுண்டு... பேரக்குழந்தைகளுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு சில நாட்கள் இருந்து விடுவார்... வெளியில் செல்வதற்குக் கூப்பிட்டால்கூட அவர் போவதேயில்லை... போக்குவரத்து நெரிசலும், புகையும், தூசியும் மிகுந்த நகரத்தை கந்தசாமியால் சகித்துக்கொள்ள முடிவதில்லை... அவர் மனைவி செல்லம் மட்டும் பேரக்குழந்தைகளுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு வருவார்...

பேரக்குழந்தைகள் கிராமத்துக்கு வந்தால் நகரத்துக்குத் திரும்பிப்போக விரும்புவதேயில்லை... ஏசிக்குள்ளேயே இருந்த பழக்கம் கிராமத்தில் எடுபடுவதில்லை... கிராமத்து வெய்யில் குழந்தைகளை மட்டும் காந்துவதேயில்லை... கந்தசாமியெல்லாம் வெய்யிலில் பொசுங்கிப் போவார்...

ராகவனுக்கு அவன் மனைவிக்கும் ஒருசில நாட்களுக்குமேல் விடுமுறை எடுக்க முடியாது... அவர்கள் சென்னை திரும்பிவிடுவார்கள்..! அலுவலகத்திலும் வீட்டிலும் ஏசியிலேயே சொகுசாய் வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு கிராமத்தின் சுத்தமான, ஆரோக்கியமான காற்று ஒத்துக் கொள்வதில்லை... ராகவனின் மனைவியும் கிராமத்துப் பெண்தான் என்றாலும் இப்போது கிராமத்தில் சில நாட்கள்கூட அவளால் தங்கமுடியவில்லை...

‘என்னைவிட்டு குழந்தைகள் இருக்காது... பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அங்கலாய்த்துவிட்டு மருமகள் போய்விடுவாள்...

அது ஒருவகையான படித்திருக்கிறோம் என்கிற அதிமேதாவித்தனத்தின் வெளிப்பாடு... உண்மையில் அம்மா, அப்பாவைவிட தாத்தா பாட்டியிடம்தான் குழந்தைகள் அதிக பாசத்துடன் ஒட்டிக் கொள்கின்றன... அது ஏன் என்பதைப் பற்றிய புரிதல்கள் பட்டணத்து வாசிகளாகிவிட்டபின் பெற்றவர்களுக்குப் பட்டுப்போய் விடுகிறது..! உண்மையின் உள் அலசல்களை அவர்கள் ஒருபோதும் உணர முயல்வதேயில்லை... கணிப்பொறி முன்னால் கவனம், அதைவிட்டால் கைபேசி என்கின்ற சாத்தானுடன் சங்கமம்..! அப்படிப் பழகிவிட்டவர்களிடம் குழந்தைகளின் இளம் மூளைக்குள் இருக்கும் இயற்கை அற்புதங்கள் தெரியாததில் வியப்பில்லை...புகழ்பெற்ற பள்ளிகளில் பெரும் செலவு செய்து படிக்க வைப்பதை மட்டுமே குழந்தைகள் மீது இருக்கும் அக்கறை என்று நினைப்பதைவிட வானளவு அபத்தம் வேறில்லை...

கந்தசாமியின் மகனுக்கோ மருமகளுக்கோ, தாங்கள், கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்துத்தான் இன்று ஐடி நிறுவனங்களில் வேலை செய்து சம்பாதிக்கிறோம் என்பதை ஏறக்குறைய மறந்தேவிட்டனர்...

அமெரிக்கா மட்டுமின்றி வெளிநாடுகளில் வேலை செய்யும்  கம்ப்யூட்டர்  எஞ்ஜினியர்களோ, மருத்துவ, அறிவியல் மேதைகளோ மற்ற மற்ற துறைகளில் இருக்கும் பலருமோ, பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான்... அந்த உண்மை மறக்கடிக்கப் படுகிறது... யாரால்? ஏன்? என்பதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்தான்..!

குழந்தைகளிடம் எப்போதும் கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கும்... அவற்றை நாம் அலட்சியம் செய்கிறோம்... கேள்விகள் குழந்தைகளின் அறிவு வெளியை  அகண்டதாக்குகின்றன என்ற உண்மையை நாம் என்றுமே புரிந்து கொள்வதில்லை... குழந்தைகளின் கேள்விகளுக்கு ஏனோதானோ வென்று பதில் சொல்லும்போது குழந்தைகள் நம்மிடமிருந்து விலகிவிடுகிறார்கள்... ஆர்வமோ அக்கறையோ இல்லாமல் நாம் பதில் சொல்வதைக் குழந்தைகள் எப்படிக் கண்டுகொள்கின்றன என்பது மிகப்பெரிய ரகசியம்... அந்த ரகசியம் தெரிந்த இரண்டு ஜீவன்கள் தாத்தாவும் பாட்டியும்தான்..!

குழந்தைகளுக்காக யானையாகி அவர்களை முதுகில் தாங்கி ஊர்வலம் போவதும், எந்த இலக்கணமும் இல்லாமல் தப்பும் தவறுமாய் பேசும் குழந்தைகளின் அமுத மொழிகளை ரசித்துக் கொண்டாடுபவர்கள் தாத்தாவும் பாட்டியும்..! செய்யாதே என்று சொன்னால் கண்டிப்பாகச் செய்யும் குழந்தைகளின் நஞ்சற்ற பிஞ்சு செய்கைகளை நெஞ்சமெல்லாம் பூரித்து கொண்டாடும் வயதான குழந்தைகளல்லவா தாத்தாவும் பாட்டியும்..!

ஆனால், நகரத்துக்குப் போகையில் மட்டும் ஏனோ அவர்களால் குழந்தைகளாக மாற முடிவதில்லை... பேரக்குழந்தைகள் தங்கள் கூடவே இருந்துவிடச் சொல்லும் அன்புக் கட்டளைக்குக்கூட அடிபணிய முடிவதில்லை... விடுமுறை நாட்கள் முழுவதையும்

சென்னையிலிருந்து குழந்தைகளுடன் குதூகலிக்க முடியாமல் போவதுதான் மாநகரத்தின் மகத்துவம் போலும்.?!

ஆனாலும் குழந்தைகளைப் பார்க்கப் போகும் நினைப்பில் மகிழ்ச்சியும் பரபரப்புமாய் இருந்தார் கந்தசாமி... இரண்டு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை... சிலமணி நேரம் மட்டுமே வரும் மின்சாரம் குறைந்த அழுத்தத்தில் வேறு வர ஆரம்பிக்க, எப்படியோ ஒரு தண்ணீர் பாய்ச்சிவிட்டு, ஆனது ஆகட்டும் என்று புறப்பட்டு விட்டார் தன் மனைவி செல்லத்துடன்...

காலையில் ராகவன் காரை எடுத்துக்கொண்டு ரயில்வே  ஸ்டேஷனுக்கு  வந்திருந்தான்... அவர்கள் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்கள்... கதவைத் திறந்ததும் பேரனும் பேத்தியும் ஓடிவந்து ‘தாத்தா, பாட்டி’ என்று கட்டிக்கொண்டார்கள்... தாத்தா பேத்தியையும் பாட்டி பேரனையும் தூக்கிக் கொண்டார்கள்...

மருமகள் வந்து அவர்களை வரவேற்றபடி சொன்னாள், “லீவ் நாள்ல, பத்து மணிக்கு  எழுப்புனாலும் எந்திரிக்காதுங்க... இப்ப மட்டும் ஆறு மணிக்கே  முழிச்சி  தாத்தாபாட்டி  எப்ப வருவாங்க, எப்ப வருவாங்கன்னு ஒரே ரகள”... அது புகாரா அல்லது எரிச்சலும் ஆற்றாமையிலும் பேசும் பேச்சா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை...  குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சியில் கந்தசாமிக்கும் செல்லத்துக்கும் அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க மனமில்லை...

தண்ணீர் இல்லாமல் பயிர் வாடிக்கிடக்கையில், தண்ணீர் பாய்ச்சியபின் காலையில் பயிரைப் பார்த்தால், அந்தப் பயிர் குளிர்ச்சியில் சிலிர்த்து போய்க்கிடக்கும்..! அந்தக் குதூகலம் பயிரிடமிருந்து அதைப் பார்க்கும் விவசாயிக்கும் தொற்றிக்கொள்ளும்..! அப்படித்தான் இருந்தது அந்தக் குழந்தைகளிடமும் அந்த முதியவர்களிடமும் அப்போது காணப்பட்ட உணர்ச்சியும் மகிழ்ச்சியும்..! ஆனால், இங்கே வாடிக்கிடந்தது யார் என்பது தெரியவில்லை..?! குழந்தைகளுடன் ரூமுக்குள் நுழைந்தார்கள்...

தாத்தா பாட்டி ஊரிலிருந்து கொண்டுவந்திருந்த தின் பண்டங்களை  ஆசை ஆசையாய்  ஆராய ஆரம்பித்தனர்... பாட்டி செய்த சீடையும் முறுக்கும் அதிரசமும் கெட்டி உருண்டையும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த தின்பண்டங்கள்... அவைகள் தீரும்வரை சுமார் ஒரு மாதத்துக்கு சாக்லெட்டோ, பிஸ்கட்டோ, ஏன் ஐஸ்க்ரீம்கூட, மறந்தும் கேட்கமாட்டார்கள்...

அன்று ஞாயிற்றுக்கிழமை... அன்றைய புரொகிராம்கள் எல்லாம் நேற்றே முடிவு செய்யப்பட்டுவிட்டிருந்தன... அதுவரையில் இல்லாமல் இப்போது தாத்தாவும் அவர்கள் புரொகிராமில் கூட வருவதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்... முதன் முதலாகத் தாத்தாவும் அவர்களுடன் வெளியே வருகிறார்... இதுவரையில் எவ்வளவு கெஞ்சினாலும் வெளியே வர விரும்பாதவர் இன்று ஏனோ, குழந்தைகள் கேட்டதும் சட்டென ‘வருகிறேன்’ என்று புறப்பட்டுவிட்டார்...

சென்னையின் முக்கிய இடமாகிப்போன, பிரம்மாண்டமான அந்த மால் வந்ததிலிருந்து ஒவ்வொரு வாரமும் அங்குப் போகவேண்டும் என நினைப்பாள் ராகவன் மனைவி... இன்றுதான் அது சாத்தியமானது... அவளுடன் வேலை செய்பவர்கள் ஒவ்வொரு வாரமும் அங்குப் போவதை ஒரு சடங்காகவே மாற்றியிருந்தார்கள்... ‘நீ இன்னுமா  போகல?’ என்று அவர்கள் கேட்கும்போது அவமானமாக இருக்கும் அவளுக்கு...

எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதன்மூலம் அதனை அழித்தும்... தேவையற்றதன் மீது அதீத அக்கறைகாட்டி

அது அபாரமாய் வளர காரணமாவதுமான, இந்த படித்த நகர மக்களின் போக்கு எதில் போய் முடியுமோ என்பதை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது..?!

மாலில் போய் கார் நின்றது... அனைவரும் இறங்க, “கார பார்க் பண்ணிட்டு வந்தர்றேன்” என்று சொல்லிவிட்டு போனான் ராகவன்... கட்டிடமும் அங்கிருந்த அந்த  நவநாகரீக  கூட்டமும் கந்தசாமிக்கு இனம்புரியாத சங்கடத்தை ஏற்படுத்தியது... தான் ஏதோ வரக்கூடாத ஒரு இடத்துக்கு வந்துவிட்டதாக, அயல் கிரகத்துக்குள் நுழைந்து விட்டதாக ஒரு எண்ணம் அவருக்குச் சட்டென்று ஏற்பட்டது... அப்போது, “தாத்தா பாத்தீங்களா எவ்ளோ பெரிய பில்டிங்?!” என்றான் பேரன்...

கிராமத்துக்கு வந்தபோது பேரன், தொட்டால் சிணுங்கி செடியைத் தொட்டதும் அது சுருங்கிக்கொண்ட அதிசயத்தைப் பார்த்து குதூகளித்த அந்த உணர்வு அவனிடம் தெரியவில்லை..! பிறந்து ஒரு வாரமேயான கண்ணுக்குட்டி பேரனை நக்கும்போது, அதன் நாக்கின் லேசான சொரசொரப்பில் உடல் கூச, அவன் உடல் முழுக்க ஒரு பரவசம் உண்டாக, அந்தப் பிஞ்சு முகத்தில் தெரிந்த கூச்சத்தில் ஒரு துளிகூட  இப்பொழுது அவன் முகத்தில் தோன்றவில்லை... ஆற்றில் ஓடும் சிலுசிலு தண்ணீரில்  மீனைப்போலத் துள்ளி விளையாடிய அந்த ஆனந்தத்தில் சிறிதளவுகூட பேரன் முகத்தில் இல்லை..! அதுவரை பார்க்காத தன் தாத்தாவிடம் காட்டும்  ஆச்சரியம் மட்டுமே பேரனிடம் வெளிப்பட்டதை அவரால் சுலபமாக உணர்ந்து கொள்ள முடிந்தது...

ராகவன் வர, எல்லோரும் நடந்தார்கள்... “அப்பா, சென்னைல இதான் பெரிய மால்... கார பார்க் பண்ணவே ஐநூறு ரூபா ஆயிடும்... ஒரு மணி நேரத்துக்கு  பண்ணெண்டாயிரம் யூனிட் கரெண்ட் செலவாகுதுன்னா எவ்ளோ பெருசுன்னு  பாத்துக்கங்க”... என்று ராகவன் சொல்ல... தன்னிச்சையாக கந்தசாமி சட்டெனத் திரும்பி அந்த பிரம்மாண்ட கட்டிடத்தை பார்த்தார்...

உயரமான அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கீழேயிருந்த படித்த, நாகரிக மேல்தட்டு மக்களை அவர் வேடிக்கை பார்ப்பது போலவும், சிறிது நேரத்தில் ஏன், எதற்கு எனப் புரியாமல் திடீரென அங்கிருந்து கீழே குதிப்பது போலவும் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது..! ரத்தமும் சதையுமாய் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் அவரை மக்கள் எந்தவிதமான அதிர்ச்சியோ பரிதாப உணர்ச்சியோ இல்லாமல் வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்து போவதை அவர் பார்த்தார்...

மற்றவர்கள் முன்னால் நடக்க, கந்தசாமி அப்படியே நின்றுவிட்டார்... ‘செக்யூரிட்டி டோர்’ அருகே போய்விட்ட பேரன் திரும்ப, தாத்தா நிற்பதைப் பார்த்து தாத்தாவிடம் ஓடிவந்தான்... தாத்தாவின் கையைப் பிடித்து, “தாத்தா வாங்க போலாம்” என்றதும், சட்டெனச் சுயநினைவு பெற்று பேரனைப் பார்த்தார்... அவன் புன்னகையுடன் தாத்தாவின் கையைப்பிடித்து இழுக்க... எந்தவித உணர்வுமின்றி அவர் பேரனுடன் நடந்தார்...

அனைவரும் மாலுக்குள்ளே நுழைய, ஜில்லென்ற ஏசி குளிர் முகத்தில் தாக்கியது... குழந்தைகள், ராகவன், அவன் மனைவி அனைவரும் சிலிர்த்து கொண்டார்கள்... ராகவன் மனைவி, “இட்ஸ் ஸோ கூல்” என்றாள்... ராகவன் புன்னகையுடன் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினான்... பாட்டி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி நடந்தார்...

சில அடிகள் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள் தாத்தாவும் பேரக்குழந்தைகளும்... தாத்தா கையை இறுக்கமாய் பிடித்தபடி பேத்தி சொன்னாள், “குளுருது தாத்தா”... மற்றொரு கையைப் பிடித்திருந்த பேரன், “ஆமாந்தாத்தா... எனக்கும் குளுருது” என்றான்...

கந்தசாமியின் முகம் சலனமற்றுக் கிடந்தது... ஒரு நாளைக்கு ஐந்தாறு மணி நேரம், அதுவும் எப்போது வரும் எப்போது போகுமென்று தெரியாத நிலையில் பயிர்கள் உயிருக்குப் போராடி வாடுவதுதான் கந்தசாமியின் நினைவில் நீண்டு கிடந்தது... இனிமேல் அந்த விவசாயி தன் பேரக்குழந்தைகளுக்காகக் கூட சென்னைக்கு வருவாரா என்பது சந்தேகம்தான்.!?

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 11
Total views : 410198
Who's Online : 0
Your IP Address : 18.116.63.236

Archives (முந்தைய செய்திகள்)