Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

வைர நெஞ்சம்! – த.வேல்முருகன்

21 Jan 2022 12:54 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-07
படைப்பாளர் - த.வேல்முருகன, ஈரோடு

"அம்மா...நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே... முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து அரைச்சு நாளைக்கி தோசை சுட்டு சாப்பிடுங்க. லேசா கசப்பா பச்சை கலர்லே இருக்கும். ஆனா அப்புறம் பாருங்க... உடம்பு வலி, வாயுக் கோளாறு ஓடியே போயிடும்.." என்று கீரைக் கூடையை இறக்கினாள் பாக்கியம்.

முடக்கத்தான் கீரைக்கட்டைப் பிரித்து உட்கார்ந்து இளம் கீரையாக சாவகாசமாக ஆய்ந்து போட ஆரம்பித்தாள். அவள் தோளில் சாய்ந்து நின்ற அவளது கடைக்குட்டி வனிதா முப்பட்டையான முடக்கத்தான்காயை நெற்றியில் பட்பட்டென அடித்து வெடிக்க வைத்துச் சிரித்தது.

மற்றொருநாள் சின்னச்சின்ன இலைகளுடன் ஒரு கிளையை ஒடித்துக் கொண்டு வந்தாள். "அய்யா மூட்டுவலியில கஷ்டப் படறார்னு சொல்வீங்களே... தேடிப் பிடிச்சு வாதநாராயணன் கீரையைக் கொண்டு வந்திருக்கேன். இலையை உருவித்தரேன். நெய் விட்டு வதக்கி,காஞ்ச மிளகாய், உளுந்து, பெருங்காயம் வறுத்து, உப்பு, புளி வெச்சு துவையல் அரைச்சுக் கொடுங்க. மருந்து, மாத்திரை எதுவுமே வேணாம். மூட்டு வலிக்கு சூப்பரா கேட்கும்!"

இப்படித்தான் பாக்கியம் எனக்கு அறிமுகமானாள். என் பிள்ளைகள் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட, ஓய்வு பெற்ற என் கணவருடன், எப்போதோ வாங்கிப் போட்டிருந்த ஒதுக்குப்புறமான முக்கால் கிரவுண்ட் நிலத்தில் வீடு கட்டிக் கொண்டு குடி வந்தோம். அப்போது தான் வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. கடைகண்ணி என்றால் கொஞ்சதூரம் போக வேண்டும்.

எனக்கு நீரழிவு நோய் ஆரம்பம் என்பதால் டாக்டர் தினம் ஒரு கீரை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தினார். வாசலில் எப்போது கீரை வரும், காய் வரும், பழம் வரும் என்று தினம் பழி கிடந்து தான் வாங்க வேண்டும். தவற விட்டுவிட்டால் கடைக்கு நடக்க வேண்டும்.

தினமும் நான் வாசலில் காத்துக் கிடப்பதைப் பார்த்த கீரைக்கார பெண்மணி பாக்கியம், "எதுக்கும்மா இப்படி மணிக்கணக்கிலே காத்துக் கிடக்கறீங்க? தினம் தவறாமே நானே கொண்டு வந்து தரேனே." என்று வந்து ஒட்டிக் கொண்டாள்.

அது போல தினம் ஒரு வகை கீரையாகப் பார்த்து எடுத்து வந்து கொடுப்பதோடு, அதை சுத்தம் செய்து நறுக்கி கொடுத்துவிட்டு போகும் அளவுக்கு பழக்கமாகி விட்டாள். அவளைப் பற்றிய விவரங்களையும் பேச்சோடு பேச்சாக வெளியிட்டாள்.

புருஷன் இறந்து இரண்டு வருடமாகிறதாம். இரண்டு பிள்ளை, இரண்டு பெண் என நான்கு குழந்தைகள். தினம் மூன்று வேளையும், ஐந்து ஜீவன்கள் அரை வயிறாவது சாப்பிட வேண்டும். காலையில் கீரை, காய்கறி வியாபாரம், மதியம் பூக்கடைகளுக்கு பூ கட்டிக் கொடுக்கிறாள். மாலை அம்மன் கோயில் வாசலில் கற்பூரம் நெய் விளக்கு விற்கிறாளாம்.

இவ்வளவு பாடுபட்டும் பிள்ளைகளுக்கு வயிறார சாப்பாடு போட முடியவில்லை என என்று புலம்புவாள்.

எனக்குப் பரிதாபமாக இருக்கும். இத்தனை கஷ்டத்தில் நான்கு குழந்தைகள் தேவையா? இரண்டுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே என்று கேட்க தோன்றும். 'நமக்கேன் வம்பு' என்று வாயை மூடிக் கொள்வேன்.

ஒரு நாள் வரும் போதே பாக்கியம் சோர்வாக வந்து உட்கார்ந்தாள்.

"நைட்டு பூரா தூக்கமில்லே.தலை ரொம்ப நோவுது" என்றாள் முனகலாக.

"மாத்திரை போடறதுதானே... இரு, சூடா காஃபி தரேன்."

அவள் கூச்சத்துடன் மறுப்பதை காதில் வாங்காமல் காஃபி கலந்து எடுத்து வந்தேன்.

பாக்கியம் மாத்திரையைப் போட்டுக் கொண்டு காப்பியைக் குடித்தாள். தம்ளரைக் கழுவுவதற்காகப் போனவள் கிச்சன் சிங்கை எட்டிப் பார்த்தாள்.

"அம்மா தப்பா நினைக்கலேன்னா... தினம் இதே நேரம் வந்து பாத்திரம் தேய்ச்சு துணி துவைச்சிட்டுப் போகட்டுமா?"

அதுவும் சரியென்றே பட்டது. அவள் வறுமையைக் குறைக்க என்னாலான சிறிய உதவி. கணவரைப் பார்த்தேன். அவரும் தலையசைத்து சம்மதித்தார்.

அது போல தினம் வரத் தொடங்கினாள். வந்ததும் கீரைகள் காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பாள். பாத்திரம் கழுவி, துணி துவைத்துக் காயப் போட்டுவிட்டு, நான் கொடுக்கும் காப்பியை குடித்துவிட்டுப் போவாள். அதோடு நில்லாமல் வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை என்று வீட்டைத் துடைத்துக் கொடுப்பாள். வாரம் ஒரு தடவை ஒட்டடை அடிப்பாள். லீவு நாட்களில் அவள் பிள்ளைகள் அவளோடு வருவார்கள். அங்குமிங்கும் ஓடிச் சத்தம் போட்டு அமர்க்களம் செய்யாமல், அமைதியாக ஹோம் வொர்க் செய்து கொண்டிருப்பார்கள்.

என் கணவர் பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டியபடி "பெயர் என்ன? என்ன படிக்கிறீங்க?" என்று அன்புடன் விசாரித்தார்.

பெரிய பையன் மரியாதையுடன் கைகட்டியபடி எழுந்து நிற்க, மற்றவர்களும் அதே போல் எழுந்து நின்றனர். 

"என் பேரு கண்ணன், ஆறாவது படிக்கிறேன். இவ பூங்கொடி, நாலாவது படிக்கிறா. இவன் ஏழுமலை ரெண்டாவது, இது வனிதா... இன்னும் ஸ்கூல் சேர்க்கலை" என்று பணிவுடன் பதில் சொன்னான்.

முதல் நாள் அவர்கள் வந்த போது மிகுந்திருந்த டிபனைக் கொடுத்த நான், பிறகு அவர்களுக்கென்றே அதிகமாக தயாரிக்கத் தொடங்கினேன். மாவு அரைக்க, சோப், கடுகு, டீத்தூள், பால் பாக்கெட் என்று ஏதேனும் அவசரத் தேவைக்கு சைக்கிளில் போய் வாங்கி வர, கண்ணன் உதவியாக இருந்தான்.

இப்படியாக பாக்கியமும் அவள் பிள்ளைகளும் எங்களில் ஒருத்தராக ஆகிவிட்டனர்.

ஒரு நாள் சமையல் அறை சிங்க்கில் தண்ணீர் கசிகிறதென்று ப்ளம்பரை அழைத்து வந்தார் என் கணவர்.

"அண்ணே... நல்லா இருக்கீங்களா?" என்று விசாரித்தாள்.

ப்ளம்பர் திரும்பினாள்.

"அட... பாக்கியமா? இங்கேயா வேலை செய்யறே? கீரை வியாபாரம் என்னாச்சு?" என்று விசாரித்தார்.

"அதுவும் ஒரு பக்கம் இருக்குது.  வருமானம் பத்தலை அண்ணே... அதான் அம்மா வீட்டுல வேலை செய்யறேன்."

பாக்கியம் மாடியேறிப் போனாள்.

ப்ளம்பர் அனுதாபத்துடன் சூள் கொட்டினார்.

"எங்க ஊர் பொண்ணுதாங்க. தங்கச்சி முறையும் கூட. நல்லாதான் கட்டிக் கொடுத்தாங்க. அதோட தலையெழுத்து புருஷங்காரன் சரியில்லே. குடிகாரன். இன்னொரு பொண்ணோட வேற பழக்கம். தினம் இதுக்கு அடி உதை தான். அப்புறம் பாக்கியத்தை விட்டுட்டு அந்த பொம்பளை கூடவே போயிட்டான். கட்டட வேலை செய்யறவன். அந்த பொம்பளைக்கும் அதே வேலை தான். ஒரு நாள் புதுக் கட்டடத்தோட உத்தரம் இடிஞ்சு விழுந்து இவங்க ரெண்டு பேருமே நசுங்கி செத்துட்டாங்க. பாவங்க பாக்கியம். புருஷன்னு ஒருத்தன் உயிரோடவாவது இருந்தான். அதுவும் போயிடுச்சு."

அவர் சலிப்புடன் சொல்லச் சொல்ல எங்களுக்கு பாக்கியத்தின் மேல் பரிவும் பாசமும் அதிகமாயிற்று.

ஆறு மாதம் ஆகியிருக்கும் வேலை முடித்து விட்டுக் கிளம்பிய பாக்கியம் தயங்கி நின்றாள்.

"என்ன பாக்கியம்?" என்று கேட்டேன்.

"ஒரு ஐநூறு ரூபாய் முன் பணமா தரீங்களா?" சம்பளத்திலே கழிச்சுக்குங்க. அதோட வர புதன் கிழமை வேலை செய்ய வர மாட்டேன். சேர்த்து வைங்க. மறுநாள் செஞ்சு கொடுத்திடுவேன்.

"என்ன விசேஷம் அன்னிக்கி?"

"அது... வந்து... எங்க வீட்டுக்காரருக்கு நிதி கொடுக்கணும். புடவை-வேட்டி, இனிப்பு, பழம் எல்லாம் வெச்சு படைக்கணும்."

சட்டென கோபம் வந்தது எனக்கு.

"உன்னை அம்போன்னு விட்டுட்டு இன்னொருத்தி பின்னாலே ஓடின உன் புருஷனுக்கு நீ திதி கொடுக்கிறது ரொம்ப முக்கியமா?"

"என்னம்மா செய்ய.. தாலி கட்டிட்டாரு. புள்ளைகளையும் கொடுத்துட்டாரு. செய்ஞ்சுதானே ஆகணும்?"

"எப்படியோ போ..‌ உன்னையெல்லாம் திருத்தவே முடியாது... அது சரி... உன் புருஷனுக்கு திதின்னா வேட்டி மட்டும் தானே வாங்கணும்? எதுக்குப் புடவை?"

பாக்கியம் தலை குனிந்து கொண்டாள்.

"அது...அந்த பொம்பளையும் அன்னிக்கேதானே செத்துது. அதுக்காகத்தான்..."

எனக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

"பைத்தியமா நீ? அவ எக்கேடு கெட்டு போறா உனக்கென்ன. உன் புருஷனுக்கு செய்யறதே அதிகம்னு சொல்றேன். நீ அந்தக் கேடு கெட்டவளுக்குச் சேர்த்து திதி கொடுக்கணும்னு சொல்லிறியே... அறிவிருக்கா உனக்கு..."

பாக்கியம் முனகினாள்.

"அதோட புள்ளைகளும் நல்லா இருக்கணும்னு நினைச்சு தான்."

"நீ உன் பிள்ளைகள் நல்லா இருக்கணும்னு நினைச்சுக்க. வேண்டாம்னு சொல்லலே. அந்த பொம்பளையோட புள்ளைகள் எங்கே கிடந்து சீரழிஞ்சா உனக்கென்ன?"

படபடப்புடன் கேட்டேன்.

பாக்கியம் அவசரமாகத் தடுத்தாள். "அவளோட புள்ளைங்க எங்கியோ இல்லைம்மா. எங்கிட்டே தான் இருக்கு. கண்ணனும் பூங்கொடியும் தான் நான் பெத்த புள்ளைங்க. ஏழுமலையும் வனிதாவும் அவளுக்குப் பொறந்ததுங்க."

எனக்கு குப்பென வியர்த்தது.

புருஷன் இறந்துட்டார்னு தெரிஞ்சதும் பதறி ஓடினேன். கண்ணீர் விட்டு கதறி அழுதேன். பின்னர் மனச தேத்திக்கிட்டு செய்ய வேண்டிய காரியங்களை செய்யத் தொடங்கினேன். அப்ப தான் இறந்தவங்க உடம்ப‌ உறவுக்காரங்க தூக்கிட்டு

போனாங்க. ஆனா அந்த பொம்பள உடம்பு மட்டும் அனாதையா எறும்பு அரிச்சுக் கிடந்தது. யாருமே அக்கறை காட்டலை. ஏழுமலை திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிக்கிறான். வனிதா எதுவுமே புரியாம விளையாடிகிட்டு இருக்கு.

எனக்கு மனசு புழிஞ்சு எடுத்த மாதிரி ஆயிடுச்சு. நான் அப்படியே விட்டுட்டு வந்திருந்தா அந்த புள்ளைங்க ரெண்டும் தெருத்தெருவா பிச்சை தான் எடுக்கணும். இல்லாட்டி கெட்டவங்க கையிலே கிடைச்சா சீரழிச்சிடுவாங்க. மனசு கேட்கலை. பெத்தவங்க பண்ணின தப்புக்கு புள்ளைங்க என்ன பண்ணும்? அதுகளும் என் புருஷனோட ரத்தம் தானே... அதாங்க என் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன். நான் குடிக்கிற கஞ்சியை அதுங்களுக்கும் ஊத்தறேன். திருப்தியா இருக்கு" என்றாள். 

வாயடைத்து நின்றேன் நான்!

அதுவரை ஒதுங்கி நின்ற கணவர் என் முன்னால் வந்தார்.

"பாக்கியம் உன்னை எப்படி பாராட்டறதுன்னே தெரியலைம்மா. உன் பிள்ளைங்க படிப்புக்கு நான் பொறுப்பு. எனக்கு தெரிஞ்ச டிரஸ்ட் இருக்கு. அவங்ககிட்டே சொல்றேன். முழு பொறுப்பையும் அவங்களே ஏத்துக்குவாங்க. இந்தா... ஆயிரம் ரூபாய் இருக்கு. இதை வெச்சு திதி செலவு செய். திருப்பிக் கொடுக்க வேண்டாம். என் அன்பளிப்பா வெச்சுக்கோ.." என்றார் தழுதழுத்த குரலில்.

பாக்கியம் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"ரொம்ப நன்றிங்க அய்யா..‌. பசங்க படிப்பு செலவ ஏத்துக்கறதா சொல்லுறீங்க. சந்தோஷங்க. ஆனா இந்த ஆயிரம் ரூபா மாத்திரம் கடனாவே இருக்கட்டுங்க. என் புருஷனோட திதி செலவு என் சொந்த பணமாகவே இருக்கட்டுங்க. அப்ப தான் என் மனசுக்கு சமாதானமா இருக்கும். வரேங்க அய்யா, வரேங்க அம்மா.."

கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்லும் அந்த பாக்கியத்தை பார்த்தபடியே நின்றோம். எங்கள் கண்கள் பனித்தன.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 3.145.151.141

Archives (முந்தைய செய்திகள்)