Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்

23 Mar 2025 12:58 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures-fair-delimitation

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 22.03.2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இரு மொழியில் பெயர் பலகை

மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு தலைவர்களின் மேஜையின் மீதும் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். அதனையடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம்,

கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட்,

கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, சமூகப் பொருளாதார நலத்திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய எந்தவொரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும், ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை பல்வேறு மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்,

'42வது, 84வது, 87வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்திய மாநிலங்களைப் பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும், தேசிய மக்கள்தொகையை நிலைப்படுத்தலும் ஆகும். இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தி, அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக ஒன்றிய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குத் தங்களது கருத்தைத் தெரிவிக்கும்.

கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினையில் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசுக்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஒருங்கிணைந்த பொதுகருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்த நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை அந்தந்த மாநில பொதுமக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் உரை

கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், ''நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமை குறைவதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல, இது நம்முடைய அதிகாரம்; நமது உரிமைகள்; நமது எதிர்காலத்தில் நலன்கள் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால் நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதி பெறுவதற்கு கூட போராடும் நிலை வரும்.

நமது விருப்பம் இல்லாமல் நமக்கு எதிரான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களை பாதிக்கும் முடிவுகள் நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின் தங்குவார்கள். நமது பண்பாட்டு அடையாள முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றி பாதுகாத்து வரும் சமூக நீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின பழங்குடியினர் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பதை அனுமதித்தாலோ அல்லது நமது மாநில பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைத்தாலோ நமது சொந்த நாட்டில் நாம் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவேதான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது என்று சொல்கிறேன். இன்னொன்றையும் நான் தெளிவாக சொல்கிறேன் ஜனநாயக பிரதிநித்துவத்தை வலுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கை நியாயமானதாக அரசியல் பிரதிநித்துவத்தை பாதிக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்''என்றார்.

தெலங்கானா முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102633
Users Today : 0
Total Users : 102633
Views Today :
Total views : 428066
Who's Online : 0
Your IP Address : 18.97.14.82

Archives (முந்தைய செய்திகள்)