04 May 2025 7:15 pmFeatured
உரை : கனிஸ்டா ரூபன்
முன்னுரை
அறமாவது அரசியலாவது…
அறம் தனிமனித வாழ்வுக்கே உதவுவதில்லை இதில் அரசியலுக்கு எவ்வாறு உதவப் போகிறது இல்லை பொருந்தத்தான் போகிறதா.!? -என்ற ஒரு சலிப்பான கேள்வியோடு இந்த "அறமும் அரசியலும்" என்ற நூலைத் தருகிறார் பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள்.
அறம் பற்றி பேராசிரியர் மு.வ கூறுகையில் அறமானது உடலின் இரத்த ஓட்டம் போன்றது மற்றும் சுவாசிக்கும் காற்றைப் போன்றது எனக்கூறுகிறார்.
இதில் இந்த காற்றானது என் நுரையீரலை 'மட்டும்' சென்று அடைந்தால் போதும் என அரசியல்வாதிகள் நினைப்பது -தான் தவறு, இந்தத் தவறை அவர்கள் புரிந்தாலே போதும் நல்ல ஓர் அரசியல் நாட்டில் நிலவும் என்கிறார் மு.வ.
அறம் வாழுமா
ஒருமோசமான அரசியலுக்கு "அறமின்மையே" காரணம் என்கிறார்," மேலும் குறுகிய எண்ணங்கள் எல்லாத் தவறுகளுக்கும் தொடக்கமாகிறது இந்த சுயநலமான குறுகிய எண்ணம் என்கிறார். அதாவது நான் மட்டும் பாதுகாப்பாக வாழ்ந்தால் போதும் என எண்ணுதல்: அடிப்படையில் தன் வீட்டைப் பாதுகாக்க கதவு, பூட்டு போட்டதுபோல் என்கிறார் மு.வ.
இதில் இந்த கால கட்டத்தில் முக்கியமான ஒன்றை நாம் உணர வேண்டும். -என்னவென்றால் ….
இன்று நம் வீடுகளில் நம் பாதுகாப்பிற்கு நாம் பூட்டு போடுகிறோம், ஆனால் இந்த பூட்டிற்கான சாவி எங்குள்ளது ?? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
பருப்போ, செருப்போ !!!
ஏன்.. சிறு கடுகில் இருந்து பத்திரம், நகை அனைத்தின் கணக்குகளும் நமக்குத் தெரியுமோ இல்லையோ அரசாங்கத்திற்கு தெரியும் (வரி, வரவு,செலவு) . நாம் எதற்கு எவ்வளவு வரி கொடுக்கிறோம் (வரிக்கு வரி) என்பது நமக்கே தெரியாது .. !!…. இப்போது யோசிப்போம் நம் வீட்டு பூட்டின் சாவி எங்குள்ளது ?? நம்மிடமா ??
சரி, மு.வ. கூறிய குறுகிய எண்ணத்திற்கு வருவோம். இந்த சுயநலமானது, ஒருவர் தனக்காக வேலை பார்ப்பவர்களை தனக்காகவே பிறந்தவர்கள் என எண்ணி அவர்களை அடக்கவும், அடிமைப்படுத்தவும் தொடங்குகிறார்கள் அறத்திற்கு எதிராக .
அறத்தின் ஆட்சி:-
உழைக்காத மனிதர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார். உழைப்பிற்கும், அறத்திற்கும், அரசியலுக்கும் என்ன என்று நாம் யோசித்தால்… பேராசிரியர் மு.வ - வின் கருத்து நம்மை நெகிழ வைக்கிறது … எவ்வாறெனில்
உழைக்காத மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய.. அதிலும் உழைக்க மனமில்லா வேளையில் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என எண்ணும் போது… ஏமாற்ற முடிவு -செய்கிறான், இது தொடர்ந்து திருடுதல் போன்ற அறத்திற்கு எதிராக அவன் சிந்திக்கிறார். மேலும் இதையே தக்க வைத்துக் கொள்ள வழிதேடுகிறான் அதுவும் அறத்திற்கு எதிரான தேடலே இது. இந்த தேடல் அவனை அரசியல் நோக்கி செல்ல வைக்கிறது என்கிறார் மு.வ.
அது எப்படி என்றால்.. ஐந்து வருடமாக அரசியல் வாதியின் வாழ்வைப் பார்க்கிறான், பார்க்கும் போது , எண்ண முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் அரசியல் வாதியின் வாழ்வு அந்த உழைக்க மனமில்லா மனிதனுக்கு சரியான தேர்ந்தெடுப்பு வழியாக முடிவெடுக்கச் செய்கிறது என்கிறார் மு.வ.அவர்கள். இதை இன்னும் ஆழமாகப் பார்த்தால்
சாதாரணமாக ஒரு விதை விதைத்தால்.. அது குறிப்பிட்ட காலங்கள் ஆகும் அதன் பலனை நாம் பெற, அதுவரை காத்திருப்பதே இயல்பு. ஆனால் இன்றே விதைத்து நாளையே பலனை அடைய வேண்டும் என்று எண்ணுகிறார்கள் அரசியல்வாதிகள், அது அப்படியே நடக்கவும் செய்கிறது.
"ம்ம்- ஒட்டு மரங்கள் எப்படி வந்ததென நினைத்தால்…இப்படித்தானோ …!"
சரி, இதில் மு.வா அவர்களின் கருத்து இதனாலேயே உழைக்காதோர்க்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் குறைந்த பட்சம் அவர்களின் சிந்தனை அறத்திற்கு எதிராக சென்லாது என்கிறார் மு.வ. அவர்கள்.
அரசியலின் நோக்கம்:-
பணம் தவிர இதில் வேறு எதுவுமே இல்லை. அதிகார வேட்டை , பண வேட்டை, இதற்காகவும் எதுவும் செய்வார்கள் , இதை வைத்தும் எதுவும் செய்தார்கள் என்கிறார் பேராசிரியர்.
பண, சுயநல அரசியலில் மக்களுக்கு பணி செய்ய வந்தோம் என்பதையே மறக்கிறார்கள்- இல்லை இல்லை மறுக்கிறார்கள்.
இந்த அரசியல் இரண்டு வகை தான் என்கிறார் மு.வ.
1. நாளை நடக்கும் நன்மைக்காக உண்மையை பேசுபவர்கள்.
2. இன்று வெற்றி பெறுவதற்காக உண்மையை ஒதுக்குபவர்கள் - [மறைப்பவர்கள்)
இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற மு.வ. அவர்கள் கூறுகையில் நிச்சயமாக உண்மையை ஒதுக்குபவர்கள்தான் என்கிறார். எக்காலத்திலும் பொருந்தும் ஓர் சிறந்த கருத்தே இது.
"உண்மை எப்போதுமே வரிகளுக்கு அழகு தரும் வார்த்தையாகவே உள்ளது என்பது வேதனையான உண்மை".
இந்த அதிகார வேட்டை நிறைந்து ஆளும் கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நாடு கடத்தப்படுகிறார்கள் அல்லது சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார்கள் என்று பேராசிரியர் பல ஆண்டுகளுக்கு - முன்பே சொன்னது பேராச்சரியமாகவே உள்ளது.
இப்பதிவில் இன்று இன்னும் அதிக சுவாரஸ்யம் தருவது என்னவெனில்.. இன்று "ஆளுங்கட்சியைப் பற்றி நினைத்தாலே சிறை என்பதுதான்"
ஏன்னா நம்ம வீட்டு சாவி-நம்மிடம்தான் இல்லையே! இதையெல்லாம் பார்க்கும் போது முடியாட்சியே பரவாவாயில்லையோ என வருத்திக்கூறுகிறார் மு.வ.
இவ்வித ஆட்சியாளர்களை நாம் உருவாக்கவில்லை இழுத்து வைக்கிறோம் என்று ஒரு கதையும் கூறுகிறார் மு.வ.
ஒரு தெருவில் பத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களிடையே வரும் தகராறுக்காக அவ்வழிச் செல்லும் பெரியவரை அழைத்து ஒரு தீர்ப்பைக் கேட்பர், அவரும் ஏதோ ஒரு தீர்ப்பைச் சொல்வார். இத்தீர்ப்பு எந்தப் பக்கத்திற்கு சாதகமான தீர்ப்பாக வருமோ அவர்கள் அவ்வழிப் போக்கரை…
நீங்கள் தான் தலைவர், 'தலைவர் வாழ்க" என்று ஒருவரைச் சொல்லி அவரையே தலைவராக இழுத்து வைக்கும் இந்நிலைதான் மக்களிடம் அரசைத் தேர்ந்தெடுக்கு மனப்பான்மையாகவும் உள்ளது என்கிறார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று "அவ்வழிப் போக்கருக்கு அங்கு நடந்தது எதுவும் தெரியாது என்பதுதான்". ஆனால் அவரோ தன்னைத் தீர்ப்பு சொல்ல அழைத்திருக்கிறார்கள் என்று… எதையோ சொல்லிக் செல்வார் என்பதே உண்மை.
இதற்காகத்தான் மு.வ முன்பே சொன்னார்- கல்வி அறிவு இல்லாத உழைக்காத மக்களுக்கு தண்டணை கொடுக்க வேண்டும் என்று.
"கல்வி அறிவு அற்ற அரசியல் மோசமாகத்தான் இருக்கும்" என்கிறார்.
மக்கள் தவறா??
மக்கள் தவறா என்ற கேள்விக்கு 'ஆம்' என்பதே பதில்.
நோய்ப்பட்ட ஒருவன் தன் வலியைப் போக்க மயங்க மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார், அதுவே அவனுக்கு சுகமாய் பழகி விடுகிறது ஏனெனில் அப்போதைய அவன் வலி தீர்ந்தால் போதும். வலி, மயக்க பொருட்கள் நாளை அவனை அழித்துவிடும் என்றாலும் அவனுக்கு கவலையில்லை. ஏனெனில் இன்றைய வலியைப் போக்குவது மட்டுமே முக்கியமாகிறது. இதுதான் மக்களின் தவறான மனநிலை என ஒப்பிடுகிறார்.
அதாவது நான்கு ஆண்டுகள் தப்புகள் செய்யும் ஆட்சியானது இறுதியில் வாக்களிப்பிற்கு சில மாதங்கள் முன்பு மக்களை ஏமாற்ற ஏதேதோ செய்கிறது. முன்பின் நடந்ததை, நடப்பதை நினைக்காத மக்கள் , இந்த பொழுது, இன்றைய வலி என்ற குறுகிய எண்ணம் கொள்வதேதான்..
இதில் கவனிக்கவேண்டிய ஒன்று ஏமாற்றுகிறார்கள் எனத் தெரிந்தாலும்…. இன்றைக்கு சூழலுக்கு இதுவே சரியானது, எனக்கு பிடித்தது என்கிறார்கள் மக்கள். "ஆனால் பிடித்தது வேறு தேவை என்பது வேறு". என உணர்ந்தாலும்… நிறம் இனம் மதம் அடிப்படையில் மனங்களைக் கொடூரமாக்கிக் கொள்கிறார்கள் என்பதே நிஜம்.
மேலும் மக்களின் சிந்தையில் யார் எதிர்கட்சி ?? எதிர்கட்சி என்பது மக்களுக்கு எதிரானதா ?? இல்லை தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர் ஆகி விடுமா ?? என சிந்திக்க வேண்டும்.
அதிக அளவில் உடலால் உழைத்து வாழும் மக்களின் சிந்தனை குறைவாக இருக்கும் என அறிஞர்கள் கூறுகிறார்கள் என்கிறார் பேராசிரியர். ஆனால் இன்று இயந்திரங்களிடம் உடல் உழைப்பை கொடுத்துவிட்டு தன் அறிவை மட்டுமே கொண்டு செயல்படும் காலம் இதுவாகிவிட்டது. ஆயினும் இன்றும் ஏன் படித்தவர்களிடமும் அறத்திற்கு எதிரான எண்ணங்கள் தோன்றுகிறது என்பது ஆச்சரியத்துக்குரியதே.
உரிமை பஞ்சம்:
இத்தலைப்பில் மு.வ அவர்கள் கூறுகையில்… உரிமை தராத தாயைக் கொன்ற மகன் இருக்கையில், தனக்கு உரிமை தராத நாட்டை ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்கிறான் என்று வேதனையோடு வினவுகிறார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியது என்றால்…. இன்று- உரிமை என்பது ???
எக்ஸ்-ரே கருவி ஒன்று இதயத்தை அறிய கண்டு பிடிக்க வேண்டும். அப்போதாவது மக்கள் இந்த அரசியல்வாதிகளின் உள்ளத்து எண்ணத்தை அறிவார்கள் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் மு.வ.
மொத்தத்தில் அனைத்து தவறுக்கும் தொடக்கம் குடும்பம்தான் என்கிறார்.
அறமில்லா குடும்பம்தான் அறமற்ற அரசியலுக்கு காரணம்.
பல ஆண்டுக்கு முன்பே அறம் இவ்வாறென்றால் இன்று 'அறம் அகராதியில் தேடும் அளவில்தான் உள்ளது'.
"அறநாட்டம் கொண்ட மனிதர்கள் இன்னலுற்றாலும் அமைதியாக வாழ்கின்றனர்". என்கிறார்.
அறமும், அறிவும் சேர்ந்தால் மட்டுமே அறஆட்சி நிலவும் என்றும் இன்னும் அறிவும், பொறுப்பும் மக்களுக்கு வளர வில்லை எனக் கூறுகிறார் மு.வ.
முடிவுரை
சிந்தனை மைந்தன், அறிவின் ஊற்று ஓர் உயர்ந்த வழியைச் சொல்கிறார்.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் அறம் உடைய ஓர் நபரை அக்கிராமத்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் கடைசியில் ஒரு நபர் நாடாளும் தகுதி அடிப்படையில் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த நபரின் அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தவறுகள் நடந்தால் எந்த கிராமத்து மக்களால் அந்த பேர் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த மக்களுக்கு அந்த நபரை ஆட்சியிலிருந்து நீக்க உரிமையும், சட்டமும் இருத்தல் வேண்டும் என்கிறார் அறிவுச்சுடர் மு.வ.
இந்த உயர் சிந்தனை வழி அமல் படுத்தப்பட்டால் நிச்சியம் அறவழி அரசியல் சிறக்கும். வீடும், நாடும் அறமாகும்.
பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்று அடையட்டும்.