26 Jul 2026 10:12 pmFeatured

அருட்பிரகாச வள்ளலார் - கருவூர் இரா பழனிச்சாமி
திருவருட்பிரகாச வள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கினார். சாதி, மத பேதங்களை ஒழித்து, சாதிகள் இல்லை, மதங்கள் இல்லை, மனிதர்கள் எல்லோரும் சமம் என்ற கொள்கையை வலியுறுத்தி, பசிப்பிணி போக்க அன்னதானம், ஜீவகாருண்ய ஒழுக்கம், சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் போன்றவற்றை நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறியலாம். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூர் என்கின்ற கிராமத்தில் இராமய்யாப் பிள்ளை சின்னம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். இல்லற வாழ்க்கையில் ஈடுபட மறுத்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்.
கல்வியில் நாட்டமில்லை. முருகக் கடவுளை வணங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி. முருகன் சந்நதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று மனமுருகப் பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். அப்பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.
சமய நல்லிணக்கம்: வள்ளலார் வடலூர் சென்று அங்கு நிலையாகத் தங்குவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் யாத்திரை சென்றுள்ளார், திருவொற்றியூர் மற்றும் சென்னை நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கந்தக் கோட்டம் சென்று கந்தப் பெருமானை வழிபட்டு வந்துள்ளார். அனைத்து, சமய நல்லிணக்கத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றியுள்ளார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் 1867 ஆம் ஆண்டு சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றுவரை வள்ளலார் பெயரில் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றுவிக்கம் வடலூரில் நடைபெறுகிறது. மக்களைப் மயக்கப் பிடியிலிருந்து விடுவிக்க வள்ளலார் செய்த சீர்த்திருத்தங்களில் மற்றொன்று மக்களைக் கள் குடியிலிருந்து சீர்திருத்துவதாகும். வள்ளலார் வாழ்ந்த சமுதாயத்தில் மக்கள் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இதனால் நாடு பொருளாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சீர்கேடுகளை அடைந்துள்ளது. எனவே இக்கள் குடியை மக்களிடமிருந்து அகற்ற வள்ளலார் பெரிதும் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார். கள் உண்ணுவது ஒருவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை “கள், காமம், கொலை, களவு, பொய் இவையனைத்தும் கொடிய துன்பத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேட பாவம், எனினும் கள் உண்டவருக்கு காமம் உண்டாகாமல் இருக்காது, கொலை செய்யத் துணிவு வராமல் இராது. அவன் களவு செய்யாமல் இரான். பொய் பேச அஞ்சான், ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா'' என வலியுறுத்தினார். இராமலிங்கர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சமரச வேத சன்மார்க்க சங்கம்:
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளால் 1865-இல் நிறுவப்பட்டு, பின்னர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு சீர்திருத்த அமைப்பு ஆகும். இது சாதி, மதம், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, கருணையுடன் இறைவனை அடைவதே உண்மை வழி (ஜீவ கருணை) என்ற கொள்கையை வலியுறுத்தியது, மேலும் பசிப்பிணி நீங்க தர்மசாலைகளை நிறுவி, பக்தி மார்க்கத்தில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தது. பக்தி மார்க்கத்தையும், சமூக சீர்திருத்தங்களையும் இணைத்து, சாதி, மத பேதங்களை எதிர்த்தது, 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற மந்திரத்தைப் பரப்பியது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதன் பொருள் - எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான, அறிவுநூல்களின் முடிவான உண்மையான மார்க்கம் (சன்மார்க்கம்) இதுவாகும். இது எல்லா உயிர்களையும் ஒன்றெனப் பாவித்து, தயவு (கருணை) என்னும் வழியில், இறைவனது ஜோதியை (அருட்பெருஞ்ஜோதி) அடைவதே சன்மார்க்கம் எனப் போதிக்கிறது.
மத நல்லிணக்கம்:
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி வடிவில் உள்ளார் என்று கூறி, மதங்களின் பெயரால் நடக்கும் சடங்குகள், மூடநம்பிக்கைகள், சிலைகளை வணங்குவதை எதிர்த்தார். மனிதனை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் வாழச் செய்வதற்கு உருவாக்கப்பட்ட மதங்கள், இன்று மனிதனை அடிமையாக்கி கொண்டிருக்கிறது எந்த மதமும், கடவுளும் யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. இந்து சமயத்தில் அன்பே சிவம் என்று பகவத் கீதை சொல்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பாகவும், இல்லாதவர்களுக்கு தேவையானவையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதே போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பையும், அமைதியையும் போற்றி வாழ வேண்டும் என்று பௌத்த மதம் கூறுகிறது. மனிதத்தை காத்து வாழ வேண்டும் என்று இஸ்லாமிய மதம் கூறுகிறது. மதங்கள் உருவானது மனிதர்களை பிரிப்பதற்கு அல்ல ஒன்றாக வாழ்வதற்கே என்பதை அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் மக்களுக்கு நல்லவையே போதிக்கிறது. அந்த நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு வாழ வேண்டும். பகுத்தறிவு உள்ள மனிதர்களாலும் ஒற்றுமையாக வாழ முடியும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்தால் போதும், நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யம்:
வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யம் என்பது கடவுளின் அருளைப் பெறுவதற்கும், ஞானம் அடைவதற்கும் அடிப்படையானதாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி, துன்பம் நீக்கி, பசிப்பிணி போக்கி, உயிர்களின் நலனுக்காக உழைப்பதே ஆன்மிகத்தின் அடிப்படை என வலியுறுத்துவதாகும்; இது கடவுள் அருளைப் பெறவும், இறைவனை அடையவும் உதவும் மிக முக்கியமான வழிமுறை, குறிப்பாக பசி நீக்குதல், நோயுற்றோர்க்கு உதவுதல், உயிர்க்கொலையைத் தவிர்த்தல், எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதி இரக்கம் காட்டுதல் போன்ற செயல்களை உள்ளடக்கியது.
'சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே' 5566
சாதி மதம் நெறிகள் சாத்திரங்கள் கோத்திரங்கள் முதலியவற்றில் மனம் கொண்டு ஒருவரோடு ஒருவர் பூசலிட்டு வருந்துகின்ற மக்களே! இவற்றிற்காக ஊர்தோறும் அலைந்து வீணாய் கெடுவது உங்கட்கு அழகாகாது;
ஆறாம் திருமுறை / ஆன்ம தரிசனம் (022)
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும்
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே. 4075
'சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' (அகவல்)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே!
மதம் - கொள்கை. ஒவ்வொரு சமயத்திலும் கொள்கையில் பலவாதலால் அவற்றை மதம் என வழங்குவர். சாதிதோறும் ஒழுக்கமும், உள்ளப்பான்மையும், சூழ்நிலையால் வேறுபடுதலின் அதனை வேறு வைத்து விளம்புகின்றார். சாதியும், மதமும், சமயங்களும் மக்களினத்தை ஒன்றுபடுத்தாது வேறுபடுத்துவது பற்றி, “சாதியும், மதமும், சமயமும் தவிர்ந்தேன்” என்று கூறுகின்றார். ஒரு சாதிக்குள்ளே சமயங்களும் மதங்களும் வேறுபட்டு அவர்களைத் தனித் தனியாகப் பிரிந்தொழியச் செய்தலால், “தவிர்ந்தேன்” என எடுத்து மொழிகின்றார். சாதி சமய வேறுபாடுகளைத் தோற்றுவித்து பிரிந்து நின்று வாழ்தற்குரிய சூழ்ச்சிகளையும் வகைகளையும் எடுத்துரைப்பதால் சாத்திரங்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் ஒருமை நிலைமைக்கு ஊறு செய்வதால், “சாத்திரக் குப்பையும் தணந்தேன்” என்று சலித்து உரைக்கின்றார். தணத்தல் - நீங்குதல். யாவர்க்கும் ஒத்த நீதியும் ஒத்த நிலைமையும், யாவர்க்கும் பொதுவாய் நிற்கும் மெய்ப்பொருளும், நிலைத்த வாழ்வும், அவ்வாழ்க்கை வழி எய்தும் நலமும் மக்களினத்தின் ஒருமித்த வாழ்வுக்கு உறுதியாதலால் அவையே வேண்டும் என்றற்கு, “நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார். திருவருள் ஞான ஒளியே தனக்கு உருவாகக் கொண்டதாதலின் சிவ பரம்பொருளை, “அருட் பெருஞ் சோதி” என்கின்றார். அதற்குத் தோற்றமும் நடுவும் கேடும் இல்லை என்பது பற்றி, “ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் சோதி” என்று விளக்குகின்றார். அருட் பெருஞ் சோதியே முழுமுதலாகக் கொண்டமையின் அதுவே எல்லாம் என வடலூர் வள்ளல் கருதுகின்றமை காண்க.
சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார். போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக” வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்“. என்று எதிர்த்துரைத்திருக்கிறார். நிலவிய மூட நம்பிக்கைகள், சாதி வழிப்பட்ட உயர்வு தாழ்வு மனப்பான்மைகள், வைதிகர்களின் புரட்டு சடங்குகள் இந்து மதத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என சாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற மனித நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும். எல்லா வேறுபாடுகளும் நீங்கி ஒருமையின் உலகெலாம் ஒங்குக' என உலக ஒருமைக் கழகத்துக்கு வித்திட்டுள்ளார் இராமலிங்க வள்ளலார். ஆரியர்-அல்லாதார் போன்ற இன வேற்றுமை, வெள்ளையர்-கறுப்பர் என்ற நிற வேற்றுமை முதலிய கொடுமைகளும் உலகத்தினின்றும் ஒழிக்கப்படல் வேண்டும். இது நிகழ்ந்தால்தான் வள்ளலார் கண்ட உலக ஒருமைப்பாட்டுக் கனவு உருப்படியாக முடியும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமஉரிமை காண வள்ளலார் வழி நடப்போம்! உலக ஒற்றுமை காண்போம்!!
'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி'
(நன்றி : இராமலிங்க அடிகளார் வரலாறு & Google)






Users Today : 6
Total Users : 117623
Views Today : 7
Total views : 448150
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138