08 Feb 2025 12:44 amFeatured

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சரமாரியான கேள்விகளை எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் 3ஆவது நாளாக விசாரணை நடந்தது. அப்போது, அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே மசோதாக்களை அவர் கையாண்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி வாதிட்டார். மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பும் ஆளுநர், அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா கூறினார்.
அதே போன்று மசோதாக்கள் மீது எவ்வித முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால், அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என நீதிபதி கூறிய போது, அரசியல் காரணங்களுக்காக துணைவேந்தர் மசோதா கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
மத்திய சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார் என்று தலைமை வழக்கறிஞர் வினவினார். மேலும், மசோதாவில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை சேர்க்க ஆளுநர் விரும்பியதாகவும் வெங்கட் ரமணி குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய நீதிபதிகள், 2 ஆண்டுகளாக அவரிடம் உள்ள மசோதா குறித்து மாநில அரசிடம் தகவல் பரிமாற்றம் ஏதேனும் இருந்ததா என்று வினவினார். அதற்கு இல்லை என்று பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், 2 மாதங்களில் ஆளுநர் தனது முடிவை தெரிவித்து விட்டதாகவும், அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.
பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம், துணைவேந்தர்கள் குறித்த அக்கறையில் மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தால், அதற்கான காரணத்தை குடியரசு தலைவருக்கு குறிப்புடன் ஆளுநர் அனுப்பினாரா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குடியரசு தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பும் போது அதற்கான காரணத்தை கூற தேவையில்லை என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாட்டின் குடியரசு தலைவரே காரணத்தை கேட்டு தெரிந்து கொள்வாரா என்று பதில் கேள்வி எழுப்பினார். ஆக, அரசியலமைப்பு பிரிவுகளை புறந்தள்ளி விட்டு தான் ஆளுநர் செயல்படுவார் என்பதை தங்கள் வாதத்தின் அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை நிறுத்தி வைத்தால் அரசு நிர்வாகத்தில் "முட்டுக்கட்டை" ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் முழுமையாக முட்டுக்கட்டை ஏற்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா உட்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமத்தை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ஒப்புதலுக்காக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அவரும் இவை ஏற்புடையதல்ல எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளதால், இந்த விஷயத்தில் ஒரு 'முட்டுக்கட்டை' ஏற்பட்டுள்ளது.' என்று தெரிவித்தனர்.
மேலும், ' தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு , மீண்டும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பரிந்துரைத்தாரா?' என்று ஆளுநர் தரப்பு வழக்கறிஞரான ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ' மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான தேடுதல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைப்பு குறித்த தமிழக அரசின் சட்டத்திருந்த மசோதா, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் உள்ளது. யுஜிசி விதிமுறைகளின்படி, தேர்வு மற்றும் தேர்வுக் குழுவை அமைக்கும் அதிகாரம் தமக்குதான் உள்ளதென்று ஆளுநர், மாநில அரசுக்கு முறையாக தெரிவித்துள்ளார்.' என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வெங்கடரமணி தமது வாதத்தை முன்வைத்தார்.
'மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, ஏற்கனவே உள்ள மத்திய சட்டத்திற்கு முரணாகவோ, மாநில உயர் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரங்களை மீறும் வகையிலோ இருக்கும்போது மட்டுமே, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254 இன் கீழ், அந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும்.' என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை வரு்ம் 10 ஆம் தேதிக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37