20 Mar 2019 5:32 pmFeatured

-கவிமாமணி முனைவர் வதிலை பிரதாபன்
அரசியல் வானில் அன்பை விதைத்து
அறத்தின் வழியே அரணாய் நின்று !
அழகிய தமிழ்தனை அடுக்காய் சொல்லி
அகிலம் வியக்கும் அறிஞர் அண்ணா!!
அண்ணா என்பேன் அகமோ மலர்ந்தது
அறிவே என்பேன் ஆற்றல் பிறந்தது !
அவனி போற்றும் அண்ணன் உன்னை
அத்தனை நெஞ்சும் அள்ளி முகர்ந்தது !!
முகர்ந்த மலரோ முல்லைச் சரமோ
முதிர்ந்த அறிவோ முத்துச் சுடரோ !
முனைநது நின்றே முரண்களை உடைத்து
முந்தியோர் நினைவினை மூழ்கிடச் செய்தாய் !!
செய்தவை யாவும் செம்மொழி சிறக்க
சென்றோர் செய்யா செயல்தனை விளக்கி !
செவ்வனே ஆற்றிய சொற்போர் தனிலே
சிந்தையை தீட்டிடும் சொல்வளம் படைத்தாய் !!
படைத்தவை யாவும் பாமரர் சிறக்க
படித்தோர் பலரும் பண்புடன் நடக்க !
பழித்தோர் முகத்தினில் பதிந்திடும் கரியென
பண்பற் றோற்கு பயத்தினை தந்தாய்!!
தந்ததை உலகோர் தரமாய் ஏற்க
தந்தை பெரியார் தடத்தினில் நடந்து!
தம்பியர் பலரைத் தம்முடன் இணைத்து
தாயகம் சிறக்க தரணியில் வாழ்ந்தாய்!!
வாழ்ந்தவுன் காலம் வாழிய வாழி
வையகம் நிறைந்து வைரம் தனைப்போல் !
வந்தோர் சென்றோர் வகைபல வெனினும்
உந்தன் நினைவை விஞ்சியோர் இல்லை !!
இல்லா திருந்தும் இயன்ற நற்பொருளை
இல்லார் தமக்கே ஈந்த உன்பண்பினை
இருப்போர் படித்து இனிதாய் வாழ்ந்தால்
இல்லான் என்போன் இல்லாது போவான்!!
போனது எங்கே பொன்மன அண்ணா
புன்னகை பூத்த பைந்தமிழ் மன்னா !
பவளஉன் உதட்டில் பிறந்த பூக்கள்
பூத்திட மறுக்கவோ போய்ச் சேர்ந்தாயோ !
சேர்ந்தோர் யாவும் செம்மைப் படவே
செய்தவை அனைத்தும் சீர்திருத் திடவே!
சுய மரியாதையை சிரமேற் கொண்டு !!
சுய நலமற்றே செய்தாய் தொண்டு
தொண்டு செய்தே துவளா உள்ளம்
தூயவன் உந்தன் தாய்மை நெஞ்சம் !
தன மானத்தை தம்பியோர் மனங்களில்
தானமாய் விதைத்த தகையோன் நீயே !!
நீயோ ஏழையின் நெருங்கிய நண்பன்
நினைந்தே மகிழும் நிம்மதி தந்தோன் !
நாவினில் பிறந்த நன்னெறிச் சொல்லால்
நாடுகள் போற்றும் நன்மதிப் புற்றாய் !!
புற்றால் ஒருநாள் புதைவாய் என்று
படித்தோன் வைத்தியன் புரிந்திட வில்லை!
புனைந்த நூற்கள் புத்தகப் பையில்
புரட்சி மலரோ புவியினில் இல்லை !!
இல்லை யெனினும் இருப்பதைக் காண்பேன்!
இனத்தோன் பெயரில் இருப்பிடம் தந்தாய்!
தமிழன் பெயரால் தலை நிமிர்ந்திடவே
தமிழ் நாடென்றே தரணிக் குரைத்தாய்!!
செய்தவை யாவும் செயற்கரி யெனினும்!
சீர்மிகு சிந்தனை செய்பவ ரெவரும்
செவ்வழி சென்றிடச் சுடரொளி நீயென
சிறுபெரு தலைவரும் சொல்லிடக் கண்டேன்!!
கண்டவர் வியக்க கருத்தினில் சிறக்க!
கல்லா தோரும் கனிவுடன் திளைக்க!
குன்றிய உணர்வில் குறையா உரத்தை
குன்றெனக் குவித்து கொடையென மறைந்தாய் !!
மறைந்தா யெனினும் மறக்கா நெஞ்சினர்
மலைபோல் அரணென மொழிதனை காத்து!
முனைப்பாய் முயன்றே மும்மொழி சிறக்க !
முத்தமிழ் போற்றி மகுடம் தரித்தாய்!!
தரித்தவை யாவும் தந்திட்ட அண்ணா!
அகவை ஆண்டுகள் அய்ம்பது கடந்தும்
ஆற்றிய பணிகள் ஆழ்மனம் நிறைய
அடுத்தவர் வியக்கும் அண்ணனின் எளிமை!!
எளிய உளத்தின் ஏற்றச் சிந்தனை
இனிதே இயற்றிய இனியநற் றமிழால் !
இதயம் குளிர இருப்போன் படிக்க
இதமாய் செய்தனன் இவர்தான் அண்ணா !!
அண்ணா உன்னை அன்போ டழைப்பேன்
அழைப்பினில் வந்தால் அக மகிழ்ந்திடுவேன் !
ஆயிரம் தலைமுறை அழியா தமிழே !!!
ஆசைகள் கோடி அவனிக்கு வாரீர் !!
வாவென அழைப்பேன் வாரீர் தமிழே
வாலிபர் மனங்களை மாற்றிடு முகிலே!
வாழ்வு சிறந்து வளத்தால் பெருக
வீரிய விதைகளை விதைப்பீர் அண்ணா !!






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37