11 May 2021 9:05 amFeatured

கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கணக்கில்கொண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞரின் பிறந்த நாள் அன்று ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.
இத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தான் முதல்வராக பதவியேற்ற கடந்த 7ம் தேதி சுமார் 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் ரூ.2 ஆயிரம் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டார்.
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்வின் துவக்கமாக 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். இத்தொகை நியாயவிலைக் கடைகள் மூலமாக வரும் 15ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை விநியோகிக்கப்படும்.
இதற்கான டோக்கன் வீடுகள் தோறும் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை 3 நாட்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடுதோறும் சென்று டோக்கன்
விநியோகிக்கவுள்ளனர்
கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Users Today : 31
Total Users : 106477
Views Today : 35
Total views : 434204
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37