Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இட்லி – புதுவைப் பிரபா

16 Feb 2022 2:46 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures idli

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-65
படைப்பாளர் - புதுவைப் பிரபா, புதுச்சேரி

துவரை நூறு கதைகள்தான் எழுதியிருப்பார், சபாபதி. ஒன்றுக்கும்  உதவாத முப்பது நாற்பது  ஒருபக்க கதைகளும் அதில் அடக்கம். ஆனால் சிறுகதையை தானே வடிவமைத்தது  போன்று, பெருமை பேசுவார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் வரிசையில் தன் பெயரையும் தானே சேர்த்து கொண்டு பேசுவார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளிடமும் மகனிடமும் எப்போதும் தன் கதைகள் பற்றியும், அதை பாராட்டி பேசியவர்களின் பெயர் பட்டியலோடான விவரங்களுடன்  விலாவாரியாகப் பேசித்  தீர்ப்பார்.  காவல் நிலையத்தின்  முதல் தகவல் அறிக்கை கூட அவ்வளவு விலாவாரியாக இருக்காது. ஒரு கட்டத்தில், சபாபதி, பேசத் தொடங்கினாலே, ' அப்பா... எனக்கு எழுதுற வேலை இருக்குப்பா', ' எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்குப்பா' என்று சாக்குபோக்கு சொல்லி, தப்பித்து ஓடி விடுவார்கள், பிள்ளைகள்.

ஆனால், சபாபதியின் மனைவி மாலதி மட்டும், மறுப்பேதும் சொல்லாமல் அவர் பேச்சை, தொடக்கம் முதல் முடிவு வரை ஆர்வம் குறையாமல் அப்படியே கேட்பாள். அவருடைய பேச்சு, அவளுக்கு பழகி விட்டிருந்தது. சபாபதியின் சுயபுராணத்தின்  எந்த அத்தியாயத்திலும் அவள் அலுத்துக்கொண்டதோ,  முகம் சுளித்ததோ இல்லை. தன் மனைவியின் இந்த பொறுமை மிக்க  செயல்பாட்டை ஒரு போதும் மதித்ததே இல்லை,சபாபதி.  அவர் அளவிற்கு, உலக நடப்புகள் பற்றியோ இலக்கியம் பற்றியோ தன் மனைவிக்கு எதுவும் தெரியாது என்பதை தீர்க்கமாக அவர் நம்பியதே  அதற்குக்  காரணம்.

*   *   *   *   *

சாப்பாட்டு மேசையில் சுடச்சுட இட்லிகளை கொண்டு வந்து வைத்தாள், மாலதி.

"ஏங்க ... எல்லாரும் சாப்பிட வாங்க "

மூன்று பேரும் வந்து அமர்ந்ததும், இட்லியை, அவள் பரிமாறத்  தொடங்கியபோது, சபாபதி ஆரம்பித்தார்.

     "ஏம்மா திரும்பவும் இட்லியா?"

" இல்லீங்க. இந்த குளிர்காலத்துல, இப்டி, சுடச்சுட இட்லி சாப்பிட்டா, நல்லா இருக்குமேன்னுதான்..."

" நைட்ல இட்லி சூப்பர் டிபன்தான்பா. அதுவும், அம்மா அரைக்கிற, வெங்காயச் சட்னிக்கு ..."  எச்சில் கூட்டி விழுங்கினாள், சபாபதியின் மகள்.

" இட்லி, ஈஸியா டைஜஸ்ட்  ஆயிடும்ப்பா "  மகனும் ஆதரித்தான்.

"ஏ...  கொஞ்சம் இருங்கப்பா. நான் உங்க அம்மாவ, இட்லி சுட வேணாம்னு சொல்லல. இட்லிய, வேற மாதிரி வடிவத்துல  சுட்டுக் கொடுத்தா என்னன்னு தான் கேட்கிறேன். அறுநூறு, எழுநூறு  வருஷத்துக்கு முன்னாடி கிருஷ்ண தேவராயர் காலத்துல கண்டுபிடிக்கப்பட்ட  இட்லி,  என்ன வடிவத்துல  இருந்துதோ, அதே வடிவத்தில் தான் இப்போ வரைக்கும் சுட்கிட்டு இருக்கா. போரடிக்குது. ஒரு மாற்றம் வேணாமா?"

மாலதி சபாபதியையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

" உனக்கு என்னடி, நான் சொல்றது ஒன்னும் புரியலையா? புரியாது. இரு. உனக்கு புரியிற மாதிரி சொல்றேன். இந்த இட்லிகள, இப்படி ஒரே மாதிரி, 'மொழுக்குன்னு '  சுடாம, மாத்தி ... ஒரு நட்சத்திரம் மாதிரி.... நிலா மாதிரி... ஏன் சுடக்கூடாதுன்னு  கேட்கிறேன்.  கல்யாணமான  இந்த இருவத்தஞ்சி வருஷத்துல, இத மாத்தணும்னு உனக்கு ஏன் தோணல. குண்டு சட்டியில குதிரை ஓட்டிகிட்டு ..."

இப்போதும் மாலதி ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்தாள். சபாபதியின்  மகனும் மகளும், அப்பா அறிவுபூர்வமாக ஏதோ சிந்தித்து, எப்படியெல்லாம்  பேசுகிறார் பார் என்ற பெருமிதத்தோடு, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, புன்னகைத்துக் கொண்டனர்.

சபாபதி தொடர்ந்து பேசினார்.

" அதுவுமில்லாம... ஒரு சட்னியோ  சாம்பாரோ  இல்லாம, இந்த இட்லியை வெறுமனே வாயில் வைக்க முடியுமா?"  சொல்லிவிட்டு, போரில் எதிரியை வெட்டி வீழ்த்திவிட்ட  வெற்றிக் களிப்போடு, இட்லியை பிட்டு வாயில் வைக்க போனபோது,

" உங்கள ஒன்னு கேக்கவா?'  மெதுவாக தொடங்கினாள் , மாலதி.

 நக்கலாக பார்த்தார், சபாபதி.

" நீங்க எத்தனை வருஷமா கதை எழுதிட்டு இருக்கீங்க?"

இந்த கேள்வியை  எதிர்பார்க்காத சபாபதி, சம்பந்தமில்லாமல் அவள் ஏதோ பேசப்போகிறாள் என்கிற எரிச்சலோடு நெற்றியை சுருக்கிக்கொண்டு, 

"இருவத்தி ரெண்டு வருஷமா" என்றார்.

"ம்ம்... இந்த இருபத்தி ரெண்டு வருஷமா, நீங்க மட்டும் ஒரே மாதிரி தானே உங்க கதைகள எழுதிட்டு வரீங்க. நீங்க எழுதின முதல் கதைக்கும், கடைசியா எழுதின கதைக்கும் எனக்கு தெரிஞ்சு எந்த வித்தியாசமும் இல்லையே!  இட்லி மாதிரியே ...! உங்களுக்கு இட்லி போர் அடிக்கிற மாதிரி தானே, எழுத்தில் ஒரு முதிர்ச்சியும், வளர்ச்சியும், வித்தியாசமும், இல்லாம, ஒரே ஃபார்முலாவுல, ஒரே மாதிரியான நடையில எழுதிக்கிட்டு வர உங்களுடைய கதை எவ்வளவு போர் ...? ஏதோ... பத்திரிக்கை ஆசிரியர்களோட சிநேகிதத்தாலும், அவங்களோட உங்களுக்கு இருக்கிற பழக்கவழக்கத்தாலும்,  உங்க பேர் போட்டு அனுப்புற கதைய, நிராகரிக்க முடியாம, ஒன்னு ரெண்டு  கதைகள போட்டுடறாங்க. உங்க பேர் இல்லாம, வேற பேர்ல உங்க கதைய அனுப்பி பாருங்க... உங்க கதையும் சட்னி இல்லாத இட்லி போலத்தாங்க. உங்க பேர்ங்கிற  சட்னி இல்லனா..."

     இப்படி எப்போதும் பேசாத அம்மாவை பிள்ளைகள் ஆச்சரியத்தோடும்  தன் மனைவியை சபாபதி ஒருவித பதட்டத்தோடும்  பார்த்துக்கொண்டிருக்க, அவள் தொடர்ந்து பேசினாள்.

"அப்புறம் இன்னொரு விஷயம். ஒரு எழுத்தாளர்கிட்ட மிக அவசியமா இருக்க வேண்டியது, நேர்மை. இன்னொருதவங்களோட கருத்த, எடுத்து ,தன்னோட சொந்த கருத்தா, கதை சொல்றது  எவ்வளவு அபத்தமானது ?

இப்போ... நீங்க பேசின இட்லி விஷயத்த, பல மேடைகள்ல,  எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியிருக்கார். சமீபத்துல, நான் பார்த்த ஒரு  யூ- டியூப் வீடியோவுல,  அவர் வாயால இந்த செய்திய நான் கேட்டிருக்கேன்.  நீங்க, என்கிட்ட நிலா மாதிரி இட்லி கேட்டது தப்பில்லைங்க. அதை நீங்களாகவே சிந்திச்சு கேட்ட மாதிரி கேட்டீங்க பாருங்க... இந்த தப்ப, உங்க கதைகள்ல, பல இடங்கள்ல  நான் பார்த்திருக்கேன்.

இருவத்தி ரெண்டு வருஷமா, 'இவளுக்கு  என்ன தெரியும்ங்கிற' எண்ணத்துல, நீங்க என்னை அலட்சியப்படுத்தனதால,  உங்ககிட்ட நான் எதுவும் பேசலையே தவிர, 'நெட்ல' நெறைய படிச்சிக்கிட்டும்  நெறைய பேரோட  பேச்சை கேட்டுக்கிட்டும்தாங்க இருக்கேன். நீங்க எழுதின ஒவ்வொரு கதையைப் பத்தியும் என்கிட்ட கருத்து இருக்கு.  சரி, அதெல்லாம் எதுக்குங்க.  இட்லி மாதிரி ஒரே மாதிரியா  இல்லாம, குண்டு சட்டியில குதிரை ஓட்டாம, முதல்ல நீங்க நல்ல கதையா ஒன்னு எழுதுங்க. நான் நட்சத்திரம் மாதிரி என்ன... சூரியன்  மாதிரியே உங்களுக்கு இட்லி சுட்டுத்  தரேன்"

     பதிலேதும் எதிர்பார்க்காமல் ,மாலதி சமையல் கட்டுக்குள் போனாள்.

     எப்போதும் இல்லாத அளவிற்கு சபாபதிக்கு வியர்த்துக் கொட்டியது.

You already voted!
4.5 10 votes
Article Rating
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
புதுவை நடராஜன் சிதம்பரம், புதுச்சேரி
புதுவை நடராஜன் சிதம்பரம், புதுச்சேரி
2 years ago

எதார்த்தமான சிந்தனையையோடு, ஒவ்வொரு வரிகளையும் தெரிக்கவிட்ட தங்களது கலைநயமிக்க வரிகள் ஒவ்வொருவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்று தங்களுடைய பெயர் ஆழ்மனதில் ஊன்றி நிற்கும்…..

பீட்டர் கணேசிஸ்
பீட்டர் கணேசிஸ்
2 years ago

அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள் 🤝🤝🤝

K. Hemalatha
K. Hemalatha
2 years ago

சிறுகதையே ஆனாலும் படித்துக் கொண்டிருக்கும் வாசகரை வெகு எளிதில் கதைக்குள் வாழ வைக்கிறார் ஆசிரியர். இட்லிக்கு சட்னி… படைப்பாளருக்கு விளம்பரம்… மிகச்சரியான வித்தியாசமான உதாரணம். பெண்களை அதிலும் குறிப்பாக மனைவியை அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திரும்பப் பெற்றேயாக வேண்டும். நன்றி😊👍வாழ்த்துகள்💐💐💐

puthuvaipraba
puthuvaipraba
Reply to  K. Hemalatha
2 years ago

தங்களது கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி 

Polikai Jeya
Polikai Jeya
2 years ago

அடக்கமற்று தற்பெருமை புராணத்தை பாடிய சபாபதியை மனிசி சிந்தனை திறன் பொருந்திய..உங்க கதையும் சட்ணி இல்லா இட்லி போல்தான் என்ற கேள்வியால் வாயடைக்க வைத்தாள் போன்ற கதை நகர்வு..சிறப்பு

சுவிஸிலிருந்து- பொலிகை ஜெயா.

puthuvaipraba
puthuvaipraba
Reply to  Polikai Jeya
2 years ago

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி 

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 18.216.239.46

Archives (முந்தைய செய்திகள்)