Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அறம் – இராம இளங்கோவன்

15 Feb 2022 3:52 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures aram 1

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-52
படைப்பாளர் - இராம இளங்கோவன், பெங்களூரு

     வறண்ட  பூமிக்கு  மழையும்
      இரவுக்கு  நிலவொளியும்
      பகலுக்கு  வெயிலும்
      வெயிலுக்கு  நிழலும்
      குளிருக்கு  வெப்பமும்
      புவிக்குப்   பசுமையும்
      எந்த  எதிர்ப்பார்ப்பும்  இல்லாமல்
      இயற்கை  வழங்குவது போல்
      அடுத்தவர்க்கு-
      மகிழ்ச்சியைக் கொடுத்து
      வாழ்வதுதான்  மனித  தருமம்!

      இந்தக்  கவிதையை  அசைபோட்டபடி  அமர்ந்திருந்தார்  காவல்துறை  துணை  ஆய்வாளர்  நவின்குமார். அப்போது  தொலைப்பேசி  யாரோ அடித்தது  போல  அலறி  அழுதது. அலறலைக்  கேட்டு  சுய நினைவுக்கு வந்தவராய்  அழும்  குழந்தையைத்  தூக்கிக்  கொஞ்சுவதுப் போலத்   தொலைப்பேசியை  எடுத்து  வலது காதோரம்  வைத்தவர் முகம்  வெளிரியது. எல்லா  விபரமும்  கேட்டவர்  ரிசீவரை வைத்துவிட்டு,  இரண்டு  கான்ஸ்டபிள்களை  அழைத்துக்  கொண்டு காவல்துறை ஜீப்பில் ஏறிப் புறப்பட்டார்.    

         சம்பவ   இடத்துக்குச்   சென்றபோது, அங்கே கும்பலாய்க் கூடி வேடிக்கைப் பார்த்தவர்கள்  காவல்துறையினரைக் கண்டதும்  ஒதுங்கி வழிவிட்டனர். ஜீப்பிலிருந்து இறங்கியத் காவல்துறை துணை ஆய்வாளர் நவின் குமார்,  சுற்றி நாலா பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினார்.  எங்காவது  சி. சி. டி. வி. கேமரா இருக்கிறதா? அதில் கொலை செய்து விட்டு பிணத்தைக்  கொண்டு வந்து போட்டவர்களின்  உருவங்கள் பதிவாகி இருக்குமா? என்று எண்ணியபடி நோட்டமிட்டார். ஆனால்,  ஊருக்கு ஒதுக்குப்  புறமானக்  காட்டுப் பகுதி என்பதால்  அங்கு பிணத்தை வனவிலங்குகள்  தின்று அடையாளம் இல்லாமல் செய்து விடும் என்று எண்ணியவர்களுக்குச்  செத்து  உடற்சூடு இல்லாத  உடலை எந்த மிருகமும் தின்னாது என்பது அவர்களுக்கு தெரியாது  போலும். அதனால், பிணத்தை இந்தக் காட்டுப் பகுதியில் வீசி சென்றிருந்தனர். இதே போல் இந்தக் காட்டுப் பகுதியில் ரகசியக் கேமரா இருக்கவும் வாய்ப்பில்லை  என்பதை உணர்ந்தார்.

                அப்பொழுது, அங்குக் கூடியிருந்தவர்களை  போலீஸ்காரர்கள்  தூரப் போகும்படி விரட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணத்தைப் பார்த்த ஒரு கான்ஸ்டபிள்  துணை ஆணையரைப் பார்த்து,

          " சார்! இவன்  சிவன்  கோயில்ல பிச்சை  எடுத்துக்கிட்டிருந்த பிச்சக்காரன் சார்!" என்றான்.

        " சரி. மொதல்ல   பாடிய டிஷ்போஸ் பண்ணனும்.  பாடியச்  சுத்தி  மார்க் போட்டு, ட்டோ எடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிடுங்க. "  என்ற துணைஆணையர் நவின் குமார், அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து,

           " யார்  மொதல்ல  பார்த்தது?  போலிஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தது யாரு? " என்று கேட்டார்.

           " நான் தான் சார்! " என்று  கையைக் கட்டிக் கொண்டு பவ்வியமாக  முன்னால் வந்து நின்றான்  முனியன்.

            " நீ  எப்ப  இங்க வந்தே? எதுக்காக வந்தே? எப்படி பார்த்தே? " என்று காவல்துறை அதிகாரி மிரட்டுவது போல் கேட்டார்.

               " சார்! தினமும்  இந்த  வழியாத்தான்  ஊர்கள்ல இருக்கிற வீடுங்களுக்குப் பால் ஊத்தக்  காலையில  ஆறு மணிக்குப் போவேன். காட்டுப் பகுதிங்கற்தாலயும் இருட்டா இருப்பதாலயும் எப்பவும்  டார்ச் லைட்டு எடுத்துட்டுப் போவேன். டார்ச் வெளிச்சத்தில  யாரோ  அடிபட்டு கிடக்கிறார்னு போய்ப்பார்த்தா  செத்தப் பொணம் ; அதனாலதான் உங்களுக்குப் போன் பண்ணேன்."  என்றான் பால்கார  முனியன்.

         " யார் மேலயாவது  சந்தேகம் இருக்கா?  இருந்தா  சொல்லுங்க." என்று காவல்துறை அதிகாரி கூடியிருந்தவர்களைப் பார்த்து கேட்டார். 'நமக்கெதுக்கு  வம்பு' என்ற  நினைப்பில் அவரவர்கள் அங்கிருந்து  ஒவ்வொருவராக  கலைந்து போயினர்.

            உண்மை  தெரிந்தாலும்  கொலைக்காரர்களுக்குப்  பயந்தும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன்  என்று  அலைய முடியாது  என்று  தன்னலமாக  நினைப்பதாலும் சொல்ல மாட்டார்கள்  என்பதும், இதனாலே குற்றவாளிகள் துணிந்து குற்றம் செய்கிறார்கள்  என்பதும் காவல்துறை அதிகாரிக்குத்  தெரியும். ஆகவே, கேட்டால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். முனியனிடம்  மட்டும் " ஸ்டேஷனுக்குக் கூப்பிடும்போது  வந்துட்டுப் போ!" என்று சொல்லி முகவரி,  போன்  நெம்பர் வாங்கிக் கொண்டார். அதற்குள்  போலீஸ்காரர்கள்  பிணத்தை ஆம்புலன்ஸில் அனுப்பி  வைத்து விட்டனர். இதனால்,போலிஸ்  ஜீப்பில்  ஏறி  புறப்பட்டனர்.

            போலிஸ் ஸ்டேஷன் போனதும்   ஏற்கெனவே  இந்த  போலிஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டப்   பல்வேறு  பகுதிகளில்  இதே போல் கொலை செய்யப்பட்டுக்  கிடந்தவர்கள்  பதினான்கு  பேர். இன்று செத்துக் கிடந்தது  பதினைந்தாவது  பிணம். பதினான்கு  பேரின்  புகைப்படங்கள், பிணப் பறிசோதனை  ரிப்போர்ட்  எல்லாம் இருந்த  பைலை  எடுத்து ஒவ்வொன்றாக  ஆராய்ந்தார் காவல்துறை துணை ஆணையர் நவின் குமார்.   சிறுநீரகம், கண்கள், நுரையீரல் போன்ற  உடல் உறுப்புகள் களவாடப் பட்டுள்ளன  என்பது  வெட்ட வெளிச்சமாக ரிப்போர்ட்டில் தெரிகிறது. மனித  உறுப்புகளை  விற்று  பணம் சம்பாதிக்கும் கும்பல்  மிகச் சாதுரியமாக  எந்த  சாட்சியும்  இல்லாமல்  திட்டமிட்டுச்  செய்யும்  கில்லாடிகளாக   உள்ளனர்  என்பதால்  அரசியல், பெரும் புள்ளிகளின்  ஆதரவுடனேயே செய்கிறார்கள் என்பதை  உணர்ந்தார்.
           இதுவரை  எந்த  ஒரு சின்ன தடயமும் கிடைக்கவில்லை. மேலிடத்தில்  தினமும்  அழுத்தம் கொடுக்கப் படுகிறது. உடலுறுப்புத்  திருடுபவர்களைப் பிடிக்கவும்  முடியவில்லை. பொதுமக்கள்  கண்டும்  காணாமல், 'நமக்கெதற்கு  வம்பு? நம்ப வேலையை நாம் பார்ப்போம்.'என்று  பொறுப்பே  இல்லாத  பொதுமக்கள். குற்றவாளிகளைப் பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தும்  எவரும்  பார்த்தவர்கள் கூட ,'ஒரு கோடிப்  பணத்துக்காக உயிரைக் கொடுக்க முடியுமா? கோடிப் பணத்துக்கு ஆசைப்பட்டுக் குடும்பத்தையே அந்தக் கொலைகாரர்களுக்குப்  பலி கொடுத்து விட்டு அந்தப் பணத்தை யார் அனுபவிப்பது?'
          என்று அஞ்சி  யாருமே  தப்பைக் கண்டிக்க முன்வராத  மக்களால் நாடே  குற்றம் நிறைந்த நாடாக மாறிவிட்டது என்பதை உள்ளக்குள்  காவல்துறை அதிகாரி நவின்குமார்  நினைத்து வேதனைப் பட்டார். மேலதிகாரிகளின்   நச்சரிப்பு;  பொதுமக்கள்  குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவா விட்டாலும்  வழக்கை சி. பி. ஐ. இடம் ஒப்படைக்கும்படி போராட்டம்; குற்றவாளிகள் தடயமில்லாமல்  உடலுறுப்புகளைத் திருடிக் கொலைகள் செய்தல் என பெரிய தலைவலியாக அமைந்தது. சவாலாக  எடுத்துக் கொண்டு,' குற்றவாளிகள் எவ்வளவு பெரிய புள்ளிகளாக இருந்தாலும் இன்னும்  ஒரு  வாரத்திற்குள்  நான் கண்டு பிடிக்காமல்  விடப்போவதில்லை.' என்று  மனதுக்குள்  தீர்க்கமான முடிவெடுத்தார்.
           கேட்பாரற்ற  அநாதைகள், பிச்சைக்காரர்கள், பைத்தியங்கள்  போன்றவர்களைக் குறிவைத்து அவர்களை ஒவ்வொருவராகக் கடத்திப் போய்  உடலுறுப்புகளைத் திருடிக் கொலை செய்கிறார்கள் என்பதால்  கோயில்கள்,  நடைபாதையில் உள்ள பிச்சைக்காரர்களோடு பிச்சைக்காரர்களாக  வேடமிட்டு  போலீஸ்காரர்களைக்  கண்காணித்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய  ஆங்காங்கே  அனுப்பி வைத்தார் நவின்குமார்.
            ஒருநாள்  முத்து மாரியம்மன்  கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் வந்து நைசாக பேச்சைக் கொடுத்து அவரைக் கடத்திப் போக முயன்றவனை அங்கு மாறு வேஷத்தில் இருந்த போலிஸ்காரர்  மறைத்து வைத்திருந்த கை  துப்பாக்கியைக் காட்டி மடக்கிப் பிடித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். காவல்துறை துணை ஆய்வாளர்  பிடிபட்டவனிடம்  எல்லா வாக்குமூலமும் பெற்று, அவனை வைத்தே  டெக்ஸ்டைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என்ற பெயரில் உள்ளே ஒரு மருத்துவ மனையே இயங்கியதைக் கண்டு அதிர்ந்து போன காவல்துறை அதிகாரி அனைவரையும் கூண்டோடு கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தப்  பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார்.
             பத்திரிகை, டி. வி. காரர்கள் சுற்றி வளைத்து  காவல்துறை அதிகாரி  நவின்குமாரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டனர்.  காவல்துறையின் உயர் அதிகாரி பாராட்டி விரைவில்  புரமோஷன் வரும் என்றார். சவாலாக எடுத்து  சாதித்த நவின்குமாருக்குப் பெருமையாக, அடுத்தவர்க்குக் கொடுத்த மகிழ்ச்சியாக உணர்ந்து இவரும் மகிழ்ந்தார். இவரின் பேட்டியைப் பத்திரிகை, டி. வி. களில் பார்த்த பொதுமக்களுக்கு  நிம்மதியும்  தைரியமும் வந்தது.
             மறுநாள்,   "பிச்சைக்காரரைக்  கடத்த  இருந்த  கும்பலைப் பிடித்து வைத்துள்ளோம். உடனே  வாருங்கள்"
              என்று  தொலைப்பேசி  வந்ததும் காவல்துறை அதிகாரி மிரண்டு போனார்.
              'மறுபடியும்   உடலுறுப்புத் திருடும் கும்பலா? இன்னும் எத்தனை கும்பல் இப்படி செயல்படுகிறதோ?'என்று  சலித்தவராய்  போலிஸ்காரர்களை  அழைத்துக் கொண்டு ஜீப்பில் புறப்பட்டார்.
           முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்றதும்," சார்! இவங்க தான் பிச்சைக்காரரைக் கடத்த முயன்றவர்கள். " என்றதும் அவர்களை அங்கேயே லத்தியால் அடித்து, " எத்தன பேருங்கடா இப்படி புறப்பட்டிருக்கீங்க? ஒங்களுக்கு மனிதாபி மானமே கிடயாதா? பணத்துக்காக ஏண்டா இந்தப் பாவச் செயல செய்றீங்க?  ஏறுங்கடா ஜீப்பில. ஸ்டேஷனில வச்சு உங்களுக்கு லாடங் கட்டினாத்தான் என் கோபம் அடங்கும்." என்றார் காவல்துறை அதிகாரி.
          " சார்! நீங்க நெனக்கிற மாதிரி உடலுறுப்பத் திருடறவங்க இல்ல. நாங்க இந்த மாதிரி ஆளுங்களுக்கு புது வாழ்வு கொடுக்கிற   நம்ம வீடு கருணை இல்லத்தைச் சேர்ந்தவங்க. "
          என்று சொல்லியும்  காவல்துறை அதிகாரி," எந்தத் திருடன்டா நான் தான் திருடினேனே ஒத்துக்கிறான்? என்ன காதில பூச் சுத்துறியா? கான்ஸ்டபிள் இவனுங்கள வண்டில ஏத்து." என்று சொல்ல லத்தியால் அடித்து  வலுக்கட்டாயமாக  ஜீப்பில் ஏற்றினர்.
       வண்டி போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எதிரே ஒரு பிச்சைக்காரனிடம் பேச்சுக் கொடுத்துப் பிடித்து காரில் ஏற்றினர் நால்வர். இதைப் பார்த்த ஜீப்பில் இருந்த நம்ம வீடு கருணை இல்லத்தைச் சேர்ந்த ஒருவர், " சார்! அதோ பாருங்க; அவங்க எங்க கருண இல்லத்தச் சேர்ந்தவங்க தான். அந்தக் காரைப் பின் தொடர்ந்து போங்க உங்களுக்கே உண்ம தெரிஞ்சிடும்." என்றான்.
             " நீ சொன்னாலும் சொல்லா விட்டாலும் ஆளைக் கடத்தியதால்  அந்தக் காரைப் பின் பற்றித்தான் போகப் போறோம். ட்ரைவர் அந்தக் காரைப் ஃபாலோ பண்ணு. " என்று நவின்குமார் சொன்னதும், " சரி சார் " என்றான் கார் டிரைவர். காரைப் பின் தொடர்ந்து போலீஸ் ஜீப் சென்றது. கார் ஒரு  ஆற்றங்கரை ஓரம் போய் நின்றது. இதைப் பார்த்த காவல்துறை அதிகாரி,"ட்ரைவர் வண்டிய நிறுத்து. "என்று சொல்லி  அவர்கள் என்னச் செய்கிறார்கள்? என்று ஜீப்பில் இருந்தபடியே  பார்த்தார்கள்.
          காரிலிருந்து  பிச்சைக்காரனை  இருவர் இறக்கி இருபக்கமும் பிடித்துக் கொண்டு வந்து உட்கார வைத்தனர். அப்போது மேலும் மூன்று பேர் அங்கு வந்தனர். இருவர் பிச்சைக்காரனின் கிழிந்த, அழுக்கேறிய  துணிகளை அகற்றினர். ஒருவர் தலைமுடியை வழித்தார்.  ஒருவர்  முகச்சவரம் செய்தார். ஒருவர் பிச்சைக்காரரைப் பிடித்துக் கொண்டார். பிறகு எல்லோருமாக  பிச்சைக்காரனைப்  பிடித்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர். பிச்சைக்காரனான அவன் குளிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு குளிக்காமலே இருந்தவன்  தண்ணீர் என்றாலே அவனுக்கு அலர்ஜி;  ஆகவே  வர மறுத்தான். கட்டாயமாக  இழுத்துச் சென்றனர்.
          இப்போது, காவல்துறை அதிகாரி உட்பட அனைவருமே வண்டியை விட்டு இறங்கி ஆற்றங்கரைக்குச் சென்றனர். அங்கே பிச்சைக்காரனைச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்க வைத்துக் கொண்டிருந்தனர். குளிப்பாட்டி முடித்ததும் புதியதாக வாங்கி வைத்திருந்த பேன்ட் சட்டையைப் போட்டு விட்டனர். ஆற்றங்கரையில் அமைந்திருந்த  நம்ம வீடு கருணை இல்லத்திற்கு அழைத்துச் சென்று புது வாழ்க்கைக்குத் திரும்பியவன் உடம்பு  பாதிக்கப் படாமல் இருக்க செப்டிக் மாத்திரையும் காபியும் கொடுத்தனர். பின் தொடர்ந்து போன காவல்துறையைப் பார்த்து, அங்கிருந்தவர்கள், " வணக்கம். வாங்க சார்! என்ன விஷயமா வந்திருக்கீங்க? " என்றதும் இதற்கு  எல்லா விஷயமும் காவல் துறையால் பிடித்து அழைத்து வரப்பட்ட நம்ம வீடு கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள் விவரித்துக் கூறினர்.
          " அப்படியா? நல்லதாப் போச்சு. வாங்க சார்! வந்தது வந்தீங்க முழுசா தெரிஞ்சிட்டுப் போங்க." என்று சொல்லி காவல்துறை அதிகாரியையும், போலிஸ்காரர்களையும் அழைத்துக்கொண்டு, நம்ம வீடு கருணை இல்லத்தைச் சுற்றிக் காண்பித்தனர். கருணை இல்லம்  கோகுலக்  கண்ணபிரானின்  பிருந்தாவனம் போல  நூறு  ஏக்கர்  நிலத்தில் விரிந்திருந்தது. அங்கே மாடுகளுக்கும் ஆடுகளுக்கும்  தீவனம் கொடுத்துக் கொண்டும், தோட்டங்களுக்குத்  தண்ணீர் பாய வைத்துக் கொண்டும், செடிகொடிகளை நட்டுக் கொண்டும், பூப்பறித்துக் கொண்டும்   சுவர்களுக்கு வண்ணம் அடித்துக் கொண்டும்,  அங்குள்ள வயலில் வேலை செய்து கொண்டும், தறியில் துணி நெய்து கொண்டும், சமையல் செய்து கொண்டும் இப்படி பல்வேறு பணிகளில் நூற்றுக்கணக்கான  பேர் ஆண்களும், பெண்களும், சிறியவர்களும், சிறுமிகளும்   இருந்தனர்.
           " யார் இவர்கள்? ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா? இவர்களின் குடும்பத்தவரே  இந்த வேலைகளுக்கு அனுப்பியுள்ளனரா? " என்று காவல்துறை அதிகாரி கேட்டார்.
             " இல்ல   சார்! இவங்க எல்லாருமே  பிச்சக்காரங்க. அவங்கள பிச்ச எடுக்க விடாம இங்கக்  கூட்டி வந்து நீங்களும் மனுசங்கதான்; நீங்களும் வேலை செய்து கௌரவமா வாழ முடியும்னு  நிரூபிச்சிட்டிருக்கோம். பிச்சக்காரர் இல்லாத நாடா மாத்தணும்னா அவங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கணும்; அடுத்தவங்கள மகிழ்ச்சியா வைக்கற்து கடவுள் பணியா நெனச்சி அதுக்காக நாங்க பிச்சக்காரங்கள கொண்டு வந்து இப்படி மனுசனா மாத்தற நாங்க யாரு தெரியுமா?  நாங்க எல்லோருமே அரசாங்கத்தில உயர் அதிகாரியா இருக்கிறவங்க; இத ஒரு தொண்டா  செய்றோம். " என்றதும், காவல்துறை அதிகாரி நவின்குமார் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, நான் இப்ப யூனி ஃபார்ம்ல  இருக்கேன். இல்லன்னா உங்கக் கால்ல விழுந்து கும்பிட்டிருப்பேன். இந்தக் கைகளக்  காலா நெனச்சிக்கிறேன்." என்று சொல்லி தன் தலைமேல் வைத்து வணங்கினார்.
           " இப்படி எல்லோரும் வேலை நேரம் போக மற்ற நேரத்திலத்  தொண்டு செய்தா இந்தியா மட்டுமில்ல உலகமே பிச்சைக்காரர், பைத்தியம், அநாதை, என்று இல்லாம  தர்மம் நிறைந்த  பொன்விளையும்  பூமியா  மகிழ்ச்சி நிலவும் உலகமா மாறிடுமே!  ஏழைக்குச்  செய்யும்  அறப்பணியானது   இறைவனுக்குச் செய்யும்   இறைப்பணிப் போன்றது;  பிச்சக் காரங்களுக்குப்  பிச்சப் போடறதாலயோ, அன்னதானம் செய்றதாலயோ எந்தப் புரோஜனமும் இல்ல; இதனால கிடைக்கிறப் புண்ணியத்த விட  நீங்க செய்றதிலதான் உண்மையான  புண்ணியமிருக்கு; இதுதான் உண்மையான இறைப்பணி; இந்த இறைப்பணிய  அரசாங்கமே செய்யாத நிலயில  நீங்கச்  செய்து வறீங்க;  நேரங் கிடைக்கும் போதெல்லாம் நானும் வந்து செய்வேன். "  என்று சொல்லி கண்கள் கசிந்தார். அப்போது  மீண்டும் அந்தக் கவிதை காவல்துறை அதிகாரி  நவின்  குமாருக்கு நினைவுக்கு வந்ததால்  எல்லோர்க்கும் கேட்கும்படி  அந்தக்  கவிதையைச்  சொன்னார்............
             வறண்ட  பூமிக்கு   மழையும்
             இரவுக்கு   நிலவொளியும்
             பகலுக்கு  வெயிலும்
             வெயிலுக்கு   நிழலும்
             குளிருக்கு   வெப்பமும்
             புவிக்குப்   பசுமையும்
             எந்த  எதிர்பார்ப்பும்   இல்லாமல்
             இயற்கை  வழங்குவது  போல்
             அடுத்தவர்க்கு -
             மகிழ்ச்சியைக் கொடுத்து
             வாழ்வது தான்   தருமம்!


You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092415
Users Today : 6
Total Users : 92415
Views Today : 10
Total views : 409979
Who's Online : 0
Your IP Address : 3.128.199.88

Archives (முந்தைய செய்திகள்)