Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

சமுதாயக் குற்றம் – துரை.தனபாலன்

15 Feb 2022 5:25 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures dhanabal

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-53
படைப்பாளர் - துரை. தனபாலன்

எப்போதும் பரபரப்பாக இருக்கும் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டிவீரன்பட்டி செல்வதற்காக, அங்கு நின்றிருந்த அய்யம்பாளையம் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன் நான். அண்மையில் பணி நிறைவு பெற்ற தமிழ் ஆசிரியரான எனக்கு எந்தவிதமான அவசரமும் இல்லாததால் பொறுமையாக உட்கார்ந்திருந்தேன்.

இன்னும் ஐந்து மணித்துளிகளில் பேருந்து புறப்பட்டு விடும் என்று, பக்கத்தில் இருந்த ஒரு பேருந்தின் அருகே நின்றுகொண்டிருந்த  நடத்துநர், கடந்த கால்மணி நேரமாக, கேட்கும் பயணிகளிடம் எல்லாம் அலுக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

பல ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும், அங்கிருந்து வரும் பேருந்துகளுமாக ஒரே இரைச்சலும், தூசிப் படலமுமாக இருந்தது அந்த இடம். வெய்யில் இந்த வருசம் இப்பவே இப்படி அடிக்குதே, இன்னும் சித்திரை மாசமெல்லாம் என்ன செய்யப் போவுதோ என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். பேருந்து நிலையப் பிச்சைக்காரர்களும், பரபரப்பான பயணிகளுமாக வழக்கம்போல அங்கு களை கட்டியிருந்தது.

எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கண்களில், அங்கே ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளின் கூட்டமும், அவர்களில் சிலர் நடத்துநர்களிடம் சரசமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சியும் ஏனோ சற்றுக் கோபத்தை வரவழைத்தது. அதை அதிகப்படுத்துவது போல, அப்போது ஒரு திருநங்கை பேருந்துக்குள் ஏறி, டப், டப் என்று கைகளைத் தட்டியவாறே, ஒவ்வொரு பயணியிடமும், ‘என்ன மாமா, ஹெல்ப் பண்ணுங்க, அக்கா, காசு கொடுங்க’ என்று ஆளுக்கேற்றபடி பிச்சை கேட்டும், காசு கொடுத்தவர்களின் தலையில் கை வைத்து ஆசி வழங்கியும், எல்லோரிடமும் காசு வாங்கிக் கொண்டிருந்தாள்.

சிறுவயது முதலே எனக்கு பிச்சைக்காரர்கள் என்றாலே ஒரு வெறுப்பும், அருவருப்பும் ஏற்படுவது உண்டு. போதாக்குறைக்கு, அவர்களில் பலர், அழுக்கு மூட்டையாகவும், நடமாடும் நோய் பரப்புவோராகவும், பிள்ளை பிடிப்பவர்களாகவும், பிடித்த பிள்ளைகளைக் கொடூரமாக மூளியாக்கி பிச்சை எடுக்க வைப்பவர்களாகவும், பல தீய வேலைகள் செய்பவர்களாகவும் இருப்பதனால், அவர்கள் மீது சிறுவயதில் ஏற்பட்ட வெறுப்பு, வயதாக ஆக  அதிகரித்ததே ஒழிய குறையவே இல்லை.

அதேபோல, இந்தத் திருநங்கைகளின் கவர்ச்சிகரமான உடையலங்காரமும், அவர்களின் கேலியும், கிண்டலும் கலந்த பேச்சுகளும், கைதட்டிப் பிச்சை எடுக்கும் வழக்கமும், நிழலான நடவடிக்கைகளும், எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எரிச்சலையே ஊட்டியது. பொதுக்காரியங்களுக்கு மனமுவந்து நன்கொடை கொடுக்கும் பழக்கமுள்ள நான், பிச்சை எடுப்பவர்களுக்கு மட்டும் காசு கொடுப்பதே இல்லை.

என்னிடம் அந்தத் திருநங்கை வந்து காசு கேட்ட போது, வழக்கம் போல வேறுபுறம் திரும்பிக் கொண்டேன். மற்றவர்களிடம் கேட்டுக் காசு வாங்கியபின், அந்தப் பெண் இறங்கிப் போய்விட்டாள். இதெல்லாம் ஒரு பிழைப்பா என்ற எண்ணம் எனக்குள் இருந்த கோபத்தை அதிகப்படுத்தியது. ஏதோ இயற்கையில் ஏற்பட்ட கோளாறால் இப்படி ஒரு பிறவி எடுத்ததை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, சட்டமாகப் பிச்சை கேட்கும் அந்தப் பழக்கம் எந்த வகையில் நியாயம் என்று எனக்குள் எண்ணிக் குமைந்தவாறு இருந்தேன்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. பேருந்து நிலையத்தின் உள்ளே வேகமாக நுழைந்து கொண்டிருந்த ஒரு பேருந்திலிருந்து, அவசரமாக இறங்கிய ஒரு நடுத்தர வயதுக்காரர் கால் இடறிக் கீழே விழ, அவர் தலை அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லில் மோதி, ரத்தம் லேசாக வடியத் தொடங்கியது. விழுந்த அதிர்ச்சியாலும், பலத்த அடியாலும் அந்த ஆள் மயங்கி விட்டார். அவர் கையில் வைத்திருந்த பை கீழே விழுந்து, அதிலிருந்த துணிகள், மற்ற பொருட்கள் எல்லாம் சிதறி விழுந்தன. அவரைச் சுற்றி உடனே ஒரு கூட்டம் கூடிவிட, எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பாவம் என்றும், அப்படி என்ன அவசரம், பஸ் நின்னதுக்கு அப்புறம் இறங்க வேண்டியதுதானே என்றும் பலவாறு பேசிக் கொண்டனர். ஆனால், ஒருவரும் அடிபட்டு விழுந்த ஆளின் அருகே கூடப் போகவில்லை.

நான் உடனே வேகமாக இறங்கிச் சென்று, “ஏய், என்னப்பா, எல்லோரும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க? தூக்குங்கப்பா ஆளை; ஆட்டோவை யாராவது கூப்பிடுங்க” என்று சொல்லியவாறு அந்த ஆளைத் தூக்கி, தலையில் அடிபட்ட இடத்தைப் பார்த்தேன். குருதி லேசாக வடிந்து கொண்டிருந்தது, விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். யாருமே கூட்டத்திலிருந்து போனமாதிரி தெரியவில்லை; எனக்குக் கோபம் வந்தது, “ஏப்பா, ஒரு உசிரு போய்க்கிட்டு இருக்கு, வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்களே” என்று கத்திய போது, ஒரு தானி(ஆட்டோ) வரும் ஓசை கேட்டுக் கூட்டம் வழிவிட, எல்லோருமாகச் சேர்ந்து, அந்த ஆளை தானிக்குள் படுக்க வைக்க, நான் உள்ளே ஏறி உட்கார்ந்தவுடன் அது வேகமாகப் புறப்பட்டது. “காட்டாஸ்பத்திரிக்குப் போப்பா சீக்கிரம்” என்றேன். தானி ஓட்டுநர் ‘சரிங்க’ என்றவாறே அதன் வேகத்தை அதிகரித்து ஓட்டினார்.

அப்போதுதான் கவனித்தேன் அந்தத் தானியை அழைத்து வந்து, அடிபட்ட ஆளின் கால்களைத் தன் மடியில் வைத்தவாறு, என்னுடன் வண்டியுள் இருந்தது வேறு யாருமல்ல, சற்று முன்பு நானிருந்த பேருந்தில் பிச்சை எடுத்த அந்தத் திருநங்கைதான் என்பதை. “சீக்கிரமாப் போ மாமா” என்று ஓட்டுநரிடம் சொன்னவள், “சாமி, நல்ல நேரத்துல நீங்க வந்து அடிபட்ட ஆளத் தூக்கி, கூட்டத்துல இருந்த எல்லோரையும் அதட்டிச் சத்தம் போட்டீங்க, இல்லீனா எல்லாரும் வேடிக்கைதான் பாப்பாங்க; ஒருத்தனும் துணிஞ்சு வந்து தூக்க மாட்டான்” என்றாள். பின்பு அடிபட்ட ஆளின் கையைப் பிடித்து நாடி பார்த்தவள், தன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தவாறே, “பரவாயில்லை, இந்த ஆளுக்கு ஆயுசு கெட்டிதான். நல்ல வலுவான உடம்புதான்; நாடி அப்படி ஒண்ணும் மோசமாகல” என்றாள். எனக்கு வியப்பாக இருந்தது!

அதற்குள் லியோனார்டு மருத்துவமனை (காட்டாஸ்பத்திரி என்பது அங்குள்ள மக்கள் சொல்லும் பெயர்) வந்துவிடவே, தானி ஓட்டுநரும் ஒரு கை பிடிக்க, மூவருமாகச் சேர்ந்து அடிபட்டவரைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய் உடனடிச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். அங்கிருந்த செவிலியர்(நர்ஸ்)களும், மருத்துவர்களும் கூட அந்தத் திருநங்கைக்குப் பழக்கமானவர்களாகவே இருந்தனர் (அவள் பெயர் ரோஸ் என்று அவர்கள் அழைத்ததிலிருந்து தெரிந்து கொண்டேன்). ஒரு செவிலிப் பெண்ணிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ரோஸ் புறப்பட்டு விட்டாள். போகும்போது என்னிடம் வந்து, “சாமி, மகராசனா இருக்கணும், அத்தன பேரிருந்த கூட்டத்துல நீங்க மட்டும் முன்னால வரலேன்னா, ரொம்ப சிரமமாப் போயிருக்கும். நீங்க புள்ள குட்டிகளோட நல்லா இருக்கணும்” என்றவாறே என் தலையில் அவளது வலது கையை வைத்து ஆசி வழங்கி விட்டு, “வரேன் சாமி” என்றவாறே புறப்பட்டுப் போய்விட்டாள். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஒரு திருநங்கை என் தலையில் கைவைத்து எனக்கு ஆசி வழங்கும் சூழ்நிலையும் ஒருநாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ரோஸ் சற்றுமுன் பேசிய அந்த செவிலிப் பெண்ணிடம் சென்று மெதுவாக, “ஏம்மா, அந்த ரோஸ் இங்க எல்லோருக்கும் பழக்கமானவ மாதிரி தெரியுதே?” என்று பேச்சுக் கொடுத்தேன். “ஆமாங்கையா, மூணு, நாலு மாசத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு அடிபட்ட ஆளக் கொண்டு வந்து அவளும், இன்னொருத்தருந்தான் சேர்த்தாங்க. அடிபட்ட ஆள் நோஞ்சானா இருந்ததனால மூணு நாளு ரொம்ப சிரமப்பட்டாரு. கொஞ்சம் வசதியில்லாத, வயசான ஆளா வேற இருந்ததினால, யாருமே வந்து பாக்கல. ரோஸ்தான் அடிக்கடி வந்து பாத்து, பழம்லாம் வாங்கிக் கொடுத்து, டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் ரொம்ப ஒத்தாசையா இருந்துச்சு. அதுக்கப்புறமும் அந்த ஆள் கைல கொஞ்சம் பணம் கொடுத்து, ஊருக்குப் பஸ் ஏத்தி அனுப்பிச்சிருச்சு” என்று சொன்ன அந்தப் பெண், ஒரு மருத்துவர் கூப்பிட்ட குரலுக்கு, ‘இதோ வரேன் டாக்டர்’ என்றவாறே  வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். நாங்கள் தூக்கி வந்த ஆளுக்கு தலையில் லேசான அடிதான் என்பதால், மருத்துவர் தலையில் ஒரு பெரிய பிளாஸ்திரி போட்டுவிட்டு, வெயில் தாழ, வீட்டுக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார்.

அதன்பின் வீட்டிற்குப் போன நான், என் மகனின் கணினியில் திருநங்கைகளைப் பற்றிய தகவல்கள் பலவற்றைத் தேடிப்பிடித்துப் படித்துப் பார்த்தேன். அப்போதுதான், அவர்கள் ஆண் உடலில் பெண்ணுக்கான தன்மைகளுடனும், பெண் உடலில் ஆணுக்கான தன்மைகளுடனும் பிறப்பதையும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் அக்குறை வெளியே தெரியத் தொடங்குவது பற்றியும், அதனால் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகள் குறித்தும் பல செய்திகளை அறிந்து கொண்டேன். அதன்பின் அவர்கள் மீது உண்மையிலேயே எனக்குப் பரிவுதான் ஏற்பட்டது.

                      *******************************************

அதற்குப்பின், நாலைந்து நாட்கள் கழித்து, தேனியில் உள்ள ஒரு பழைய நண்பரைப் பார்ப்பதற்காகப் போய்விட்டுத் திரும்பும் போது, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் ஒரு கடையில் பழச்சாறு வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக, ரோஸ் அங்கு வந்து வெற்றிலை பாக்கு வாங்கினாள். நான், “ஏம்மா, பழச்சாறு குடிக்கிறாயா?” என்று கேட்டேன். என்னை சற்று உற்றுப் பார்த்தவள், சட்டென்று நினைவுக்கு வந்தவளாக, “நீங்களா ஐயா, நீங்க கேட்டதே போதும், எனக்கு வேண்டாம்” என்றாள். அவளுக்கும் ஒன்று கொடுக்கச் சொல்லி கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, “ஆமாம், அன்னிக்கு அந்த அடிபட்ட ஆளுக்கு நாடித்துடிப்பு எல்லாம் பார்த்தியே, எதுவரைக்கும் நீ படிச்சிருக்க?” என்று கேட்டேன். அவள் பதில் சொல்லுமுன்னே அந்தக் கடைக்காரர், “சார், இது டாக்டர் படிப்பு ரெண்டு வருசம் படிச்ச பிள்ள சார்” என்றார். அவள் ஒருமாதிரி சிரித்துக்கொண்டே, “நான் படிச்சிப் பாழாப் போனேன் போங்க. ரெண்டாவது வருசம் பாதிலதான் நா இப்படி ஆனேன். எங்க வீட்லயும் மிரண்டுட்டாங்க, எனக்கும் ஒரு மாதிரி ஆயிருச்சி.. அப்படியே வீட்டை விட்டு  வெளியேறுனவதான்.. அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில இந்த வத்தலக்குண்டுல வந்து எங்க ஆளுகளோட சேர்ந்துட்டேன். எப்பவாவது சமயத்துல படிச்ச அரைகுறைப் படிப்பு மத்தவங்களுக்கு உதவும்.. ம்.. நம்ம விதி அவ்வளவுதான் சார்..” என்றாள் அலட்சியமாக.

அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல், “சரி, வரேம்மா” என்று கூறிவிட்டுக் கடைக்காரரிடம் காசு கொடுத்து விட்டுப் புறப்பட்டேன்.

******

மறு ஞாயிறு அன்று, வத்தலக்குண்டு காவல்நிலையத்தின் முன்னே உள்ள எழுதுபொருட்கள் விற்கும் கடையில் எனக்கு வேண்டியவற்றை வாங்கிவிட்டுத் திரும்பியவன், என்னை நோக்கி வேகமாக வந்த காவல்துறை அதிகாரியைப் பார்த்து ஒரு வினாடி தயங்கினேன்.

அதற்குள் வேகமாக வந்து வணங்கிய அந்த அதிகாரி, “ஐயா வணக்கம், என்னத் தெரியவில்லையா.. உங்ககிட்ட ப்ளஸ் டூ படிச்ச மாணவன் பொன்னுச்சாமிதாங்க ஐயா நான்” என்றான் சிரித்தவாறே. நானும் மகிழ்ச்சியுடன் “அடடே, நம்ம பொன்னுச்சாமியா, ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ஆள் அடையாளமே தெரியல.. நீ சொன்னப்புறம்தான் தெரியுது ... ஆமா, என்ன இந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கியா?” என்றேன்.

“ஆமாங்க ஐயா, ஆய்வாளராகப் பதவி உயர்வு கொடுத்து நம்ம ஊர்லயே போட்டிருக்காங்க. போன வாரம்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ஐயா, அவசியம் நீங்க காவல் நிலையத்துக்கு வந்து, ஒரு கப் தேநீராவது சாப்பிட்டுத்தான் போகவேண்டும்” என்று அவன் வற்புறுத்தி அழைக்கவே, சரி என்று சொல்லி அவனுடன் சென்றேன். என் மாதிரி ஆசிரியர்களுக்கு, விருதுகள் வாங்குவதை விட, எங்களிடம் படித்த மாணவர்கள் நல்ல பதவியில் இருந்து, நன்றியுணர்வுடன் எங்களிடம் மரியாதையாகப் பேசும் தருணங்கள்தாம் அதிக மகிழ்ச்சி தருபவை, இல்லையா?

காவல் நிலையத்தின் உள்ளே ஆய்வாளரின் அறை ஓரளவு நன்றாகவே இருந்தது. (அதற்கு முன்பு நான் உள்ளே சென்று பார்த்ததே கிடையாது). ஒரு காவலரை அழைத்து, பழச்சாறு வாங்கிவரச் சொல்லிவிட்டு, “சொல்லுங்க ஐயா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் பொன்னுச்சாமி. சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நான் புறப்படும் போதுதான் அந்த அறைக்கு எதிரே, வெளியே கூடத்தில் இருந்த பெஞ்சில் வரிசையாகச் சில இளம் பெண்கள் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த வரிசையில் ரோஸும் அமர்ந்திருந்தாள். அவள் என்னைக் கவனிக்காமல் பக்கத்தில் இருந்தவளிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்.

நான் ஒரு வினாடி திகைத்துவிட்டு, “பொன்னுச்சாமி, அந்தப் பெண்கள் எதற்காக இங்கே இருக்கிறாங்க?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டேன். “ஐயா, எல்லோரும் விபச்சாரக் கேஸ்ல பிடிபட்டவங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நிலக்கோட்டை நீதிமன்றத்திற்கு அழைச்சுட்டுப் போகணும்” என்றான். நான் அவனிடம் சுருக்கமாக, கொஞ்ச நாளுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் நடந்த விபத்து குறித்தும், ரோஸ் செய்த உதவி பற்றியும், அவள் படிப்பு பற்றியும் சொன்னேன்; பிறகு சற்றுத் தயங்கியவாறே அவனைப் பார்த்தேன்.

ஒரு வினாடி யோசித்தவன், “சரிங்க ஐயா, நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியுது. அவளை மட்டும் தனியாக அழைத்து எச்சரித்துவிட்டு, அனுப்பி விடுகிறேன். இது நம்ம சமுதாய அமைப்புல உள்ள ஒரு மாற்ற முடியாத கேடு.. இம்மாதிரித் திருநங்கைகளுக்கு எங்குமே எவருமே வேலை கொடுக்க முன்வருவதும் இல்லை, அவர்கள் படித்து முன்னேறுவதற்கான சூழ்நிலையும் அப்படி ஒன்றும் பிரகாசமாக இல்லை. அரசாங்கம் எவ்வளவுதான் சலுகைகள் கொடுத்தாலும், அவையெல்லாம் இவங்களுக்குச் சரியாப் போய்ச் சேர்றதுமில்லை. வெகு சில பேர் அவற்றைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்தாலும், இன்னும் பெரும்பான்மையினருக்கு அரசு அளிக்கும் சலுகைகள் குறித்து எதுவுமே தெரிவதில்லை.  

‘நமது சமுதாய அமைப்பு பல குற்றங்களை உருவாக்குகிறது; சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் குற்றங்களைச் செய்யுமாறு செலுத்தப் படுகிறார்கள்’ அப்படின்னு நீங்க ஒருநாள் வகுப்புல சொன்னது, இந்தக் காவல்துறைக்கு வந்ததுக்குப் பிறகு எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். நீங்க வீட்டுக்குப் போங்க ஐயா, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். 

பொன்னுச்சாமியிடம் நன்றி கூறி விடைபெற்று, அந்த சமுதாயக் குற்றத்தைப் பற்றிய எண்ண அலைகள் மனதுள் மோத, நான் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.

You already voted!
4.3 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
8 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Baskar S Ayer
Baskar S Ayer
2 years ago

துரை. தனபாலனின் சிறுகதை:’ சமுதாயக் குற்றம்’ கசப்பான எதார்த்தம். தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்பது ஒரு கதையின் குறையல்ல. சமுதாய அக்கறை கொள்ள வேண்டும் என்று வாசகனை எண்ண வைப்பதே இந்த சிறுகதாசிரியரின் வெற்றி.

துரை.தனபாலன்
துரை.தனபாலன்
Reply to  Baskar S Ayer
2 years ago

நன்றி நண்பரே.

க.பன்னீர் செல்வம். சென்னை
க.பன்னீர் செல்வம். சென்னை
2 years ago

மனதை வருடும் கதையம்சம்! சமுதாயக் கோளாறுகள் எப்படி நெருடலாகவும் அமைந்து விடுகிறது என்பதை மூத்த ஆசிரியரின் நேர்மைப் பார்வை வழியே திருநங்கைகளின் சூழலை கதைப் போக்காய் காட்டி
தெளிவு நிறைத்தது நன்று
சரளமான எழுத்துகள் கருத்துக்கு வலு சேர்த்துள்ளது… கதாசிரியர் துரை தனபாலன் அவர்களைப் பாராட்டுகிறேன்

துரை.தனபாலன்
துரை.தனபாலன்

நன்றி நண்பரே.

இராய செல்லப்பா
இராய செல்லப்பா
2 years ago

பொதுவாகவே திருநங்கைகளின் பொருளாதாரத்திற்கு சமுதாயத்தில் யாரும் உறுதி தருவதில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்திற்காகவே சமுதாய குற்றங்களில் ஈடுபடுவது எப்படி நியாயமாகும் என்று தெரியவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆண்கள் தனியாக இருக்கும்போது வன்முறையைப் பிரயோகித்து அவர்களின் அலைபேசி களையும் பணம் மற்றும் பொருள்களையும் கவர்ந்து செல்லும் திருநங்கைகளின் கூட்டம் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன.

துரை.தனபாலன்
துரை.தனபாலன்

பதிவுக்கு நன்றி நண்பரே. அவர்களது குற்றங்கள் இக்கதையில் நியாயப்படுத்தப்படவில்லை. பொதுவாக, இவர்களுடைய மற்றும் பிறருடைய பல குற்றங்களின் தோற்றுவாய் நம் சமுதாய அமைப்பில் இருக்கிறது. அதையே இக்கதை சுட்டிக் காட்டுகிறது. ஆங்கிலத்தில் the society prepares crimes and criminals are forced to commit it என்றொரு பழமொழி கூட உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். கருத்துத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.

Sainath G
Sainath G
2 years ago

நன்று

துரை.தனபாலன்
துரை.தனபாலன்
Reply to  Sainath G
2 years ago

நன்றி நண்பரே.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 3.140.198.173

Archives (முந்தைய செய்திகள்)