Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

விழி மூடா இரவுகள்

16 Feb 2022 1:32 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures madhu

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி- 61
படைப்பாளர் - ப.இளங்கோ (மதுபாரதி), இலங்கை

வெறிச்சோடிக் கிடந்தது நகரம்.

ஒரு மாத காலமாகத் தொடரும் ஊரடங்குச் சட்டம் இன்றோ நாளையோ தளர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாமே தளர்ந்து போய் சோர்வின் விளிம்பில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆளரவமற்ற அந்த தெருவின் முனையில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.

சூரியா என்கிற சூரியப் பிரபா.

உடற்சோர்வினால் அவளது நடையின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து செல்கிறது.வீட்டிற்குச் சென்று எப்போது படுக்கையில் விழுவோம்? என்று உள்ளம் ஏங்கினாலும் இப்பொழுதெல்லாம் அப்படி நினைத்தபடி நினைத்த நேரத்தில் படுக்கையில் விழுந்து விட முடியாது.குளித்து , உடை மாற்றி படுக்கையை நெருங்க குறைந்தது அரை மணி நேரமாவது எடுக்கும்.

அதற்குள் பசி பசியெனத் தன்னைத் துளைத்தெடுக்கப் போகும் பிள்ளைகள் இருவருக்கும் பதில் சொல்லி ஆகவேண்டும். வயதானஅம்மா கூடவே இருந்தாலும் அவள் மீது தன் கஷ்டத்தைத் திணிக்க முடியாது.

அவசரச் சமையலை முடித்து , பிள்ளைகளுக்குஉணவு கொடுத்து , தானும்உண்டு , நித்திரையை அரவணைக்க இன்னும் இரண்டு மணி நேரமாவது தேவைப்படும்.

பாவம் பிள்ளைகள் ... பசியோடு காத்திருப்பார்கள்...

வழமையில் ஏழு மணிக்கெல்லாம்வீட்டிற்கு வந்திடலாம்...இந்நேரத்திற்குள் இரவுச் சமையலும் முடிந்திருக்கும். ஆனால் இன்று.... கூட வேலை செய்த பெண்ணிற்கு கொரோனா ‘பொசிட்டிவ்’ ஆகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அவளது வேலையையும் சேர்த்துச்செய்ய வேண்டிய நிலைமை.

இன்று அவளுக்கு...நாளை எனக்காகக் கூட இருக்கலாம் என எண்ணினாள்.

தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான வார்டுகளைச் சுத்தம் செய்யும் பணியில் இணைந்திருக்கும் அவளுக்கு அப்பணியில் உண்டான ஆபத்து நிலைமை நன்கு புரிந்தே இருந்தது.

இருந்தும் குடும்பத்தைக் கொண்டு இழுக்க அவளக்கு இதைவிட வேறு உபாயம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

நடையின் வேகத்தைத் துரிதப்படுத்தினாள்.

யாரோ தன்னைப்பின் தொடர்வதாக ஒரு பிரமை...சட்டென்று திரும்பிப்பார்த்தாள்.அவள் நினைத்தது சரிதான்.சுமார் பத்து அடி இடைவெளியில் உயரமான நடுத்தர வயது மனிதன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.இவள் திரும்பிப்பார்த்ததைக் கண்டதும்' நில்’ என்றான்.அவனது தமிழில் அந்நிய வாடை வீசியது.

அக்குரலுக்குக் கட்டுப்பட்டவளாய் ஒரு கணம் நின்றாள் .மறுகணம் என்ன நினைத்தாளோ நடையின் வேகத்தைத் துரிதப் படுத்தினாள்.

ஜன நடமாற்றமற்ற தெருவில்...இரவு நேரத்தில் ...அறிமுகமில்லா ஒரு ஆடவனுடன் நின்று பேச என்ன இருக்கிறது?...திருடனாக இருக்குமோ?.... மனதில் இலேசாக பய உணர்வு எட்டிப் பார்த்தது.

”நில்லு !நான் சொன்னது உன் காதில் விளவில்லையா?“ சிங்கள மொழியில் அதட்டினான்.

யார் இவன்?ஏன் என்னை அதட்டவேண்டும்? பொங்கி எழுந்த சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேகமாக நடந்தாள்.

“ நில்.நான் பொலிஸ்.ஊரடங்குச்சட்ட நேரம் எங்கே திரியிறாய்?... நீ சட்டத்தை மீறுவது உனக்குத் தெரியவில்லையா?”

அவன் பொலிஸ் என்றால் நான் ஏன் பயப்பட வேண்டும்? நின்றாள்.

சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட ' பாஸ் ' கையில் இருக்கிறது.அதைக் காட்டி விட வேண்டியதுதான்.

கைப்பையைத்திறந்து தனது அடையாள அட்டையுடன் இணைத்து வைத்திருந்த ' பாஸை '  எடுத்து அவனிடம் நீட்டினாள்.அதனை வாங்கி ஆராயுமாப்போல பார்த்தான்.

“ நேர்ஸா? “

“ இல்ல கிளீனிங் செக்சன் “

“ எங்க வேலை செய்யிறாய்? “

“ கொரோனா ஆஸ்பத்திரியில”இரண்டடி பின் வாங்கினான்.

“ இந்த மாத சம்பளம்வாங்கிட்டியா?”

“ அது எதுக்கு உனக்கு? “

“ மரியாதையா பேசு.பையில எவ்வளவு பணம்வச்சிருக்கிறாய்?

“எதுக்கு?

“ எதுக்கு கேட்பாங்க? இருக்கிறத தந்திட்டுப் போ.”

“ நான் எதுக்கு உனக்குத் தரணும்?

தனது ஜக்கட் பையில் மறைத்து வைத்திருந்தகத்தியை எடுத்து நீட்டினான்.

எதிர்பாராத அந்த நிகழ்வினால் அதிர்ந்து போனாள்.பயத்தில்உடல் உதறலெடுத்தது.தான் ஆபத்தின் விளிம்பிலிருப்பது திட்டவட்டமாக அவளுக்குப் புரிந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.“ நான் ஒரு விதவை.ஆறு மாதங்களுக்கு முந்தித்தான் என்ர புருஷன்  ' கொரோனாவால ' பாதிக்கப்பட்டுச் செத்துப்போனார்.அவரின் உடம்பக்கூட என்னால பார்க்க முடியல்ல. எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கிறாங்க . கஸ்டத்தின் நிமித்தம்தான் நான் இந்த வேலைக்குப் போறன்.‘ கொரோனா’ ஆஸ்பத்திரியில கூட்டிப் பெருக்கித்தான் நான் என்ர பிள்ளைகளுக்கு சோறு போடுறன்.என்னட்ட உனக்குத் தாறதுக்குப் பணமில்ல.”

“ பொய் சொல்லாத.”

அவளது கையிலிருந்த பையைப் பறித்துக் கொட்டினான் .நூறு ரூபாய் நோட்டுக்கள் இரண்டு நிலத்தில் விழுந்தன.கூடவே சம்பளப் பணம் இருந்த கவரும் விழுந்தது குனிந்து அவற்றைப் பொறுக்கினான்.

அவள் பெருங்குரலெடுத்து அழுதாள்.

“ கத்தாத, குத்திப் போடுவன் “பயத்தினால் உறைந்தாள்.

“ உனக்கு உயிர் வேணுமெண்டா கழுத்தில கிடக்கிற சங்கிலிய குடு.”

“ அது தங்கமில்ல”

“ பரவாயில்லை குடு”

கழுத்தில் கிடந்தசங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள்.

“ பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்த்தியா? இது தங்கம்தான்.”

சங்கிலியைப் பற்றிப் பிடித்திருந்த அவனது கரத்தை ஏக்கத்துடன் பார்த்தாள். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

“ கத்தாத.கொன்று போட்டிடுவன்”

“ கொன்று போட்டிடு... கஸ்டத்துக்குமேல கஸ்டத்த என்னால தாங்கமுடியல்ல.”

தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.சட்டென்று அவளது கன்னத்தில் அறைந்தான். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்துபோனாள்.

காதுத்தோடு , கைத்தொலைபேசி எல்லாவற்றையும் அவளிடமிருந்து பிடுங்கித் தான் அணிந்திருந்த ‘ ஜக்கட் பொக்கட்டில் ’திணித்தான். மறுகணம் அங்கிருந்து வேகமாக நடந்தான்.

அவள் கதறிஅழுதாள்.“ உயிரைப் பணயம்வச்சு உழைச்ச காசு இப்பிடிப் போயிட்டே கடவுளே! நான் என்ன செய்வேன்? எப்பிடி என்ர பிள்ளைகளுக்கு சாப்பாடு குடுப்பேன்? எல்லாமே போயிட்டே...கடவுளே! உனக்குக் கண் இல்லையா? “

அவளது அழுகுரல் கேட்டு அவன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தான். பின்னர் வேகமாக நடந்து பார்வையிலிருந்து மறைந்தான்.

உடல் சோர்வோடு உளச் சோர்வும் இணைந்து கொள்ள கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.‘ அம்மா!என்று அழைத்தபடி தன்னை நெருங்கிய பிள்ளைகளுக்கு அருகே வரவேண்டாம் என ஜாடை காட்டினாள். பிள்ளைகளுக்கு நடந்தது எதுவும் தெரிய வேண்டாம் என எண்ணினாள். சட்டென்று குளியலறையில் புகுந்து கதவைத் தாளிட்டாள்.

மடைதிறந்த வெள்ளம் போல அழுகை பெருக்கெடுத்தது.ஓசையின்றி அழுதாள்.

எவ்வளவு துன்பம் !!!எத்தனை எத்தனை வலிகள்!!!

குளித்து உடைமாற்றியதும் வெளியே வந்தாள்.நல்ல வேளையாக அம்மா இரவுணவைத் தயாரித்திருந்தாள். உணவுண்டானதும் படுக்கைக்குச் செல்லுமுன்னர் அம்மா கேட்டாள்.

“ சூரியா , உன்ர காதுத்தோடு எங்கே?”

உண்மையைச் சொல்வதா? அல்லது வேண்டாமா? என்று புரியாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.அவளை அறியாமல் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

நடந்தது எல்லாவற்றையும் தாயாரிடம் கொட்டித் தீர்த்தாள். எதிர்காலம் குறித்த பயம் இருவரது மனங்களிலும் சொல்லொணாத் துயரத்தை விதைத்திருந்தது.  தூக்கம் தூரமாய் விலகிப் போனது.

சிலருக்கு வாழ்க்கையில் துன்பம் எப்போதாவது வரும். இன்னும் சிலருக்கு அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து போகும்.எனக்கு கஷ்டமே தான் வாழ்க்கையா? என எண்ணியபோது அவளது மனது வேதனையில்துடித்தது.

காதலித்து மணந்த கணவன் நாற்பது வயதிலே நோய்க்கு இரையாகியதும் அதன் பின்னர் தான் அனுபவித்த துயரமும் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன.எத்தனை இரவுகள் தூக்கமின்றித் தவித்திருக்கிறாள்?...

அவள் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்த வேளை கடிகார ஒலி தூக்கத்தைக் கலைத்தது.எழுந்தாள்.

சமையல் வேலைகளை அவசர அவசரமாக முடித்து தயாரானாள்.அழைத்துச் செல்ல அம்பியூலன்ஸ் வண்டி வாசலுக்கு வந்திருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிப் போனாள்.

பணிமுடிந்த பின்னர் இளைப்பாறுகையில் முதல் நாளைய துன்பத்தை நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டாள்.

எல்லோருக்குமே சூரியாவின் நிலைகுறித்த புரிதல் இருந்தது.அவள் பணிமுடிந்து வீடு திரும்புகையில் தமக்குள் சேகரித்த பணத்தை அவளது கரத்தில் திணித்தாள் ஒருத்தி. சூரியா அதனை வாங்க மறுத்த போதிலும் நிர்ப்பந்தப்படுத்தி அவளுக்கு வழங்கிவைத்தனர்.

முதல் நாளைப்போல அன்றும் தாமதமாகத்தான் வீட்டுக்குப் புறப்பட நேர்ந்தது. வழமையில் அவள் இறங்கும் தெரு முனையில் அம்பியூலன்ஸிலிருந்து இறங்கிய வேளை தெருவிளக்குகள் பாதி வெளிச்சத்தை உமிழ்ந்து பணிப் பகிஸ்கரிப்பில் குதித்திருந்தன.

பையில் நண்பிகள் கொடுத்த பணம் இருந்தது.இதையும்தொலைத்து விடுவேனோ என்றபயம் தோன்றி மறைந்தது. கந்த சஷ்டிகவசத்தை மனது உருப்போட்டது.

பாதித்தூரத்தைக் கடந்த நிலையில்தான் அந்த உருவம் அவளது கண்ணில் பட்டது.மின் கம்பத்தின் அடியில் நிலத்தில் குந்தியிருந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் அவன்.சந்தேகமேயில்லை. நேற்றுப் பார்த்த அதே மனிதன்தான் .மனம் பீதியால் நிறைந்தது.திரும்பி வந்த வழியே ஓடிவிடுவோம் என அவள் முடிவெடுத்தவேளை அவன் இவளைக் கண்டு விட்டான்.

“ தங்கச்சி நில்லுங்க “   குரலுக்குக் கட்டுப்பட்டவளாய் நின்றாள். கோபத்தால் அவளது குரல் நடுங்கியது

“இன்னும் என்ன வேண்டும் உனக்கு?” என்றாள்.

“ எனக்கு ஒண்டும் வேணாம்.இந்தா இதப்பிடி.. உனக்காகத்தான் இவ்வளவு நேரமா காத்திருக்கிறன்” சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள்.

“ நான் கள்ளன்தான். எனக்கும் மனசு எண்ட ஒண்டு இருக்கு.நேற்று நீ அழுதது எனக்கு கவலையா போச்சு. நீ உயிரைப் பணயம் வச்சு உழைச்ச காசும் நகையும் எனக்கு வேணாம். இத தாறதுக்காகத்தான் காத்திருந்தன்.”

பையொன்றை அவளது கையில் திணித்து விட்டு,புகைந்து கொண்டிருத்த சிகரெட்டை காலின் கீளே போட்டு மிதித்தான்.அவளது பதிலுக்குக் காத்திராமல் எதிர்த்திசையில் நடந்து போனான்..

திகைத்துப்போய் நின்றாள் சூரியா.மனிதம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை என்றது அவளது மனசாட்சி.

நாளை வேலைக்குச் சென்றதும் முதல் வேலையாக நண்பிகள் சேர்த்துத் தந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிவளாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

மனதில் இப்போது உற்சாகம்நிரம்பி வழிந்தது.

You already voted!
4.3 13 votes
Article Rating
Subscribe
Notify of
guest
9 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
R.rajhpabu
R.rajhpabu
2 years ago

கதை வாசித்து மெய் மறந்தேன் சிறப்பான படடைப்பு வாழ்த்துகள் அம்மணி

R.rajhpabu
R.rajhpabu
2 years ago

நே

Nanthan Sivaraman
Nanthan Sivaraman
2 years ago

சிறப்பான கதை வாழ்த்துக்கள்💐

Pushpa. Ram
Pushpa. Ram
2 years ago

ஐயோ எனக் கவலைப்பட்ட எனக்கு மரித்துப் போகாத மனிதம் மகிழ்ச்சியைத் தந்தது. வித்தியாசமான கதை, என்றும் என் நல் வாழ்த்துக்கள்

Colvin
Colvin
2 years ago

நல்ல யதார்த்தமான கதை. வாழ்த்துக்கள்.

Nishanthan Karu
Nishanthan Karu
2 years ago

யதார்த்தமான சிறுகதை. வார்த்தைகள் கண் முன் ஒளிப்படமாக தெரிகிறது. சிறப்பு

Mayuran
Mayuran
2 years ago

சிறப்பான கதை.வாழ்த்துக்கள்

சண் தவராஜா
சண் தவராஜா
2 years ago

சிறப்பு. மனிதம் இன்னமும் இரு சிலரிடம் வாழவே செய்கிறது. முற்றிலும் உண்மை.

Vijaypriyan c
Vijaypriyan c
2 years ago

Super 💥

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 18.119.104.238

Archives (முந்தைய செய்திகள்)