Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பறிகொடுத்த பின்பும் வாழத்துடிப்பவர்கள்

14 Feb 2022 2:16 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures poligai

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-37
படைப்பாளர் - பொலிகை ஜெயா, ஸ்விஸ்

கிடுகால் அமைக்கப்பட்ட தாவாரத்தின் கீழ் நிறுத்தியிருந்த சைக்கிளை வீட்டின் முன்வாசல் பக்கம் மெதுவாக உருட்டி வந்து இரும்பிலான பின்இஸ்ராண்டை காலால் தட்டி சைக்கிளை நிற்ப்பாட்டிவிட்டு, மனைவியின் காதில் விழுமாறு எல்லாம் போட்டு முடிஞ்சுதா? என உரத்த குரலில் வழமை போலகேட்டார், இரத்தினம்.

ஓம்..ஓம்.. முடிஞ்சுது..முடிஞ்சுது. கொஞ்சம் பொறுங்கோ. எல்லாவற்றையும் பைக்குள் போட்டுக்கொண்டு இருக்கிறன். இதோ வந்திடுவன், என அடுப்படிக்குள் இருந்து குரல் கொடுத்தாள் மனைவி பூபதி.

இரத்தினம் கரியரில் அசையாமல், இறுக்கமாக கட்டியிருந்த அலுமினிய பெட்டிக்குள் மனைவி கொண்டு வந்த பொதிகளை வைத்து மூடும் போது! கடலை வடையின் வாசனை அவர் மூக்கை துளைத்தது. அவற்றின் வாசனையால் சில கடலைகளை எடுத்துவாயில் போட்டு கொறித்தபடி நல்ல சுவையாக இருக்கிறது பூபதி உன்னைப்போல என அன்பான கிண்டலுடன் கூறிநிற்க, அவள் திண்ணையில் கிடந்த வேறு இரு பைகளையும் எடுத்து வந்து சைக்கிள் காண்டிலின் இருபக்கமும் தொங்கவிட்டாள்.

அப்ப நான் போறன் பூபதி கடலோர வியாபாரம். பொழுது சாயமுன் எல்லா சாமானையும் விற்று தீர்க்க வேணும். பிள்ளை கவனம் என கூறி முருகனை வேண்டியபடி சைக்கிள் இஸ்ரான்டைகாலால் தட்டிய வேளை! நானும் வாறன் அப்பா என குரல் கொடுத்தான் மகன் சிரஞ்சீவி.

அங்கெல்லாம்நீவரக்கூடாது. அப்பாவை போல வாழ்க்கையில் கஷ்டப்படாது நீ நால்லா படிச்சு உத்தியோகம் பாக்கவேணும்.அப்பதானே குட்டியின் அம்மா சந்தோசப்படுவாள் என கூறினார்.

பிள்ளை ஆசைப்படுது கூட்டிகொண்டு பொங்கோவன்.

நாளை பள்ளி இல்லைதானே அவன் நெடுக புத்தகத்தோடேயே இருக்கிறது? கடற்க்கரையில் விளையாடட்டும் ஆட்களை பாக்கட்டும், பட்டம் ஏத்து வதையும் பாப்பான் என்றாள் பாசமிகுதியால் தாய்.

முன்பக்கம் சைக்கிள் காண்டில் திருப்பமுடியாத அளவுக்கு சாமான்கள், பின்பக்கம் கடலைப்பெட்டி,தேத்தண்ணி ஏதனம் எப்படி பிள்ளையை ஏத்துவது? என்றபடி சரிவா என கூப்பிட்ட உடனேயே குதூகலத்துடன் துள்ளி குத்தித்து ஓடிவந்தான் சைக்கிளை நோக்கி. அரைமணித்தியால பயணத்தின் பின் கொழும்பு கோல்பேசை இருவரும் அடைந்தனர்.

சைக்கிளை நிற்ப்பாட்டி கடற்க்கரை மணலை பரவி சமப்படுத்திய பின் தான் கொண்டு வந்த தறுப்பாளை மணலின் மேல் விரித்து அதன் மேல் சில ஏதனங்களில் வடை,கடலையை வைத்து பொலித்தீன் தாளால் மூடியபின் "கடல..கடல..வட..வட..சாயா..சாயா.. எனகூவினார்."
தகப்பன் இப்படிகூவுவதை மகன் புதினமாக பார்த்தான்.

பல வர்ண நிறங்களில் பறந்திடும் பட்டங்களை ஆச்சரியமாக பார்த்தான், ஓடிவிளையாடும் குழந்தைகளையும் பார்த்தன், சிரஞ்சீவி. இதை அவதானித்த இரத்தினம் நீயும் அவர்களைப் போல விளையாடப் போகிறாயா? எனகேட்டார்.

அவன் உடனே ஓம்அப்பா என்றதும் தூரப்போகாது அருகில் இருந்து விளையாடு எனக்கூறி அப்பப்போ மகன் மீது ஒரு கண்ணைவைத்திருந்தார்.

விளையாடிவிட்டு தகப்பனுடன் வந்து தறுப்பாளில் இருந்தான், சிரஞ்சீவி. அதே வேளை தகப்பன் கடல..கடல..வடா..வடா..எனகூவியபோது! தானும் கடல..கடல..வடா.. வடா.. என கூவினான். குறுக்கும் நெடுக்குமாய் பொழுதை போக்கியவர்கள் இரத்தினத்திடம் வந்து கடலை வடை வாங்கி உண்டனர்.

சிங்கள மொழி பெரிதாக தெரியாது விட்டாலும் அன்பொழுக ஆட்களை வரவேற்று வியாபாரத்தை கவனித்தார். மீதிக்காசு கொடுக்கவும் தவறவில்லை.

இன்று மகனை கூட்டிச் சென்றதோ என்னவோ சாமான்கள் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டன. மகனை குனிந்து கொஞ்சினார், முருகனுக்கு நன்றி சொன்னார். மம்மல் பொழுதில் வீடு திரும்பி வெளிகேற்றை திறந்து உள்போகும் போது! மனிசி பூபதி ஓடி வந்து மகனை தூக்கி கொஞ்சினாள். மகனின் பிள்ளைத் தமிழால் நல்ல வியாபாரம் நடந்தது என மனிசிக்கு அவர் கூற, அவள் திரும்பவும் மகனை கொஞ்சினாள்.

ஒரு சிங்கள குடும்பம் இவரிடம் கடலை வாங்கியபோது! அவர்களின் குழந்தை தனக்கும் ஒரு கடலைச்சரைவேணுமென அடம்பிடித்தது. அவர்கள் பிள்ளையை தூக்கி சென்ற வேளை! இதைகவனித்த இரத்தினம் சிங்களத்தில் "அய்யே பொட்டக்கிண்ட" *அண்ணைநில்லுங்கோ* என மறித்து, ஒரு சிறிய சரைக்குள் உறைப்பு போடாத கடலையை போட்டு அந்த குழந்தையின் கையில் கொடுத்தார். சரையை பெற்ற குழந்தை பெற்றவர்களுக்குகாட்டி ஆனந்தம்கொண்டது. அந்த சிங்கள குடும்பம் நன்றி சொல்லிசென்றார்கள்.

அந்த சிங்கள குடும்பம் கடல் காற்று வாங்க கோல்பேஸ் வரும் வேளையில், அவர்களது சிறுவன் ஓடிப்போய் இரத்தினத்தின் கடை முன்நிற்பான்.

இரத்தினம் சிரித்தபடி ஒரு சிறு கடலை சரையை அவனுக்கு கொடுப்பது வழமையான நிகழ்வாக அமைந்து விட்டது. இப்படியான பழக்கத்தில் தொடங்கிய புரிந்துணர்வு, காலப்போக்கில் இரத்தினத்துக்கும், சிங்கள குடும்பத்துக்கும் இடையில் நல்ல நடப்பு வளர காரணமாகியது.

ஒரு நாள் சனிக்கிழமை அந்திநேரம் இரத்தினம் வியாபாரத்தை முடித்து மகனுடன் வீடு திரும்ப ஆயத்தமானநேரம் அந்த சிங்கள குடும்பம் அங்கேவந்தனர். இரத்தினத்தை பார்த்து நீங்கள் எந்த ஊர்? ஏன் கடல வியாபாரம் செய்கிறீர்கள்? வேறு தொழில் தெரியாதா? அல்லது வசதி இல்லையா? என நட்புடன் கேட்டனர்.

இக்கேள்வியை சற்றும் எதிர்பாராத இரத்தினம் அமைதி பொங்க கண்கள் கலங்கினார். இதை அவதானித்த அக்குடும்பம் "மாவத்சமாவென்டோன்னே" என்னை மன்னித்து கொள்ளுங்கள். "அன்டன் எப்பா, அஸ்ஸ சுத்தகரண்ட". அழவேண்டாம். கண்களை துடைத்து கொள்ளுங்கோ. தெரியாமல் உங்கள் மனதை புண்படுத்திவிட்டோம் எனகூறியவாறு சங்கடப்பட்டு நின்றனர்.

பரவாயில்லை "மாத்தையா."*ஐயா* எனகூறி, தனது குடும்பம் எப்படி வாழ்ந்தது, குடும்பத்துக்கு என்ன நடைபெற்றது, தாம் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு அகதியாக கொழும்பில் கடலை விற்க்க தள்ளப்பட்டோம் என்பதை நிலத்தை பார்த்த வண்ணம் கரகரத்த குரலில் சொல்ல தொடங்கினார் இரத்தினம்.

நான் யாழ் வன்னி ஒட்டி சுட்டான் என்ற ஊரை சேர்ந்தவன். பச்சை பசேலென்ற பசுமை நிறைந்த வயல் வெளி,உயர்ந்த பனை, தென்னை, மா,பிலா,வாழையென பயன் தரும் மரங்கள், நிழல் தந்திடும் விருட்சங்கள், பட்ச்சிகளின் உறைவிடம், பட்சிகள் காலைதமது வேலைக்கு வெளிக்கிட்டு, திரும்ப மாலை சோடி,சோடியாக கீச்சிட்ட படி தமது கூடு திரும்பும் மாலைப்பொழுதின் காட்ச்சியைபாத்தால்! மிக நல்ல இரம்மியமாக இருக்கும். குளம்,குட்டை கொண்ட சோற்றுக்கு குறைவில்லா விவசாய பூமியே என்ர ஊர்.

எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர்கள். மூத்தவனுக்கு பதினாறு வயது. மகளுக்கு பதினைந்து வயது. சுட்டுவிரலால் கடைக் குட்டியை சுட்டிக்காட்டி இவனுக்கு ஏழுவயது.மூத்த இரு பிள்ளைகளும் படித்துக்கொண்டு இருந்தனர். பாழாப் போன நாட்டு பிரச்சனை என் குடும்பத்தை சின்னா பின்னமாக்கி மீளாதுயரத்தில் எம்மை தள்ளிவிட்டது மாத்தையா.

நான் நல்ல விவசாயி. நாலு ஏக்கர் சொந்தநிலம். அவற்றில் சொந்தமாக உழவு இயந்திரம் வைத்து இரண்டு போக விவசாயம் செய்து வந்தேன். என் காணிக்குள் இரு கிணறுகளும் உண்டு. ஒவ்வொரு கிணற்றை சுற்றி வாழைகளும், தென்னைகளும் நல்ல பிரயோசனம் தந்தன. சிறிய ஓட்டு வீடு. வருமானம் குடும்பத்துக்கு போதுமானது. ஒவ்வொரு அறுவடையிலும் மனைவியின் கெட்டித்தனத்தால் கொஞ்சம் நகையும், போதுமான பணமும் சேமித்துவைத்திருந்தோம். உங்களை போன்று மகிழ்வான வாழ்வை நாமும் வாழ்ந்தோம் மாத்தையா.

"இப்போ எல்லாவற்றையும் பறிகொடுத்து, இவனுக்காக வலி மிகுந்த வேதனைகளை மனதில் சுமந்த வண்ணம், ஊர்விட்டு, தெரியாத முகங்கள், புரியாத மொழியுள்ள ஊரில்வாழுகிறோம். இங்குயாருமே எம்மை மனிதர்களாக பார்க்கவில்லை. பயத்தால் ஒதுங்கி, ஒதுங்கி பிள்ளைக்காக வாழுகிறோம்."

உறவுகள்,சுற்றத்துடன் உண்டு, மகிந்து நண்பர்களுடன் இடிலம்பேசி, சுதந்திரமாக வானத்து பறவைகள் போல சிறகடித்து வாழ்ந்தோம். எம் சிறகை ஒடித்துவிட்டாவது எங்களை வாழவிட்டிருக்கலாம். ஆனால் உயிர்களையே எடுத்துவிட்டார்கள், பாவிகள். எனகூறி கண்கலங்கி சேட்டின் கீழ்பாகத்தால் துடைத்து கொண்டார் கண்களை.

2007ல் நான், மகள், மனைவி மூவரும் வவுனியா சென்ற வேளை! வவுனியா இராணுவ முகாமின் முன் எமது பஸ்ஸை வழிமறித்த இராணுவம் அதில் பயணித்த இளம் வயதினர் பலரை சந்தேகத்தின் பேரில் பிடித்தார்கள். அவர்களுள் எமது "மகளும்" ஒருவர். நானும் மனைவியும் எங்கள் மகள் படிக்கிறா அவளுக்கு எந்த இயக்கத்துக்கும் தொடர்பில்லை. எங்கட மகளை விட்டு விடுமாறு இராணுவத்தின் காலில் விழுந்து கெஞ்சினோம் கதறினோம். அனால் எங்கள் அழுகுரல் அந்த இரக்கமற்ற இராணுவத்தின் காதில் விழவில்லை. அதன் பின்னர் தினமும் வவுனியா இராணுவமுகாமுக்கு சென்று மகளின் படத்தைகாட்டி மகளை விட்டு விடுமாறு கதறினோம், மனித உரிமையமைப்பு,செஞ்சிலுவை சங்கம், சமாதானத்திற்கான அமைப்பு போன்றவற்றிற்க்கு எழுத்து மூலம் முறையிட்டு அலைந்தோம். அனால் மகள் கிடைக்கவில்லை.

ஒரு வருடத்தின் பின் எங்கட மகளுடன் கைதான வேறுபிள்ளை மூலம் பேரிடியான செய்தி அறிந்து அதிர்ந்து போனோம். முகாமில் வைத்து நீ "புலிதானே சொல்லு, சொல்லு எனகேட்டு அடித்து அடித்து துன்புறுத்தி ஈற்றில் மகளை கொன்றுதாட்டு விட்டனர். உயிரற்ற உடலைக்கூட எமக்கு தரப்படவில்லை எனகூறி அழுதார்."

மூத்த மகன் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது! பற்றைக்குள் மறைந்திருந்த "இயக்கம் தம்முடன் போராட்டத்துக்கு இணைப்பதற்கு வலுக்கட்டாயமாக பிடித்து சென்றனர். ஒருமாத பயிற்சியின் பின் சண்டைக்கு அனுப்பியுள்ளனர். பிடித்து சென்ற மூன்று மாதத்தின் பின்னர் மகனின் உயிரற்ற உடலை கொண்டுவந்து தந்தனர் அந்த பாவிகள், என சொல்லி மீண்டும் கண்ணீர் வடித்ததோடு! தனது சேட்டின் கீழ் நுனியால் கண்ணீரை துடைத்தும் கொண்டார், இரத்தினம்."

தகப்பன் அழுவதை எதுவும் புரியாது அண்ணார்ந்து பாத்தபடி சிரஞ்சீவி நின்றபோது! அந்த சிங்கள தாய் அவனை தன்னுடன் கட்டி அணைத்தாள், இரக்கத்துடன்.

எங்கள் இரு பிள்ளைகளின் இழப்பு இம்மிருவரின் ஈரல்குலையை அறுத்துவிட்டது. வேதனை தாங்காது கத்தினோம், கதறினோம், துடித்தோம். பிள்ளைகளை கொன்றவர்களுக்கு இடியேறு விழுமென மனைவி சாபம் போட்டாள். கடவுளை திட்டிதீர்த்தாள். தொண்டை அடைத்து, குரல்தளம்பி, விக்கி,விக்கி, தினம்,தினம் அழுவாள் மயங்கிவிழுவாள்.

நான் பயந்து டாக்டரிடம் கூட்டிசென்று காண்பித்தேன் அவர் மனிசியை சோதனை செய்த பின்னர், அவளுக்கு எந்த நோயுமில்லை. பிள்ளைகளின் இழப்பு அவள் மனசை நல்லாக பாதித்துவிட்டது. இதிலிருந்து ஓரளவு மீள வேண்டுமானால் இயன்ற வரை பறிகொடுத்த பிள்ளைகளின் நினைப்பு வராத மாதிரி பார்த்து கொள்ளுங்கோ என்றார்.

     *அது எப்படி முடியும் டாக்டர்? என நான் கேட்ட போது! கஷ்டமான காரியம்தான். உங்கள் நிலைமை எனக்கு விளங்குது. இருக்கிற பிள்ளையை வைத்து மனிசியை ஆறுதல் படுத்துவது அவவின் உடல் நலத்துக்கு நல்லது. இங்கு நிலமை மேலும் மோசமடைய போகிறது.சொந்த வீட்டை விட்டு,ஊரை விட்டு தூர இடத்துக்கு போய் அமைதியாக வாழ முயலுங்கள். இங்கிருப்பின் பறிகொடுத்த பிள்ளைகளின் நினைவு கட்டாயம் தாய்க்குவரும். இப்போது அவவின் மனம்மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. உடலுக்கும், மூளைக்கும் பாதிப்பு ஏற்ப்படமுன்னர் மாற்று இடம் தேடுவது நல்லது என்றார், டாக்டர்.*

சொந்த வீடு,ஊர், சோறு போட்ட மண்ணை விட்டு பிரியமனமோ இடம் கொடுக்க மறுக்கிறது. தற்போது மனிசியோ! பிள்ளைகளின் நினைவால் சாப்பாடற்று, நித்திரையற்று அவளின் முன்னைய தோற்றம் மாறி, இரு கண்களும், பற்களுமாய் உருமாறி வருகிறாள். மேலும் வன்னிமண் ஒரு பெரும் போருக்கு தயாராகி வருகிறது. இத்தயார் படுத்தல் என் தொண்டைக்குள் ஓர் உருண்டை சிக்கியது போன்ற ஒரு பயப்பிரமையை ஏற்படுத்தி நின்றது. இலங்கை இராணுவம் ஏவும் செல்குண்டுகள் அசுரவேகத்தில் தீப்பிழம்பை கக்கியவாறு சீறிப்பாயும். நாய்கள் சிணுங்கியபடி பாதுகாப்பு தேடிஅங்கும், இங்குமாக ஓடும். சில செல்கள் எனது வீட்டின் அருகில் விழுந்து வெடித்துச்சிதறி, சாம்பல் கக்கி அடங்கும். செல்குண்டு வெடித்த சில நேரங்களின் பின்கூக்குரல், அழுகுரல்கள் வானைமுட்டும் அளவுக்கு கேட்க்கும். கால்,கை,தலையற்ற முண்டங்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் சிதறி காணப்படும்.

ஐயே..அண்ணா உங்கட மனிசியின் உடல்நிலை இப்போது எப்படி? என அந்த சிங்கள பெண்மணி கேட்டாள். பறிகொடுத்த செல்வங்களை நினைத்து இடைக்கிடை அழுவா.ஆனால் இவன் மகனை காட்டி தாய் அழும்போது! பக்கத்தில் நிண்டு சுரண்டுவான். உடனே அழுகையை நிறுத்தி இவனை அணைத்து கொள்வாள்.

மாத்தையா! இரு அன்பு செல்வங்களை பறிகொடுத்த பின்னரும் நாம்! *வாழும் இவனுக்காக வாழதுடிக்கிறோம்* இவனும் இல்லையேல் நாம் இருவரும் ஏலவே நஞ்சருந்தி செத்திருப்போம் என்றார் இரத்தினம்.

கொழும்பு வந்து என்னிடம் வழமையாக செத்தல் மிளகாய் மூட்டை கட்டிய ஒரு சிங்கள வியாபாரியின் கடையில் வேலை செய்தேன். அனால் அங்கு இலங்கை புலனாய்வுப் பிரிவு என்னிடம் வந்து உன் மகன் புலியிலிருந்துதானே செத்தான், நீயும் புலிதானே? என விசாரித்ததனால் கடைமுதலாளி பயத்தில் என்னை வேலையால் நிறுத்திவிட்டார். சொந்த இடத்திலும் வாழ முடியல்ல, வந்த இடத்திலும் வாழவிடுகிறார்கள் இல்லை. தமிழர்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக நாம் பலவிதத்திலும் வதைக்கப்படுகிறோம். நாமும் உங்களைப் போல ஒரு மனிதர்கள்தானே? இப்ப தற்காலிகமாக கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மடத்தில் வசிக்கிறோம்.மாத்தையா என்றார் இரத்தினம்.

அந்த சிங்கள குடும்பம் தமக்குள் ஏதோதம் காதுக்குள் குசுகுசுத்த பின்னர், ஐய்யே..அண்ணா! எங்கள் வீட்டின் பின்னால் ஒரு சிறிய அறையும் அடுப்படியும் இருக்கு. நீங்கள் விரும்பினால் அங்கு வந்து இருக்கலாம். அங்கிருந்த படியே உங்களது வியாபாரத்தை செய்யலாம். பக்கத்தில் தமிழ் பாடசாலையும் உண்டு. மகனை அங்கு படிப்பிக்கலாம், எங்கள் மகனுடன் உங்கள் மகன் விளையாடலாம். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். எந்த பயமுமற்று நீங்கள் சந்தோசமாக வாழலாம், என்றார்கள் அந்த முன்பின் பழக்கமற்ற இரக்கமுள்ள சிங்கள குடும்பம்.

அவர்களது அன்பான வார்த்தையை கேட்டு எதுவும் வாயால் பேசாது, மகனை அணைத் தவண்ணம் விழி மூடாது அவர்களையே பார்த்தபடி தலையை அசைத்து நின்றார் இரத்தினம் நன்றியுடன்.

You already voted!
4.5 13 votes
Article Rating
Subscribe
Notify of
guest
31 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Swiss Suresh
Swiss Suresh
2 years ago

பொலிகையின் கதையில் இடதுசாரி சிந்தனை தெறிக்கிறது. வலுக்கட்டாயமான ஆட்சேர்பில் 3 மாதத்துக்குள் பிள்ளையை பிணமாக பார்த்த பெற்றோரின் வலியை பதிவிட்டிருப்பது மிகவும் துணிவுகரமானது. ஆனால் சிங்கள அம்மாவுக்கு கொஞ்சம் தமிழ் தெரியும் என்று கதையில் சொல்லியிருந்திருந்தால் மிகநன்று..! சிங்களத்தில் பேசும் குடும்பத்தினரிடம் தமிழில் தனது பிரச்சனையை தெளிவுபடுத்துவதற்கு பொருத்தப்பாடாக இருந்திருக்கும் . படைப்பாளி எந்தக் கோணத்தில் சொன்னார் என புரிந்துகொள்ள முடியவில்லை பாராட்டுக்கள் .

Polikai Jeya
Polikai Jeya
Reply to  Swiss Suresh
2 years ago

இங்கு இரத்தினத்துக்கு கொஞ்சம் சிங்களம் பேச வரும்.அதனால் அந்த சிங்கள தாய் புரிந்து கொள்வாள்.என்கதையை ஊன்றி படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்..நண்பா..தீவகா.
பொலிகை ஜெயா.

SENTHILNESAN
SENTHILNESAN
2 years ago

எமது தேசத்தில் எமது மக்கள் பட்ட, படுகின்ற துன்பங்கள் சொல்லொணா…. அடக்குமுறை சிங்களத்தை தமிழினம் வெறுத்தாலும் இதனிடையே நல்லதையே நினைக்கும் , மனிதத்தை மதிக்கும் உண்மையான, தூய்மையான. சிங்கள மக்களும் இலங்கையில் இன்னும் வாழ்வதும் இவை பற்றி பொலிகை ஜெயா குறிப்பிடுவதும் யதார்த்தமானது.

Polikai Jeya
Polikai Jeya
Reply to  SENTHILNESAN
2 years ago

ஆம்..தம்பி நீங்கள் சொல்லியதே நியம்.எல்லா இனத்திலும் இரக்க குணம் படைத்தவர்கள் உண்டு.உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா.

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
2 years ago

வாழ்த்துகள் ஐயா

Polikai Jeya
Polikai Jeya

மிக்க நன்றிகள் கனகராஜா..அய்யா

Sathanandan Selvanandan
Sathanandan Selvanandan
2 years ago

அருமையான கதை.தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான சக வாழ்வினை வலியுறுத்துவதாக உள்ளது. வெறும் இனவாத ஊட்டல்கள் மூலம் ஏற்படும் இன வன்முறைகளைத் தாண்டி கதை செல்வது காலத்தின் தேவையாகவும் உள்ளது

Polikai Jeya
Polikai Jeya
Reply to  Sathanandan Selvanandan
2 years ago

தம்பி.செல்வா.தாங்கள் காலச்சூழல் நோக்கில் ஆரோக்கிய பதிவாக்கம் செய்து எனை வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றிகள்.

polikaijeya
polikaijeya
2 years ago

மிக்க நன்றி தம்பி சுதாகர்

கே.எஸ்.சுதாகர்
கே.எஸ்.சுதாகர்
2 years ago

நல்ல கதை. சொல்லப்படும் முறை, கதையோட்டம் நன்றாக வந்திருக்கின்றது. வாழ்த்துகள்.

polikaijeya
polikaijeya

மிக்க நன்றி..தம்பி..சுதார்.உங்கள் வாயால் வாழ்த்து பெறல் மகிழ்ச்சி

R.Sujendran
R.Sujendran
2 years ago

அருமையான கதை கவிஞரே(அண்ணா)உங்கள் இலக்கியப் பணி தொடர எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவனை நான் பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.🏆🎗

polikaijeya
polikaijeya
Reply to  R.Sujendran
2 years ago

எனது இலக்கிய வளர்ச்சியில் உமக்கு எப்பவும் பெரும் கரிசனையுண்டு.உமது வாழ்த்துக்கு மிக்க நன்றி..தம்பி..சுயேன்

Kannan
Kannan
2 years ago

Good night

உமா விஜயகுமார்
உமா விஜயகுமார்
2 years ago

வாழ்த்துகள்

polikaijeya
polikaijeya

நன்றிகள்..அம்மா..உமா.

Nitheesan Theavarajah
Nitheesan Theavarajah
2 years ago

இவ்வாறான கதைகளை வெறும் கதைகளாக வாசிக்க முடியவில்லை… இவை இலங்கைத் தமிழர் வாழ்வியல் அனுபவங்களாக உள்ளன.

polikaijeya
polikaijeya
Reply to  Nitheesan Theavarajah
2 years ago

ஆம். நீங்கள் சொன்னது போல இல.தமிழரின் வாழ்வியலின் சோகம்..வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்..தம்பி..நித்தீசன்.

Bollingen Gruppe
Bollingen Gruppe
2 years ago

காலத்தால் மறக்கமுடியாத வேரோடிப் புற்றாகிய வலிகள்..

விடியும் நாளை ஆறுதல்களை கொண்டுவரும் என ஏங்கி நிற்கும் மனங்கள்.

polikaijeya
polikaijeya
Reply to  Bollingen Gruppe
2 years ago

நன்றி Bollingen Gruoop க்கு

polikaijeya
polikaijeya
Reply to  Bollingen Gruppe
2 years ago

ஆம்.காலத்தால் வேரோடிய வலிகள் தான்..நன்றி..Bolligen நண்பர்களுக்கு..

செல்வி
செல்வி
2 years ago

அருமையான பதிவு மேலும் வளர வாழ்த்துக்கள்.

polikaijeya
polikaijeya
Reply to  செல்வி
2 years ago

நன்றி அம்மா செல்வி

ஜமுனா
ஜமுனா
2 years ago

நல்ல பதிவு வாழ்த்துகள்.

polikaijeya
polikaijeya
Reply to  ஜமுனா
2 years ago

நன்றிகள்

சூரன்.ஏ.ரவிவர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
2 years ago

அருமையான கதை. வாழ்த்துகள்.

polikaijeya
polikaijeya

நன்றி..தம்பி.ரவிவர்மா

Arun
Arun
2 years ago

இவ்வாறான கதைகளை வெறும் கதைகளாக வாசிக்க முடியவில்லை… இவை இலங்கைத் தமிழர் வாழ்வியல் அனுபவங்களாக உள்ளன.. பாதி வாசிக்கும் போதே எமது சொந்த அனுபவங்கள் , இழப்புகள் கண் முன் தோன்றிக் கண்கள் கசியத் தொடங்குகின்றன..

polikaijeya
polikaijeya
Reply to  Arun
2 years ago

ஆம் உண்மை அருண்..நன்றி

Arunthavarajah .k
Arunthavarajah .k
2 years ago

யாழ்ப்பாணபேச்சு வழக்கில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை வலிகளோடு கூறுவது கதைக்கு வலிமையாகும். . வாழத் துடித்தல் …. துடிந்து வாழ்தல் என்ற வகையில் போராட்டமே வாழ்க்கையாகிப் போனால் வாழ்வதைப் போ என்ற வினாவை கதை பல இடங்களில் காண்பித்து விடுகிறது. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

polikaijeya
polikaijeya
Reply to  Arunthavarajah .k
2 years ago

ஓம் தமிழர் வாழ்வியலே ஒரு போராட்டம் தான்.பின்னூட்டத்துக்கு ம,என் வளர்ச்சியில் முக்கிய பங்குடுக்கும் தங்களுக்கு நன்றிகள்..தோழர்.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092529
Users Today : 3
Total Users : 92529
Views Today : 3
Total views : 410190
Who's Online : 0
Your IP Address : 3.17.174.239

Archives (முந்தைய செய்திகள்)