Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

சிறகு அறுந்த பட்டாம்பூச்சி – முனைவர் கி.இலட்சுமி

14 Feb 2022 1:55 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures laxmi

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-36
படைப்பாளர் - முனைவர் கி.இலட்சுமி, சென்னை

அன்னம் சேவல் கூவும் முன்னே எழுந்து விட்டாள். புறக்கடைப் பக்கம் சென்று முகம் கை கால் கழுவி, முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு, வாசலில் நீர் தெளித்து கோலமிட்டாள். அடுப்பை பற்றவைத்து கருப்பட்டியை கொதிக்க வைத்து, லோட்டாவில் ஊற்றி சூட்டுடன் குடித்தாள்.  நேற்றைய சோற்றில் தண்ணீர் ஊற்றி சட்டியில் வைத்திருந்தாள்..அதை தூக்கில் கொஞ்சம் அள்ளிப்போட்டுக் கொண்டு, அரக்கப் பரக்க கிளம்பினாள்.

"முல்லை...எழுந்திருச்சு அடுப்பில இருக்கற கருப்பட்டி தண்ணீய குடிச்சுட்டு தம்பி கதிரையும் எழுப்பிகிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு தாயி... சட்டியில இருக்கற சோத்தை கரைச்சு குடிச்சுட்டு போங்க...மத்தியானம் ஸ்கூல்ல போடற சத்துணவை சாப்பிட்டு தம்பிக்கும் மறக்காம ஊட்டிவிடும்மா...அம்மா சாயங்காலம் வர்றவரைக்கும் பத்திரமா இருந்துகிடணும்..." அன்னம் சொல்ல, தூக்க கலக்கத்துடன் தலையாட்டினாள் முல்லை.

பன்னிரெண்டு வயது முல்லைக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை...பாவம் அவளும் சிறுபெண்தானே ...இந்த வீட்டில்  பெண்ணாய் பிறந்து எந்த சுகத்தை அனுபவித்தாள்...கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்கட்டும்...அப்புறம் இருக்கவே இருக்குது பொம்பளை ஜென்மத்துக்குன்னு விதிக்கப்பட்ட நாய்பட்ட பாடு...

இதோ பொறந்த வீட்லயும் சுகப்படாம குடிகார கணவன் கிட்ட. தினமும் அடிவாங்கி சீரழிஞ்சு  ரெண்டு புள்ளைகளோட பட்டமரமா நின்னதுதான் மிச்சம்...அதிகமா குடிச்சு உடம்பு கெட்டு வயிறு புண்ணாகி அரசாங்க ஆஸ்பத்திரியில மாசக்கணக்கா கிடந்து செத்தான். இருந்த உறவும் விட்டுப்போக, ரெண்டு புள்ளைகள காப்பாத்த தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்கு கிளம்பியாச்சு. வர்ற சம்பளம் மூணுபேரின் கால்வயிறு நிரம்பவே போதாத நிலையில், புள்ளைகளின் எதிர்காலத்தைப் பத்தி கனவு கண்டு கொண்டிருந்தாள் அன்னம்.

"என்ன அன்னம்...ஆடி அசைஞ்சு ஒயிலா நடந்து வர்ற... நாங்க எல்லாம் எவ்வளவு நேரம் காத்துக் கிடக்கிறது...ஏறு புள்ள வண்டியில சீக்கிரம்..." அன்னம் ஏறவும் வண்டி புறப்பட்டது. கம்பெனி வண்டி...அதை விட்டுவிட்டால் பஸ் பிடித்து இறங்கி ஒருமைல் தூரம் நடந்து போனால்தான் கம்பெனிக்கு போகமுடியும். ஏழு மணிக்கு புறப்பட்டால் மீண்டும் ஆறு மணிக்குத்தான் இங்கே வர முடியும். 

கம்பெனியில் அம்பது பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். பொம்பளைங்க கூட்டம்தான்அதிகம். நாள் முச்சுடும் மருந்தை தடவி தீக்குச்சிகளை அடுக்கி வைக்கிறதுக்குள்ள முதுகு விட்டுப்போயிடும். நடுவுல அரைமணி நேரம்தான் சாப்பாட்டுக்கு விடுவாங்க...அப்பதான் பொம்பளைங்க எல்லாம் ஒண்ணா கூடி சிரிச்சி பேசிகிடுவாங்க.. நாளுக்கு நூத்தைம்பது கூலி...தீபாவளி பொங்கலுக்கு ஒருமாச போனசு உண்டு...பெரும்பாலும் அட்வான்ஸ் வாங்கிடறதால முழு சம்பளத்தை ஒருநாளும் கண்ணுல பார்த்தது கிடையாது...அப்படியும் மாசம் இருநூறு ரூபாயை மிச்சப்படுத்தி மக முல்லை பேர்ல தபாலாபிசுல போட்டுகிட்டு வர்றா. அட பொம்பளைப்புள்ள காது மூக்குலயாவது  தங்கம் போட வேண்டாமா...இப்பவோ அப்பவோன்னு சமைய காத்துக்கிடக்கற புள்ளைய மூளியா விட முடியுமா...மூணு வருசம் ஆகிப்போச்சு...சேர்த்த காசை எடுத்து கொஞ்சம் கடனை வாங்கி காதுக்கு தோடு எடுத்துப்புடணும்....சின்னதா மூக்குத்தியும் வாங்கி குத்தணும்... குச்சிகளை அடுக்கியபடியே... யோசனையில் ஆழ்ந்தாள் அன்னம். 

சாப்பாட்டு நேரம் வந்தும் அன்னம் இந்த உலகிற்கு வரவில்லை. 

"அன்னம் மணியடிச்சு அஞ்சு நிமிஷமாச்சு...இன்னும் எப்ப சாப்பிட வர்றதா உத்தேசம்..." கோதையின் குரல் கேட்டு, சட்டென விழிக்கிறாள் அன்னம். எத்தனை முறை கையை கழுவினும் மருந்து வாசனை போனபாடில்லை. குமட்டிக்கொண்டு வருகிறது. அதனையெல்லாம் பார்த்தால் ஆகுமா...தூக்கிலிருந்த சோற்றை அள்ளித் தின்னும் போதுதான் தொட்டுக்கொள்ள ஊறுகாய் கூட கொண்டுவராதது ஞாபகத்திற்கு வந்தது...

"இந்தா அன்னம்...இந்த எலுமிச்சம் ஊறுகாயை கொஞ்சம் கடிச்சுக்கோ..." அஞ்சலை பரிவுடன் கையில் ஊறுகாயை கொடுக்கிறாள். வழக்கம்போல் சிரிப்பும் கும்மாளமுமாக பிறர் கதையை பேசி, பரிதாபமான தங்கள் நிலையை மறந்து  இருக்கையில், மீண்டும் மணியடித்து விடுகிறது. அனைவரும்  மீண்டும் மௌனப் போர்வையை போர்த்திக்கொண்டு கலைந்து செல்கிறார்கள். 

அன்று வாரக்கூலியை கையில் வாங்குவதற்குள் இன்னும் தாமதமாகி விடுகிறது. நன்றாக இருட்டத் தொடங்கிய பின்தான் வண்டி கிளம்புகிறது. வண்டியிலிருந்து இறங்கியதும் ராவுத்தர் கடையில் காரச்சேவும் இனிப்பு பன்னும் முட்டையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி விரைகிறாள் அன்னம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் குளிக்க அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. முல்லை அதெல்லாம் கரெக்டா செய்து விடுவாள். 

"முல்லை...கதிரு கண்ணுகளா...இந்தாங்க...காரச்சேவும் பன்னும் எடுத்துக்கிடுங்க....அம்மா குளிச்சுட்டு வெள்ளென வந்து சோறாக்கிடறேன்..."  உடம்பு வலிபோக வெந்நீரை ஊற்றியதும் கொஞ்சம் இதமாய் இருந்தது...அவசரமாய் மாத்துப்புடவையோடு வந்து அடுப்பில் அமர்ந்தாள். 

அரிசிப்பானையில் கையை விடவும், அது காலியாக இருந்தது. அடடா...அரிசி வாங்க மறந்துட்டேனே...இருக்கட்டும்...இருந்த நொய்யை கஞ்சி காய்ச்சி...முட்டையை பொரியல் செய்து வைத்தாள். பிள்ளைகள் படிப்பதை பார்க்கையில் அன்னத்திற்கு பெருமையாக இருந்தது...

"      பெண்கட்கு கல்வி வேண்டும்
       குடித்தனம் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       மக்களைப் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       கல்வியைப் பேணுதற்கே! "

பாரதிதாசன் பாடலை, முல்லை உரத்த குரலில் படித்துக் கொண்டிருந்தாள். கதிருக்கு ஆறுவயது...சிலேட்டில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தான். எப்படியோ பிள்ளைகள் படித்து பெரிய ஆளாகி விட்டால் போதும்...அவள் பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்... ஆனால் அன்னத்தின் கனவு நிறைவேறாது என அவளுக்கு அப்போது தெரியவில்லை...

அன்னம் அன்று காலையில் எழும்போதே உடம்புக்கு சொகமில்லை... அதையும் மீறி எழ முயற்சிக்கையில் தலை கிர்ரென சுத்தியது...வாந்தியும் எடுத்தாள்...அதில் கொஞ்சம் இரத்தமும் சேர்ந்து வந்திருந்தது. அன்னம் இல்லாமலே தீப்பெட்டி கபெனி வண்டி கிளம்பி விட்டிருந்தது. தாமதமாய் எழுந்த முல்லை அம்மா படுத்திருப்பதை, அதிசயமாய் பார்த்தாள். கிட்டவந்து தொட்டுப் பார்க்கவும் நெருப்பாய் கொதித்தது உடம்பு. பயந்துபோய் பக்கத்து வீட்டு முப்பாத்தா பாட்டியைக் கூட்டிக்கொண்டு வந்தாள்.

"என்னடீ செய்யுது அன்னம்..." பக்கத்தில் வந்து உட்கார்ந்து நாடி பிடித்து பார்த்தாள். பாட்டிக்கு கைவைத்தியம் கொஞ்சம் தெரியும். 

"முல்லை... சுக்கும் மல்லியும் பாட்டி தட்டித்தரேன்...நான்  சொல்றாப்புல அடுப்புல கொதிக்க வச்சு கொண்டாடியம்மா..." பாட்டியின் கைவைத்தியத்துக்கு ஜூரம் கட்டுப்படவில்லை...மூன்று நாளுக்கு பிறகும்  சுரம் விட்டபாடில்லை...கம்பெனியில் உடன் வேலை பார்க்கும் தோழிகளெல்லாம் வந்து பார்த்துவிட்டு சென்றனர். முப்பாத்தா பாட்டிதான் புள்ளைகளுக்கு கஞ்சி தண்ணி ஊத்திக்கொண்டிருந்தாள். கதிருக்கு நடப்பது ஒன்றுமே புரியாமல் அம்மாவையே சுற்றி சுற்றி வந்தான். முல்லை அங்குமிங்கும்  அசையாமல் அம்மாவுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, கஞ்சி வைத்து நீராகாரத்தை வாயில் கொஞ்சம் வேளாவேளைக்கு ஊற்றுவது என சகலமும் செய்தாள். ஏனோ அவளின் மனதில் இனம் புரியாத பயம் ஏற்பட்டிருந்தது.

"பேசாம டவுனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிரணும்...இனிமே கைவைத்தியத்துக்கு இந்த சுரம் கட்டுப்படாது..." பாட்டி கையை விரித்தாள். .அன்னத்தை யார் ஆஸ்பத்திரியில் சேர்த்து பார்த்துக்கொள்வது எனத் தெரியாத நிலையில் நாட்கள் கடந்தன...எந்த ஆஸ்பத்திரிக்கும் கூட்டிட்டு போகாமலே அன்னம் போய் சேர்ந்து விட்டாள். விஷக்காய்ச்சல் என முடிவு கட்டியது சுகாதாரத்துறை...ஊரே கூடி அழுதது...

முல்லை கதிரை கட்டிக்கொண்டு கதறி அழுதாள். அக்கா அழுவதைப் பார்த்து கதிரும் அழுதான். எல்லோரும் சேர்ந்து அன்னத்தின் கடைசிப் பயணத்தை முடித்து வைத்தனர். முப்பாத்தா பாட்டி தன் குடிசையில் பிள்ளைகளைப் படுக்க வைத்துக் கொண்டாள். அதற்குள் ஒருமாதம் ஓடி விட்டிருந்தது. முப்பாத்தா பாட்டி சொந்தபந்தம் இல்லாதவள். சின்ன வயதிலேயே  புருசனை இழந்து தனிமரமாய் நின்றவள். ரெண்டு மாடுகளை வைத்துக்கொண்டு பால் கறந்து விற்று பொழைப்பு ஓட்டுபவள். அதுவும் மடிவற்றி சொற்ப பால்தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தும், அன்னத்தை சொந்தப் பெண்ணாய் பாவித்துப் பழகியதால், யாருமற்று அனாதையான குழந்தைகளை தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டாள்.

ஆனாலும் மூணுவேளை சோறு தவிர அவளால் வேறு என்ன அக்குழந்தைகளுக்கு செய்துவிட முடியும். 

முல்லை அழுதழுது ஓய்ந்திருந்தாள். என்ன அழுதாலும் போன அம்மா திரும்பி வரப்போவதில்லை. இரவெல்லாம் தெளிவாக யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். மறுநாள் காலை வெள்ளென எழுந்து சாணிக்கரைச்சு வாசத்தெளித்து கோலமிட்டாள். அடுப்பை பத்த வெச்சு கருப்பட்டி காபி தயாரித்தாள். நேத்து மீதமிருந்த சோற்றில் தண்ணீர் ஊத்தி, தூக்குசட்டியில் போட்டுக் கொண்டாள்.முப்பாத்தா பாட்டி எழுந்ததும் அதிசயித்தாள்.

"ஆத்தா முல்லை... ஏன்மா இவ்வளவு சுருக்க எழுந்து வேலை பார்க்கற...கொஞ்சம் தூங்கறதுதானே தாயி..."

"இருக்கட்டும் பாட்டி...நான் இன்னைல இருந்து அம்மா வேலை பார்த்த தீப்பெட்டி கம்பெனியில வேலை பார்க்க போறேன்...அப்பதான் கதிரை நல்லா படிக்க வைக்க முடியும்..."

"நீ ஏன்மா அங்க வேலைக்கு போகணும்...பாட்டி முடிஞ்சவரை மூணுவேளை கஞ்சியாச்சும் ஊத்தமாட்டேனா..."

"இருக்க இடம் கொடுத்து ஆதரவு தர்றீங்க...அதுவே போதும் பாட்டி...யாராச்சும் ஒருத்தர் வேலைக்கு  போனாதான் இன்னொருத்தரை படிக்க வைக்க முடியும்...அம்மாவோட கனவை  நிறைவேத்தற பொறுப்பை நான் ஏத்துக்கப்போறேன்...  கதிர் எழுந்ததும் கிளப்பி விட்டு பக்கத்து வீட்டு மணியோட ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க பாட்டி...நாளையில இருந்து நானே அவனை முன்ன எழுப்பி ஸ்கூலுக்கு ரெடி பண்ணிடறேன்...அப்புறம் பாட்டி பாலை நானே கறந்து வெச்சுட்டேன்...வரட்டுமா பாட்டி ...கம்பெனி வண்டியை பிடிச்சாதானே நேரத்துக்கு வேலைக்கு போக முடியும்..." முப்பாத்தா பாட்டியின் கண்களில் நீர் துளிர்த்தது.

முல்லை செல்லும் வழியில்  அவள் படித்த பள்ளியைப் பார்த்ததும் நின்றாள்.

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"

பள்ளிக்கூடச்சுவரில் எழுதப்பட்டிருந்த பாடலைப் படிக்கையில், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.  அதைக் கைகளால் துடைத்தபடி கம்பெனி வண்டியில் முல்லை ஏற, கனத்த மௌனத்துடன் வண்டி புறப்பட்டது. நேற்றுவரை பள்ளி மாணவியாக இருந்த முல்லை, இன்று குழந்தைத் தொழிலாளியாக தன்பயணத்தை தொடர்கிறாள்.

சிறகுகள் அறுந்த பட்டாம்பூச்சி ஒன்று முடங்கிப் போகிறது கூட்டுக்குள்…

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ஸ்ரீவர்ஷினி
ஸ்ரீவர்ஷினி
2 years ago

அருமை அம்மா

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 3.141.244.153

Archives (முந்தைய செய்திகள்)