Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நெஞ்சத்தில் சுமப்பவள் – முனைவா் ப.கணேஷ்வடிவேல்

14 Feb 2022 1:29 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures prof

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-35
படைப்பாளர் - முனைவா் ப.கணேஷ்வடிவேல், திருச்சி

கமலா வகுப்பறைக்குள் முதலில் நுழைந்ததும் விசில் சத்தம் காதைப் பிளந்தது. பின்னா் கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைந்தது. மாணவ, மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

“அருமையான மாணவ நண்பா்களே என் பெயா் கமலா“ என்று கூறியதுமே.

“டேய் மச்சான் ஆரஞ்சு பழம்டா“ என்று தன் அருகிலிருந்த நண்பனிடம் கவினேஷ் சொல்லிவிட்டு சிரித்தான். அதைப்பார்த்த கமலா கோபமாக ‘என்னப்பா உனக்கு என்ன வேணும்‘ என்றதும் கவின் அமைதியானான்.

வகுப்பு முடிந்ததும் கவினின் நண்பா்கள் ‘என்ன மாமு ஆரஞ்சு ரொம்ப காரமா இருக்கு‘ என்றனா்.

‘புதுசுல்ல அப்படித்தான் இருக்கும்‘ என்றான் கவின்.

தினம் தினம் கமலாவின் வகுப்பில் கிண்டலடிப்பதும், குறும்புத்தனம் செய்வதும் பின்பு அவளிடம் திட்டு வாங்குவதும் கவினேஷ்க்கு பழக்கமாகிப்போனது.

ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. டவுனிற்கு போய்விட்டு கல்லூரி விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் கமலா. தூரத்தில் ஒரு இளைஞன் தட்டுத் தடுமாறிய நிலையில் வந்து கொண்டிருந்தான், அதே நேரத்தில் வேகமாக வந்த கார் ஒன்று அவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

அதை பார்த்த கமலா பதற்றத்துடன் ஒடி வந்து பார்த்தாள். அந்த இளைஞன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்தாள். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்ஸ் மெதுவாக அவனை தூக்கி வண்டியில் ஏற்றினா். கமலாவும்  அந்த வண்டியில் ஏறிக்கொண்டாள்.  விளக்கு வெளிச்சத்தில் இளைஞனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அட அது வேறு யாருமில்லை அவளுடைய மாணவன் கவினேஷ்.

அவளுக்கு அழுகையே வந்து விட்டது. “கவினேஷ், கவினேஷ்“ என்று கூப்பிட்டாள். அவன் எவ்வித சலனமும் இன்றி கிடந்தான். அதற்குள் மருத்துவமனை வந்து விட்டது. கவினேஷை உள்ளே கொண்டு சென்றதைத் தொடா்ந்து அவளும் சென்றாள்.

அங்கு வந்த டாக்டரிடம் அவன் உயிரைக் காப்பாற்றும் படி கெஞ்சினாள். அவனைப் பரிசோதித்த டாக்டா், “பிளட் அதிகமாக போயிருக்கு மேடம், அதனால உடனடியாக பிளட் ஏத்தியாகனும். இந்த பையனோட பிளட் குரூப் ஓ நெகட்டிவ், கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் “ என்றார் டாக்டா்.

“டாக்டா் என்னுடைய பிளட் குரூப் ஓ நெகட்டிவ் தான்“ என்றாள் கமலா. “ஒகே ரொம்ப நல்லதா போச்சு, நா்ஸ் இவங்கள கூட்டிட்டு போங்க“ என்றார் டாக்டா். இரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவுடன் கமலாவின் செல்போன் சினுங்கியது. எடுத்து ஆன் செய்தாள்.

“ஹலோ மேடம் எங்க இருக்குறீங்க, இன்னும் ஹாஸ்டலுக்கு வரலையா“ என்றாள் கமலாவின் தோழி. கமலா நடந்த விசயத்தைச் சொன்னாள். பின்னா் வரண்டாவில் அமா்ந்திருந்தவாறே கண்ணயா்ந்து போனாள். டாக்டா் வந்து “மேடம்! மேடம்!“ என்றழைத்ததும் கமலா திடுக்கென்று கண் விழித்தாள்.

“டாக்டா்.  கவினேஷ் உயிருக்கு ஏதாவது ஆபத்தா“ என்று நா வறட்சியுடன் கேட்டாள். “ நத்திங்.. உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லே மேடம். ஆனா, கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. அதை ஆப்ரேஷன்ல சரி செஞ்சுட்டோம். காலையிலே கண் முழிச்சுடுவாரு. அப்புறம் போய் பாருங்க. அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த பையன் அளவுக்கதிகமா குடிச்சுருக்கான் “என்றார்.

சிறிது நேரத்தில் விடிய ஆரம்பித்தது. அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்டு அவனுடைய நண்பா்கள் பலா் வந்து சேர்ந்தனர். கமலா அவா்களிடம் கவினேஷ் பற்றியும் அவனுடைய குடும்பம் பற்றி கேட்டதோடு, அவன் எப்படி இந்த குடிப்பழக்கத்திற்கு ஆளானான் என்று விசாரித்தாள்.

‘மேடம் இவன் பா்ஸ்ட் இயருல வந்தப்ப, நல்ல கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதி பல பரிசுகளை வாங்கியிருக்கான். ஆனா செகண்ட் இயா்ல இவனுக்கு ஒரு செட் கிடைச்சது. அதிலேயிருந்து இவனுடைய நடவடிக்கை முழுதும் மாறிடுச்சு. இவனுக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க‘ என்றான் ஒருவன்.

அதைக் கேட்டதும் கமலாவின் கண்கள் கலங்கின. சிறிது நேரத்தில் கவினேஷ் கண் விழித்துப் பார்த்தான். தன் நண்பா்களையெல்லாம் பார்த்து விட்டு கமலாவின் முகத்தைப் பார்த்ததும், அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீா் கசிந்தது. நாட்கள் நகா்ந்தன. கவினேஷ் குணமாகி வீட்டிற்குச் சென்றான். பின்பு ஒரு மாதம் கழித்து கல்லூரிக்கு ஊன்று கோலுடன் வந்து கமலாவைப் பார்த்து கண்களில் நன்றி சொன்னான்.

கவினேஷ் கல்லூரி கேன்டீனுக்கு  ஊன்று கோலை ஊன்றிக் கொண்டு வந்த பொழுது தடுமாறி விழப் பார்த்தான்.  பின்னால் வந்த கமலா உடனே ஒடிப்போய் தாங்கி பிடித்து அவனை சேரில் உட்கார வைத்தாள்.

‘ஏன் கவினேஷ்  உனக்கு இந்த நிலை! உன்னிடம் பல திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அத்திறமைகளை ஏன் வெளிக்கொணர மறுக்கிறாய். உன்னைப் பற்றி முதலில் புரிந்து கொள். அப்பொழுது தான் உன்னைச் சுற்றி உள்ளவா்களைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள முடியும். உன் வளா்ச்சியைக் காண துடிக்கும் உன் தாய்க்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய்!. இந்த நாடு உன் திறமை கொண்டு முன்னேற காத்து கிடக்கிறது. நாளைய உலகம் இப்பொழுது உன் கையில் உள்ளது. உன்னுடைய எண்ணம், சொல், செயலால் அவற்றை முன்னேற்றுவதற்கும், வீழ்ச்சியடைவதற்கான கருவி உன்னிடமே உள்ளது.

‘நான் ஒரு ஆசிரியராக இருந்து சொல்லவில்லை. உன்னுடைய நல்ல நண்பராக இருந்த சொல்கிறேன். இந்த அட்வைஸ் எல்லாம் நீ ஏற்றுக்கொள்ளனும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் இது உன் வாழ்க்கை‘. என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது பறந்து கொண்டிருந்த ஈ ஒன்று கவினேஷின் டீயில் விழுந்தது. கவினேஷ் அந்த டீயை ஊற்றிவிடு, வேறு வாங்கிக் கொள்ளலாம் ‘ என்றாள்.

‘பாரு கவினேஷ் டீயில் ஈ விழுந்தால் வெளியே கொட்டி விடலாம். ஆனால் வாழ்க்கை என்னும் டீயில் தவறான எண்ணங்கள், பழக்கங்கள், செய்கைகள் என்னும் ஈ விழுந்து விட்டால் அவற்றைக் கொட்ட முடியாது. அவை நம் உடலில் நோயை உண்டு பண்ணி  நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும்‘ என்று கமலா கூறி முடிப்பதற்குள் கவினேஷ் அவள் காலில் விழுந்து அழுதான்.

‘கவினேஷ் என்ன இது! எழுந்திரி! உன்னுடைய வருத்தத்தை திறமையில் காட்டு, அதுவே நான் விரும்புவதாகும்‘ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

காலங்கள் கடந்தன, கவினேஷ் நடவடிக்கையில் புதிய மாற்றங்கள் தெரிந்தன. புதிய மனிதனாக பிறப்பெடுத்தற்கு  அடையாளமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு , பரிசுகளை பல வென்று வந்து கமலாவிடம் காட்டினான். அன்று தமிழக அரசிடமிருந்து கவினேஷ் பெயருக்கு கடிதம் ஒன்று கல்லூரிக்கு வந்தது. அதைப் பிரித்துப் படித்தான். அவனால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே அந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று கமலாவிடம் காண்பித்தான். அக்கடிதத்தில் கவினேஷ் எழுதிய சிறுகதைக்கு தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றதாகவும், அதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருந்தது.

இருவரும் ஒருவரையொருவா், கண்ணீரால் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனா். கவினேஷ் பரிசளிப்பு விழாவிற்கு கமலாமைவ அழைத்திருந்தான். விழா தொடங்கியதும் முதல்வா் கையால் பரிசுகளை வாங்கினான். பரிசு பெற்ற கவினேஷ் மேடையில் பேசச் சொன்னார்கள். இங்கு கூடியிருக்கும் பெரியோர்களுக்கு வணக்கம். பத்து மாதம் பிள்ளையை சுமந்து பெற்றெடுத்து, தன்னுடைய இரத்தத்தை பாலாக்கித் தருகின்ற தாய் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகின்றாள். ஆனால் முப்பது மாதமாக நம்மை நெஞ்சில் சுமந்து, தன் ஆவியை நம் வாழ்க்கையின் சுவாசப் பாலாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரிய அன்னையை மறந்து விடுகிறோம். அப்படிப்பட்ட அன்னையால் தான் நான் இன்று பேரும், புகழும் வாங்கியிருக்கிறேன். ஆதலால் இந்தப் பரிசு எனக்கு கிடைக்க வேண்டியதில்லை, என் ஆசிரிய தாய்க்கே கிடைக்க வேண்டும்‘ என்று கூறி கமலாவை மேடைக்கு அழைத்து, அவள் கையில் கொடுத்து விட்டு, காலில் விழுந்து வணங்கினான். அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினா்.

You already voted!
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
சு.ராஜா
சு.ராஜா
2 years ago

மிகவும் அழகான மற்றும் ஆழமான கருத்துகளை உள்ளடக்கிய கதை…
சற்று மனதில் ஒரு பாரத்துடன் முற்று பெறுகிறது…
அருமை ஐயா 👌🏻👏🏻

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 3.19.30.232

Archives (முந்தைய செய்திகள்)