Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அன்பு மகளின் அருமை மகளுக்கு

22 Feb 2024 11:29 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures anbu magalin

பேராசிரியர் சமீரா மீரான் எழுதிய மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல்-1

என் அன்பு மகளின் அருமை மகளே
உன் தாயும் தந்தையும் உனக்கருகில் இருந்து உனக்கு அன்பையும் அறிவையும் மட்டுமல்லாமல் உனக்குத் தேவையானவற்றையெல்லாம் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உன் பாட்டியும் நானும் வெகு தூரத்தில் இருந்து கொண்டு உன்னையே நினைத்துக் கொண்டிரு கிறோம். நானோ ஒவ்வொரு நாளும் எனக்குள்ளாகவே உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

வியப்பாக இருக்கிறதா?!

உண்மைதான், நீ எனக்கு அருகில் இருப்பது போன்றும் என் விரல் பிடித்து நடந்து வருவது போன்றும் கற்பனை செய்து கொண்டு உன்னிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு எனக்கு நானே பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது என் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் எழுத்தாக்க விரும்பினேன். அதன் விளைவுதான் இந்த மடல்.

அருள்மொழிகளும் அறிவுரைகளும் உன்னை உருவாக்க அல்ல. உருவாகும் உனக்குத் துணையாக வருவதற்குத்தான்.

இறை நம்பிக்கை மிகுந்த என் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் ஒரு நாள் சொன்னார், ”வாழ்க்கையில் நாம் பலவற்றைப் பெறுகிறோம்; இழக்கிறோம். எந்த ஒன்றின், எவர் ஒருவரின் இழப்பையும் சில நாளில் மறந்து போகலாம். ஆனால் ஒரே ஒருவரின் இழப்பை மட்டும் நாம் இறக்கும் வரையில் மறக்கவே முடியாது அந்த ஒருவர் யார் தெரியுமா? என்று கேட்டுவிட்டு விடுகதையைப் போல ஒரு குறுங்கதை சொன்னார்.

ஒன்பது மாதமே ஆன குழந்தையிடம் இறைவன் சொன்னான்
”நீ நாளை பூமியில் பிறக்கப் போகிறாய்!”

குழந்தை அழுதபடியே கேட்டது. ”உன்னிடம் மட்டும்தானே எனக்குப் பேசத்தெரியும் அங்கே உள்ளவர்களிடம் நான் எப்படிப் பேசுவேன்?”

இறைவன் சொன்னான் ”கவலைப்படாதே நான் ஒரு தேவதையை ஏற்கனவே பூமிக்கு அனுப்பியுள்ளேன் அவள் உனக்குக் கற்றுத் தருவாள்!”

”அந்தத் தேவதை வேறு என்ன சொல்லித் தருவாள்?”

”நல்ல சொற்களையும், நல்ல செயல்களையும் அந்தத் தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்”

”உன்னை மட்டும்தானே வணங்கவும் செய்கிறேன் என் வருத்தங்களை, துன்பங்களை உன்னிடம் தானே சொல்வேன். அங்கே யாரிடம் சொல்வேன்”

”அந்த தேவதை அவற்றைக் கருணையுடன் கேட்பாள்”
”அங்கே நான் உன்னை எப்படி வணங்குவது?”

"அந்த தேவதையை மதித்துப் போற்றினாலே போதும்”
”அந்த தேவதையை நான் எப்படி அடையாளம் காண்பேன்?”

மிக எளிது மக்கள் அந்தத் தேவதையை உன் தாய் என்று சொல்வார்கள்!”

ஆசிரியர் அன்று சொன்னது இன்றும் என் நினைவில் நிற்கிறது.

என் இனிய மகளின் இன்ப மகளே!

’அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை’ என்றும் ’தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்றும் கவிஞர்கள் சொல்வார்கள். ஆனால் தாய் என்பவள் தாயாக மட்டும்தான் இருக்கமுடியும். தெய்வத்தை மறுப்பார் உண்டு இங்கே. ஆனால் தாயை மறுப்பார் உண்டோ?. கோவிலைப் போற்றாதாரை எல்லோரும் தூற்றுவதில்லை. ஆனால் தாயைப் போற்றாத எவரையும் இந்த உலகம் போற்றுவதில்லை!.

இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது என்போர் கூட இறைவனுக்கு அடுத்த இடத்தை தாய்க்குதான் வழங்கியிருக்கிறார்கள். அது மட்டுமன்று தாயின் காலடியில்தான் சொர்க்கமே இருக்கிறது என்கிறார்கள், அவர்கள்.

தாயைப் புரிந்து கொண்டால்தான் தமக்கு வாழ்வே புரியும். தாய் உன்னிடம் எப்போதும் அன்பு காட்டுவாள், நீ அவளிடம் அன்பு காட்டாத போதும் கூட

யார் வேண்டுமானாலும் உன்னை ஏமாற்றலாம் உன் தாயைத் தவிர.

உன்னிடம் முதலில் பேசுபவள் உன் தாய்தான். நீ பேசுவதை முதலில் கேட்பவளும் அவள்தான். உன் பேச்சும் மூச்சும் அவள் தந்ததுதான்.

என்னைப் பெற்ற தாயும், தாயாய் இருந்து என்னை வளர்த்தோரும், எனக்குச் சொன்னவையும், நான் படித்தறிந்து, பட்டுணர்ந்து பெற்றவையும் ஏராளம்.

எல்லாவற்றையும் உனக்கும் சொல்லி விட வேண்டும் என்றுதான் தொடங்கியிருக்கிறேன்.

தொடங்கி விட்டதை எப்போது முடிப்பேன். எங்கே முடிப்பேன் என்பதைக் காலம்தான் முடிவுசெய்யும்!

மகளின் மகளே!

பலரிடம் காணக்கிடைக்காத, சிலரிடம் மட்டுமே நான் கண்ட ஒரு பண்பு பணிவு. சிலர் நினைக்கலாம் பணிவு என்பது அடிமைத்தனம் என்று. ஆனால் பணிவுதான் நம் ஆளுமைக்கான அடிப்படைப் பண்பு.

எளிமையும் பணிவும் எப்போதும் நம்மை வலிமையுடன் வைத்திருக்கும். பெரும் புயலில் மரங்கள் எல்லாம் சாய்ந்து விடலாம். ஆனால், பணிவு காட்டும் நாணல் சாய்வதில்லை. வளைந்து கொடுப்பது தவறன்று. ஆனால் வளையும்போது ஒடித்து விடக்கூடாது. பள்ளிப் பாடங்களோடு இந்தப் பண்புப் பாடங்களையும் நீ கற்றுக் கொள்ளவேண்டும் அவை உனக்குக் கற்றுத் தரப்பட வேண்டும்!

பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்கள்தாம். பிள்ளைகளின் நலன் பேணுவதில் ஆசிரியர்களை இரண்டாம் பெற்றோர்கள் எனலாம். பெற்றவர்கள் ஆனாலும் ஆசிரியர்கள் ஆனாலும் தங்களின் கற்பனைப்படி பிள்ளைகளை வளர்ப்பதைவிட, பிள்ளைகளின் கனவுகளை, கற்பனைகளை, திறமைகளை அறிந்து அவர்களை அவர்களாக வளர்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று உன்னை வளர்க்கும் உன் அன்னைக்கு இப்போது நான் சொல்கிறேன். ஆனால், அப்படி வளர என்னை யாரும் அனுமதிக்கவில்லை. வயதான பிறகு, இப்போதுதான் நான் நானாக வளர்ந்து கொண்டிருக்கிறேன்(!), நீ, நீயாக வளர வேண்டும்!. இதுதான் உன்னைப் பற்றிய என் கனவு.

என் தங்க மகளின் தமிழ் மகளே!

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்தது. வெற்றியும் தோல்வியும் கலந்தது. வெற்றி நம்மை ஊக்கப்படுத்தும்; தோல்வி நம்மைப் பக்குவப்படுத்தும். வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நமக்கு வலி ஏற்படுத்தும் எந்த ஒரு சூழ்நிலையும் காலத்தால் வழங்கப்படும் நன்கொடையாகும். ஏனெனில் அத்தகைய சூழல்களால்தாம் நாம். மற்றவர்களை விட மாறுபட்டவர்களாக, தனித்தன்மை உள்ளவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறோம். எனவே மாண்பு மிக்க மனிதனாகச் சிறந்து விளங்க, அந்த வலி தரும் தருணங்களைச் சந்திக்கத் தயாராகவே இருக்க வேண்டும்.

நம் கையில் இருக்கும் குடை மழையை நிறுத்திவிடப் போவதில்லை. ஆனால் மழையை எதிர் கொள்ள நமக்குத் துணைபுரிகிறது. அதுபோல் தான் மனத்துணிவு என்பதும். வாழ்வின் எத்தகைய எதிர்ப்புகளையும் சந்திக்க நமக்குத் துணை நிற்கும். வலிகளைத் தாங்கும் வழிகளை அறிந்தால் வாழ்வில் என்றும் வருத்தமிருக்காது.

எந்தச் சூழலையும் எதிர்கொள்ள உள்ளத்தையும் உடலையும் நாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அர்ப்பணிப்போடு ஒரு செயலைச் செய்கிறவர்களுக்கு வெயில், இடி, மின்னல், மழை, புயல் என்று ஏதுமில்லாத அமைதியான வானிலை எப்போதும் அமையாது. ஆனாலும் தங்களின் கடுமையான உழைப்பின் வினைச்சலை அவர்கள் நிச்சயம் அறுவடை செய்வார்கள்.

இலட்சியம் இல்லாத வாழ்க்கை எவருக்கும் பயன் தராது. முயற்சியும் உழைப்பும் இல்லாமல் இலட்சியங்களை அடைய முடியாது. அதனால்தான் உழைப்பே உயர்வுதரும். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இலட்சியம் கொள்; துணிந்து செல்; உழைப்பால் உயர்ந்து நில்.

இன்னும் சொல்வேன்!
உன் அன்புத் தாத்தா

You already voted!
4.5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092493
Users Today : 7
Total Users : 92493
Views Today : 20
Total views : 410122
Who's Online : 0
Your IP Address : 18.222.138.230

Archives (முந்தைய செய்திகள்)