01 Aug 2026 8:03 amFeatured

(சிறுகதை)
-வே.சதானந்தன்
பனை நார் கட்டிலில் கந்தல் துணி போல் நைந்து போய் படுத்திருந்தாள் அபிராமி, வீட்டுக்குள் வந்த சிங்காரம் மனைவியை பார்த்து கலைந்து கிடந்த தலை முடியை சரி செய்து விட்டு இயலாமை பெருமூச்சுடன் அடுக்களையை நோக்கி போனார்.
உடல் நலம் கெட்டு ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தட்டு தடுமாறி எழுந்து போய் சோற்றை பொங்கி வைப்பது வழக்கம். பின்னர் சிங்காரம் வந்து துவையலோ, தக்காளி ரசமோ, சிலநேரம் சாம்பாரோ வைத்து பின்னர் இருவரும் சாப்பிடுவது வழக்கம்
ஆனால் இப்பொழுது ஒரு வாரமாக நோயின் தீவிரம் அதிகமாகி எழுந்து உட்கார்ந்தாலும் அபிராமியால் வேலை செய்ய இயலவில்லை. நாளுக்கு நாள் உடல் நலம் கெட்டுக்கொண்டே இருந்தது
மருத்துவமனையில் அனுமதித்தால் ஒருவேளை உடல் நலம் தேறி வரலாம் ஆனால் கையில் காசில்லை, தங்கம் என்பது கயிற்றில் தொங்கும் தாலியில் மட்டுமே இருந்தது. அரசு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம், ”அன்னாப்பாரு தர்மாஸ்பத்திரியில கொண்டு போய் வச்சிருக்கான்னு” ஊரு இளக்காரமா சொல்லி உச்சுக் கொட்டும்.
வாங்கிட்டு வந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து மனைவிக்கு கொடுத்துவிட்டு, அந்த நாட்டு மருந்து வாங்கி தந்தேனே சாப்புடுறியா இல்லையா ? ஏதும் வித்தியாசம் தெரியுதா ?
ஆமாங்க கொஞ்சம் மூச்சு இரைப்பு கொறஞ்சிருக்கு ... கால் வீக்கமும் கொறஞ்ச மாதிரிதான் இருக்கு ....,நல்ல மருந்து தான் ஆனா நாளு முழுசும் வாய் கசப்பாவே இருக்கு
அதுக்காக மருந்த சாப்பிடாம இருக்காத நான் என்னைக்கும் கூடவே இருந்து கிட்டே இருக்க முடியாது. 3000 குடுத்து வாங்குன மருந்து ஒரு மண்டலத்துல எந்திரிச்சு துள்ளி குதிப்பன்னு சொல்லியிருக்காரு
ஆமா இனிமேதான் இந்த வயசுல துள்ளி குதிக்கணும் அது கிடக்கட்டும்... ஊரு ஊரு ன்னு மட்டும் அலையாம கஞ்சிய குடிச்சிட்டு போரும்
அடுக்களைக்குள் சென்றவர் நேற்றைய பழைய சோற்றை பிழிந்து வைத்து முந்தாநாள் வச்ச மீன் குழம்பை சூடு பண்ணி சாப்பிட ஆரம்பித்தார் சிங்காரம்
ஏ..ங்க கிளார்க் சுதாகர் வந்தார் உங்களுக்கு ரெண்டு மூணு தடவ போன் பண்ணியும் நீங்க எடுக்கலையாம் அதான் தேடி வந்த்துருக்கார்
வாழைக்கு தண்ணி பாய்க்கும் போது போன மோட்டார் ரூம்ல வச்சிருந்தேன். போன் அடிக்கும் போது எடுத்து பேசினா தான உண்டு இல்லேன்னா யார் போன் பண்ணுனாலும் பார்க்க முடியாது டிஸ்ப்ளே போய் கிடக்குது
ஞாயம் நேர்மன்னு பார்த்து பார்த்து ஒரு ரிப்பேர் இல்லாத பட்டன் போன கூட வச்சிக்க முடியாத புருஷன் எனக்கு வாய்ச்சிருக்கு இதுல கேட்டா பஞ்சாயத்து தலைவர் வேற என்று முணுமுணுத்தாள்...
சத்தமாக சொல்ல மாட்டாள் ஏனென்றால் இப்படி அநியாயத்துக்கு நல்ல மனுசனா இருக்காறே என்று அவளுக்கும் உள்ளூர பெருமைதான்
அப்படியே அவருக்கு காதில் கேட்டாலும் ஒன்றும் சொல்ல மாட்டார் காரணம் அன்பு. ” இப்படி வறுமையில் வாட விட்டால் எந்த மனைவிதான் திட்ட மாட்டாள்” என்று உள்ளூற சிரித்துக் கொள்வார்
சரி சாப்பிட்ட உடனே படுக்காம கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு இன்னும் ஒரு நாலு காலு தண்ணி பாய்க்கணும் அத பாய்ச்சிட்டு பஞ்சாயத்து ஆபீசுக்கு போய்ட்டு வாரேன் என்று சொல்லி விட்டு...
வெளியே ஸ்கூட்டி பட்டன் ஸ்டார்ட் ஆகாமல் கிக்கரை உதைத்து ஒரு பத்து உதைக்கு பின் ஸ்டார்ட் ஆகி கிளம்பினார்
அதையும் பார்த்து சிரித்த படி தனக்கு தானே சற்று சத்தமாகவே சொன்னாள் எவனோ கழிக்க போன பழைய வண்டியையும் 2000 ரூபாய்க்கு 4 மாச தவணைக்கு வாங்கி இந்த மாசம்தான் தவணையும் முடிஞ்சிருக்கு இல்லேன்னா அந்த பழைய சைக்கிள் தான்
வழியில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்த வேலை முடியாத ஊர் கோவிலை ஒரு தடவை பார்த்து பிரிய வேண்டிய வரிப் பணமும் பிரிந்து வெளியே இருக்கும் ஒன்று இரண்டு பேர் ஒத்துக் கொண்ட நன்கொடையும் வந்தால் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்தி விடலாம் என்றபடி ஏக்க பார்வை பார்த்துவிட்டு நகரும்போது.....
கள்ளி மறைவில் இருந்து குடித்துக்கொண்டிருந்த வெட்டிகள் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தது கோபமும் மனக்கஷ்டமும் ஒருசேர..........அவர் நெஞ்சை பிசைந்தது
அந்த வழியே உழவு மாடுகளை பத்தி கொண்டு வந்த இஸ்ரவேல் காதிலும் இந்த வார்த்தை விழ
ஒரு வேல செய்யாம வெட்டியா குடிச்சிட்டு ஊர சுத்திகிட்டு, எவன் குடியக் கெடுக்கலாம் ன்னு அலைவானுங்க அடுத்தவன் மேல அபாண்டமா குறை சொல்லுறோமேன்னு கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா என்று சத்தமாகவே அவனுக காதில் கேட்கும்படி சொல்லிக்கொண்டே கடந்து போனார்
ஆனால் அப்போது இஸ்ரவேலுக்கும் தெரியாது இந்த வெட்டி கும்பலின் வார்த்தைகள் ஒரு மானஸ்தன் உயிரை பறிக்கும் என்று
மறுநாள்
வீட்டின் முன் இக்கால மரபுப்படி சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
காலம் எவ்வளவு மாறியிருந்தாலும் தொன்று தொட்டு இருக்கும் சாஸ்திரத்தின்படி சாமியானாவின் நான்கு கால்களிலும் பச்சை தென்னை ஓலை வெட்டி கட்டப்பட்டிருந்தது.
நேற்றிலிருந்து இரத்த பந்தங்களின் வருகைக்காக வீட்டு தார்சாவில் குளிரூட்டிய கண்ணாடி பேழைக்குள் மீளாத்துயில் கொண்டிருந்தார் சிங்காரம்.
ஒரு பக்கம் மூங்கில் ஓலைப்பாய் பாடை தயாராகிக் கொண்டிருந்தது நீர்மாலை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்
”வெடியெல்லாம் வாங்கியிருக்கானுங்களா!?..
நம்ம அண்ணன் எவ்வளவு பெரிய மனுசன்…,
அரசியல் பிரபலங்களெல்லாம் வந்துருக்காங்க பார்த்தியா....
நல்ல மனுசன் செத்துருக்காரு ஆடி பாடி அடக்கம் பண்ணனும்ப்பா”
என்றது நேற்றைய அந்த குடிகார வெட்டிகள்
சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார் இஸ்ரவேல்.
அவர்களை வெட்டி போடும் அளவுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது
இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டார் சூழ்நிலை கருதி
ஆம் அவருக்கு மட்டும் தானே தெரியும் இந்த குடிகார கும்பல் பணம் கையாடல் செய்ததாக சுமத்திய வீண் பழியை தாங்கமாட்டாமல் தானே தொட்டியில் அமர்ந்தபடியே மாரடைப்பில் இறந்தார் சிங்காரம் என்று
அப்பொழுது அங்கு கூடி நின்ற பஞ்சாயத்து கிளார்க்கும் வார்டு மெம்பர்களும் பேசிக்கொண்டிருந்தனர் அந்த பஞ்சாயத்துக்கு ”உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதும்” 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசும்
கிடைத்திருக்கிறது என்றும் அந்த தகவலை சொல்ல வந்த கிளார்க்கை சந்திக்காமலே இவர் இறந்து விட்டதாகவும் ஊழலற்ற, வெளிப்படையான சிறந்த நிர்வாகத்தை இந்த மனிதர் நடத்தியதற்கான விருது என்றும் புகழ்ந்து கொண்டிருந்தனர்
இஸ்ரவேலால் விம்மலை அடக்கமுடியவில்லை கண்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் கரை புரண்டு ஓடியது
உண்மையை அறிந்தவன் மட்டுமே அழுதான்.....
மற்றவர்கள்…
நல்ல மனிதன் இறந்துவிட்டானே என்று ஆதங்கப்பட்டனர்
ஊரைக் காக்க நின்ற மரத்தை,
வேரோடு சாய்த்தது ஒரு சூறாவளி!
நல்லவன் நெஞ்சில் நஞ்சைத் தெளித்து,
நித்தமும் வதந்தி தீயை வளர்த்து,
உண்மை பேசும் வாய்களை மூடி,
உயிரைக் குடித்தது சாக்கடைக் கூடி!
குடிமகன்கள் வீசிய வதந்திப் புழுதி,
குலைந்தது அங்கே உத்தமன் உறுதி!
கண்ணுக்குத் தெரியா காற்றினில் ஏறி,
மண்ணுக்குள் போனது மாமனிதன் ஆவி!
புழுதி அடங்கும், உண்மை விளங்கும்,
போன உயிர் இனி என்று திரும்பும்?
-வே.சதானந்தன்






Users Today : 3
Total Users : 118056
Views Today : 3
Total views : 448891
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138
சூப்பர்
நல்ல சிறுகதை ஐயா. வாழ்த்துக்கள்.
அருமையான முதியவர்கள் ஒற்றுமை, ஆத்மிக வாழ்வியல் ஆரம்பம் சிறப்பு. சமூதாய சிந்தனையாளர்களுக்கு நெருக்கடி, சிறை, சாவு என்பது ஆதி முதல் இன்றுவரை அறம் அறிந்தும் புரியாத புதிர்கள். உங்களின் கவிதை சிறப்பு. உங்களின் சமூக சிந்தனைக்கு நன்றி.
அருமையான தொகுப்பு, கதை போல இல்லை,… படிக்கையில், நிதர்சனத்தில் இன்று நடக்கும் சம்பவங்கள் போல உணர்ந்தேன்.