Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

வேதக்கார ஆண்டாள்

20 Dec 2019 10:11 amFeatured Posted by: Sadanandan

You already voted!

சிறுகதை
-இரஜகை நிலவன்

            ருக்குள் காரில் வந்து இறங்கிய போது விஜய்க்கு கொஞ்சம் ஆச்சரியங்கள் அதிகமாகவே இருந்தது. பதவி உயர்வு, பணி,  அரசியல் எடுபிடி என்று இந்தியாவின் பல இடங்களுக்கு மாற்றலாகி, குடும்பத்தோடு ஊரில் வந்து தங்கி விடலாமென்று நினைத்த போது மூத்தமகன் விமலன், டெல்லியிலேயே வீடு வாங்கி பஞ்சாபி பெண்ணை திருமணம் முடித்து செட்டிலாகி விட, இளையவன் ராகினி பெங்களூரில் பணியிலிருந்து கொண்டே படித்துக் கொண்டிருந்தாள்.

            ஏதாவது ஓரிருமுறை உறவுகளின் திருமணத்திற்கு வந்திருந்தாலும் அதிகமாக தங்கி ஊரின் வளர்ச்சியை தெரிந்துகொள்ளாமல் போனதற்கு இன்னொரு காரணம், வீடு, நிலங்கள் எல்லாவற்றையும் அக்கா கவனித்து பைசா சுத்தமாக கணக்கில் போஸ்ட் ஆபீசில் அக்கவுண்டில் போட்டுக்கொண்டிருந்தார் . பிடிப்பில்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட மனைவி கீதாவுடன் நிரந்தரமாக சொந்த ஊரில் தங்கிவிட வந்தபோது தான் அன்று சாயங்காலம்தான் பால்ய நண்பன் பால்வண்ணனை பார்க்க முடிந்தது.

            அவனோடு சேர்ந்து பொட்டல் தோட்டத்திற்கு மேற்கிலுள்ள பொடிகாரர்  மகன் கடையில் டீ குடிக்க போன போது சேகர், மன்னார், சேவியர், வில்சன் மற்றும் பிரிட்டோ உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்துவிட டீயோடும் பருப்பு வடையோடும் பழைய கால நினைவுகளும் அலசப்பட்டது.

            ”என்ன வில்சன் உங்க தம்பி செசார்  எப்படி இருக்காப்பல…?” என்று ஆரம்பித்தார் விஜய்.

சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டே வில்சன் “அவங்கதான் ஃபாதராகி விட்டார்களே… அவர்களுக்கு அடுத்தவாரம் சாமியாராகி இருபத்தைந்து முடிவதால் வெள்ளி விழா கொண்டாடப்போகிறோம். விழாவுக்கு கண்டிப்பாக வந்துடுங்க” என்றார் வில்சன்.

            அவர் சொன்ன விசயம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்த முப்பதாண்டுகள் ஓடிப்போய்விட்டதால் தெரியாத விசயம் கொஞ்சம் நெருடலாக தோன்ற அவரிடம் “அப்படின்னா நாம கிண்டல் பண்ணுவமே வேதக்கார ஆண்டாள்.... இயேசுவின் உயிர்நாடின்னு... அந்த சில்வியா... இப்போ....” என்று கேட்டாலும் மனதிற்குள் குமைச்சல் அதிகமாகவே இருந்தது விஜய்க்கு.

            ”ஓ ! எப்பவோ நடந்த விசயத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கியளா….” என்று தானும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்ட பால்வண்ணன் “அது ஒரு சுவாரசியமான காலமுங்க. இந்த சில்வியா தான் தன் வாழ்க்கை என்று செசார் சுத்தி சுத்தி வந்துக் கிட்டிருந்தாப்பல…”

            ”ம்..ம்..  எல்லோரும் அவரவர். நினைக்கிற மாதிரியா நடக்குது… என்னப்பு.. ?. அந்த சில்வியா நான் இயேசுநாதரை சூடிக்கொண்ட ஆண்டாள். எனக்கு இந்த உலகில் வேறு யாரும் கெடையாதுண்ணு வீர வசனம் பேசிகிட்டு திரிஞ்சா” என்றார் சிகரெட்டை இழுத்துக்கொண்டு.

            ”இது தான் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. செசார் தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளணும்னு துடிச்சிக்கிட்டிருந்தானே. அவ வீட்டுக்குப் போய் பொண்ணெல்லாம் கேட்டாவளே  பெறகு என்னாச்சு ?” விஜய் ஆர்வமாக கேட்டார். “நான் இந்த சில்வியாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ப்பா. ஏதாவது வழி சொல்லேன்” என்று செசார் கேட்டது  ஏதோ நேற்று கேட்டது போல இருக்கிறது.

            எல்லோரும் விஷமமாக ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக்கொள்ள சேவியர் டீக்கடை கேசவனை பார்த்தபடி “எவ்வளவுப்பா ஆச்சு. டீ, வடை, சிகரெட்டு எல்லாத்துக்கும் சேத்து” என்று கேட்டு மொத்தமாக காசு கொடுத்தார்.

            ”எதையும் கேட்க கூடாததைக் கேட்டுவிட்டோமோ” என்று நினைத்த விஜய், பால்வண்ணனை தனியாக இழுத்துவந்து பொட்டல் தோட்டத்தை நோக்கி நடந்தவாறு “என்ன விசயம் பால்வண்ணன் சில்வியாவைப் பற்றி கேட்டதற்கு இப்படி என்னைக் கேலியாக பார்க்கிறார்கள். நான் எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா ?” என்றார்.

            ”அது ஒண்ணுமில்ல… செசாருக்கு கொஞ்சம் வேகம் வந்து ஒருநாள் சில்வியா கோயிலுக்குப் போயிட்டு வரும்போது வழி மறிச்சி, “என்னதான் மனசுல நினைச்சிகிட்டிருக்க ? ஏசுநாதர் நம்ம கடவுள்தான் அதுக்காக நான் அவருக்கு சூடிகொடுத்த ஆண்டாள்னு கல்யாணமே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே ? இந்த மனசு உனக்காக எவ்வளவு உருகிக்கிட்டிருக்கு தெரியுமா ?” ண்ணு கேட்டிருக்கான்.

            அதுக்கு அவா ”செசார் உன் வழியில போய் யாரையாவது நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணிக்க. நான் என் மனசில ஏசுவைத்தான் தரிச்சிருக்கேன். அந்த இடத்தில் இயேசுநாதரைத் தவிர யாருக்கும் இடமில்லை தெரியுமா ?. என்று கத்தியிருக்கிறாள்.

            ”அப்ப அம்மாங்களாட்டுப் போகவேண்டியதுதானே” (கிருஸ்துவப் பெண் சன்னியாசினி) என்று செசார் கிண்டல் பண்ணியிருக்கிறான்.

            இவளும் அடுத்த நாளே பையைத் தூக்கிகிட்டு  ஏதாவது மடத்திலே சேர்வதற்கு போயிருக்கிறாள். அவ போன இடத்திலே திரும்பவும் வழி மறிச்சி கல்யாணம் பண்ணச் சொல்லி செசார் நச்சரித்திருக்கிறான்.

            பால்வண்ணன் பொட்டல் தோட்டத்து வேலிப்படலை  நகர்த்தி வைத்துக்கொண்டே “இதெல்லாம் உனக்குத் தெரியாதா ? செசார்தான் உனக்கு நல்ல ஃபிரண்டாச்சே” என்று கேட்டார்.

            ”ஊரைவிட்டுப் போன பெறகு  தொடர்பே இல்லாம போச்சு. ரெண்டு மூணுதடவை ஊருக்கு வந்திருந்தப்போ அவனை பத்திக் கேக்கணும்னு நெனைச்சேன் முடியல. ஆனால் இவ்வளவு நடந்திருக்கு, எனக்குத் தெரியாம போச்சு. சரி என்னாச்சு அப்புறம்” என்று கேட்டார் விஜய்.

            ”ம்.. போடா நீயும் உங்காதலும்” என்று அவனை வேகமாகத் தள்ளிவிட்டு மடத்திற்கு போயிருக்கிறாள். கீழே விழுந்த செசார் தலையில் பலமாக அடிபட்டு ஆஸ்பத்திரியிலே கோமாவிலே கிடக்க, விசயம் தெரிந்த மடத்து மதர்  ”சில்வியா இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட நீங்கள் சன்னியாசம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஜெயிலுக்கே போகலாம்” என்று ஒதுக்கிவிட, வீட்டிற்கு வந்த சிலிவியா தேவாலயத்திலேயே தங்கிவிட முயர்சித்திருக்கிறாள்.

            ஊரில் யாரும் அவளை கோயிலில் தங்க அனுமதிக்கவில்லை. அவளுடைய அப்பாவும் அண்ணனும் “இனிமேல் கோயிலுக்குப் போகக் கூடாதுண்ணு” சொல்லி அவளை வீட்டிலே கொண்டுபோய் ஒரு அறையிலே அடைச்சு வச்சிருக்காங்க

            கோமாவிலிருந்து தேறிய செசார் வீடு திரும்பி வந்து சில்வியாட்ட பேச ஆரம்பிச்சிருக்கான்.  “உனக்கு ஒரு முறை சொன்னாக் காணாதா ? இயேசுதான் எல்லாம்ண்ணு தெரியாதா ? என்று சொன்னவள் அவனை இழுத்துக் கொண்டுபோய் கோயிலில் வைத்து, தேவமாதா கையிருந்த ஜெபமாலையை எடுத்து பக்கத்திலிருந்த இயேசுகிருஸ்துவின் சிலைக்கு வந்து அந்த சொரூபத்தின் கையில் வைத்து, “இதோ பார் செசார், நான் இயேசுவையே வரிந்து கொள்கிறேன். என் இதயத்தில் வேறு யாருக்கும் இடம் கிடையாது” என்று ஜெபமாலையை எடுத்துக் கழுத்தில் போட்டுக்கொண்டாள்.

            கொஞ்சம் திகைத்துப் போன செசார் கொஞ்சநாள் யாரிடமும் பேசாமல் திரிந்தான். அப்புறம் சில்வியாவே இயேசுதான் வாழ்க்கை என்று சொன்ன பிறகு எனக்கு என்ன வாழ்க்கையிருக்குண்ணு சொல்லிட்டு செமினேரியிலே போய் சேர்ந்து சாமியாராகிட்டான். அதான்  ஃபாதராகி இருபத்தஞ்சு அவருடமாகி இப்போ வெள்ளிவிழா கொண்டாடப் போறாங்க” என்றார் பால்வண்ணன்.

            தென்னந்தோப்பைச் சுற்றி விட்டு வேலிப்படலை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்த போது “நான் இந்த சில்வியாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ப்பா. ஏதாவது வழி சொல்லேன்” என்று செசார் கேட்டது போல இருந்தது  விஜய்க்கு. உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டு நடந்தார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102611
Users Today : 20
Total Users : 102611
Views Today : 30
Total views : 428013
Who's Online : 0
Your IP Address : 18.97.14.81

Archives (முந்தைய செய்திகள்)