Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

முதலும் கடைசியும்

15 Nov 2019 10:06 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

(நினைவலைகள்)
-ஞான. அய்யாப்பிள்ளை

“இங்கேரும் ! பிள்ளைய காலேஜிக்கெல்லாம் அனுப்பாண்டம் ;  நம்மால பதினொண்ணாங் கிளாசுக்கு மேல படிக்கவைக்க முடியாதுண்ணு எத்தன தடவ சொன்னன். கேட்டேரா !  இப்பம் பாரும்!  நாகர்கோவில் போணும் -  நாகர்கோவில் போணும்ன்னு அவன் ஒரு வாரமா எங்கிட்ட பைசா கேட்டு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கான்”  என்று என்னைப் பற்றி அப்பாவிடம் அம்மா அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் நாகர்கோவில்  வெட்டூர்ணிமடம், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் 1970 -71களில் புகுமுக வகுப்பு (P.U.C.) படித்து; இறுதித் தேர்வு எழுதிவிட்டு; கோடை விடுமுறையில்  வீட்டில் இருந்தேன். என்னுடைய கைசெலவுக்கு  கூடகாசு இல்லை. மிக  நெருக்கடியான   கால கட்டம்.         

‘இங்கேரும்!  நம்ம கிட்டதான்   வண்டியும் - வண்டிமாடும் இருக்குதே! புல்அறுத்து  சந்தையில கொண்டு வித்தாகூட ஏதாவது காசு கிடைக்கும்! ”  அம்மா பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மாவின் முணுமுணுப்பை    அப்பா ஒரு யோசனையாக ஏற்றுக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகப்பட்டது.

வருகிற திங்கள் கிழமை புல்லறுக்கப் போகலாமென்று இருவரும் தீர்மானித்து விட்டார்கள். அதன்படி அந்த குறிப்பிட்ட நாள் அதிகாலையில் அம்மா செக்கடிக்கு சென்று  சுசிலாவையும் இன்னொரு பெண்ணையும் புல் அறுப்பதற்காக அழைத்து வந்தார்கள். சுசிலா வேறு யாருமல்ல. என்னுடைய பெரியம்மாவின் மகள்தான். நான் சித்தப்பா! சித்தப்பா!!  என்று அழைக்கின்ற என் நண்பன் சாம்ராஜையும் உடன் அழைத்துச் சென்றேன்.  எங்களுடைய வண்டியை அப்பாதான் ஓட்டிச் சென்றார்.  எங்கள்  வண்டி வடக்கு  மலையில் இருக்கும் கீரிப்பாறையை  கடந்து வாழையத்துவயல்  வழியாக   காளிக்கேசன் சப்பாத்து என்று  சொல்லுவார்களே !  அங்கு ஒரு இசக்கிஅம்மன்  கோவில் இருக்கிறது.  அதையும்  கடந்து உயரமான   மலைப்  பகுதிக்கு  சென்று நின்றது.   அங்கு  புல்  அறுத்து  -  புற்கட்டுகளை  வண்டியில் ஏற்றி  மாலை நான்கு   மணி அளவில்  மலையிலிருந்து திரும்பினோம்.   நாங்கள் புறப்படவும்  மழை பெய்யத் தொடங்கவும் சரியாகஇருந்தது.

நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை வரை தான் அரசு பேருந்து ஓடுகிறது. கீரிப்பாறையிலிருந்து தங்கை சுசிலாவையும் அவளோடு புல் அறுக்கவந்த பெண்ணையும் அரசு பேருந்தில் ஏற்றிக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

நேரம் ஆக ஆக  மழையின்   வேகமும்  அதிகரித்தது. வலது பக்கம் செங்குத்தான   உயர்ந்த மலை.  இடதுபுறம் இரண்டு பனை ஆழத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு. இரண்டுக்கும் இடையே நாங்கள் வண்டியை ஓட்டிச் செல்லும் சாலை. எனக்கோ தலை சுற்றியது.   மிகவும் சிரமப்பட்டு அறுத்த புற்கட்டுகள் மழை நீரில் நனைந்ததால்;  வண்டியின் பாரம் அதிகரித்ததோடு வண்டியின் அச்சு ஒடிந்து விடுமோ   என்ற அச்சமும் அதிகரித்தது. எனவே அவசர அவசரமாக பாதி புற்கட்டுகளை  கீழே வீசிவிடலாம் என்று அப்பா  யோசிக்கும் போதே வண்டி குடைசாய்ந்துவிட்டது.

அப்பா அலறியடித்துக்கொண்டேவண்டியிலிருந்து சாலையில்  குதித்தார். வண்டியின் நுகத்தோடு வலது பக்கம் பூட்டியிருந்த காளையின்  கழுத்து இறுகிக்கொண்டிருந்தது. காளையை  காப்பாற்றுவதர்க்காக இறுகிக்கொண்டிருந்த கயிற்றை அவர்  மடியில் வைத்திருந்த  கத்தியை எடுத்து  அறுத்துவிட்டார்.  நல்லவேளையாக வண்டி பள்ளத்தில்  விழாமல்   சாலையிலேயே  குடைசாய்ந்த்தது.

இதற்கிடையே வண்டியை இழுத்துப் பிடித்துக்கொண்டு பின்னால் வந்துகொண்டிருந்த  நான் இடது பக்கமிருந்த ஆழமான  பள்ளத்தாக்கில் தூக்கி எறியப்பட்டேன்.  “ஐயோ   யென்புள்ள ! ஐயோ  யென்புள்ள !!”  என்று  அப்பா  அலறி அடித்துக் கொண்டு என்னை காப்பாற்ற ஒடிவந்தார். நல்லவேளை ! என்னோடு வண்டியை பிடித்துக்கொண்டு வந்த சாம்ராஜ் சித்தப்பாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஈச்சமரங்களும்  மூங்கில் மரங்களும்  மிக அடர்த்தியாகவும்   நெருக்கமாகவும்  வளர்ந்திருந்ததால் நான்  அவைகளை ஆவி அணைத்துக்கொண்டும் சிக்கென பிடித்துக் கொண்டும்  தொங்கினேன்.அப்பாவும்  சாம்ராஜி சித்தப்பாவும்  என்மீது ஒரு கயிற்றை வீசி எறிந்து;   அதனை  பிடிக்கும்படி சொன்னார்கள். அகலபாதாளத்தில் விழ இருந்த நான்  அவர்கள்  வீசி  எறிந்த கயிற்றின் ஒரு பக்கத்தை  சிக்கென  பிடித்துக் கொண்டேன்.  அவர்கள்  இருவரும் கயிற்றின் மறுபக்கத்தை பிடித்து இழுத்து என்னை  மெதுவாக  தூக்கி - சாலையில் நிறுத்தினர்.

ஈச்சம் இலைகளின் முற்கள் என்  முகத்தையும்கைககள்  மற்றும் 
கால்களிலும் ஆங்காங்கே கீறி பதம் பார்த்து விட்டன.   இரத்தம் என் முகத்தில் பீறிட்டு வழிந்து. நான் அகோரமாக காட்சியழித்தேன். அப்பா என்னை கட்டிஅணைத்துக் கொண்டார். 
நான்  மரண பயத்திலிருந்து  விடுதலை பெற்றுவிட்டதாக  அப்பாவும் சித்தப்பாவும்  உணர்ந்திருக்க வேண்டும்.கண் இமைக்கும் நேரத்தில் சாக இருந்த என்னை காப்பாற்றியநிம்மதி  அவர்களுடைய கண்களில் தெரிந்தது.  என்  நெஞ்சிலே ஏற்பட்ட   படபடப்பு   நீண்ட நேரம் வரை மறையவில்லை;  என்றாலும் நான்அதனை  வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.என் உடம்பெல்லாம் ஒரே எரிச்சல். நான் அப்பாவின்அரவணைப்பில்  இருந்ததால்  அந்தஎரிச்சலை  பொருட்படுத்தவில்லை. 
ப்பா என் முகத்தை ஈரமான டவ்வலால் துடைத்துவிட்டுக் கொண்டே;  சரி சரி பொழுது சாஞ்சிப் போச்சி ! ;  

இனி  போகலாம் என்று சொல்லி துரிதப்படுத்தினார். வண்டியிலுள்ள புல்கட்டுகளில் பாதியை இடப் பக்கமும் வலப்பக்கமும் அப்பா வீசி எறிந்தார். இதைக்கண்ட நான், ‘அப்பா ! புல்லை தூரப் போடாதீங்க!  அப்பா ! புல்லை வீசி எறியாதீங்க ! நாளைக்கு வந்து எடுத்துக் கொள்ளலாம்’ என்றேன்.
“நாளக்கி வராண்டாம். இனிம  இந்த புல்லு  வெயாவாரமே   வேண்டாம் முதலும் இதுதான் ! கடைசியும் இதுதான் !! ”  என்று சொன்னார். எப்படியும் வீசி எறிந்ததுபோக மீதி புல்கட்டுகளை மட்டும் ஒழுங்கு படுத்தி வண்டியில் அடுக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். என்னுடைய அப்பா வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார். மழை பெய்து கொண்டே இருந்தது. வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது.  நானும் சாம்ராஜ்  சித்தப்பாவும்  வண்டியை பிடித்துக் கொண்டே இரவு முழுவது வடசேரி சந்தை வரை கால்கடுக்க நடந்தோம். அதிகாலையில் சுமார் ஐந்து மணியளவில்தான் வண்டி வடசேரி சந்தையை வந்து சேர்ந்தது.  நேரம் விடிந்து சந்தை  கூடியபிறகுதான் வீசி எறிந்தது போக மீதம் இருந்த புல்லை விற்று காசாக்கி  -  ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றொம். கல்லூரியில் என்னுடன் படித்த  நண்பன் ஒருவன் தூரமாக வருவதை கண்டதும் டவ்வலை தலையில் போட்டு முகத்தை மறைத்துக் கொண்டேன். நான் அணிந்திருந்த சட்டை  அவ்வளவு அழுக்காகவும் முகம் விகாரமாகவும் இருந்ததுதான் காரணம். 

வீட்டில் பெரும் கவலையோடு அம்மா எங்களை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வீடு சென்றதும் வண்டி குடைசாய்ந்த  நிகழ்வுகளை அம்மாவிடம் அப்பாசொல்லிக் கொண்டிருந்தார். இரவு முழுவது வடசேரி சந்தை வரை கால்கடுக்க நடந்ததால்  கால்கள்  வீங்கி வலித்துக்  கொண்டிருந்தது.  உடல்  அசதி வேறு - எனக்கு தூக்கம் வருகிறது என்று  சொல்லிக்  கொண்டே பாயை தறையில் விரித்து படுத்துவிட்டேன்.   அவர்கள்  பேசுவதை  என்னால் சரியா உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. “ வடக்கு மலைக்கு போனச் சமையம்  காளிக்கு தேங்காய் ஒடைச்சி  சாம்பிராணி பத்த வச்சிக்கிட்டு தானே  போனம் !  பொறவு நமக்கு ஏன்  இவளவு  சோதனை ?” என்று அப்பாவிடம் அம்மா கடைசியாக கேட்ட கேள்வி  மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அம்மாவின் பல்வேறு கேள்விகளுக்கு அப்பா ஏதேதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நான் வேலை தேடி சென்னை  -  மும்பை  போன்ற  பெரும்  நகரங்களுக்கும் குஜராத் போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும்  சென்று; வாழ்க்கையின் பெரும்பகுதி கடந்துவிட்டாலும்;   மரண பயத்திலிருந்து    நான்   விடுதலை  பெற்றுவிட்டதாக   நினைத்த என் அப்பாவும் மறைந்து 22 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.  என்றாலும் புல் அறுத்து விற்பனை செய்வதற்காக அவரோடு சென்ற நிகழ்வுகள் ஒன்றன் பின்வொன்றாக நினைவுக்கு வருவதுடன் அவர் சொன்ன   ‘முதலும் இதுதான் ! கடைசியும் இதுதான் !!’ என்ற வார்த்தைகள்  இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 'எங்க அய்யா மழைக்குக்கூட பள்ளிக் கோடத்தில  ஒதுங்காதவரு ; ஆனாலும்  அவரு என்ன பள்ளிக் கோடத்துக்கு அனுப்புனாரு;  நான் உன்ன காலேஜிக்கு அனுப்பியிருக்கேன்;  எப்பவும் இதை ஞாபகத்ல வை" என்பதுதான் அப்பா என்னிடம் அடிக்கடி பெருமையுடன் சொல்லும் வார்த்தைகள். அப்பா என்னை காலேஜுக்கு   அனுப்பியது மட்டுமல்ல; அவர் என்னை தோளில் தூக்கிச் சுமந்ததையும் தோழனாக மதித்ததையும்கூட  ஞாபகம் வைத்திருக்கிறேன்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 18.118.30.253

Archives (முந்தைய செய்திகள்)