Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (9)

13 Jul 2019 12:55 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
Paavalar Nellai Painthamizh, Why do not want Hindi

தமிழகத்தை ஆண்ட நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னனின் படை கி.பி. 642-இல் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தது. பரஞ்சோதி என்னும் பல்லவர் படைத் தளபதியின் கீழ் போர் நடந்தது. போரில் பல்லவர் படை வெற்றி பெற்றது. போர் நடந்த இடமோ வாதாபி.

போர் வெற்றியினால் பெற்ற செல்வக் குவையையும் பொன்னையும் கொண்டு தமிழகம் நோக்கி திரும்புகையில் வழியில் ஒரு மாறுபட்ட உருவமுடைய பொம்மையை பரஞ்சோதி கண்டார். அந்தப் பொம்மையையும் தன்னுடன் எடுத்து வந்தார். பின்னர் பல்லவ மன்னரின் ஒப்புதல் பெற்று அந்தப் பொம்மையை தன்னுடன் எடுத்துச் சென்றார். அந்தப் பொம்மைதான் மனித உடலும் யானைத் தலையும் உடைய கணபதி. வாதாபி என்ற இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டதால் அது வாதாபி கணபதி என்று அழைக்கப்பட்டது. பின்னர் பற்பலரும் அதைப் போல் பொம்மைகளை உருவாக்கிக் கொண்டனர்.

தாம் கொண்டுவந்த கணபதி வடபுலம் போல் வணங்கும் கடவுளாக தமிழகத்தில் ஏற்கப்பட வேண்டும்; அதேவேளை அதை எடுத்து இயம்ப ஒரு கரணியமும் வேண்டும். எனவே வடபுலத்தில் வழங்கிய புராணத்தின் தழுவலாய் ஒரு கதையை எழுதினார் பரஞ்சோதி. அதுதான் திருவிளையாடல் புராணம். அந்தத் திருவிளையாடல் புராணத்தில் கணபதியை அண்ணனாகவும் தமிழகத்தில் ஏற்கனவே வழக்கிலிருந்த முருகனை தம்பியாகவும் மாற்றி கதை அமைத்தார். அது முதல் பிள்ளையார் தமிழக மக்கள் வணங்கும் கடவுளாக ஆனார்.

பின்னாளில் இந்தப் பிள்ளையாரை மையமாக வைத்து தாம் வளர வேண்டும் என்பதற்காக சங்பரிவாரங்கள் ஒரு திட்டம் தீட்டினர். சென்னையில் முஸ்லிம்கள் ஏற்கனவே நடத்தி வந்த மிலாதுநபி ஊர்வலத்திற்கு போட்டியாய் இந்து முன்னணி என்ற அமைப்பு விநாயகர் ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்தில் அடிக்கடி மதக்கலவரம் ஏற்படுவதை அறிந்து 1991-இல் இரண்டு ஊர்வலங்களையும் நிறுத்திவிடுமாறு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இசுலாமியர்கள் மிலாதுநபி ஊர்வலத்தை நிறுத்திவிட்டனர். ஆனால் இந்து முன்னணி இன்னும் விநாயகர் ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தி கலவர அச்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது..

கணபதி வணக்கம் தமிழகத்திற்குள் வந்ததால் தமிழர்கள் தம் பெயர்களை கணபதி, கணேஷ், கணேசன், கணேசமூர்த்தி என்பன போன்ற வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

தமிழர்களை அடிமைப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் வழங்கிய முருகன் என்ற வழிபடு தெய்வத்தை சுப்பிரமணியன் என்று மாற்றியதால் (ப்ராமணன் – ப்ராமணி - சு+ப்ராமணி - சுப்ரமணி [சு = நல்ல] = ப்ராமணனுக்கு நல்லவன்) தமிழர்கள் தம்பிள்ளைகளுக்கு சுப்பிரமணி, சுப்பிரமணியன், சுப்பன் என்றெல்லாம் பெயர் சூட்டினர். இவற்றில் கணபதி, சுப்பிரமணி போன்ற பெயர் கொண்டோர் உயர் சாதியினராகவும் பிள்ளையார், சுப்பன் என்ற பெயர்களைக் கொண்டோர் தாழ்ந்த சாதியினராகவும் கருதப்பட்டனர். சீதை, சீதா, ரமா போன்ற பெயர்களைக் கொண்டோர் உயர் சாதியாகவும் ராமாயி என்ற பெயரைக் கொண்டோர் தாழ்ந்த சாதியாகவும் கருதப்பட்டனர். இன்றும் அதே நிலைதான்.

அதனால்தான் பெரியாரிடம் ஒருமுறை கேட்டார்கள் "நீங்கள்தான் மொழிநூல் அறிஞர் அல்லவே, பின் எதற்காக இந்திக்கு எதிராகப் போராடுகிறீர்கள்" என்று. அதற்கு பெரியார் "தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதற்காகவோ, இந்திக்கு அத்தன்மை இல்லை என்பதற்காகவோ நான் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி தமிழகத்தில் புகுந்தால் அதன் வழி வடபுலத்தில் வழங்கும் பண்பாடும் சேர்ந்தே தமிழகத்திற்குள் புகும். எனவேதான் நான் இந்தியை எதிர்க்கிறேன்" என்ற பொருள்பட பதிலுரைத்தார். அவர் அன்று சொன்னது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!

தமிழகத்திற்குள் அன்று கணபதி வந்ததால் தமிழரை சுரண்டும் கணபதி ஹோமம் வந்தது; கணபதி ஊர்வலம் வந்தது; கூடவே கலவரம் வந்தது!

முருகனை, திருமாலை, சிவனை, காளியை திரித்து புராணக்கதைகள் உரைக்கப்பட்டதால் சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, துவாதசி, சிவராத்திரி, நவராத்திரி, பிரம்மோற்சவம், பிரதோஷம், சங்கல்பம், ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, ஹனுமான் ஜெயந்தி, சிவ்ஜெயந்தி போன்ற எல்லாம் வந்தன. ஒருபுறம் கடவுள் பிறப்பில்லாதது, அனாதையானது என்பர்; மறுபுறமோ கடவுளுக்கு பிறந்த நாள் விழா (ஜெயந்தி) என்பர். இவை முன்னுக்குப்பின் முரணாகும்.

இவைகளில் ஏதாவது ஒன்று பண்டைத் தமிழரிடம் இருந்ததா? அல்லது தமிழில்தான் இருந்ததா? இருப்பதெல்லாம் பண்பாட்டு ஊடுருவல்தானே. இதற்கெல்லாம் சான்று காட்ட வேண்டுமெனில் சமஸ்கிருதத்திற்குத்தானே செல்ல வேண்டும். சமஸ்கிருதத்தை நேரிடையாக புகுத்த முடியாது என்பதால்தான் அதன் பிள்ளையான இந்தியை முதலில் அனுப்புகிறார்கள்.

அதனால்தான் தமிழனைத் தமிழனாக இருக்கவிடுவதில்லை. கண்ட கண்ட கதைகளைக் கூறி மண்டையை மழுங்கடிக்கிறார்கள். அன்று மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பத்தாயிரம் பேருக்கு தூய தமிழ்ப் பெயரைச் சூட்டுகிறேன் என்று தமிழர்களை ஒன்று திரட்டினார். அதைச் சற்றும் பொறுக்காத அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடனே காஞ்சி சங்கராச்சாரியாருடன் கூட்டு சேர்ந்து "நாங்கள் எண் கணிதப்படி பெயர்களை வைக்கிறோம்" என்று அறிவித்தார். ஏன் தமிழகத்திற்குள் தமிழன் தமிழ்ப் பெயரைத் தாங்கக் கூடாதா?

  • மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் தலைமையில் தமிழறிஞர் பலர் கூடி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததை மாற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுகிறார்களே! ஏன்?
  • அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் மாணிக்கவாசகரும் தமிழில் பாடிய தேவாரப்பாடல்களை தில்லை கோவிலில் பாட முனைந்த ஆறுமுகசாமியை அடித்து வெளியில் தூக்கிப்போட்டார்களே! ஏன்?
  • தண்டபாணி தேசிகர் அன்று திருவையாறில் தமிழில் பாடியதால் தீட்டுப்பட்டுவிட்டது என்று தீட்டுகழித்தனரே! ஏன்?
  • ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதியைக் காணச் சென்ற போது "பூசை வேளையில் நீசமொழி தமிழில் பேசமாட்டேன்" என்று கூறினாரே! ஏன்?
  • தனித் தமிழ் வளர்த்த, பார் போற்றும் திராவிட மொழி ஞாயிறு பாவாணரின் தலை மாணாக்கர் பாவலேறு பெருஞ்சித்திரனாரை நெல்லை இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனரே! ஏன்?
  • நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் துவங்குவதற்காக பாலவநத்தம் பாண்டித் துரையார் அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த பல்லாயிரம் ஓலைச் சுவடிகளையும், எண்ணற்ற நூல்களையும் இரவோடு இரவாக தீவைத்து கொளுத்தினார்களே! ஏன்?

தொடர்ந்து தமிழ் மொழி ஒழிப்பும், மறைப்பும், தடுப்பும் நடந்து கொண்டே வருகின்றதே! ஏன்? அதன் பின்னணி என்ன?

- நெல்லைப் பைந்தமிழ்

தொடரும்……….10

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 1
Your IP Address : 18.118.227.69

Archives (முந்தைய செய்திகள்)