Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (11)

16 Jul 2019 12:06 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
Paavalar Nellai Painthamizh, Why do not want Hindi

சங்பரிவாரங்கள் மொழி வழி ஊடுருவலைத்தான் அண்மைக் காலங்களாக முன்னெடுத்துச் செல்கின்றன. குஜராத்தில் உள்ள 42,000 தொடக்க, உயர் நிலைபள்ளிகளில் இந்துமத வெறியரான பத்ரா எழுதியுள்ள புத்தகங்களை கட்டாய பாடமாக்க 30.06.2014 குஜராத் அரசாங்கமே ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. அப்புத்தகங்களிலொன்று 'இந்து பாரம்பரியப்படி' ஒழுகப்பட வேண்டிய ஒழுக்கங்களைக் கூறுகின்றது. அந்த ஒழுக்க நெறிகளில் ஒன்று 'உனது பிறந்த நாளை கொண்டாடும் போது மேலை நாட்டு பண்பாட்டில் இருப்பதைப் போல மெழுகுவர்த்தியை ஏற்றக் கூடாது. அதற்குப் பதிலாக விளக்கொன்றை ஏற்றி காயத்திரி மந்திரத்தை ஓது' என்று கூறுகின்றது.

மெழுகுவர்த்திக்குப் பதில் விளக்கை ஏற்றச் சொல்லிருந்தால் கூட அது இந்தியப் பண்பாடாகக் கருதலாம். ஆனால் எதற்காக சமசுகிருத காயத்திரி மந்திரத்தை ஓதச் சொல்கிறார்கள். இது பட்டவர்த்தனமான ஆரிய பண்பாட்டுத் திணிப்பு அன்றோ!

மாணவர்களுக்கு வரலாற்று அறிவை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட இன்னொரு புத்தகமொன்று கூறுகின்றது 'இந்தியாவைப் பற்றிய வரைபடத்தை வரையும்படி உன்னிடம் கூறினால் நீ பின்வருவனவற்றை அதில் உள்ளடக்க வேண்டும்: 'பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூட்டான், திபெத், பிரமதேஷ் (மியான்மரின் பண்டைய பெயர்) ஸ்ரீலங்கா'.

எதற்காக இத்தனை நாடுகளை உள்ளடக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாடுகள் சங்பரிவாரங்களின் அகண்டபாரதக் கனவு தேசங்களாகும்.

அண்மையில் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு பாட நூலில் அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் அ-அணில், ஆ-ஆடு, இ-இலை, ஈ – ஈட்டி என்றிருந்தனவற்றை அ-அகத்தியர், ஆ-ஆஞ்சநேயர், இ-இமயமலை, ஈ- ஈசுவரன் என மாற்றியுள்ளனர். எதற்காக அகத்தியர், ஆஞ்சநேயர், இமயமலை, ஈசுவரன். அகத்தியர் யார்? வடவரின் இந்து மத முனி; ஆஞ்சநேயர் யார்? இந்து மத இராமனின் சேவகன்; இமயமலை ஏன்? இந்து மதக் குறியீடு; ஈசுவரன் யார்? இந்து மதக் கடவுள். அனைத்திலும் இந்து இந்து இந்து.

இன்னும் இத்தன்மை வாய்ந்த பாடங்களை போதிக்கும் வண்ணம் நடுவண் அரசு தனது நவோதயா பள்ளிகளை குறைந்த கட்டணத்தில் தமிழகத்தில் துவங்கியுள்ளது. குறைந்த கட்டணம் என்றவுடன் மக்கள் இப்பள்ளிகளை நோக்கி படையெடுப்பர் என்பது அவர்களின் திட்டம்.

அன்று வெள்ளையன் இந்நாட்டு மக்களுக்கு தேநீரை இலவசமாகக் கொடுத்தான். இலவசம்தானே என்று அனைவரும் வாங்கி அருந்தினர். தேநீர் பழக்கத்திற்கு மக்கள் அடிமையானதை அறிந்து கொண்ட வெள்ளையன் பின்னர் தேநீருக்கு கட்டணம் விதித்தான். இன்று தேநீர் அன்றாட குடிப்புகளில் ஒன்றாக மாறிவிட்டது .இதுபோல்தான் நவோதயா பள்ளிகளின் இந்தி வழி கல்வியும்.

"ஆங்கிலம் வந்ததால் தமிழ் அழியவில்லை; இந்தி வந்தால் மட்டும் தமிழ் அழிந்து விடுமா என்ன?" என்று கேட்கும் அதிமேதாவிகளும் உள்ளனர். "தமிழன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாளொன்றுக்கு 27 மொழி கலந்து பேசுகின்றான்" என்று மொழி ஆய்வறிஞர் அருளி கூறுவார். அவர் கூற்றில் எத்தனை உண்மையுள்ளது என்பதை வரும் சொற்களைக் கவனித்தாலே தெரியும்.

அசம்பாவிதம் (நேரக் கூடாதது), அசிங்கம் (அருவருப்பு), அட்டகாசம் (பெருஞ் சிரிப்பு), அதிசயம் (புதுமை, வியப்பு), அபிஷேகம் (திரு முழுக்கு), அவதாரம் (தோற்றரவு), ஆசிரமம் (தவப் பள்ளி), ஆயுசு (வாணாள்), உதிரம் (குருதி), உற்பத்தி (விளைச்சல்), ஊதா (கருநீலம்), சகஜம் (இயல்பு), சம்பாத்தியம் (வருவாய்), சம்மதம் (இசைவு), சவுகரியம் (ஏந்து), சிரமம் (துன்பம்), சாதகம் (பிறப்பியம்), சாமர்த்தியம் (திறமை), சுவாமி (இறைவன்), சேட்டை (குறும்பு), தயார் (அணியம்), தியானம் (ஊழ்கம்), தீபம் (விளக்கு), துரோகம் (இரண்டகம்), தைரியசாலி (துணிச்சல்காரன்), தொப்பி (தலையணி/கவிப்பு), நவக்கிரகம் (தொண்கோள்), நிபந்தனை (கட்டுப்பாடு), நிர்வாணம் (அம்மணம்), பரிதாபம் (இரக்கம்), பிரகாசம் (வெளிச்சம்), பீதி (அச்சம்), பூகம்பம் (நிலநடுக்கம்), மகசூல் (விளைச்சல்), மனிதசங்கிலி (மக்கள்தொடரி), மிராசு (நிலக்கிழார்), ராஜினாமா (பதவிவிலகல்), ருசி (சுவை), ரிஷி (முனிவன்), லேகியம் (இளகியம்), ஜப்தி (பறிமுதல்), ஜாக்கிரதை (எச்சரிக்கை), விவாதம் (தருக்கம்) என்று எண்ணற்ற பிற மொழிச் சொற்கள் (விரிவஞ்சி தவிர்க்கப்படுகின்றது) தமிழில் கலந்துள்ளன.

பிற மொழிக் கலப்பால் தமிழ் அழியாது என்றால் வள்ளுவர் தமிழில் எழுதிய திருக்குறளைப் படித்து ஏன் இன்று புரிந்து கொள்ள முடிவதில்லை? தமிழில் எழுதிய சங்க இலக்கியங்களைப் படித்து ஏன் இன்று புரிந்து கொள்ள முடிவதில்லை? விளக்க உரையையும் பொழிப்புரையையும் தேடுகிறோமே ஏன்? தமிழில் பிற மொழி புகுந்ததால் வந்தவினையன்றோ இவை.

பின்வரும் சொற்றொடரே இதற்கு சான்று பகருமே. இந்த வருஷம் ஜாஸ்தி லீவ்' என்ற சொற்றொடரில் ஒரு சொல் தமிழ்; ஒரு சொல் சமஸ்கிருதம்; ஒரு சொல் உருது; ஒரு சொல் ஆங்கிலம். 'கிஸ்தி பாக்கி வசூலுக்கு தண்டோரா போடுகிறார்கள்' என்பதில் ஒரு சொல் தமிழ். ஏனைய நான்கும் உருதுச் சொற்கள். 'ஈசுவரன் கிருபையால் சகல பந்துகளும் சௌக்கியம்' என்பதில் ஐந்து சொற்களும் சமஸ்கிருதம்; அவற்றின் ஈறுகளே தமிழ்.

இந்த நிலையில் தமிழில் அது இருக்கிறதா இது இருக்கிறதா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழ் மொழியானது மக்கள் மன்றம் வராமல் அடைபட்டு கிடக்கின்றது. சமசுகிருத கலப்பால் எது தமிழ் எது சமசுகிருதம் என்று அறியா வண்ணம் தமிழ் மொழியானது சீர் குலைந்துள்ளது.

அதனால்தான் செய்யுளைக் குறிக்கும்
பா என்ற சொல் சமஸ்கிருதவரவால் கவி என்றானது,
பாட்டு என்பது காதை என்றானது,
மண்டிலம் விருத்தம் ஆனது,
இதழ் குவிப்பா ஓட்டியம் ஆனது,
இதழகல் பா நிரோட்டியம் ஆனது,
ஈறுதொடங்கி அந்தாதி ஆனது,
பனுவல் பிரபந்தம் ஆனது,
வனப்பு காவியம் ஆனது,
ஐந்து பஞ்சம் ஆனது,
நூறு சதகம் ஆனது,
அறம் தருமம் ஆனது,
பசு ஆனது,
இசிவு ஜன்னி ஆனது,
ஈளை காசம் ஆனது,
இருப்பிடம் வாசம் ஆனது,
உகிர் நகம் ஆனது,
ஊழி யுகம் ஆனது,
ஊர்தி வாகனம் ஆனது,
கழுவாய் பிராயச்சித்தம் ஆனது,
கூற்றுவன் யமன் ஆனது,
சுடலை மயானம் ஆனது,
திருச்சுற்று பிரகாரம் ஆனது,
திருக்கோவில் தேவஸ்தானம் ஆனது,
மசண்டை பிரதோசம் ஆனது,
ஐயம் பிச்சை ஆனது,
ஐயுறவு சந்தேகம் ஆனது.
எகின், ஓதிமம் என்ற சொற்கள் அன்னம் ஆனது,
ஆதன், உறவி, புலம்பன் என்பவை ஆத்மா ஆனது,
முகில், கார், கொண்டல் என்ற சொற்கள் மேகம் ஆனது,
ஓகம் யோகா ஆனது,
உவகை ஆனந்தம் ஆனது,
களிப்பு குதூகலம் ஆனது,
மகிழ்ச்சி சந்தோசம் ஆனது,
புள் சகுனம் ஆனது,
இறும்பூது அதிசயம் ஆனது,
வீடுபேறு மோட்சம் ஆனது,
மெய்மை வாஸ்தவம் ஆனது,
வாய்மை நிஜம் ஆனது,
உண்மை சத்தியம் ஆனது.

காருவா அமாவாசை என்றும்
வெள்ளுவா பௌர்ணமி என்றும்
பொந்திகை திருப்தி என்றும்
ஊதியம் லாபம் என்றும்
இழப்பு நஷ்டம் என்றும்
செரிமானம் ஜீரணம் என்றும்
துப்புரவு சுத்தம் என்றும்
ஏதம் அபாயம் என்றும்
விரகு உபாயம் என்றும்
அளறு நரகம் என்றும்
துறக்கம் சொர்க்கம் என்றும்
கரிசு பாவம் என்றும் வழக்கிறந்தன.

அந்தளகம் கவசம் ஆனது,
மதங்கம் மிருதங்கம் ஆனது,
நண்பகல் மத்தியானம் ஆனது,
நிமையம் நிமிஷம் ஆனது,
பண் ராகம் ஆனது,
பண்டுவம் சிகிச்சை ஆனது,
முகமன் முகஸ்துதி ஆனது,
வஞ்சினம் சபதம் ஆனது,
விலங்கு மிருகம் ஆனது,
அடிப்படை அஸ்திவாரம் ஆனது,
உழவு விவசாயம் ஆனது,
ஏனம் பாத்திரம் ஆனது,
கோவில் ஆலயம் ஆனது,
கருவறை கர்ப்பக்கிரகம் ஆனது,
வழக்கம் சகஜம் ஆனது,
வெளிப்படை பகிரங்கம் ஆனது,
பகை குரோதம் ஆனது,
இரண்டகம் துரோகம் ஆனது,
கரு கர்ப்பம் ஆனது,
குலங்குடும்பம் சாதிசனம் ஆனது,
பிள்ளைப்பேறு பிரசவம் ஆனது.
பொழுதுவணங்கி சூரியகாந்தி ஆனது,
மறை வேதம் ஆனது,
ஒலி நாதம் ஆனது,
வழக்காரம் தந்திரம் ஆனது,
தன்னுரிமை சுதந்திரம் ஆனது,
உயிர்மெய் பிராணி ஆனது,
தோள் புஜம் ஆனது,
சோறு சாதம் ஆனது
பருப்பு குழம்பு சாம்பார் ஆனது,
மிளகுநீர் ரசம் ஆனது.

கயல்விழி மீனாட்சியாகவும்
தடங் கண்ணி விசாலாட்சியாகவும்
மாதொருபாகன் அர்த்த நாரீஸ்வரராகவும்
முருகன் சுப்பிரமணியனாகவும்
சிவன் ஈசுவரனாகவும்
மாயோன் விஷ்ணுவாகவும்
வேந்தன் இந்திரனாகவும்
சாத்தன் சாஸ்தாவாகவும்
காளி துர்க்கையாகவும்
கண்ணன் கிருஷ்ணனாகவும் மாறியது.

இவைமட்டுமல்ல; முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்று. பண் = 'ராகம்'. தமிழின் பெரும் பண்களாவன மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நான்கு வகைப்படும். இப்பண்களில் பாலைப்பண் மிக விரிவானது. அது வட்டப் பாலை, திரிகோண(முக்கோண)ப்பாலை, சதுர(நாற்கோண)ப்பாலை எனபல் வகைப்படும்.

இவற்றில் ஆயப்பாலை பிரிவிலுள்ள
செம்பாலைப் பண்ணை தீர சங்கராபரணம் எனவும்,
படுமலைப் பாலைப் பண்ணை கரகப்பிரியா எனவும்,
செவ்வழிப் பாலைப் பண்ணை தோடி எனவும்,
அரும்பாலைப் பண்ணை கல்யாணி எனவும்,
கோடிப் பாலைப் பண்ணை அரிகாம்போதி எனவும்,
விளரிப் பண்ணை பைரவி எனவும்,
மேற்செம்பாலைப் பண்ணை சுத்ததோடி எனவும் மாற்றினர்.

குறிஞ்சி சங்கராபரணமாகவும்,
நாட்டை மத்தியமாவதியாகவும்,
நேரிசை வனஜாட்சியாகவும்,
செந்துருத்தி தன்யாசியாகவும்,
செவ்வழி நீலாம்பரியாகவும் மாற்றப்பட்டன.

தமிழின் ஏழு இசைப் பெயர்களான இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்பனவற்றை. வடமொழியில் முறையே ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் எனமாற்றி அவற்றின் முதல் எழுத்துகளான ச, ரி, க, ம, ப, த, நி என்று ஏழு சுரங்களாக (ஸப்தஸ்வரங்கள்) இன்று பாடப் பெறுகின்றன. சப்தஸ்வரங்களைப் பாடுவோருக்கு இது தெரியுமா?

இவையெல்லாம் எப்படி நடந்தன இயல்பாகவா? திட்டமிட்டா? இந்தி வந்தால் தமிழ் ஒன்றும் அழிந்துவிடாது என்போருக்கு இது தெரியுமா? தமிழ் எது பிற மொழி எது என்றாவதுதான் தெரியுமா?

- நெல்லைப் பைந்தமிழ்

தொடரும்……..12

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 11
Total views : 410198
Who's Online : 0
Your IP Address : 3.15.226.173

Archives (முந்தைய செய்திகள்)