Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (8)

12 Jul 2019 1:18 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
Paavalar Nellai Painthamizh, Why do not want Hindi

முன்பு கூறியதுபோல் இந்துக்களைக் காத்து, போற்றிய இஸ்லாமிய மன்னர்களை இந்துக்கள் போற்றியிருக்க வேண்டுமல்லவா. மாறாக 1992 திசம்பர் மாதம் 6-ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்?

பார்ப்பனியத்தின் இந்து சட்டமான உடன்கட்டை ஏறுதல், பால்ய திருமணம், பெண் அடிமைத்தனம் போன்ற அனைத்தையும் எதிர்த்து அக்பர் பிரச்சாரம் செய்தார். விதவைத் திருமணத்தையும் ஆதரித்தார்.

இந்தச் சட்டங்கள் பார்ப்பனிய - வைதீக- இந்து மதத்தின் ஆணிவேர்கள். 'பால்யமணம்' என்பது சாதியைப் பேணும், தக்கவைத்துக் கொள்ளும் ஒரு வழிவகையாகும்.

மனிதர்களுக்கு காதல் என்பது பொதுவாக 12-13 அகவைக்கு மேல்தான் துவங்குகின்றது. அந்த அகவைக்குள் அச்சிறுவர்களுக்கு திருமணம் செய்துவிட்டால் பின் வேறு ஒரு பெண்ணையோ ஆணையோ எவரும் நாடார். எனவே 'பால்யமணம்' என்பது ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரைத் திருமணம் செய்வதைத் தடுக்கச் செய்த ஏற்பாடே.

எனவேதான் இன்றும் நம் மக்கள் தாம் நினைத்தால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறமுடியுமே தவிர எவரும் சாதிவிட்டு சாதி மாற முடியாது. இது நமக்கேத் தெரியாமல் நம் மூளையில் போடப்பட்ட விலங்கு. இதை, தன் நுண்மதியால் கூர்ந்து கவனித்த தந்தை பெரியார் அவ்விலங்கை உடைத்தார். அதைத் தாங்கி நின்ற கடவுள் கோட்பாடுகள் அனைத்தையும் உடைத்தார். அதனால்தான் பெரியார் இன்றும் பார்ப்பனியத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்.

சாதியைப் பேணுவதற்கு கீதையின் கிருஷ்ணனும் துணை நிற்கிறார். சாதியைப் போற்றும் பாடல்கள் முதல் வேதமான 'ரிக்' வேதத்தில் புருஷ சூக்தத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையில் படைத்தவன் சாதி பார்த்தா படைத்திருப்பான்? சிந்திக்க!

மேலும் இராம அவதாரத்தில் இராமன் இலங்கைக்குச் செல்ல ஒரு பாலம் கட்டினான் என்று சங்பரிவாரங்கள் இன்றும் நம்புகின்றனர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டு இதைக் கூறுகின்றனர். மார்ச்சு 9, 2001 அன்று சேது சமுத்திர திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அன்று உத்தரவிட்டவர் அப்போதைய அமைச்சர் அருண்ஜெட்லி. அதன்பின் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பாஜக அமைச்சர்கள் கால்வாய் பாதைக்கு ஒப்புதல் அளித்தனர்.

கடலுக்கு அடியில் பாலம் இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதற்காக சுரங்கத்துறை அமைச்சர் உமாபாரதி நியமித்த ஆய்வுக் குழுவும் 'அவ்வாறு பாலம் ஏதும் இல்லை' என்று அழுத்தம் திருத்தமாக அறிக்கை கொடுத்துவிட்டது.

அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச் சர்சத்ருகன் சின்கா "ஆதாம் பாலத்திற்கு (இராமர் பாலத்துக்கு) குறுக்கேதான் சேதுகால்வாய் தோண்ட இருக்கிறோம்" என்று செப்டம்பர் 29, 2003 அன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்திருக்கிறார். பாபர், அக்பர் காலத்தில் நடந்த வரலாற்றுச் செய்திகளை மறைத்துவிட்டு, பாஜக-வே இராமர் பாலம் இல்லை என்று கூறிய உண்மைகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டு இன்று சாமியாடிக் கொண்டிருக்கின்றன சங்பரிவாரங்கள்.

அதே வேளை ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி சுவாமியும் தன்பங்கிற்கு ஒன்றைக் கூறினார். "இராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலம் அல்ல; அங்கு கி.பி.15-ஆம் நூற்றாண்டுவரை அக்காலத்தில் மக்கள் சென்று வந்துள்ளனர்" என்று திருவாய் மலர்ந்தார்.

அவரின் கூற்று எத்தன்மையது என்பதற்கு அவர் தோற்றுவித்த ஆரியசமாஜ கூற்றிலிருந்தே சான்று காணலாம். தயானந்த சரஸ்வதியால் 1875-ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் ஆரிய சமாஜம். 1891-இல் பஞ்சாபில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது ஆரிய சமாஜிகள் 'நாங்கள் இந்துக்கள் அல்லர் ஆரியர்கள்' என்று தங்களைப் பதிவு செய்துக் கொண்டனர். பின்னர் 1908-ஆம் ஆண்டில் பஞ்சாபில் 'பஞ்சாப் இந்து சபா' என்ற ஓர் அமைப்பை ஆரிய சமாஜிகள் துவங்கினர்.

ஆரியர் என்று கூறினால் தாம் தனிமைப்படுவோம் என்பதை உணர்ந்த ஆரிய சமாஜிகள் 1911-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாங்கள் இந்துக்கள் அல்லர் ஆரியர்கள் என்று கூறியதை மாற்றிக் கொண்டு நாங்கள் ஆரியர் அல்லர்; இந்துக்களே' என்று பதிவு செய்து கொண்டனர்.

இத்தன்மை வாய்ந்த ஆரிய சமாஜத்தின் தயானந்த சரஸ்வதி சுவாமிதான் இராமர் பாலம் இயற்கையானது அல்ல செயற்கையானது என்று கருத்துரைத்தார். உண்மையில் அவருக்கு தமிழக வரலாறு தெரியாது போலும். கி.பி.15-ஆம் நூற்றாண்டுவரை மக்கள் செல்லும் அளவிற்கு இராமர் பாலம் இருந்தது என்றால் அதனினும் முன்பு கி.பி.11-ஆம் நூற்றாண்டில் பிந்தைய சோழ மண்டலத்தை ஆண்ட இராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தை பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழத்தை வென்றான் என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே!

வானூர்தியில் பறக்க முடிந்த இராமன் கண்ணுக்கு எட்டும் தொலைவிலுள்ள இலங்கைக்கு செல்ல பாலம் கட்டினான் என்று கூறுவதும் நகைப்புக்குரியதன்றோ!

இராமனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும். இராமாயணக் கதையின் போதனைகளை கல்வெட்டுகள் போல் நிலைக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் சனாதன தர்மத்தை, மனுநீதி சட்டங்களை காலாகாலத்திற்கும் வழிநடத்த வேண்டும். இதையெல்லாம் நடத்திகாட்டுவதற்கு இந்தி மொழியே தோதுவானது எனப் பார்ப்பனிய-பனியா சங்பரிவாரங்கள் நம்புகிறார்கள். அதனால்தான் 1949-ஆம் ஆண்டு அயோத்தியில் மாபெரும் வரலாற்று பிழையை அவர்கள் அரங்கேற்றினர்.

1949-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடந்த நிகழ்வு இது. பாகிஸ்தான் பிரிந்த பின்பு எல்லைப் பகுதியில் மதக்கலவரங்கள் நடந்துகொண்டிருந்த காலம்.' அகிலபாரத இராமாயண மகாசபா' என்னும் அமைப்பு பாபர் மசூதியின் வாயிலில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து இராமாயண உபன்யாசம் நடத்தியது. உபன்யாசம் முடியும் தருவாயில் 22.12.1949 அன்று நள்ளிரவில் சில இந்துக்கள் யாருக்கும் தெரியாமல் அயோத்தியின் பாபர்மசூதி வளாகத்திற்குள் புகுந்து இராமர், சீதை சிலைகளை நட்டுவைத்து விட்டு வந்து விட்டார்கள். காவல் துறையினர் 15 பேர் இருந்தும் இதைத் தடுக்கவில்லை. செய்தியறிந்து முறைகேடாக மசூதிக்குள்ளே இராமன், சீதை சிலைகள் நிறுவப்பட்டதை அகற்ற வேண்டி வேண்டுகோள் விடுத்தும் அதை அகற்ற மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். அங்கு மாவட்ட ஆட்சியராக அன்றிருந்தவர் கே.கே. நய்யார் என்னும் சங்க்பரிவார வெறியர். இந்த கே.கே. நய்யார்தான் பின்னர் ஜனசங்கத்தின் (பாஜகவின் முன்னாள் பெயர்) சார்பில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். தேர்தலை மனதில் வைத்து மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த இந்த கே.கே. நய்யாரிடம் எப்படி நீதியை எதிர்பார்த்திருக்க முடியும்!

இராமன் சிலையை மசூதிகள் நிறுவிய பின்பு அலகாபாத் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனிடையே 1990-ஆம் ஆண்டு அத்வானி தலைமையில் இரதயாத்திரை துவங்கப்பட்டது. இரதயாத்திரை துவங்கிய அத்வானிக்கு பஜ்ரங்தள பரிவாரங்கள் பரிசாக தங்கள் அரத்தத்தை (குருதி) ஒரு கோப்பையில் வழங்கினர். அரத்தத்தை பரிசாக வழங்குவோரின் நோக்கம் அமைதியை நோக்கியா இருக்கும். புரிந்து கொள்க. 1990-இல் இரதயாத்திரை நடத்தப்பட்டது; 1992-இல் கர சேவகர்கள் என்னும் இந்து மதக் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. 'ரத யாத்திரை'யின் துவக்கம் 'ரத்த யாத்திரை'யில் முடிந்தது.

கோவில் கட்டுவதென்றால் முறைப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒப்புதல் பெற்றோ அல்லது அந்நிலம் சம்பத்தப்பட்ட அமைப்புகளிடம் பேசியோ கட்டலாம். அந்த மாநிலத்தின் சிக்கலை அந்த மாநிலத்திற்குள்ளாகவே முடிப்பதை விட்டு விட்டு பிற 6 மாநிலங்களில் இரத யாத்திரை எதற்கு. எனில் அங்கு தேவை கோவில் அல்ல அதற்கும் அப்பாற்பட்ட ஒரு கட்டமைப்பு. அதுவே இந்து என்ற கருத்தாக்கம். உ.பி. மாநிலத்தில் இராமர் கோவில் கட்டுவதை தேசிய சிக்கலாக மாற்ற முனைவோர்கள் அதே கண்ணோட்டத்தில் ஏன் தமிழகத்தின் காவிரி சிக்கலையோ மேகதாது அணை கட்டுவதையோ பார்ப்பதில்லை. அங்கு மட்டும் இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். இராமன் என்றால் தேசிய சிக்கல் காவிரி என்றால் மாநில சிக்கலா. ஏன் இந்த மாற்றாந்தாய் போக்கு? மக்கள் இன்று உயிருடன் வாழ தேவை வேளாண்மையா? இல்லை இராமர் கோவிலா?

பண்டைத் தமிழகத்திலும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. சங்ககாலத்தில் இராமாயணக் கதை என்ற ஒன்றையெழுதி அறிஞர்கள் முன்பு கொண்டு வந்தனர். அதை ஆய்ந்த புலவர்கள் குப்பை என அதைத் தூக்கி எறிந்து விட்டனர். அதே இராமாயணம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதே தமிழகத்தில் கம்பர் வடிவில் வந்தது. அப்போது கம்ப இராமாயணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையில் பார்ப்பனியம் மன்னர்களையும் மக்களையும் தன் வயப்படுத்தியிருந்தது.

இராமாயணக் கதை வரவால் தமிழர்கள் இராமன், அனந்தராமன், கோதண்டராமன், மோகனராமன், ஜெயராமன், இராமச்சந்திரன், இராமசாமி, இராமானந்தன், இராமதுரை, இராமநாதன், இராமமூர்த்தி, இலட்சுமணன், பரத் என்பன போன்ற வடமொழிப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொண்டனர்.

ஒரு மொழிக்குள் பிற மொழி சொற் கலப்பு ஏற்படுவது என்பது பிற மொழியாருடன் கலந்துறவாடும் போதுதான். அது இயல்பு. ஆயின் பண்பாட்டு வழியில் அதை ஊடுருவச் செய்வது என்பது திணிப்பு.

அப்படி நடந்த பண்பாட்டு ஊடுருவல் திணிப்புகளின் மூலம் தமிழகத்திற்குள் நுழைந்தவர்தான் பிள்ளையார். பிள்ளையார் தமிழகத்திற்குள் ஏன் வந்தார்? எப்படி வந்தார்?

- நெல்லைப் பைந்தமிழ்

தொடரும்……..9

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 1
Your IP Address : 3.17.68.14

Archives (முந்தைய செய்திகள்)