Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (3)

06 Jul 2019 10:35 amFeatured Posted by: Sadanandan

You already voted!

இன்று இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ள இந்தி மொழியானது மேலையிந்தியைச் சேர்ந்த கடிபோலி என்னும் நடைமொழி என்பதை முன்புகண்டோம். அது 1853-இல் தில்லி, மீரட், ஆக்ரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கி வந்த வட்டாரமொழி. 1891-ஆம் ஆண்டு இந்திய மொழி அளவையில் இந்தி குறிக்கப்பெறவில்லை.

இந்தி மொழியை ஓர் அரசியல் மொழியாகப் பயன் படுத்துகின்ற முயற்சி முதன் முதல் உத்தரப்பிரதேசத்தில் 1920-இல் துவங்கியது. 1927-இல் உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி இடைநிலை வகுப்பில் இந்தி மொழிப்பாடம் புகுத்தப்பட்டது. அலகாபாத், காசி பல்கலைக்கழகங்களில் இந்தி இலக்கியப்படிப்பு சேர்க்கப்பட்டது.

இந்துமத மேட்டுக் குடியினரின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற குறியீடாக இந்தி விளங்கியது. மேட்டுக்குடியினர் பெரும்பாலும் நில உடமையாளர்கள், வணிகர்கள், மாதச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் முதலானோர். இவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வழிகாட்டுதலும் வழங்கியவர்கள் ஆரியசமாஜம், இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ்.ஆகியனவாகும்.

இதில் ஆரியசமாஜம் 1875-ஆம் ஆண்டும், இந்துமகாசபை 1915-ஆம் ஆண்டும், ஆர்.எஸ்.எஸ். என்னும் இயக்கம் 1925-ஆம் ஆண்டும் தோற்றுவிக்கப்பட்டன. இந்த மூன்று அமைப்புகளையும் தோற்றுவித்தவர்கள் மராட்டியமாநிலத்தில் உள்ள சித்பவன் என்னும் பிரிவைச் சார்ந்த பார்ப்பனர்களே! எனில் இவர்கள் ஆதரிக்கும் இந்திக்குப் பின்னால் என்ன இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய இந்த அமைப்புகளுக்கு தங்கள் இலட்சியங்களையும் பண்பாட்டின் அடித்தளத்தையும் மக்களிடையே பரப்புவதற்கு ஓர் ஊடகம் தேவைப்பட்டது. மொழிகளின் மூலம் உரையாடித்தான் மக்களின் மனதில் ஊடுருவ முடியும். எனவே அவர்கள் தங்கள் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தி மொழியை வளர்க்க ஆரம்பித்தனர்.

இந்தியா என்பது இந்து-இந்தியாதான் என்ற அவர்களுடைய கோட்பாட்டிற்கு பொருத்தமானதாக இருந்தது சமசுகிருதமயமாக்கப்பட்ட இந்தி. முஸ்லிம் ஆட்சிக்கு முந்திய இந்தியாவின் பண்பாட்டு சாதனைகளின் குறியீடாக விளங்கியது சமஸ்கிருத மொழிதான். இந்தியாவின் பொற்கால 'ஆர்யவர்த்தம்' பற்றிய ஒரு சித்திரத்தை அவர்கள் தீட்டி காட்டுவதற்கும், அந்தப் பொற்காலத்தை சிதைத்த பொது எதிரியான முஸ்லிம்களை வேறுபடுத்திக்காட்டவும், மீண்டும் அந்தப் பொற்காலத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொள்ளவும் சமசுகிருதம் உதவியது.

சமசுகிருதம் பேச்சுவழக்கற்ற மொழி என்பதால் இந்தியை சமசுகிருதத்தின் நவீன வடிவமாக ஆக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டது. பள்ளி கல்லூரி பாடபுத்தகங்களில் முஸ்லிம் அரசர்களை எதிர்த்தவர்களான இராணா பிரதாப்சிங், சிவாஜி போன்றோரின் வரலாறுகள், இமயமலை, கங்கை, விந்தியம் போன்ற புவியியல் பகுதிகள் இந்துப் பண்பாட்டின் குறியீடுகளாகவும் எடுத்துக்காட்டுகளாகும் சித்திரிக்கப்பட்டன. இதன் மூலம் இந்தி மொழி பேசும் பகுதிகளில் உள்ள மக்களிடையே ஓர் இந்து- இந்திய தேசிய அடையாளத்தை பரப்பமுடிந்தது.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்குத்தான் இந்தி மொழியை வளர்க்கிறோம் என்று புறவுலகிற்கு கூறினாலும் உண்மையில் பார்ப்பன-பனியா இந்து-இந்தியாவை உருவாக்குவதற்கான பண்பாட்டு கருவியாகவே அதனைப் பயன்படுத்தினர்.

மேலும் முதல் உலகப் போருக்குப் பின் காந்தி அரசியலில் தீவிரபங்கேற்க தொடங்கும் வரை காங்கிரசு கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றுவந்தன. காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு இந்தியாவின் பொது மொழியாக ஒரு மொழியை ஆக்க முயன்றார் காந்தி. அவர் பரிந்துரைத்த மொழி 'இந்துஸ்தானி' ஆகும்.

இந்தி, உருது ஆகிய இரண்டு மொழிகளின் கலப்பே இந்துத்தானி. இப்பொழுது உள்ள இந்தியைப் போல அவ்வளவு சமசுகிருதமயமானது அல்ல அம்மொழி. 1925-ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியின் கட்சி நடவடிக்கைகளில் இந்துத்தானியிலேயே நடைபெறவேண்டும் என்றும் இந்துத்தானி தெரியாதவர்கள் ஆங்கிலத்தையோ அல்லது அவரவர் வட்டார மொழிகளையோ பயன்படுத்தலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

அதேவேளை இந்தியாவில் ஆங்கில மொழியின் அளவுக்கு நவீன அறிவை எதிரொலிக்கும் சொற்களஞ்சியமோ அறிவியல் துறைகள் சார்ந்த நூல்களோ இந்தியமொழிகள் எதிலுமில்லை. ஆங்கிலத்தை தொடர்ந்து நீடிக்க செய்வது என்பது காலனி ஆட்சியை நீக்குவதற்கு பெரும் தடையாகவும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு இடையூறாகவும் இருக்கும் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்தது. இக்காரணத்தால் ஆங்கிலத்தின் இடத்தை இந்திக்கு வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும் வங்காள மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று இரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தி வந்தார். ஆனால் 1947-ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தி மொழியை தொடர்புக்கான ஊடகமாகவளர்க்கும் போக்கு வளர்ந்து விட்டது. விடுதலைப் போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தமது படையணியிடை இந்தியை பயன்படுத்தினார். நாடெங்கிலும் இந்தி பிரச்சாரசபை துவங்கப்பட்டன. விடுதலைக்கு முன்பே இந்தியை இந்துக்களுடனும் உருதுவையும், இந்துத்தானியையும் முசுலிம்களுடன் தொடர்பு படுத்திப்பார்க்கும் போக்கு வளர்ந்திருந்தது.

1940-ஆம் ஆண்டளவில் இந்தி பேசும் மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் நிலை பெற்றுவிட்டது. இந்து தீவிரவாத காங்கிரசுகாரர்களும் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டவர்களிடையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக எத்தனை காலம் நீடிக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் இருந்தது. தென்னிந்திய உறுப்பினர்களும் கூட இந்திக்குப் பதிலாக இந்தியோடு சேர்த்து வேறு ஓர் இந்திய மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மட்டுமே தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என வாதாடினார்.

இக்கூட்டத்தில்தான் 1949-ஆம் ஆண்டு அந்தத் தீர்மானம் நிறைவேறியது. அது என்ன தீர்மானம்?

தொடரும்……4

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 3.128.199.162

Archives (முந்தைய செய்திகள்)