Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

எந்நாளும் போற்றும் தென்னாட்டு மறவர்கள்-3

19 Apr 2020 12:55 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 3
வீர வேங்கை குயிலி
-வே.சதானந்தன்

பெரியமுத்தன் - ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தவர் குயிலி. தாயார் ராக்கு விவசாயத் தொழில் செய்து வந்தவராவார். அடங்காத காளை ஒன்று விளை நிலத்தை அழித்ததை கண்டு விரட்டியடிக்கையில் காளை தனது கொம்பால் குத்தியதில் குயிலியின் தாயார் ராக்கு உயிரிழந்தார்.

நீண்டநாள்கள் குழந்தையில்லாமல் பெற்ற குழந்தை குயிலி என்பதால் பெற்றோர் குயிலி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர். மனைவி ராக்கு இறந்த துக்கம் தாங்காமல் குயிலியை அழைத்துக்கொண்டு சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்துக்கு முத்தன் சென்று அங்கிருந்த அரண்மனைக்கு தோல் தைக்கும் வேலைக்குச் செல்கிறார்.

அரண்மனையில் பணிபுரிந்து வந்த தந்தை முத்தன் வேலுநாச்சியார் மற்றும் வீரக்கதைகளை எடுத்துரைத்து வளர்த்ததால் குயிலி இளம் வயதிலேயே வீரமும், விவேகமும் நிறைந்த பெண்ணாக வளர்ந்தாள்.

முத்தனும் உளவாளியாக செயல்பட்டு பல தகவல்களை வேலுநாச்சியாரிடம் சேர்த்து வந்ததனால், குயிலி அரண்மனைக்குள் எங்கும் சென்றுவரும் சுதந்திரத்தை பெற்றிருந்தாள். தந்தையை போலவே குயிலியும் சிவகங்கை சீமையின் நிலமைகளை அறிந்து வரும் சிறந்த உளவாளியாக செயல்பட்டு வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய உளவாளி என பெயர் பெற்றாள்.

1776ம் ஆண்டு வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.

சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மக்கள் வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை அறிந்த ஆங்கிலேயர்களோ வேலுநாச்சியார் பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் ஒருநாள்.  வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் குயிலியிடம் நீ செல்லும் வழியில் இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும்  ஒருவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்ல “சரி.” என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.

அன்றிரவு. குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தாள். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம்.
இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியை வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டு விக்கித்துபோனார்கள்

குயிலி வேலுநாச்சியாரிடம் தான் கையில் வைத்திருந்த கடிதத்தை நீட்ட  கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை குறிப்பாக போர் தந்திரங்களும், நுட்பங்களும் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியாரின் துரோகத்தை  அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார்.

          சிறு பெண்தானே இவள் எப்படி புரிந்துகொள்வாள் என்று தவறாக குயிலியை எடைபோட்ட சிலம்பு வாத்தியாருக்கு தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சிறு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார் வேலுநாச்சியார்.. அதன் மூலம் குயிலி வேலுநாச்சியாருக்கு மிகவும் நெருக்கமாகிப் போனாள் அன்று முதல் இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளராக தன்னுடனே வைத்துக்கொண்டார்.

          வேலுநாச்சியாரை எப்படியேனும் அழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர் வெள்ளையர்கள்.

ஒரு நாள் நள்ளிரவு.

வேலு நாச்சியார் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரம் வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள் குயிலி. மறைந்து நின்று கொண்டாள்.  ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போய் கத்தியால் ஓங்கி வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து கத்தியுடன் கையையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொள்ள. அந்த உருவம் சுதாரித்து குயிலியை தள்ளிவிட்டு, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார். இருமுறை தன்னை காத்த குயிலி இராணியின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தாள்.

குயிலி இருக்கும்வரை வேலுநாச்சியாரை நெருங்க முடியாது என்று எண்ணிய வெள்ளையர் குயிலிக்கு எதிராக மக்கள் மனதில் சாதிய துவேசத்தை விதைக்க ஆரம்பித்தனர். இதை அறிந்த வேலுநாச்சியார். தன்னை காத்த வீரமங்கைக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்றும் அத்துடன் அவரது வீரத்தையும் நாட்டுப் பற்றையும் மக்களுக்கு புரியவைக்கவும் எண்ணியதன் விளைவு மெய்க்காப்பாளராக இருந்த குயிலியை பெண்கள் படைக்கு தளபதியாக்கினார்

வேலுநாச்சியார் தனது நாட்டை மீட்கும் போர்

8 ஆண்டுகளுக்குப் பிறகு போர் தொடங்கியது . திப்பு சுல்தானிடமிருந்து பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன. விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள்.

முதலாவதாக முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன் ஒரு மணிநேரப் போரிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டான். காளையார் கோவிலில் எதிர்த்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தை தோற்கடித்து  வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வெற்றி முழக்கமிட்டப்படி சிவகங்கைச் சீமையில் நுளைகிறது வேலுநாச்சியாரின் படை. ஆனால் அங்கோ எதிர்பாராத நிலைமை. கோட்டையை சுற்றி துப்பாக்கி ஏந்திய போர் வீரர்களும் பீரங்கிகளும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல வீரர்களை இழக்க நேரிடும். வெற்றி அவ்வளவு சுலபமல்ல. இத்தனை வெற்றிக்கும் பின் தோல்வியா ? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை வேலுநாச்சியாரால்!!

அப்பொழுது ஒரு வயது முதிர்ந்த பெண் வந்து நிற்கிறாள் வேலுநாச்சியார் முன். அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள அம்மன் கோயிலில் பூஜை செய்ய அன்று ஒருநாள் காலை மட்டும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள்  படை மாறு வேடத்தில் ஆயுதங்களை மறைத்தபடி உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடட்டும் பிறகு  வெற்றி, நமது பக்கம் தான்.” என  அவள்  மூச்சுவிடாமல்  சொல்ல, அத்தனை பேரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

 பெரிய மருதுக்கு மட்டும் சற்று சந்தேகம் எழ அந்தப் பெண் நகைத்தபடி.  ”இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே தனது தலையில் இருந்த வெள்ளை முடியை விலக்கினாள்.  அங்கே குயிலி புன்னகைத்த படி நின்றிருந்தாள்.

ஆம், சிவகங்கைக்  கோட்டைக்குள் தனியாக குயிலி மாறு வேடத்தில்  உளவு பார்த்து வந்ததையும் வெற்றிக்கான வழியை காட்டியதையும் எண்ணி  வேலுநாச்சியார் பேரானந்தம் அடைந்தார்.

திட்டமிட்டபடி , ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள் படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பெரிய பூமாலைகளோடு அணிவகுத்தனர். வெள்ளையர்களுக்கு தெரியா வண்ணம் பூமாலைக்குள் வாளும், வளரியும் பதுங்கி இருந்தது.

சில வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்க பல வீரர்களின் (ஆங்கிலேயப் படையில் இருந்த இந்தியர்கள்) ஆயுதங்கள் ஆயுத பூஜை செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பூஜை செய்யவந்த பெண்கள் கூட்டம் குறைய காத்திருந்த வேலுநாச்சியார் கூட்டம் குறைந்தவுடன் வீர முழக்கமிட்டபடி வாளை சுழற்ற ஆரம்பித்தார். உள் நுழைந்த பெண்கள் படையும் ஆங்கிலேய வீரர்களை வேட்டையாடியது.

          எதிர்பாராத தாக்குதலால் ஆங்கிலேயர்களின் படை நிலை குலைந்தது. சுதாரித்த ஆங்கிலேய வீரர்கள் ஆயுதங்களை எடுக்க விரைந்தனர். எடுத்து வந்தால் நிலைமை மாறக்கூடும். வெற்றி சுலபமாகாது.

ஒரு உருவம் திடீரென்று விளக்கு எரிக்க வைத்திருந்த எண்ணையை தன் உடலில் ஊற்றிக்கொண்டு கோயிலுக்குள் இருந்த தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வீர முழக்கமிட்டபடி ஆயுதக் கிடங்கில் குதித்தது  தீப்பிழம்பாய்! அந்தோ! நொடியில் ஆயுதங்கள் வெடித்து சிதறும் சத்தமும் வீரர்களின் மரண ஓலமும்.

மீதமிருந்த வீரர்களை வெட்டிச்சாய்த்தது பெண்கள் படை. தப்பியோட முயன்ற ஆங்கிலேய தளபதி பான்சோரை வேலுநாச்சியாரின் வாள் சிறை பிடித்தது;  தளபதி சரணடைந்தான்.

சொந்தக் கோட்டையை கைப்பற்றி வெற்றிக் கொடிநாட்டியது வேலுநாச்சியாரின் படை. மருது சகோதரர்களும் சென்ற இடத்தில் வெற்றியை நிலை நாட்டிவிட்டு கோட்டைக்குள் நுழைந்தனர்.

வேலுநாச்சியாரின் கண்கள் தேடின வீரக் குயிலியை!! காணவில்லை. ஆம் குயிலிதான் குதித்த அந்த உருவம். விடுதலைக்காக தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் வேலுநாச்சியாரின் விழிகள் அருவியாய் மாறின. அவர் மட்டுமா அழுதார்?

வீரக் குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது.!!

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 3.147.54.6

Archives (முந்தைய செய்திகள்)