10 Mar 2025 1:10 pmFeatured
கரிகாற் சோழர் வாழ்க்கை வரலாறு
பிறப்பு :
கரிகாற் சோழர் பிறந்த இடம் உறையூர் பெற்றோர் இளஞ்சேட்ச்சென்னி - வேளிர் குல பெண். வேறு பெயர்கள் திருமாவளவன், பெருவளத்தான் வாழ்ந்த காலம் கி.மு. 270 ஆண்டு முதல் கி.பி. 180 ஆண்டு வரை சோழ வம்ச அரசர். சோழ நாட்டு தலைநகரமாக விளங்கிய உறையூரில் இளஞ்சேட்ச்சென்னி என்கிற அரசனுக்கும் வேளிர் குல இளவரசிக்கும் மகனாக பிறந்தார். கரிகாற் சோழரின் தந்தையான சிற்றரசரான இளஞ்செட்ச்சென்னி வட இந்தியாவின் வலிமை வாய்ந்த பேரரசாக திகழ்ந்த மௌரிய பேரரசின் தென்னக விஸ்தீரிப்பை தடுத்து நிறுத்திய பெருமை கொண்டவர் ஆவார். கரிகாற் சோழர் தாய் வயிற்றில் கருவுற்றிருந்த சமயத்தில் அவரது தந்தையான இளஞ்சேட்ச்சென்னி போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். அரச வாரிசு இல்லாமல் இளஞ்சேட்ச்சென்னி இறந்ததால், அவரது நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது. எனவே கரிகாற் சோழரின் தாயார் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அந்த நாட்டை விட்டு வெளியேறி தற்போதைய கருவூர் (இன்றைய கரூர்) பகுதியில் மறைந்து வாழ்ந்தனர். சிறுவயதில் இவன் தனக்குரிய அரசினை இழந்து தன் தாய்மாமனாகிய புலவர் இரும்பிடர்த்தலையார் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்தார் என அறிகிறோம்.
யானை மாலையிட்டு அரசனானவர் :
உறையூரில் நீடித்த அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பிறகு, தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசை தேர்ந்தெடுக்க ஒரு யானையிடம் மாலை கொடுத்து, அந்த மாலையை யானை யார் கழுத்தில் போடுகின்றதோ அவரே தங்கள் நாட்டு அரசனாக தேர்ந்தெடுக்க எண்ணி யானையை அனுப்பியதாகவும், அப்பொழுது அந்த யானை நீண்ட தூரம் பயணம் செய்து கருவூர் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பலம் கொண்ட சிறுவனின் கழுத்தில் அந்த மாலையை யானை போட்டதாகவும், அந்த சிறுவனையே அரசனாக மக்கள் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
“கரிகாலன்”
தனக்கு அரசாட்சி உரிமை கொண்ட நாட்டிற்கு திரும்பிய பொழுது அவரது அரசியல் எதிரிகள் யானை மாலையிட்ட சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், எனினும் மக்களிடத்தில் நாளுக்கு நாள் செல்வாக்கு உயர்ந்த கொண்டே செல்வதை எண்ணிப் பயந்த அவரது எதிரிகள் இளவரசரைக் கொல்ல முடிவு செய்து,, அவர் இருந்த சிறைக்கு தீ வைத்ததாகவும், எனினும் தனது சாதுரியத்தால் சிறையில் இருந்து இளவரசர் தப்பி சென்றதாகவும், அப்படி தப்பி செல்லும் பொழுது தீயில் அவரது கால்கள் கருகி விட்டதாகவும், இதன் காரணமாகவே அவருக்கு “கரிகாலன்” என்கிற பெயர் உண்டானது எனவும் கூறப்படுகின்றது. கரிகாற் சோழர் வேளிர் குலப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்முறையில் வாழ்ந்ததாகவும். அவருக்கு “நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி” என்கிற இரண்டு மகன்களும், “ஆதிமந்தி” என்கிற ஒரு மகள் பிறந்ததாகவும் வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெண்ணிப் பறந்தலை போர்:
கரிகாற் சோழரின் வாழ்வில் திருப்புமுனை நிகழ்வாக அமைந்த போர்களில் வெண்ணிப்போரும், வாகைப் பறந்தலைப் போரும் குறிப்பிடத்தக்கன . தற்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற கோயில் வெண்ணி எனப்படுகின்ற வெண்ணி எனும் இந்த பகுதியில் கரிகாற் சோழனை எதிர்த்து பாண்டிய மன்னன் , சேர மன்னனான உதயன் சேரலாதன் மற்றும் ஒன்பது வேளிரும், வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் மீண்டும் ஒன்று திரண்டு கரிகால சோழனுக்கு எதிராக போர் புரிய படை திரட்டி வந்தனர். எனினும் ஈடு இணையற்ற பராக்கிரமத்தாலும், போர் தந்திரங்களும் கொண்டு போர் புரிந்த கரிகாற் சோழனிடம் அத்தனை பேரும் தோல்வியுற்றனர். இந்த வெண்ணிப்போரில் கரிகாற் சோழனிடம் தோற்ற சேர மன்னனான உதயன் சேரலாதன் தனது முதுகில் காயம் ஏற்பட்டதால் வெட்கி, உயிர் வாழ விரும்பாமல் வடக்கிருந்து தனது உயிரை போக்கிக் கொண்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
போர்க்களத்தில் கரிகாலன் தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது பெருஞ்சேரலாதனின் முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.
புறநானூறு - 65. நாணமும் பாசமும்!
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு; … 10
கரிகாற் சோழரின் இந்த வெண்ணிப் போர் வெற்றி என்பது பிற்காலத்தில் மிகப்பெரிய சோழ சாம்ராஜ்யம் உருவாக ஒரு அடித்தளமாக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெண்ணிப் போருக்கு பிறகு தீவிரமான பல போர்கள் புரிந்த கரிகாற் சோழன் சேர நாட்டுப் பகுதிகளான பாலக்காடு, திருவாங்கூர், கொச்சி, தென்/வட மலையாளம் என்கிற ஒட்டுமொத்த சேர நாட்டுப் பகுதிகளை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார். இதன்பிறகு வடக்கே தொண்டை வளநாட்டையும், அதற்கு மேலாக இருக்கின்ற “வடவேங்கடம்” எனப்படும் திருப்பதி பகுதியையும் கரிகாற் சோழர் கைப்பற்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட பகுதியை கைப்பற்றிய பிறகு மிகப்பெரிய படைத்திரட்டி கொண்டு வடக்கே இமயம் வரை சென்று தனது புலிக்கொடியை கரிகாற் சோழன் நாட்டியதாக சிலப்பதிகாரம் மற்றும் பெரிய புராணம் பாடல்கள் தெரிவிக்கின்றன. கரிகாலன் மிக பலமான கடற்படையை கொண்டிருந்தார். கடல் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பிய கரிகாலன் இலங்கை மீது படையெடுத்தார். இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இப்போர் கைதிகளை கொண்டு காவிரிக்கு கரை (அணை) எழுப்பினார் எனக் கூறப்படுகிறது.
கரிகாற்சோழன் பெருமைகள் பாடிய பட்டினப்பாலை:
கரிகாற் பெருவளத்தான் ஆற்றல் பற்றி கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் மொத்தம் 301 அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா பாடியுள்ளார். தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் ( 16,00,000-16 லட்சம்) கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்பது இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். இதை உற்று நோக்கினால் 188 அடிகளுக்கு 16,00,0000 கழஞ்சு பொன் என்றால் ஒரு அடிக்கு 8,510.6 களஞ்சு பொன் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது. பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப்பூம்பட்டினமே தலைநகரமாக இருந்தது. தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநாராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் - பட்டினப்பாலை
பகைவரின் அச்சம் – இப்படி கரிகாற் பெருவளத்தான் பகைவர் நாட்டைப் பாழாக்கியும் நிறைவு கொள்ளாமல் மேலும் போருக்கெழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ‘இவன் மலையை வேரோடு தோண்டி எறிந்து விடுவான். கடலைத் தூர்த்து விடுவான். வானத்தை மண்ணில் விழச் செய்து விடுவான். காற்றின் திசையை மாற்றி விடுவான்’ – என்றெல்லாம் எண்ணிக்கொண்டு பகையரசர்கள் கலங்கினர் என்பார்.
காவிரியாற்றின் சிறப்பு:
சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம். இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் பட்டினப்பாலை எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, . . . .[05]
மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்; . . . .[1-7]
(பட்டினப்பாலை -காவிரியின் பெருமை (1-7))
காவிரிப்பூம்பட்டினம்:
துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியில் காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் முன்பு சொல்லப்பட்டது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.
"மாநகர் கடல்கொள அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்" (மணிமேகலை 28 அடி 80-81
காவிரிபூம்பட்டினம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம்! காவிரிபுகும்பட்டினம் என்பதே காவிரிபூம்பட்டினம் என மருவிற்று. காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்ததிருந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வெளியுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்
(சிலப்பதிகாரம் 1. புகார்க் காண்டம், 1. மங்கல வாழ்த்துப் பாடல்)
இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர்.
காவிரிப்பூம்பட்டினம் பற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆழ்கடல் ஆய்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.ராமசாமி கூறியிருப்பதாவது: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ரூ.10 கோடி நிதியுதவியுடன், கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு நடத்தும் பணி கடந்த 2019-2020 ஆண்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த ஆய்வு, கரோனா பரவல் காரணமாக இடையில் தடைபட்டதால், 2024 மார்ச்சுக்குள் முடிக்கும் வகையில், மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க வேண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போதைய கடற்கரையில் இருந்து 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய துறைமுக நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரகை நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) 2002ல் வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. துவாரகையை ஆழ்கடல் ஆய்விற்கு மேற்கொள்ளும் இந்திய ஒன்றிய அரசு இலக்கிய ஆதாரங்கள் பல உள்ள காவிப்பூம்பட்டினம், குமரியின் தென்பகுதி கடல் ஆய்வுகள் மேற்கொள்ளாதது தமிழர்களின் தொன்மையை முடிமறைக்கும் நோக்கம் என்பது தெளிவாகிறது. நாம் வாழும் காலத்தில் நடந்த ஆழிபேரலையால் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதையும் இந்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
கல்லணை:
கல்லணை தற்காலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உறையூர் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கரிகால சோழனின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுவது அவர் கட்டிய “கல்லணை” எனப்படும் நீர்ப்பாசன அணையாகும். இந்த கல்லணை என்பது தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசன்குடி என்கிற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. கல்லணையின் நீளம் என்பது 1080 அடியாகும், அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். அக்காலம் முதலே காவிரி ஆற்றில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அதனால் மக்களின் உயிர் உடைமைகளுக்கும், அவர்கள் செய்து வந்த உழவுத் தொழில் இழக்கும் பாதிப்புகள் ஏற்படுவதை கண்டு வருந்திய கரிகாற் சோழன், காவிரி ஆற்றின் குறுக்காக ஒரு அணைக்கட்ட முடிவு செய்து எழுப்பிய அணை தான் கல்லணை என்பதாகும். தனது மிகப் பெரும் படை பலத்தால் இலங்கையை வென்ற கரிகாற் சோழன் அங்கு பிடிக்கப்பட்ட சிங்கள படை கைதிகளை பணியாட்களாக கொண்டு இந்த கல்லணையை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் தமிழர்களே காவிரி நாட்டின் மேல் பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர் அந்த பாறையிலும் நீர் அறிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து சென்று விட்டன. அது நீருக்குள் மூழ்கி தரைத்தளத்தை தொட்டு மண் அரிப்பின் காரணமாய் இன்னும் அமுங்கி ஒரு பலமான நிலைத்தன்மை பெறும். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒட்டுப்பசை கொண்ட ஒரு வித களிமண்ணைத் தடவி அடுத்த பாறை. இதே முறையில் அடுத்தடுத்த கற்கள். மணற் பகுதியான அடிப்பகுதி இப்போது கருங்கற்களால் ஆன அஸ்திவாரமாகிவிட்டது. இதுவே இவ்வணையை கட்ட பயன்படுத்த தொழில் நுட்பமாகும். கல்லும் களிமண்ணிலும் மட்டுமே சேர்த்து கட்டப்பட்டது கல்லணை. கல்லணையை கட்டி முடிக்க 30 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தன. 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடிக்கி அணையில் கட்டப்பட்டது அந்தப் பாறையில் இணைப்புக்கு களிமண் சேர்த்து பயன்படுத்தப்பட்டது.
ஆர்தர் காட்டன், நீர்ப்பாசன துறை அதிகாரி:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி நீர்ப்பாசன துறை அதிகாரியாக இருந்த ஆர்தர் காட்டன் என்பவர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆய்வு செய்து, தமிழர்களின் கட்டிட திறனை கண்ட வியந்தார். காவிரியின் குறுக்காக மிகப்பெரிய கற்பாறைகளை கொண்டு வந்து அக்காலத்தில் போடப்பட்டதாகவும், பிறகு ஆற்றின் நீரோட்டத்தால் ஏற்படும் நீர் அரிப்பின் காரணமாக அப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மணலில் புதைந்து, ஒரு கட்டத்தில் அம்மணலில் உறுதியாக நின்ற பிறகு, அதன் மீது வேறு ஒரு பாறையை வைத்து தண்ணீரில் கரையாத ஒருவித களிமண்ணை கொண்டு அந்தப் பாறைகளின் மீது பூசி, அந்தப் பாறைகள் நன்கு உறுதியாக ஒட்டிக் கொள்ளும்படி செய்து இந்த கல்லணை கட்டப்பட்டதாக ஆர்தர் காட்டன் தனது ஆய்வில் கூறியுள்ளார். 2000 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்ற இந்த கல்லணை மீது 1839ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்அணையை புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மேற்கு பகுதியில் கல்லணை புதுப்பிக்கப்பட்டது. கேப்டன் மேஜர் “ஜிம் சர் ஆர்தர் காட்டன்” இந்த வல்லுனர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை அதை இடிக்காமல் புதுப்பித்தனர்.
தற்போது வரை மக்கள் பயன்பாட்டில் இருக்கின்ற கல்லணை மற்றும் கல்லணை பாலம் இந்திய நாட்டின் பாரம்பரிய கட்டடவியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த சான்றாக திகழ்கிறது. கல்லணைக்கு அமைக்கப்பட்டிருந்த அடித்தளத்தை ஆராய்ந்த அவர், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பாராட்டும் விதமாக கல்லணைக்கு, ‘கிரான்ட் அணைகட்’ (Grand Anicut) என்ற பெயரையும் சூட்டினார்.
உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற் சோழனால் கட்டப்பட்ட கல்லணையும் ஒன்று.
கரிகாற் சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகாற் சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், நமக்குப் பின் வரும் தலைமுறைகளும் இந்த வரலாறுகளை தெளிவாகக் காண முடியும். முன்னோர் வழி நின்று தமிழரின் வாழ்வு சிறக்க நம் பணி தொடர்வோம்!
வரலாறுகள் படிப்போம்! வரலாறு படைப்போம்!!
நன்றி : Google