26 Jun 2020 7:30 pmFeatured

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னார் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பெரும்அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தையொட்டி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர், எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன.. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பைக் தெரிவித்து மாநிலம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி.கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்துக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
“கரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்” என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று இருவரது மரணம் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை திமுக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திமுக செய்திக் குறிப்பு:
“தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்த, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினரை, இன்று கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் வழங்கினார். உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இருந்தார்”. இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.






Users Today : 62
Total Users : 105931
Views Today : 97
Total views : 433513
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90