Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ் வார விழா – முதலமைச்சர் அறிவிப்பு!

22 Apr 2025 10:22 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures tamil week celebration

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் பேசியதாவது;

“தமிழ் மொழிக்கு பாவேந்தர்; திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர்; தமிழினத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமையடைகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்.

‘தமிழுக்கும் அமுதென்று பேர்;
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’
என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும்,

“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”
என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும்,

‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’
என்னும் போர்ப்பாடலையும்,

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு”
என்ற வெற்றிப் பாடலையும்,

“தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்”
என்று எழுச்சி முரசு கொட்டியும்

வாழ்க வாழ்கவே – வாழ்க வாழ்கவே,
வளமார் எமது திராவிட நாடு
என்று திராவிடப் பண் பாடியும், காலத்தினை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.

1929 ஆம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.

முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990 ஆம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை முத்தமிழறிஞர் கலைஞர் நாட்டுடைமையாக்கினார்கள்.

இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார். இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.

பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும்; எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும்.

எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.

இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

DTMS Advt

“எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வ1ரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர் / கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.

புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.

மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.

தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம்; நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம்; தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.

“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

“கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்” என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.

“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு” என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.

“தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.

பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக!” என முதலமைச்சர் தெரிவித்தார்.

You already voted!
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Mustaq ali
Mustaq ali
5 months ago

அருமை அருமை வாழ்த்துக்கள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104910
Users Today : 2
Total Users : 104910
Views Today : 2
Total views : 432070
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)