30 Nov 2020 10:39 amFeatured

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 5 மாவட்டங்கள் ரெட் அலர்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வங்கக் கடலில் கடந்த 20ம் தேதி வலுப்பெற்ற நிவர் புயல் 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தை கடந்து சென்றது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரும் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அந்த ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டது.
அத்துடன் அதிக கன மழை பொழிவு மற்றும் ஏரி திறப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் முடிச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும், மற்ற ஏரிகள் திறப்பால் செம்மஞ்சேரி, தாம்பரம், வேளச்சேரி பகுதிகள் உள்பட பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்கை பாதித்தும் குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது கடந்த இரண்டு நாட்களாக வலுப்பெற்று வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 40 மிமீ மழை பெய்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூற்றின்படி ‘தென்மேற்கு அந்தமான் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொ்ண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது மேலும் வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் அந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினம் அருகே தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி, மன்னார் வளைகுடா வழியாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வருவதால், டிசம்பர் 2ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘புரேவி’ என புதிய புயலுக்கு பெயர் சூட்டல்
வங்கக் கடலில் 20ம் தேதி உருவான புயலுக்கு நிவர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த பெயரை ஈரான் நாடு பரிந்துரை செய்திருந்தது.
தற்போது வங்கக் கடலில் டிசம்பர் 2ம் தேதி புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயல் உருவான பிறகு அதற்கு ‘புரேவி’ (Burevi) என்று பெயரை சூட்டுவார்கள். இந்த பெயரை மாலத்தீவு பரிந்துரை செய்துள்ளது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37