26 Jan 2021 5:53 pmFeatured

அம்பர்நாத் - ஜெரிமெரி - பிவாண்டி கிளைகள் நடத்தின.
வதிலை பிரதாபன் - அ.இளங்கோ பங்கேற்பு.
நேற்று 25.01.2021 ஞாயிறு மாலை மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
ஹிந்திமொழித் திணிப்பிற்கு எதிராக 1937 - 38 களில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் தந்தை பெரியாரின் முன்னெடுப்பில் பெருமளவு மக்கள் நடுவினில் தமிழ்மொழியின் மேன்மையை உணர்த்துகின்ற வகையிலே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய வரலாறு உண்டு.
மக்களின் வெகுண்டெழுந்த நிலைகண்டு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையானது நாடு விடுதலையடைந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஆட்சியாளர்கள் மீண்டும் ஹிந்திமொழியை திணிக்க முயன்றதன் விளைவாக 1965 ல் திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா தலைமையில் போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்தது. தொன்மையான இலக்கிய இதிகாசங்களைக் கொண்ட தமிழ்மொழிக்கு ஊறு செய்கின்ற கெடு ஆற்றல்களை முறியடிக்கக் கிளம்பிய மொழியுணர்வாளர்கள் தம் இன்னுயிரையும் நீத்து மொழிகாத்த வரலாறும் நம்மவர்க்கு உண்டு.
அத்தகு போராட்டத்தில் எண்ணற்றவர்கள் மரித்தார்கள்; பலர் காயமுற்றார்கள்; பலர் சிறை சென்றார்கள்; பலரது குடும்பம் கொடுமையான நிலைகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட வீரமறவர்களான சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி…
இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.
உணர்வுசார்ந்த இத்தகையோரின் இழப்பு, காலம் கடந்தும் தமிழர்களால் குறிப்பாக கழகத்தவர்களால் வணங்கத்தக்க வகையிலே நினைந்து போற்றப்பட்டு வருகிறது. நினைவுகூர்ந்து வீரவணக்கமும் செலுத்தப்படுகிறது.
இத்தகைய கூட்டத்தை மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையேற்று நடத்தினார்.
மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைச்செயலாளர் பொ.அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வசந்தகுமார், இலக்கிய அணித்தலைவர் வே.சதானந்தன், துணைச்செயலாளர் சைனுலாப்தீன், பிவாண்டி கிளைச் செயலாளர் மெஹமூப் பாட்ஷா சேக், முஸ்தாக் அலி,
பேராசிரியர் சம்பத், சான் பாட்ஷா, அன்கூர், ஜெரிமெரிக் கிளைக்கழகம் சார்ந்த கழகத் தோழர்கள் மற்றும் மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் யோவான் வேதநாயகம் ஆகியோரும் அம்பர்நாத் கிளைச்செயலாளர் ஜஸ்டின் அம்பர்நாத் கிளையின் மேனாள் செயலாளர் அண்ணா கதிர்வேல் முத்தமிழ்மன்றத் தலைவர் முத்தமிழ் தண்டபாணி ஆகியோரும் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு இரங்கல் உரையாற்றினார்கள்.
மேலும் பிவாண்டி, அம்பர்நாத் ஜெரிமேரி பகுதிகளில் தியாகிகள் படத்திற்கு கழக தோழர்களும் பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு மொழிசார்ந்த விழிப்புணர்வு பெற்றுச்சென்றனர்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37