06 Sep 2019 12:15 amFeatured

அத்தியாயம் 2-2
உகண்டாவில் என்ன நடந்துகொண்டிருந்தது?
என்டபே விமான நிலையத்தில்…
ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால்
உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு
இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது.
அதிரடித் தாக்குதல் நடத்தப்படத் திட்டமிடப்படும் இந்த என்டபே விமான நிலையம் உகண்டாவின்
தலைநகரில் இருந்தாலும், அளவில் சிறியது. அதனூடாக நடைபெறும் விமானப் போக்குவரத்தும்
மிக மிகக் குறைவு. எனவே பயணிகள் நடமாட்டம் அந்த விமான நிலையக் கட்டடத்தில் பெரிதாக
இருப்பதில்லை.
இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்
எடுத்து, பணயக்கைதிகளை அங்கே வைத்திருந்தார்கள்.
உகண்டா நாட்டின் அன்றைய தலைவர் இடி அமீன் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நிலை
எடுத்திருந்த காலப்பகுதி அது. இதனால், கடத்தல்காரர்களுக்கு என்டபே விமான நிலையத்தில்
சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்று மற்றொரு நாட்டு விமானத்தைப் பயணிகளுடன் கடத்திக்
கொண்டு வந்து மூன்றாவது நாடு ஒன்றில் வைத்திருக்கின்றது. இப்படியான நிலையில் விமானம்
இறக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நாடு வழமையாகக் கடத்தல்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கும்.
அவர்கள்மீது தாக்குதல் நடத்த முடியுமா? பணயக்கைதிகளைக் காப்பாற்ற முடியுமா? என்றெல்லாம்
ஆராய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் உகண்டாவில் இது தலைககீழாக இருந்தது.
கடத்தல்காரர்களும், உகண்டாவின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக
நடந்து கொண்டார்கள். அதற்கு ஒருபடி மேலேபோய், கடத்தல்காரர்கள் ஓய்வு எடுக்கும்போது
உகண்டாவின் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட லோக்கல் ஆட்களே
பணயக் கைதிகளை காவல்காத்தார்கள்.
உகண்டா அரசே கிட்டத்தட்ட கடத்தல்காரர்களின் பக்கத்தில் இருந்து செயற்படுவது போன்ற தோற்றம்
ஏற்பட்டிருந்தது.
அங்கிருந்த யாருக்கும், பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகள் உட்பட,
இவர்களை விடுவிக்க மொசாத் அதிரடி நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுகின்றது என்ற விஷயம் தெரியாது!
இதுதான் அங்கிருந்த நிலை.
உகண்டாவில் நிலைமை அப்படியிருக்க இஸ்ரேலில் மொசாத்தின் தலைமைச் செயலகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது?
மொசாத்தின் திட்டம்
மொசாத்தின் அதிரடி மீட்பு நடவடிக்கையை திட்டமிட்டுக் கொண்டிருந்த டேவிட் கிம்சே ஒரு
விஷயத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் கென்யா நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு இந்த
விஷயத்தில் கிடைத்திருந்தாலும், அதிரடி மீட்பு நடவடிக்கைகளை முற்று முழுதாக கென்யா
நாட்டிலிருந்து நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்கும் ஒரு காரணம் இருந்தது.
இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு என்ற ரீதியில் கென்யா இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு
கொடுத்தாலும், உள்மனதில் அவர்களுக்கும் இஸ்ரேல்மீது கோபம் இருக்கலாம். அதுவும் தங்களுக்கு
அருகிலுள்ள நாடு (உகண்டா) ஒன்றில் இஸ்ரேலிய உளவுத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்
போகின்றது என்பதை கென்யா எந்தளவுக்கு விரும்பும் என்று ஊகிப்பது கஷ்டம்.
யார் கண்டது, சில வேளைகளில் கவிழ்த்து விட்டாலும் விடலாம்.
இது பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மாத்திரமல்ல.
இப்படியொரு ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்தால் அது இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய கடும் அவமானமாகவும்
இருக்கும்.
இதனால் இந்த அதிரடித் தாக்குதல் மீட்பு எப்படி நடைபெறப்போகின்றது என்ற விபரங்கள் யாருக்கும்
தெரியாமல் – (கென்யா உட்பட) – இருக்கவேண்டியது அவசியம் என்று டேவிட் கிம்சீ முடிவு
செய்திருந்தார்.
கமாண்டோக்களை அனுப்ப வேண்டும்!
ஆனால் சிக்கல் என்னவென்றால், பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் இருப்பது ஆபிரிக்காக்
கண்டத்தில். இந்த அதிரடித் தாக்குதலுக்காகக் கமாண்டோக்களை இஸ்ரேலில் இருந்து விமானம்
மூலமாகக் கொண்டுபோய் ஆபிரிக்காவில் இறக்க வேண்டும்.
இஸ்ரேலில் இருந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்த கமாண்டோக்களை விமானமூலம் கொண்டு
சென்றாலும், உகண்டாவுக்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து
எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.
அந்த நாட்களில் இஸ்ரேலில் இருந்து ஆபிரிக்கா சென்று, மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவருமளவுக்கு
எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு விமானமும் இஸ்ரேலிடம் இருந்ததில்லை. தற்போது
இருப்பதுபோல விமானத்துக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அப்போது இருக்கவில்லை.
இஸ்ரேலுக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் அந்த நாட்களில் இருந்த அரசியல் உறவுகள் காரணமாக
இஸ்ரேலுக்கு அந்தப் பிராந்தியத்தில் உதவக்கூடிய நாடுகள் அதிகமில்லை.
வேறு வழியில்லாமல் இதற்கும் கென்யாவிடம்தான் போகவேண்டும் என்ற நிலை.
இஸ்ரேலிய தந்திரம்
இந்த இடத்தில் இஸ்ரேல் ஒரு சிறிய தந்திரம் செய்ய முயன்றது. ஏற்கனவே உளவுத்துறையான மொசாத்
மூலமாக கென்யாவில் இந்த அதிரடி நடவடிக்கைக்காக சில முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்க,
அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை… இது வெறும் சிவில் விமான விவகாரம் என்று காட்டி கென்யாவிடம்
அனுமதி வாங்க முயன்றது இஸ்ரேல்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மூலம் கென்யாவின் வெளிவிவகார அலுவலகத்தில் தமது விமானம்
ஒன்றுக்கு நைரோபி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கேட்பதாக முடிவு
செய்யப்பட்டது. சும்மா விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பவேண்டும் என்பதைத்தவிர, வேறு
எந்த விபரமும் சொல்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இப்படியான கோரிக்கை கென்யா நாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது,
அவர்கள் எரிபொருள் நிரப்பப்படவேண்டிய குறிப்பிட்ட இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களை
கேட்கத் தொடங்கினார்கள்.
என்ன வகை விமானம் அது? விமானத்தில் என்ன இருக்கிறது? விமானம் கென்யாவில் எரிபொருள்
நிரப்பிக்கொண்டு எங்கே செல்லப் போகின்றது? இப்படியான பல கேள்விகள் வந்து விழுந்தன.
இதற்கெல்லாம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சிடம் பதில் இல்லை.
“இந்த விபரங்களைக் கூறினால்தான் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கமுடியும்” என்று கென்ய வெளிவிவகார
அமைச்சுக் கூறிவிட, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மொசாத்தைத் தொடர்பு கொண்டு, அடுத்து
என்ன செய்வது என்று கேட்டது.
விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் விமானக் கடத்தல் ஒன்றின்மூலம் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை
உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்திதான் அப்போது உலகெங்கும் பரபரப்பாக
அடிபட்டுக் கொண்டிருந்தது. இது கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.
அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை அதற்குள் அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும்,
கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி
கேட்கின்றதென்றால், அது நிச்சயம் இந்தப் பணயக் கைதிகளுடன் சம்மந்தமாக ஏதோ ரகசியக் ஒரு
காரியம் என்பதை கென்யா ஊகித்திருந்தது. இதனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல்
தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை.
டேவிட் கிம்சீ மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
முடிவில் மொசாத்தின் மற்றொரு திட்டம் உருவாகியது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37