Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

‘அது’தான் ஆண்மையா? – முனைவர் சிவ இளங்கோ

16 Feb 2022 3:56 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures aanmai

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-68
படைப்பாளர் - முனைவர் சிவ இளங்கோ - புதுச்சேரி

கார்த்திக் கண் கலங்கி நின்று கொண்டிருந்தான். அப்படி இருப்பதைத் தவிர வேறு வழியில்லை அவனுக்கு.

 "என்ன இது, நாம் நம் குடும்பத்திற்காகத் தானே இத்தனை உழைத்தோம். எல்லா உழைப்பையும் பெற்றுக்கொண்டு இப்படி ஓர் அவப்பெயரா?" நினைக்க நினைக்கக் கார்த்திக்கிற்கு மனம் ஆறவில்லை.

 "நானாகவா இந்த செயற்கைக் கரு முறையை நாடிச் சென்றேன். எல்லாம் புவனாவின் விருப்பப்படி தானே நடந்தது. அப்போது புவனாவின் பெற்றோர்களும் அதைத்தானே ஆமோதித்தார்கள்? விரும்பவும் செய்தார்களே!" 

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்-புவனா திருமணம் நடந்தேறியது. காதல் திருமணம்தான். சாதி குறுக்கிட்டாலும், இருதரப்புப் பெற்றோரின் சம்மதத்தோடு சீர்திருத்தத் திருமணமாகவே நடைபெற்றது. தம்பதி சமேதரராகத் தனி வீடு பார்த்துக் கொண்டு, இனிமையான இல்லறமாகப் போய்க்கொண்டிருந்தது.

 ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தான் பிரச்சனை வந்தது. அதுவும் மாமனார், மாமியார் வடிவத்தில். தங்கள் பெண்ணைப் பார்க்க வந்த புவனாவின் பெற்றோர் மெல்ல,

 "இப்படியே எவ்வளவு நாள்தாம்மா குழந்தை இல்லாம இருக்கப் போறீங்க?" என்றனர்.

 "அப்படியெல்லாம் ஒன்றுமில்லப்பா! குழந்தைங்க வேண்டாம்னு நாங்க யாரும் நினைக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முந்தி, நாலாவது மாசத்திலேயே அபார்ஷன் ஆயிடுச்சுல்ல. அதுக்கப்புறம் அப்படியே இருக்குது. அவ்வளவுதான்!" 

"இதெல்லாம் அப்படியே விட்டுடக் கூடாதும்மா! இதுவரைக்கும் எதாவது டாக்டரைப் போயிப் பார்த்தீங்களா?"

 "இதுக்குப் போயி ஏம்பா டாக்டரைப் பார்க்கணும்?" 

"அட நீ வேறம்மா! இப்பெல்லாம் ஸ்பெஷாலிட்டி சென்டருக்குப் போறது ஒரு பேஷனாவேப் போச்சு. கல்யாணமாகி ரெண்டாவது வருஷத்திலேயே போயி நிக்கிறாங்க. நீ என்னடான்னா.. அஞ்சு வருஷமா புள்ள இல்லாம.. அதை விட, அதைப் பத்திக் கவலையில்லாம இருக்குறே.. நாங்களும் பேரப் புள்ளைங்களைக் கொஞ்ச வேணாமா?" 

"சரிப்பா, நீங்க சொன்ன அந்த ஆஸ்பிடல் எங்கப்பா இருக்குது?" 

"இப்ப எந்த ஊர்ல இல்ல? அதுதான் இப்ப நம்பர் ஒன்னு மார்க்கெட்டிங். இந்தக் காலத்துப் புள்ளைங்க வளர்த்தி அப்படி…!"

 "சரி, சரி! நான் இதுபத்தி அவர் கிட்ட பேசுறேம்பா! அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்யலாம்!"

 "அவர் என்ன சொன்னாலும், நீ ஆஸ்பிட்டலுக்குப் போவத்தான் வேணும். வாழறதே வம்சவிருத்திக்குத் தான்னு எங்க தாத்தா சொல்லுவாரு. இப்பத்தான் எதுக்கு வாழறோம்னு தெரியாம எப்படியெப்படியோ வாழ்ந்து கிட்டுருக்கிறாங்க"

 "ஐயோ போதும்பா உங்க புராணம்! நீங்க போயிச் சாப்பிடுங்க இல்ல சீரியல் பாருங்க"

"ஏன் நீயெல்லாம் சீரியல் பாக்குறதில்லையா? அதான் ஸ்பெஷாலிட்டி சென்டர் பத்தியெல்லாம் தெரியாம இருக்கிறே!"

 புவனாவின் அப்பாவும், அம்மாவும் உண்மையிலேயே சீரியல் பார்க்க உட்கார்ந்து விட்டார்கள். இனி சாப்பாடெல்லாம் அங்கேயேதான். எப்போது தூங்குவார்கள் என்று தெரியாது.

புவனா மட்டும் எப்போதும் போலில்லாமல் ஒரு சிந்தனையோடவே இருந்தாள். அப்பா கொடுத்த ஒரு உத்வேகம் புவனாவின் மனதில் கனலாகிக் கொண்டே வந்தது.

 கடைசியில் புவனாவின் அப்பா தான் வென்றார். 'இன்பெர்டிலிடி ஸ்பெஷாலிட்டி சென்டர்' சென்றதுதான் தாமதம்; கார்த்திக்கும், புவனாவும் அந்த மருத்துவமனையின் நிரந்தர 'கஸ்டமர்கள்' (பேஷண்ட்கள்) ஆகிவிட்டனர். கருத்தரிப்பதில் இருவருக்குமே சின்னச்சின்ன 'சிக்கல்கள்' இருப்பதாகச் சொன்னார்கள். மாதமொருமுறை என்று ஆரம்பித்துப் பின்னர் மாதம் இருமுறை என்று டாக்டர்களைப் பார்த்து, எத்தனையோ கொட்டி அழுது, கடைசியில் 'ஆர்டிபிசியல் இன்செமினேஷன்', அதாங்க செயற்கைக் கருமுறை, அது வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டாங்க.

 கார்த்திக் முதலில் சம்மதிக்கவில்லை. கொஞ்ச நாளில் தானாகவே சரியாகி விடக் கூடிய விஷயத்துக்கு இத்தனைக் களேபரம், இத்தனை செலவு என்று போவதை அவன் விரும்பவில்லை. பொருளாதாரமும் நிறைய இடித்தது. உடனடியாகக் குழந்தை வேண்டுமென்றால், ஏதாவது ஓர் காப்பகத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று கார்த்திக் சொன்னதற்குப் புவனாவை விட அவள் அப்பாதான் கடுமையாக எதிர்த்தார்.

 "அது எப்படி யாரோ ஒரு குழந்தை, எங்களுக்கு எப்படிப் பேரன், பேத்தி ஆகும்?" என்பது அவர் தரப்பு வாதம்.

"செயற்கைக் கரு மட்டும் உங்களுக்குக் குலம், கோத்திரத்தோட வருமா?"

"அது ஒன்னுதாம்பா அனாமத்து. பெத்தெடுக்கிறது என்னவோ எங்க பொண்ணுதானே? அதான் எங்க வமிசம்" என்று மார் தட்டினார் புவனாவின் அப்பா.

 எப்படியோ எல்லாம் முடிந்து ஒரே தடவையாய் இரட்டைக் குழந்தைகள் நலமாகப் பிறந்தன புவனாவிற்கு. எல்லோருக்கும் மகிழ்ச்சியே. கருத்தரிப்பு மையத்தின் டாக்டர்களுக்கும்தான். 'இரட்டிப்பு' வசூலாச்சே!

 இப்படியாக மனைவியின் விருப்பத்திற்கும், மனைவியின் பெற்றோர்களின் விருப்பத்திற்குமாக வாழ்க்கை வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது கார்த்திக்கிற்கு. குழந்தைகளும் வளர்ந்து ஐந்து வயதாகி விட்டது. மழலையர் வகுப்பில் சேர்க்க வேண்டிய சூழலும் கொரோனா காலத்தால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.

கொரோனா காலத்து இழப்புகளில் கார்த்திக்கின் வேலையும் ஒன்று. கடைசியில், வேறு வழியின்றி ஒரு சிறிய நிறுவனத்தில், சொற்ப வருமானத்தில், குடும்பம் பெரும் சுமையாக மாறிப் போயிருந்தது கார்த்திக்கிற்கு. பேரப்பிள்ளைகளைக் கொஞ்ச வந்த மாமனாரும், மாமியாரும் கொரோனா தொடங்கியதிலிருந்து நிரந்தரமாகப் புவனாவுடனேயே தங்கிவிட்டனர். அவர்கள் ஓரளவு வசதியானவர்கள் தான். பிள்ளைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் வந்த இடத்தில் தங்கள் மகள் குடும்பத்தோடவே ஒண்டிக் கொண்டனர். இந்த நிலையிலும் ஆதிக்கம் வேறு. குத்தல், குடைச்சல் பேச்சுகளுக்கும் குறைவில்லாமல் போனது. அவர்களாலேயே இல்லறம் என்பது இருண்ட வீடாகிப் போனது கார்த்திக்கிற்கு. என்றாலும் தன்னிரு குழந்தைகளைக் கொஞ்சுவதிலும், அவர்களோடு பொழுதைக் கழிப்பதிலுமாக கார்த்திக் எல்லாவற்றையும் மறக்க முயற்சித்துக் கொண்டு வந்தான்.

 இத்தனைக் காலத்திற்குப் பிறகு புவனா பக்திப் பழமாக மாறிப் போயிருந்தாள். வீடு முழுக்கக் கடவுள் படங்கள், பூஜை, புனஸ்காரம், பாடல் சகிதம், ஆயுத பூசையன்று மெக்கானிக் ஷாப் போல, எந்நேரமும் வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அப்பாவும், அம்மாவும் தொலைக்காட்சித் தொடரும், வக்கனையான சாப்பாடுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். யாருக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை. கார்த்திக்தான் பணப் பிரச்சனையால் விழி பிதுங்கிக் கொண்டிருந்தான். இத்தனை பக்தி உள்ளவர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டான்.

 நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ஒரு நாள் கார்த்திக் தன் மனைவியிடம் கேட்டே விட்டான்.

 "உங்க அப்பாவும், அம்மாவும் எப்ப ஊருக்கு போகப் போறாங்க?"

 அவ்வளவுதான். அது புகைந்து, புகைந்து அடுத்த நாள் பூகம்பமாக வெடித்து விட்டது.

 "எங்களை வெளியே போகச் சொல்ல நீ யார்?" 

புவனாவின் அப்பா போருக்குத் தயாராகி விட்டார். அவரது மனைவியும், மகளும் அவருடைய படைகள் ஆகிவிட்டனர். 

கார்த்திக் தனியாக நின்றான். அவன் அவர்களை நேரடியாக வெளியே போ என்று சொல்லவில்லை. உண்மையில் அவர்களைப் போகச் சொல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் பொருளாதாரச் சூழலால் தன் மனைவியிடம் தன் ஆதங்கத்தை நாசுக்காகச் சொன்னான். அவ்வளவு தான் அவன் செய்தது.

புவனா அவனுடைய மனைவியாக நடந்து கொள்ளாமல், பெற்றோருக்கு மகளாக மாறிப் போனாள். ஆனாலும் தன் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தன்னையே 'நீ யார்' என்று கேட்கும் மாமனாரைக் கார்த்திக் வெறித்துப் பார்த்தான். அவன் பேசாமலேயே அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தது, அவன் மாமனாருக்கு இன்னும் சற்று ஏற்றி விட்டது போலாயிற்று.

 "எந்த நிலைமையையும் சமாளிக்கிறவன் தான் ஆம்பளை. நீ 'ஆம்பளையா' இருந்தாத்தானே?" என்று திடீரென்று சண்டையை உச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டார் 

அவரது பேச்சு எல்லை மீறிப் போய்விட்டதை எல்லோருமே உணர்ந்த மாதிரிதான் இருந்தது. ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை. தனக்காகத் தன் மனைவி பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்த கார்த்திக், அவள் ஒன்றும் பேசாமல் இருந்ததால், பொங்கி வந்த ஆத்திரத்தையும், அழுகையையும் அடக்கத் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே போக எத்தனித்தான்.

 "என் குழந்தைகளை எங்கே அழைச்சுக்கிட்டு போறீங்க?" 

புவனாதான் இப்படிக் கேட்டாள். அதிர்ந்து போன கார்த்திக்,

 "அப்போ இவங்க என் பிள்ளைங்க இல்லையா?" என்றான்.

 மற்றவர்களுக்கு முன் மறுபடியும் மாமனாரே பாய்ந்தார்.

 "அதுக்கெல்லாம் ஒரு யோக்கியதை வேணும். நீ வெறும் 'வெத்து வேட்டு'. பெருசா 'என்' புள்ளைங்கன்னு பாத்தியதை கொண்டாட வந்துட்ட…" என்று படபடத்து விட்டார்.

 இக்கதையின் தொடக்கத்தில் கார்த்திக் கண் கலங்கி நின்றதற்கு இதுதான் காரணம். எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்க முடியும்? ஒன்றுமே பேசாமல் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்த கார்த்திக், தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். 

மணி இரவு பதினொன்று ஆகி விட்டது. கார்த்திக் வீடு திரும்பவில்லை. புவனா தான் அவனுக்குப் போன் செய்தாள். மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. சரி, எப்படியும் வந்து விடுவான் என்று அமைதியாகி விட்டாள்.

 இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. செல்போன் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. பதிலில்லை. இப்போதுதான் புவனாவிற்குக் கலக்கம் வந்தது. "நடந்ததெல்லாம் கொஞ்சம் அதிகம்தானோ?" என்று ஆதங்கம் தோன்றி மனதிற்குள் வளர்ந்து கொண்டே வந்தது. குழந்தைகளும் "அப்பா எங்கே?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தன. என்ன ஆனாலும் இரவில் அவன் மார்பிலும், தோளிலும் தூங்கிப் பழகிய குழந்தைகள். அவன் இல்லாமல் குழந்தைகள் தவித்த தவிப்பு அவளுக்கு அடிவயிற்றில் பிசைந்து கொடுத்தது.

 "என்ன இருந்தாலும் இதற்கெல்லாம் காரணம் அவன் தானே? அவன் சம்மதமும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், தான் இன்றைக்கும் 'மலடி' தானே? தன் மலடிப் பட்டத்தை மாற்றப் போய்தானே, தான் ஆண்மை இல்லாதவன் என்று சொல்லக்கூடிய நிலை வரும் என்று தெரிந்தும், அவன் அதை ஒப்புக் கொண்டான். தனக்காகத் தானே கார்த்திக் அதை ஒப்புக் கொண்டான்?" 

புவனாவிற்குக் கார்த்திக்கின் அன்பும், ஆதரவும், குழந்தைகளிடம் அவன் காட்டிய பாசமும் நினைவுக்கு வந்து, பழைய நினைவுகளையும் கிளறின.

"உண்மையில் திருமணமாகி இருந்த ஐந்து ஆண்டுகளிலும் தாங்கள் மகிழ்ச்சியான, நிறை வாழ்க்கையைத் தானே வாழ்ந்து வந்தோம்! அவனைப் போய் வெத்துவேட்டு என்று தன் அப்பாவே சொன்னாலும், தான் தடுத்திருக்க வேண்டுமல்லவா? புவனாவிற்கு நினைக்க, நினைக்கக் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

 "இந்தக் குழந்தைகள் 'யாருடையதாகவும்' இருக்கட்டும். ஆனால் இதற்கெல்லாம் காரணமானவன் அவன்தானே? என்னை உண்மையிலேயே தாயாக்கியவன் அவன்தானே? அவன் இல்லாதபோது இந்தக் குழந்தைகளின் கதியென்ன? உண்மையிலேயே அப்பன் இல்லாத குழந்தைகள் என்றுதானே ஆகும்? அவன் இந்தக் குழந்தைகளுக்கு அப்பா என்பதே ஆண்மைதானே?" 

"கார்த்திக், என்னை மன்னித்து விடு கார்த்திக்!" என்று புவனா குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள்.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Polikai Jeya
Polikai Jeya
2 years ago

மாமன் கார்திக்கை நெஞ்சு வலிக்குமளவு பேசிய போது! புவனா அமைதி காத்ததும், பிள்ளைகள் தனது என சொல்லியதும் கார்திக்கின் நல்லமனசை காயப்படுத்தியது.மனிதர்கள் அறத்துடன் வாழ்வதே சிறப்பு என்பதை கதை சுட்டி நின்றது.
பொலிகை.ஜெயா.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 18.217.8.82

Archives (முந்தைய செய்திகள்)